முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 12)
முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அங்கே அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க்கிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்தவற்றை வைத்தே சூர்யா யூகித்ததில் வியப்புற்ற அகஸ்டா, அவர்மீது பெரும்நம்பிக்கையுடன் தன் ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்று விளக்கினாள். திசுப்பதிக்குமுன் அதற்கு அடிப்படையான உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் பொது நுட்பங்களை விவரித்துவிட்டு திசுப்பதிப்பு (bio-tissue printing) நுட்பங்களை விவரித்தாள். மின்வில்லைகளின்மேல் திசுக்களைப்பதித்து, அவற்றை மிருகங்களுக்குப் பதிலாக பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என்றாள். ஆனால், முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்டவேண்டிய தடங்கல்களை விவரிக்க ஆரம்பித்தாள். முதல் தடங்கல், திசுக்கள் உயிரோடு செயல்பட ஊட்டமளித்து, கழிவை அகற்ற ரத்தஓட்டத்துக்கான நாளங்களைப் பதிப்பது. நாளமிடல் எனப்படும் அதற்கு, மெல்லிய ப்ளாஸ்டிக் இழைகள்மேல் நாளத்திசு அணுக்களைப் பதித்து, பிறகு இழைகளை எடுக்க வேண்டும் என்று கூறினாள். பிறகு...

*****


நாளமிடல் தடங்கலைத் தாண்டினாலும், முழு அங்கங்களைப் பதிக்க இன்னும் பல நுட்பங்கள் முன்னேற வேண்டியுள்ளது, இன்னும் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்று கூறிய அகஸ்டா, தொடர்ந்து, எலிகளின் கண்திரைகள், கல்லீரல் பகுதிகள் போன்ற ஒரேமாதிரி உயிரணுக்கள் பெரும்பாலும் அடங்கிய சற்றே சிறிதான அங்கங்களின் சிறு பாகங்களை மட்டுமே பதிக்க முடிந்துள்ளது, மூளை, கண்கள், இருதயம் போன்ற நுண்ணிய அங்கங்களைப் பதிக்கும் அளவுக்கு இன்னும் தொழில்நுட்பம் வளரவில்லை என்றும் கூறினாள். வியன்னா குழுவினர் பதித்த மூளைப்பகுதியைப் பற்றி விவரித்தாள். அப்போது ஷாலினி கிரணின் மூளையைப்பற்றி கிண்டல் செய்யவும் அனைவரும் நகைக்கையில், சூர்யா இடைமறித்து விஷயத்துக்கு வருமாறு தூண்டினார்.

அகஸ்டா அங்கப்பதிப்பைப் பற்றி மேற்கொண்டு விவரிக்க முனைந்தபோது கிரண் குறுக்கிட்டான். "அகஸ்டா, முப்பரிமாணப் பதிப்பால் மனித அங்கங்களையெல்லாம் பதிக்கமுடிவதற்குள், அங்கங்களுக்குப் பதிலாக நமக்கு இயந்திரப் பகுதிகளைப் பொறுத்தி நம்மை பாதி ரோபாட்களாக்கி விடுவார்கள்! மனிதர்களுக்குப் பதிலாக ரோபாட்களே உலகில் அதிகமாகத் திரிய ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. சீக்கிரம் இந்த அங்கப்பதிப்பு நுட்பங்களை கண்டுபிடிக்காவிட்டால் அப்புறம் அங்கப்பதிப்புக்கே அவசியமில்லாமல் போய்விடுமே. சீக்கிரம், சீக்கிரம்!"

அகஸ்டா, கலகலவெனச் சிரித்தாள். "ஓ! ரொம்ப க்ளெவரா இருக்கே. கிரண் நீ நிஜமாவே புத்திசாலிதான். இன்னும் நிறைய இந்தமாதிரி ஜோக் அடி.

ஆனாலும், நீ சொல்றபடி ரோபாட் நுட்பங்கள் பரவி, அதுனால அங்கத்தேவை குறைஞ்சாலும் எனக்குச் சம்மதந்தான்!" என்றாள்.

கிரண் உச்சி குளிர்ந்துபோனான்! "ஆஹா, அருமை அகஸ்டாவே, அம் என்பதற்குள் அறுநூறு சிரிப்புவெடி வரும். கேட்டுப்பார்!" என்றான்.

ஷாலினி விளையாட்டுச் சோகத்துடன் தலையசைத்தாள். "அகஸ்டா, இந்தக் குரங்கைத் தூண்டிவிடாதீங்க! அப்புறம் அவன் அடிக்கற கடிஜோக் கேட்டு உங்கக் கழுத்தெல்லாம் ரத்த விளாறாயிடும்!"

