நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
இளமையில் கள்ளிப்பாளையம் என்ற கிராமத்தில் என் பெற்றோரோடு நான் வாழ்ந்த காலம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்குத் தென்புறத்தில் ஒரு முனீஸ்வரன் கோவில். பெரிய மண்குதிரையின் மீது வண்ணம் தீட்டிய பெரியமீசையோடு கையில் வாளேந்திய முனீஸ்வரனின் உருவம். கீழே தரையில் முக்கோண வடிவில் சில கடவுள் உருவங்கள். கோயிலைச் சுற்றிப் பெரியமரங்கள். கற்சிலைக்கு முன்னர் ஓர் உயரமான வேல். கருப்பராயன் கோவில் என்றும் இதைச் சிலர் சொல்லுவார்கள். பகல் வேளையில் அங்கு மணியடித்து ஒரு பெரியவர் வழிபாடு செய்வார். ஆண்டுக்கொருமுறை பெரிய அளவில் திருவிழா நடக்கும். அப்பொழுது கிராமத்துமக்கள் பொங்கல்வைத்து வழிபாடு செய்வார்கள். பூசாரிக் கவுண்டர், ஊர்க்கவுண்டருங்கூட திருவிழாக் காலங்களில் வெண்மையான துணியால் வாயைக் கட்டிக்கொண்டு மணியடித்துப் பூசை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

இரவு நேரங்களில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்த அந்தக் கோவிலில் காற்றடிக்கும்போது மரக்கிளைகள் சலசலப்பது எங்களுக்கு அச்சமாக இருக்கும். கோவிலுக்கு அருகில் உள்ள வழியில் செல்லும்பொழுது சிலசமயம் நிற்காது ஓடுவோம். விடுமுறைக் காலங்களில் நண்பர்கள் பலர் சேர்ந்து மரங்களில் தாவி ஏறி நாங்கள் விளையாடுவதும் உண்டு. ஊர்க்கவுண்டரின் தோட்டம் ஊருக்குக் கிழக்குப்புறத்தில் இருந்தது. பெரிய பெரிய தென்னை மரங்கள் ஊரிலிருந்து பார்க்கும்போதே தெரியும். தோட்டத்தில் ஒரு கிணறு. கோடைக்காலத்தில் கிணற்றில் நீர் குறைந்துவிடும். கிணற்றில் இரு புறங்களில் குடங்குகள் அதாவது தண்ணீர் அரித்து அரித்து மண் கரைந்துவிட உள்ளே சுமார் 10 அடி அளவுக்கு குடங்கு - குகை போன்ற இருண்ட பகுதி. கிணற்றில் நாங்கள் இறங்கிக் குளிக்கும்போது அல்லது நீந்தி விளையாடும்போது குடங்கிலிருந்து நீர்ப்பாம்புகள் எட்டிப் பார்க்கும்.

ஒரு கோடைக்காலத்தில் கிணற்றில் நீர் முற்றாக வற்றிய நிலையில் கிணற்றைத் தூறெடுக்கவும் ஆழப்படுத்தவும் சிலர் மண்வெட்டி, கடப்பாறை முதலியவற்றோடு இறங்கி வேலை செய்தார்கள். யாரும் எதிர்பாராத முறையில் ஒரு விபத்து. குடங்கினுள் படிந்திருந்த மண்ணை அகற்றும்போது மேல் இருந்த மண் தரைப்பகுதி திடீரென சரிந்து குடங்கில் வேலை செய்த ஊர்க்கவுண்டரின் மகனை மூடிவிட்டது. கவுண்டருக்கு ஒரே மகன். நான் பார்த்திருக்கிறேன். சிவந்த மேனி. நெடிய உருவம். தலைக்குப் பின்னால் கட்டுக்குடுமி. நீண்டநேரம் மண்ணைத் தோண்டி அவர் உடலை எடுத்தபோது உடம்பில் உயிரில்லை. ஒரே மகன். திருமணமாகி ஓராண்டுகூட நிறைவு பெறவில்லை. பூசாரிக் கவுண்டர் முடிவு செய்துவிட்டார். இனி கருப்பராயருக்குப் பூசையில்லை. நான் செய்யமாட்டேன். எனக்கு ஒரே மகன். எனக்குப் பிறகு இவன்தான் உனக்குப் பூசை செய்யவேண்டியவன். இந்த உண்மை உனக்குத் தெரியாதா என்ன? அவன் எப்படிச் சாகலாம்? ஆகவே இனி நான் உனக்குப் பூசை செய்யமாட்டேன். ஊர்க்காரர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பூசை செய்ய உரிமை உடையவர் இவர்தான் - இந்தக் குடும்பத்தினர்தான்.

