இப்போது திரும்பிவிடக்கூடாது
"ஃபி சுல்ஃபா?"

"லா"

"கடன் இருக்கிறதா" என்று முதலாளி கேட்டதற்குக் கணக்காளர் 'இல்லை' என்று சொன்னதுமே சாவன்னா ஊருக்குத்தான் திரும்பவேண்டுமென்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சாவன்னாவுக்கு அது தேவையில்லாமல் நிகழ்ந்த விபத்து.

மிகப்பெரியதுமல்லாத மிகச்சிறியதுமல்லாத கட்டுமான நிறுவனத்தில் சாவன்னா என்னும் சாகுல்ஹமீத் 'ஜெனரல் லேபர்' - தொழிலாளி. இதுதான் வேலை, தனக்கு இது தெரியும் என்று குறிப்பிட்ட வேலைக்கு வராமல் 'என்ன சொன்னாலும் செய்வேன் சார்' என உறுதியளித்து, சவூதி அரேபியாவுக்கு வருகின்ற லட்சக்கணக்கான பணியாளர்களுள் சாவன்னாவும் ஒருவன்.

மதீனா நகரில் சாவன்னாவுக்கு வேலை. நபிகள் நாயகம் அவர்களின் பள்ளிவாசலிருந்து வடக்குப்புறமாக வெளியேறி, வடக்காகவே செல்லும் பாதையில் பயணம் செய்தால் பத்துப்பதினைந்து கிலோமீட்டருக்குள்ளாக இடப்பக்கமாக, உஹத் மலையை நோக்கியபடி சாவன்னாவின் தங்குமிடம் இருந்தது. 'உயூன்' அதுதான் பெயர். மாலையில் தொழிலாளர்கள் வந்து இறங்குவார்கள். வியர்வை கசகசக்க தூசும் அழுக்கும் அடையடையாக ஒட்டிய உடையுடன் வந்து அறைக்குச் செல்லுமுன்பே வாசலில் நின்று தூசுதட்டிவிட்டுச் செல்வார்கள். குளியலுக்குப் பிறகு ஐந்தாறு பேர் சேர்ந்த குழுவாக அவரவர் குழுவில் சமைக்கவோ சமைத்ததைச் சூடுசெய்யவோ என சில மணித்துளிகள் ஓடும். எல்லாமும் முடிந்து மீண்டும் உடல்கழுவி ஒவ்வொரு குழுவும் அவரவர்க்கு பிரியப்பட்ட அறையில் சோற்றுச்சட்டியுடன் உட்கார ஊர்க்கதை உலகக்கதையுமாக இரவு உணவு முடியும்.

சாவன்னாவுக்கும் இப்படியாக எல்லாமும் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது, இவனாகச் சென்று அந்த ஏணியில் ஏறும் வரையில். தரையைவிட்டு ஒன்றரை அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு அது. ஒருநாளுக்குமுன் சுழன்றடித்த காற்றில் இரண்டு மூன்று தகரத்துண்டுகள் குளிர்சாதனத்தின் வெளிப்பெட்டியின்மேல் மாட்டிக்கொள்ள, அறைக்குள்ளே குளிர்சாதனத்தை இயக்கினால் அதிர்வில் கடபுடவென தகரங்கள் ஒலியெழுப்பின. கீழேயிருந்து ஒருகம்பியை வளைத்து துரட்டிபோலாக்கி தகரங்களைத் தள்ளிவிட்டால் அவை விழவில்லை. வலையில் எதோ நுனி சிக்கிக்கொண்டாற்போலிருந்தது. அலுமினிய ஏணியைத் தூக்கிவந்து தகரத்தைத் தள்ளிவிட சாவன்னாதான் ஏறினான். ஏணியின் மேலே நின்றுகொண்டு சிக்கிய தகரத்தை உருவும்போது பலங்கொண்டு இழுக்க, தகரம் இலகுவாகக் கழண்டு சாவன்னா கொடுத்த பலம் அவனைப் பக்கவாட்டில் இழுக்க, எட்டடியில் இருந்து கீழே விழுந்தான். விழுந்தபின் உடம்பில் அசைவில்லை. ரத்தப்போக்கு இல்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். இடது தோளிலும் கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

இது நிகழ்ந்தபோது சாவன்னா அந்த நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றி முடித்திருந்தான். அவனுடைய நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்குச் செல்ல விடுமுறையும் பயணச்சீட்டும் தருவார்கள். அவன் இந்த ஐந்தாண்டுகளில் இரண்டுமுறை இந்தியா சென்றிருக்கவேண்டும், ஆனால், இதுவரையில் அவன் போகவில்லை.

முதல் இரண்டாண்டுகளில் விடுமுறைக்கு ஊருக்குப் போகாமல் விமானச் செலவு, ஒருமாத விடுப்புக்கான பணம் எல்லாவற்றையுமாகக் கணக்குப்போட்டு வாங்கி ஊருக்கு அனுப்ப, அது அவனுடைய தங்கையின் திருமணச் செலவில் ஒருபகுதியைச் சரிக்கட்ட உபயோகப்பட்டிருக்கிறது. இரண்டாவது பயணச்சீட்டுப் பணத்துக்கும் முன்னதாகவே இந்தியாவில் தம்பியின் பாலிடெக்னிக் சேர்க்கை காத்திருந்தது. அப்பொழுது அவன் இருபத்தொன்பது வயதைத் தொட்டிருந்தான்.