கிரண் சிரித்தான். "நோ, நோ, அகஸ்டா! நான் அந்த மாதிரியெல்லாம், செய்யவேமாட்டேன். உங்க அழகான கழுத்தில் ரத்த விளாறா! அய்யகோ! அது கூடவே கூடாதல்லவா! நான் கடிஜோக் அடிப்பதில்லை என்று சத்தியப் பிரமாணம் மேற்கொள்கிறேன்!" அகஸ்டா நாணி முகம் சிவந்தாள்.

இந்த நாடகத்தைக் கண்டு முறுவலித்த சூர்யா, "எனக்கும் கிரண் ஜோக் சிலமுறை பிடிக்கும், அவன் கடிக்காதபோது. ஆனால் இப்போது நாம் குட்டன்பயோர்கின் விஷயத்துக்குத் திரும்பவேண்டும். அகஸ்டா, நீங்கள் இரண்டு தடங்கல்கள் என்றீர்கள். அதற்கு மேலும் சில தடங்கல்கள் இருக்க வேண்டுமல்லவா. அதைப்பற்றிச் சொல்லுங்கள்" என்றார்.

அகஸ்டா மீண்டும் நனவுலகுக்கு வந்தாள். "முழு அங்கம் பதிப்பதில் இன்னொரு முக்கியமான தடங்கல். உயிரணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதித்து வளர்க்க நிறையநேரம் ஆகிறது. அந்த அளவுக்கு உயிரணுக்களைப் பதித்து வளரவைக்க வேண்டுமானால் வெகுநாட்களாகிவிடும். அப்படியானால், மனிதர்களுக்கு மாற்று அங்கத் தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்ய மிகவும் தாமதமாகிவிடும்."

கிரண் குறுக்கே புகுந்தான், "ஏன்? ஒரு பெரிய தொழிற்சாலை மாதிரி வச்சு ஒரே நேரத்துல நிறைய அங்கங்களை உருவாக்கலாமில்லயா? கார் தயாரிக்கும் அசெம்பிளி லைன் மாதிரி?"

ஷாலினி சிரித்தாள். "ஏய் கிரண், சரியான மரமண்டைடா நீ. அகஸ்டா சொன்னதை அதுக்குள்ள மறந்துட்டயா, இல்லை உள்ள ஏறவே இல்லையா?" என்றாள். கிரண் அவளைப் பார்த்து முறைத்து எதோ சொல்வதற்குள் சூர்யா விளக்கினார்.

"கிரண், கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதானே அகஸ்டா, ‘ஒவ்வொருத்தருக்கும் அங்கம் நிராகரிக்கப்படாம இருக்கணும்னா அவங்களோட ஸ்டெம் உயிரணுக்களை வச்சுத்தான் அங்கம் பதிக்கணும்னு? அப்ப எப்படி அசெம்பிளி லைன் மாதிரி உருவாக்கமுடியும்?! ஒவ்வொரு தனிநபருக்குப் பொருத்தக்கூடிய அங்கத்தைப் பதிப்பிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கணுமோ அவ்வளவு நேரம் எடுத்துத்தானே ஆகணும். ஒரேமாதிரி தொழிற்சாலையில ப்ளாஸ்டிக்ல தயாரிக்கற மாதிரி ஒரேமாதிரி உயிரணுக்களில அங்கம் பதிச்சா வேறு யாரோட உடலும் ஏத்துக்காது. நிறைய நிராகரிக்கப்படும்."

"எக்ஸாக்ட்லி சூர்யா" அகஸ்டா கூறினாள், "சரியாப் பாயிண்ட்டைப் புடிச்சீங்க! நிராகரிக்காம இருக்கணும்னா ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட மூல (ஸ்டெம்) உயிரணுக்களை வச்சு வளர்த்த அங்கத்தைத்தான் பொருத்தமுடியும். முதல்ல அவங்களோட மூல உயிரணுக்களை அவங்க உடலிலிருந்து தனிப்படுத்தி எடுக்கணும்; அவற்றைப் பலமடங்காப் பெருக்கணும். அப்புறம் அங்கத்துக்குத் தேவையான சில வேறுவிதமான உயிரணுக்களாக மாறும்படி வளர்க்கணும். இதுக்கெல்லாம் நேரமாகிடுது. பல வாரம் அல்லது மாதக் கணக்காகக்கூட ஆகலாம். ஆனா, மாற்றங்கம் தேவைப்படறவங்க பலபேருக்கு மிக அவசரமாத் தேவைப்படும். சீக்கிரம் கிடைக்கலன்னா உடல்நிலை மிகக்கேடாகி உயிரிழக்க நேரலாம்."

