பேட்மின்டனின் தங்கச் சகோதரர்கள் கார்த்திக் & கோகுல்
சகோதரர்கள் கார்த்திக் கல்யாணசுந்தரம் மற்றும் கோகுல் கல்யாணசுந்தரம் இருவருமே தத்தம் வயதுப்பிரிவில் இறகுப்பந்தாட்டத்தில் (Shuttle Badminton) அமெரிக்க தேசிய சேம்பியன்ஷிப்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் ஜூனியர் தேசியப் போட்டிகள் ஜூலை 4 வார இறுதியில் ஆர்லண்டோ, ஃப்ளோரிடாவில் நடைபெற்றன. 11 வயதுக்குட்பட்டவர் பிரிவு முதல், 19 வயதுக்குட்பட்டவர் பிரிவுவரை நடைபெற்ற போட்டிகளில் பல சிறந்த ஆட்டக்காரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கோகுல் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், கார்த்திக் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் தேசிய சேம்பியன் பட்டங்களை வென்றனர். கோகுல் கேட்மஸ் யோவை (Cadmus Yeo) 21-9, 21-13 என்ற புள்ளிகளில் வென்றார். கார்த்திக், டான் ஏவரியாவை (Don Averia) 22-20, 21-12 என்ற புள்ளிகளில் வென்றார்.

15 வயதுக்குட்பட்ட இரட்டையர் போட்டியில் கார்த்திக், எரிக் சாங்குடன் சேம்பியன்ஷிப்பை வென்றார். கோகுல் தமது வயதுக்கடுத்த 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பிரையன் டுவோங்குடன் (Brian Duong) ஆடி இரண்டாமிடத்தைப் பிடித்தார். இதே போட்டித்தொடரில் இந்திய வம்சாவளியினரான சஞ்சிதா பாண்டே 15 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் சேம்பியன் பட்டத்தை வென்றார். ஷ்ரேயா போஸ், சௌம்யா கடே ஜோடி 19 வயதுக்குட்பட்ட சிறுமியர் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தது.

இருவருக்குமே கோச் ஃபூ (Phu Khuu, Founder, Bintang Badminton) மிகச்சிறப்பான பயிற்சியளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷட்டில் பேட்மின்டன் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டு. தெற்காசிய வீரர்களே அதிகம் பங்குபெறும் இப்போட்டிகள் USA Badminton அமைப்பினால் நடத்தப்படுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு பந்தயங்களை நடத்துவடன், வீரர்களின் தரவரிசைப் பட்டியலையும் இவ்வமைப்பு தயாரித்து வெளியிடுகிறது. அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பேட்மின்டன் வேர்ல்ட் ஃபெடரேஷன், பேட்மின்டன் போட்டிகளின் தேசிய நிர்வாக அமைப்பாக இதை அங்கீகாரம் செய்துள்ளது.

கோகுல் சன்னிவேலின் 'ஹோம்ஸ்டெட்' உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பிற்குச் சென்றுள்ளார். 9ம் வகுப்புமுதல், பள்ளியின் பேட்மின்டன் அணித்தலைவராக இருந்துவருகிறார். மே 2015ல் நடைபெற்ற வடகலிஃபோர்னியப் பள்ளிகளுக்கிடையேயான CCS சாம்பியன்ஷிப்பை வென்றார். விரிகுடாப்பகுதிச் செய்தித்தாளான 'மெர்க்குரி நியூஸ்' இவரை இவ்வாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்துள்ளது. கோகுலின் கர்னாடக சங்கீத அரங்கேற்றம் கடந்த மார்ச் 21 அன்று நடைபெற்றதும் நினைவிருக்கலாம். (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2015).

கார்த்திக் இதே பள்ளியில் 9ம் வகுப்பிற்குச் செல்கிறார். தென்றல் வெளியீட்டாளரும், தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிறுவனருமான திரு. C.K. வெங்கட்ராமன் மற்றும் அனுராதா இவர்களின் பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் வருகிற ஆகஸ்ட் 5 முதல் 9 வரை மெக்ஸிகோவில் நடைபெறவுள்ள Pan American போட்டிகளில் அமெரிக்காசார்பில் விளையாட உள்ளனர். வட, தென் அமெரிக்க நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த 4 சிறந்த வீரர்கள் கலந்துகொள்கின்றனர். கோகுல் இப்போட்டிகளில் கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவுக்காக விளையாடி வருகிறார். கார்த்திக் 2011 மற்றும் 2013ம் ஆண்டுகள் ஆடியுள்ளார்.

அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பார்க்க: www.teamusa.org

தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com