சாவன்னாவுக்கு உடலுழைப்பைத் தவிர வேறேதுவும் தெரியாது. தேவிப்பட்டினம் அவனது ஊர். படிப்பென்று பெரிதாக ஏதும் இல்லை. பத்தாம் வகுப்புத் தேர்ச்சியென்பதை அவன் யாரிடமும் சொன்னதில்லை. எப்பொழுதாவது நான்கைந்து நபர்களாகத் தொழுகின்ற நேரத்தில் அவன் முன்னின்று தொழவைப்பான். தொழுகையில் ஓதப்படும் கிராஅத் என்னும் திருக்குர்ஆன் வசனங்களை மிகவும் இனிமையாக ஓதக்கூடிய திறன் வாய்க்கப்பெற்றிருந்தான்.

அடுத்த விடுமுறையில் திருமணம் என்பதாகப் பேச்சு தொடங்கியபோது, இப்படி ஆகிப்போனது.

விபத்தால் எந்தவிதமான சட்டப்பிரச்சனையும் இல்லாமல் நிர்வாகம் பார்த்துக்கொண்டது. மருத்துவச்செலவை காப்பீடு பார்த்துக்கொண்டது.

குணமாகிவிட்டாலும் முன்புபோல் பளுதூக்கி சுறுசுறுப்பாக இயங்கும் நிலைக்கு உடல் வருவதற்கு மாதக்கணக்கில் ஆகலாம் என்ற செய்திதான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து நின்றது.

"கடன் இருக்கிறதா?"

"இல்லை."

"வேறெங்காவது உடல் உழைப்பில்லாத இடமாகப் பார்த்து..."

"இல்லை ஷேக், ஏற்கெனவே நாம் ஆட்குறைப்பில் இருக்கிறோம்."

"சரி, ஷாபான் மாதம் முடியுமட்டும் நான் பயணத்தில் இருக்கிறேன். இரண்டு வாரங்கள்தானே. நீ அவனை அனுப்புவிடுவதற்கான காகிதங்களைத் தயார் செய்துவிடு. கணக்கை முடிப்பதென்றால் ஐந்தாண்டுகளுக்கு அவனுக்கு எவ்வளவு கிடைக்கும்?"

"சொற்பத்தொகைதான் ஷேக்."

"வலாஹவ்லவலா... ஆறு மாதங்களுக்கு ஊருக்கு அனுப்பிவை. வேலையிலிருந்து எடுக்கவேண்டாம். ஓரளவுக்கு வேலைசெய்யும் அளவிற்கு உடம்பில் பலம் வந்ததும் மீண்டும் வரச்சொல். தொடர்பில் இருக்கச் சொல்."

ஷேக் பேச்சிற்கு மறுபேச்சில்லை.

விபத்தால் வலுவிழந்த உடம்பு மீண்டும் பழையபடி பலத்துடன் இயங்கும்வரையில் ஆறுமாத ஓய்வு என்பது மிக மகிழ்ச்சியான விஷயம், ஆனால், சாவன்னாவின் குடும்பச்சூழலுக்கு அப்படியல்ல. அவன் இப்போது ஊருக்குப் போகக்கூடாது.

வளைகுடாவில் வேலைசெய்யும் அனைவருமே ரியால்களாலும், திர்ஹம்களாலும், தீனார்களாலும் கிடைக்கும் பணமாற்று விகிதத்தால் பலன் அடைந்துவிடுவதில்லை. இங்கேயும் சாண் ஏறி முழம் சறுக்கும் பொருளாதாரச் சுழலில் சிக்கியிருப்பவர்கள் உண்டு. ஊரைச்சுற்றிக் கடனை வாங்கி விசாவுக்கு ஏற்பாடு செய்வார்கள். சவூதி அரேபியா வந்து முதல்வருட சம்பாத்தியம் முழுவதையும் கடனடைக்கச் செலவிட்டு முடித்ததும், அடுத்த வருடத்தில் 'அறுவத்தஞ்சு ரியாலுக்கு ஆயிரம் ரூபாயா?' என்னும் வியப்பு மிகச்சிறிய கர்வமாக மண்டைக்குள் ஏறும். அந்தக் கர்வத்தால் கொஞ்சமாக அகலக்கால் வைக்கத் துவங்கி சுதாரிப்பதற்குள் இரண்டாவது ஆண்டும் முடிந்துவிடும்.

