தென்றல் பேசுகிறது
சுந்தர் பிச்சை என்று உலகெங்கிலும் அறியப்படும் பிச்சை சுந்தரராஜன் கூகிள் நிறுவனத்தின் CEOவாக ஆகஸ்ட் 10, 2015 அன்று அறிவிக்கப்பட்டது இந்தியர்களிடையே, குறிப்பாகத் தமிழர்களிடையே, பெரிய மகிழ்ச்சி அலையைத் தோற்றுவித்தது. இந்த மகிழ்ச்சியை, பெருமிதத்தை 'தென்றல்' பகிர்ந்துகொள்கிறது. மிகநல்ல, ஒருமுறை கேட்ட தொலைபேசி எண்ணை வெகுநாட்களுக்குப் பின்னும் கூறுமளவு நினைவாற்றல் கொண்ட சுந்தர் பிச்சைக்குப் புத்துருவாக்கத்திலும் உயர்திறன் உள்ளது. இல்லாவிட்டால் கூகிள் குரோம், கூகிள் டிரைவ், கூகிள் மேப்ஸ், ஜிமெயில் போன்ற மிகப்பிரபலமான பயன்பாட்டு மென்பொருள்கள் அவரது மேற்பார்வையில் படைக்கப்பட்டிருக்குமா? "மானுடர் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புத் தளத்தை, அதையும் மிகப்பெரிய அளவில், தருவது என் பேராசை" என்னும் சுந்தர் பிச்சையின் பெருநோக்கம் அவரை டிஜிடல் மானுடத்தின் பெரும்பான்மையோரைத் தொடும் உயரத்துக்கு மிகமேலே உயர்த்தி இருக்கிறது. "திறமையும் உழைப்பும் இருக்கிறதா, இங்கே முன்னேறலாம்" என்ற அமெரிக்க வாக்குறுதியை இது மீண்டும் உறுதிசெய்கிறது. சுந்தர் பிச்சை இன்னும் பரந்த எல்லைகளைத் தொட எமது வாழ்த்துக்கள்!

*****


தகவலை, கலையை, படைப்பை, கருத்தை, அறிவை என்று எல்லாவற்றையும் பொது அரங்கில் வைத்துத் தேவைப்படுவோர் எடுத்துக்கொள்ள வசதி செய்கிற அற்புதமான மேடைகளாகிய யூட்யூப், முகநூல், ட்விட்டர், வாட்ஸப் எனப் பலவற்றை இன்று தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியுள்ளது. வாழ்க்கையை எளிதாக்கும் Priceline, AirBnb, Uber, Lyft, NextMover போன்றவை அடுத்த அலையில் வந்தன. அத்தோடு நிற்கவில்லை. நீங்கள் சுவையாகச் சமைப்பவரென்றால், அது பாட்லக் பாராட்டுடன் முடியவேண்டியதில்லை. உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் ஆர்டர் வாங்கிச் சமைத்துக் கொடுக்கலாம். அதற்கு நீங்கள் ஒரு ஹோட்டல் வைக்கவேண்டியதில்லை. இப்படிப்பட்ட சேவை திரட்டுவோர் (Service Aggregators) உங்கள் உபரித் திறன்களையும் சேவைகளையும், டாலராக மாற்ற உதவும் காலம் கையருகே வந்துவிட்டது. இணையம் போகும் திசை பரபரப்பூட்டுகிறது. நம்மை அந்த வேகத்துக்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும், அவ்வளவுதான்.

*****


கவியரசர் கண்ணதாசனின் மகனான காந்தி கண்ணதாசன் தமது தந்தையின் பெயரால் நடத்திவரும் பதிப்பகத்தை அறியாதவர் இருக்கமுடியாது. ஏனென்றால் 'அக்னிச் சிறகுகள்', 'அர்த்தமுள்ள இந்துமதம்', ஓஷோ, கோப்மேயர் ஆகியோர் நூல்களின் தமிழ்ப் பதிப்புகள் போன்றவற்றை மிகச் செம்மையாக வெளியிட்டது கண்ணதாசன் பதிப்பகம்தான். இந்த இதழில் காந்தி கண்ணதாசனின் நேர்காணல் அவர் சந்தித்த மேடுபள்ளங்களையும், உயர்வடையக் காரணத்தையும் அழகாக விவரிக்கிறது. கவியரசரைப் பற்றி அவர் கூறியுள்ள தகவல்களும் கருத்தைக் கவர்வனதாம். "பாலியல் வன்முறைக்கு ஆட்படும் பெண்களில் 54 சதவிகிதம் முதலாண்டு கல்லூரி மாணவியர்" என்ற அதிர்ச்சித் தகவலை அறிந்ததோடு நிற்காமல் அதைத் தடுக்கவும், அப்படி பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்கவும் என்ன செய்யலாம் என்று சிந்தித்து வழிமுறை கூறும் தன்வி ஜெயராமன் உங்களையும் அதிரவும் ஆச்சரியப்படவும் வைப்பார். 'ஆத்ம சாந்தி' மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கட்டத்தை அடைந்துள்ளது.

வாசகர்களுக்கு கிருஷ்ண ஜயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, பக்ரீத் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

செப்டம்பர் 2015

© TamilOnline.com