தொடர்ந்து 12 ஆண்டுகள் கோவிலில் பூசை இல்லை. செடிகள் எல்லாம் வளர்ந்து காடுமாதிரி ஆகிவிட்டது. 12 ஆண்டு கழித்து ஊர்க்கவுண்டர் இறந்தார். அதன் பிறகு அவர் தாயாதிகளில் ஒருவரைக் கோவில் பூசாரியாக ஊர்மக்கள் நியமனம் செய்தார்களாம். அப்போது அந்த ஊரில் நான் இல்லை. படிப்பதற்காக வேறு ஊர் சென்றுவிட்டேன். அந்த ஊரில் வாழ்ந்த என் அத்தை இந்தக் கதையின் முடிவை எனக்குப் பல ஆண்டுகள் கழித்துச் சொன்னார்கள்.

நான் இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். ஊர்க்கவுண்டர் சொன்னமாதிரி அந்தக் கடவுளுக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும். அவரது ஒரே மகனைச் சாகவிட்டிருக்கக் கூடாது. கடவுள் ஏன் அந்த மகனைக் காப்பாற்றவில்லை?. "இப்படிப்பட்டக் கடவுளுக்கு எதற்காக வழிபாடு செய்யவேண்டும்? பூசை இல்லாமல் கடவுள் கிடக்கட்டும்" என்ற ஊர்க்கவுண்டரின் மன உறுதி எத்தனை வியப்புக்குரியது. உழைப்பை நம்பும் ஒருவருக்குத்தான் இப்படி மன உறுதி வரமுடியும். "உனக்கு நான் இருக்கிறேன்; எனக்காக நீ இருக்க வெண்டும். நீ எது செய்தாலும் நான் ஏற்றுக்கொண்டு, நீயே கடவுள் என்று உன்னை நம்பி உன் காலடியில் என்னைக் கிடத்திக்கொள்ள முடியாது. நான் உழைக்கிறேன். நீ இல்லாமலும் என்னால் வாழமுடியும். என்மீது அக்கறை இல்லாத நீ எனக்கு இனி வேண்டாம்." இப்படி கவுண்டர் முடிவு செய்திருக்கக்கூடும்.

இப்படி ஒரு மனிதனின் பார்வை நமக்குள் எத்தனை பேருக்குச் சாத்தியப்படும்? இப்படி நமக்கு யார் அறிவு கொளுத்த முடியும்? இந்த மனிதர் எனக்குள் இன்னும் இருக்கிறார். இவரிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறேன். வறுமையைப் படைத்த இறைவனை, அவனும் வறுமையால் அலைந்து துன்புறட்டும் என்று கூறிய வள்ளுவருக்குள்ளும் இருப்பவர் இந்த மனிதன்தானே! கண்ணகிக்குமுன் வர அஞ்சி, கண்ணகியின் பின்னால் வந்து கண்ணகியைக் கெஞ்சிக் கேட்டு தீயிலிருந்து மதுரை நகருக்கு விடுதலை வாங்கிய மதுராபதி தெய்வத்தை இளங்கோவடிகள் எங்கிருந்து படைத்திருக்க முடியும்? கடவுளும் எனக்கு நிகரானவர்தான். என்னைவிட அவர் பெரியவராக இருக்கட்டும். என்னோடு எனக்கு உதவியாக இருக்கும்வரைதான் அவர் எனக்குக் கடவுள். இல்லையென்றால் அவர் எனக்கு வேண்டாம்.