ஷாலினி ஆமோதித்தாள். "ஆமாம். பாவம். எங்க மருத்துவமனையிலயும் அந்தக் கேவல நிலையை நாங்க அடிக்கடி பாக்க வேண்டியிருக்கு. அந்த நோயாளிகளை விடவும், அவங்க குடும்பத்தாரைப் பாத்தாதான் மிகவும் பரிதாபமா இருக்கு. இந்த நிலையை நிவர்த்திச்சா ரொம்ப நல்லதுதான்."

அகஸ்டா பெருமூச்செறிந்தாள். "என் கனவும் அதேதான். ஆனால்..." என்று கூறிவிட்டு ஏதோ நினைவில் ஆழ்ந்தாள். அவளைச் சூர்யாவின் கேள்வி தட்டி எழுப்பியது. "சரி அகஸ்டா, இந்த மூணு தடங்கல் இருக்குன்னு சொல்றீங்க. ஆனா, குட்டன்பயோர்க் மாற்றங்கத் தயாரிப்பில் மிக முன்னேறியதுன்னு சொன்னீங்க போலிருக்கே. அப்படின்னா உங்க நிறுவனம் இந்தத் தடங்கல்களத் தாண்டியிருக்கணும், இல்லயா? அப்போ, எங்க மூணுபேருக்கும் இங்க என்ன வேலை?"

அகஸ்டாவின் முகத்தில் பெருமிதமும், கவலையும் தோன்றி மறைந்தன. "ஹூம், சூர்யா, நீங்க சொன்னபடி குட்டன்பயோர்கின் ஆராய்ச்சி மிகமிக முன்னேறியுள்ளது. நான் சொன்ன மூணு தடங்கலையும் எங்க விஞ்ஞானிகள் தகர்த்தெறிஞ்சிட்டாங்க. ஆனால்..." என்று சொன்னபடி முகத்தைக் கையால் மூடிக்கொண்டு லேசாக விக்கினாள்.

ஷாலினி அவளருகில் சென்று அணைத்தாள். "எங்க அம்மா சொல்லுவாங்க வெண்ணை திரண்டு வரச்சே பாத்திரம் ஒடஞ்சா மாதிரின்னு. உங்க குட்டன்பயோர்க் விஷயத்துலயும் அப்படித்தான் போலிருக்கு. ரொம்ப ஸாரி. கவலைப்படாதீங்க அகஸ்டா. சூர்யாமேல பாரத்தைப் போட்டுப் பிரச்சனை என்னன்னு சொல்லுங்க. அவர் அதைத் தீர்த்து வைப்பார், பாருங்க."

இன்னும் விசும்பியபடி அகஸ்டா, "ஆமாம் சூர்யா, உங்களைத்தான் நம்பியிருக்கேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ அண்ட் குட்டன்பயோர்க்" என்றாள்.

சூர்யா மென்மையான குரலில் ஆறுதல் கூறினார். "அகஸ்டா, நாங்க மூணுபேரும் சேர்ந்து பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கண்டுபிடிச்சிருக்கோம். உங்க விஷயத்துலயும் கண்டுபிடிக்கலாம். உங்க ஆராய்ச்சி நிலைமை என்ன, அதுல பிரச்சனை என்னன்னு சொன்னீங்கன்னா நாம விசாரணையை ஆரம்பிக்கலாம்."

அகஸ்டா சற்றுக் குழப்பத்துடன், "விசாரணையா...யாரை? எதுக்கு?" சூர்யா முறுவலித்தார். கிரண் இடையில் குதித்தான். "குட்டன்பயோர்க் தொழில்நுட்பத்தையும் பிரச்சனையையும் பற்றி அறிந்த முக்கியஸ்தர்களைத்தான். வேற யாரை? உங்க குழுவை விசாரிக்காம எப்படி விவரம் தெரிஞ்சுக்க முடியும்? விவரம் தெரிஞ்சாத்தானே சூர்யா ரெண்டும் ரெண்டும் சேத்து இருபத்திரெண்டாக்கிக் கண்டுபிடிக்க முடியும்?!"

கிரணின் அடாவடிக் கணக்கு அகஸ்டாவைப் புன்னகைக்க வைத்தது. அது கிரணைக் கிறங்க வைத்தது. அகஸ்டா, "ஓகே, நிச்சயமா என் குழுவை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதுக்குமுன்னால எங்க தொழில்நுட்ப விவரங்களைப் பத்தியும் பிரச்சனை என்னங்கறதையும் நீங்க கேட்டபடி விவரிக்கறேன்" என்றாள்.

சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் ஆர்வத்தோடு அவள் விவரணையைக் கேட்க ஆயத்தமானார்கள். அகஸ்டா குட்டன்பயோர்கின் உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப்பற்றி மேற்கொண்டு விவரித்தது சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது....

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com