திரைப்படங்களில் மீண்டும் பரதம் இடம்பெறும் - பத்மா சுப்பிரமணியம்
கலைமாமணி டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தமது நாட்டியச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்தார். 'தேவி தரிசனம்' என்ற தலைப்பில் அவர் நாட்டிய விருந்து படைத்தார். பூவுலகின் தப்பாத தாளங்களில் ஒன்றான மழையை 'அமிர்தவர்ஷிணி' என்ற நடனமாக்கி இருந்தது அற்புதம். சான் ஹோசேயின் தென்னிந்திய நுண்கலைகள் அமைப்பின் (SIFA) சார்பாக அளித்த விருந்தின் இடையே பத்மப்ரியன் தென்றலுக் காக அவரைச் சந்தித்தார். அதிலிருந்து:

கே: கலி·போர்னியாவில் நடன நிகழ்ச்சி வழங்கும் எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது...

ப: நம் பரத நாட்டியத்திற்கு இங்கு இருக்கும் வரவேற்பு என்னை இங்கு ஈர்த்தது. இங்குள்ள இந்தியச் சிறுமியர் பரதம் கற்கும் பாங்கை வியந்து, இங்கு நடனமாட விரும்பி வந்தேன்.

கே: உங்கள் பார்வையில் உலக முழுவதும் உள்ள நடனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: பல மறக்க முடியாத அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் என் சுற்றுப் பயணங்கள் எனக்கு அளித்துள்ளன. உலகம் முழுவதும் ஏதோ ஒரு கலாசார ஒற்றுமையில் இயங்கு வதை நடனம் மூலம் நான் உணர்கிறேன். உதாரணத்திற்கு இந்தோனேஷியாவின் பெரம்பனானில் உள்ள சிற்பங்கள், தாய்லாந்து நாட்டின் நடனம் மற்றும் அதில் உள்ள நம் ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா வில் உள்ள புராதன சிற்பங்கள் போன்றவை.

கே: இந்தியா-இந்தோனேஷியாவின் கலாசார ஒற்றுமையைப் பற்றி ஓரளவு அறிவோம். அதன் சிற்பங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: காஞ்சி முனிவர் கேட்டுக் கொண்டதன் படி நான் மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாராவில் கோவில் ஒன்றுக்காக நடனச் சிற்பங்கள் வடிவமைத்துக் கொடுத்தேன். கரணங்கள் எனப்படும் அவை என் மனதில் உருவானவை. ஆனால் பின்பு நான் காஞ்சி முனிவர் சொன்னதன் பேரில் இந்தோனஷியா சென்றபோது ஜாவாவில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைச் சிற்பங்களைப் பார்த்தபோது, அவற்றிற்கும் நான் வடிவ மைத்தவற்றிற்கும் இருந்த ஒற்றுமையைக் கண்டு வியந்தேன். அதேபோல் தாய்லாந்தின் திருப்பாவை வழிபாட்டை அறிந்து அங்கு 'பாவை நோன்பு' என்ற தலைப்பில் நடனநிகழ்ச்சி செய்து அதில் தாய்லாந்துப் பெண்களையும் நடனம் ஆடச்செய்தேன்.

கே: ஐரோப்பிய - இந்திய நடன ஒற்றுமைகளைப் பற்றி...

ப: கிரேக்கப் பண்பாடு மிகவும் தொன்மை யானது என நாம் அறிவோம். அவர்கள் இந்தியர்களைப் போலவே பெண்களைத் தெய்வமாக்கி வணங்கியும் இருக்கிறார்கள். சான் ஹோசே நடன நிகழ்ச்சியில் கிரேக்கப் பெண் தெய்வத்தைப் பற்றியும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறேன்.

கே: தமிழ் இலக்கியங்கள் உங்கள் நடனத்தில் இடம் பெறுகின்றனவா?

ப: திருவள்ளுவர் ஒரு சமண முனிவர் என்ற கருத்திற்கு என் விடையாக, திருக்குறளை என் நடனத்தில் வழங்கி, அதில் உள்ள சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்து சமயக் கருத்துக்களை நடன பாவமாக படைத்துள்ளேன். கம்ப ராமாயணத்தை நடன வடிவமாக்கி இருக்கிறேன். இப்போது கூடக் கனடாவில் அங்குள்ள தமிழர்கள் கேட்டுக் கொண்டதால், 'வள்ளி திருமணம்' நிகழ்ச்சி செய்கிறேன்.

கே: தமிழ்த் திரையுலகின் ஆணி வேர்களில் ஒருவரான உங்கள் தந்தை கே. சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி உங்கள் நினைவுகள்...

ப: நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை 'நர்த்தன முரளி' என்று ஒரு நாட்டியத் திரைப்படத்திற்குத் திட்டமிட்டு அதில் என்னைக் கண்ணனாக அறிமுகப் படுத்தவும் இருந்தார். அதன் பயிற்சி நேரங்களில்தான் எனக்கு முதலில் திரை அனுபவம். ஸ்ரீமத் பாகவதத்தை அடிப் படையாகக் கொண்ட அதில் இந்தியாவின் பல மாநிலங்களின் பாடல்களும் நடனங் களும் இடம் பெற்றிருந்தன. தமிழிலும் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்ட அத்திரைப் படம், பாதியில் நின்று போனது. பிறகு ஐந்து வயதில், கீத கோவிந்தம் என்ற பெயரில் கதம்பக் கலாசார அமைப்பைக் கொண்ட கூட்டுக் குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நான் அறிமுகமானேன்.

கே: இன்றைய திரைப்படங்களில் நடனம்...

ப: மாற்றங்கள்தான் இந்த உலகின் இயல்பு. இப்போதிருக்கும் இந்த நிலைமாறி மீண்டும் பரதத்திற்குத் திரைப்படங்களில் வரவேற்பு கூடும். நம்முடைய நாட்டியக்கலை அழி வில்லாதது, எல்லாவற்றிற்கும் ஆதாரமானது.

கே: உங்கள் எதிர்காலத் திட்டம்...

ப: சென்னைக்கு அருகே நாட்டியத்திற்காக ஒரு கோவில் அமைப்பது என் கனவுத் திட்டம். அதில் உலகின் பல் வேறு சாஸ்திரிய நடன வடிவங்களுக்கும் இடமிருக்கும். தமிழக அரசும் அதற்கு ஆதரவு காட்டியுள்ளது. என் மனதில் உருவாகிக் கொண்டிருக்கும் அதை விரைவில் நனவாக்குவேன்.

பத்மப்ரியன்

© TamilOnline.com