வரலாற்றின் தொடக்க காலத்தில் இப்படி மனிதனால் சிந்திக்க முடியும். காலங்கள் மாறும்பொழுது, மனிதனின்மீது ஆதிக்கங்கள் அதிகரித்து, அவனுக்குள்ளும் நுழைந்து, அவன் மன உறுதியையும், அறிவையும், மெல்ல மெல்லத் தகர்த்து அவனை ஒன்றுமில்லாமல் செய்த நிலையில்தான், கடவுள் என்ற பிம்பத்திற்குப் பெரிய அளவுக்கு மரியாதை கிடைத்தது. கடவுள் மலையானான். மனிதன் தூசு ஆனான்.

*****


என் மனைவி முற்றான கடவுள் நம்பிக்கை உடையவர். சமயச்சார்பான சடங்குகளை விடாப்பிடியாகச் செய்து வருபவர். என்னோடு எத்தனையோ வகைகளில் முரண்பட்ட கருத்துடையவர். என் அரசியல்சார்பு முதலிய போக்குகள் என் மனைவிக்கு உடன்பாடு இல்லை. குடும்ப நிர்வாகத்தை முழு அளவில் அவர் விருப்பத்தோடு செய்பவர். குடும்ப நிர்வாகத்தில் என் பங்கு மிகவும் குறைவு. என்னைச் சிலசமயம் கடுமையாக அவர் சாடுவார். கணவனை மதிக்காத உனக்கு கடவுள் நம்பிக்கை ஏன் தேவை? என்பது அன்று என் கருத்தாக இருந்தது.

ஒரு சமயம் ஏதோ ஒரு கடுமையான சிக்கல். என்னை, என் மனைவி மரியாதைக் குறைவாகப் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஒரு அழகிய முருகன் படத்தை வைத்துக் கொண்டு அவர் வழிபாடு செய்துவந்தார். கடுமையான ஆத்திரத்தோடு அந்தப் படத்தை உடைத்து நொறுக்கினேன். கண்ணாடியும் சட்டகமும் உடைந்து நொறுங்கின. முருகன் ஓவியக் காகிதம் கிழிபட்டது. தரையில் அவை கொட்டிக் கிடந்தன. என் மனைவி தரையில் அமர்ந்து அந்தத் துண்டங்களை எல்லாம் பொறுக்கி எடுத்து ஒரு துணியில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். அவர் அழுகை நெடுநேரம் ஓயவில்லை. எனக்குள் இப்பொழுது கோபம் இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று சிந்தித்தேன்.

பல நாளும் என் மனைவி பலமுறை அழுதாள். அந்த அழகிய முருகன் படம் அவரைப் பெரிதாக ஈர்த்து ஒருவகையில் பிணைத்து வைத்திருந்தது. எனக்குள் பல சிந்தனைகள். கடவுள் நம்பிக்கை என்பதற்கு இத்தனை வலிமை உண்டா? கடவுள் நம்பிக்கையிலிருந்து என்ன செய்தாலும் எந்த நிலையிலும் என் மனைவியை மாற்றமுடியாது. நான் இப்படிச் செய்திருக்க வேண்டாம். இந்த அனுபவமும் பல நாட்கள் எனக்குள் அதிர்வு அலைகளைத் தந்தது. என் மனைவி மட்டுமல்லாமல் நம் சமூகத்தில் உள்ள இலட்சக்கணக்கானவர்கள் இப்படி ஆழமான நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் சில சூழல்களில் அவர்களுக்கு கடவுளைப்பற்றி ஐயங்கள் எழுந்த போதிலும் கடவுள் நம்பிக்கையிலிருந்து அவர்களால் தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது. போலிகளைப்பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை. கடவுள் குறித்து இப்படி ஆழமான நம்பிக்கை உடையவர்களைப் பற்றித்தான் இங்கு பேச வேண்டியிருக்கிறது.

கடவுளிடம் - அவர் இருந்தாலும் இல்லையென்றாலும் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் இருப்பதாக நம்புபவரோடு எனக்கு எதிர் விவாதமில்லை.

*****


நாளை என்ன நடைபெறும் என்பதை இன்றே முன்னுரைக்கும் சிலரை நாம் அறிவோம். தொலைவில் நடப்பதை இங்கிருந்தபடியே கூறும் சிலரையும் நாம் அறிந்துள்ளோம். கனவின் வழியேயும் சில உண்மைகள் நமக்குத் தெரிய வருகின்றன. கைரேகையைப் பார்த்து சில வியக்கத்தக்க உண்மைகளை வெளிப்படுத்துகின்றனர். பிறந்த தேதி முதலியவற்றைக் கொண்டும் உண்மைகளைக் கூறுகிறார்கள். சோதிடம் பற்றியும் நாம் முற்றாக மறுக்க முடியாது. என் கைரேகையைப் பார்த்து ஒரு பெரியவர் கூறியபடியே அடுத்த இரண்டு மாதத்திற்குள் இலக்கியவாதி என்ற முறையில் எனக்கு ஒரு பெரும்பரிசு கிடைத்தது. என் பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றின் கூட்டுத்தொகையை வைத்து குறிப்பிட்ட இந்தத் தேதிகளில்தான் என் வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்வுகள் நேர்ந்திருக்கும் என்று ஒரு பெரியவர் கூறியதன்படி, நானே நினைத்துப் பார்த்தபொழுது எனக்குள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

என் உறவினர் ஒருவர் இங்கிருந்து சுமார் 300 கிலோ மீட்டருக்கு அப்பால் கோவிலில் இருந்த பெண் சோதிடரிடம் என் பெயர் சொல்லிக் கேட்டபொழுது, இப்பொழுது அவருக்குக் கண் பார்வை இல்லை என்று கூறியிருக்கிறார். எனக்கு மிக நெருக்கமுள்ள - மார்க்சிய கட்சி சார்ந்த நண்பர் ஒருவர் தன் திருமணத்திற்கு முன்னர் ஒரு சோதிடர் தன்னைப்பற்றிக் கூறிய ஒரு உண்மையை என்னிடம் அதிர்ச்சியோடு சொன்னார். ஊருக்கு வெளியில் உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் நண்பர்களோடு கூடியிருந்து சமூகத்தின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதாகவும், இந்தக் கூட்டத்திற்கு வரும் ஒரு பெண்ணை இவர் பெரிதும் விரும்புவதாகவும் அந்த சோதிடர் கூறியது இவருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. எனக்குத் தெரிந்த காவல் துறையில் பணியாற்றும் ஒருவர் தன்னைப் பொறுத்த நிகழ்ச்சிகள் பலவற்றை முன்னரே தான் கனவுகளில் கண்டபடியே நிகழ்ந்தன என்று கூறினார்.

இவ்வகை அனுபவத்திலிருந்து நாம் என்ன அறிகிறோம்? நம் புலனறிவுக்கும் அப்பால், தொலைவிலோ, எதிர்காலத்திலோ, நமக்கோ, வேறு சிலருக்கோ, நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் சில நிகழ்வுகள் உள்ளுணர்வின் வழியே அல்லது கைரேகை முதலியவற்றின் வழியே நமக்குத் தெரிகின்றன. ஐம்புலன்களோடு நாம் வாழ்கிறோம். பகுத்தறிவோடு நாம் வாழ்கிறோம். இவற்றுக்கு அப்பாலான இன்னொன்றின் தொடர்பிலும் நாம் இருக்கிறோம். உள்ளுணர்வு எனப்படும் இந்தத் திறன் சிலருக்குள் கூடுதலான ஆற்றலோடு செயல்படுகிறது. மார்க்சியர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் நம்பும் சிலருக்கும் இத்தகைய உணர்வுகள் உள்ளன. ஒரு படைப்பாளிக்கு இவ்வகை உள்ளுணர்வு ஆற்றலோடு செயல்படுவதை எந்த ஒரு படைப்பாளியும் உணரமுடியும். நமக்குள் ஏதோ ஒரு புள்ளி தெரிகிறது. எழுதத் தொடங்குகிறோம் அல்லது வரையத் தொடங்குகிறோம். நாம் அறிய முடியாத ஒரு படைப்பியக்கத்தினுள் நாம் செல்கிறோம்.

நூலை முழுமையாக வாசிக்க

கோவை ஞானி

© TamilOnline.com