விடுமுறையில் போக ஒரு கடன். விடுமுறையிலிருந்து திரும்பியபின் அதை அடைக்க உழைப்பு. சவூதியில் வேலை, துபாயில் வேலை என்ற வறட்டுக்கவுரவத்தால் விடுமுறை நாள்களில் தேவையில்லாமல் இழுத்துப்போட்டுக்கொண்ட வருமானத்துக்கு மீறிய செலவுகள். எல்லாவற்றையும் அந்த 'அறுவத்தஞ்சு ரியாலுக்கு ஆயிரம் ரூபாய்' என்னும் சட்டத்துக்குள் வைத்துப் பார்த்து இவ்வளவுதானே இவ்வளவுதானே என்பதாகப் பத்துப்பதினைந்து இவ்வளவுதானேக்கள் ஒன்றாக வந்து ஒரேநேரத்தில் மூழ்கடிக்க, நுரைதள்ள நீந்திக்கொண்டே இருப்பதும் சிலருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தவறுகளைத் தானே செய்து பாதிப்புக்குள்ளானவர்களும் இருக்கிறார்கள். எந்தத் தவறும் செய்யாமல், ஊரிலிருக்கும் உறவுகள் சவூதி, துபாய், அபுதாபியில் உழைப்பவனைப் புரிந்துகொள்ளாமல் பெருமைக்காகச் செய்த தவறுகளால் இங்கே பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். சாவன்னா இரண்டாவது ரகம்.

சாவன்னா தங்கையைக் கட்டிக்கொடுத்த இடத்திலிருந்து இரண்டு வருடங்களாகவே குழந்தைக்குச் சீர் செய்யவேண்டுமென்ற வற்புறுத்தல். முதல் ஆண்டில் செய்திருக்கவேண்டியது, தம்பியின் பாலிடெக்னிக் செலவால் தள்ளிப்போனது. அடுத்த ஆண்டு திருமணம் பேசத்துவங்கி அதற்கென்று கொஞ்சமாவது சேர்க்கலாம் என்பதற்குள் நிலைமை தலைகீழாகிப்போனது.

இப்பொழுது ஊர் திரும்பினால், அதுவும் ஆறுமாதங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் ஊரைச் சுற்றிவருவது லேசுப்பட்ட காரியமல்ல. ஆறுமாதம் என்றல்லாமல் ஒரேயடியாகக் கணக்கை முடித்து அனுப்பினால் நிலைமை இன்னும் மோசம். அந்தமட்டிற்கு இந்த ஆறுமாதக் கட்டாய விடுமுறை மேல் என்றாலும், அதற்குள் அவனுக்கு உடம்பு பழையநிலைக்குத் திரும்பவில்லையென்றால்? விளைவுகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

மெதுவாக நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொள்வதும், அலுவலகத்திற்கு வந்து தேனீர் தயாரிக்கும் அறைக்குள் அமர்ந்துகொள்வதும், இலக்கில்லாமல் இங்குமங்கும் பார்த்துக்கொண்டு இருப்பதும், எழுந்து வெளியே போவதும் மனதுக்குள் அழுவதுமாக இரண்டுவாரம் ஓடிவிட்டது. முழுவதுமாகக் கணக்கை முடித்து அனுப்பிவிடாமல் சம்பளக்கணக்கை மட்டும் முடித்து ஆறுமாத கட்டாய ஓய்வில் அனுப்ப ஏற்பாடு ஆகிவிட்டது.

தங்கையின் குழந்தைக்குச் செய்யவேண்டிய சீர்வகை, படித்துக்கொண்டிருக்கும் தம்பிக்கான பாலிடெக்னிக் செலவு, அங்குமிங்குமாக சில்லறைக் கடன்கள், இனியும் குடும்பம் நடக்கத் தேவையான பணம், முதலீடென்று நம்பி மோசம்போன தொகை, எல்லாவற்றையுமாக இந்த விபத்து வந்து பெரிதாக்கிப்போட்டு மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும் நிலையில் ஊருக்குத் திரும்புவதென்பதை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. படுக்கையிலிருந்த நாள்களில் கிடைத்த பகுதிச்சம்பளம் கைக்கும் வாய்க்கும் சரியாகப்போனது.

இனி உடல்நிலை தேறி, உழைத்து... நேரமில்லை! தம்பி தயாராவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதுவரையில் கொஞ்சம் இழுத்துப் பிடித்து ஓடிவிட்டால் போதும். அதற்குமேல் அவனும் சேர்ந்துகொள்வான். அதுவரையில் சாவன்னாவால் ஓடமுடியுமா? இந்த விபத்து எல்லாவற்றையும் இப்படிக் கலைத்துப் போட்டிருக்கிறதே.

*****


கணக்காளரிடம் ஷேக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"இது என்ன கணக்கு?"

"அந்த விபத்துள்ளான மனிதன். இன்று சம்பளக்கணக்கை முடிக்கிறோம்."

"நான் வந்திருக்கவில்லையென்றால்?"

"அது பிரச்சனையில்லை, நீங்கள் வந்திருப்பதால், உங்கள் கையெழுத்திற்காக..."

"அவன் இன்னும் புறப்படவில்லையா?"

"இன்றுதான் புறப்படுகிறான்."

"இந்த உடல் உழைப்பல்லாமல் வேறு ஏதாவது பணியை அவனால் செய்ய முடியுமா?"

"ஷேக், நாம் ஏற்கெனவே ஆட்குறைப்பில் இருக்கிறோம்."

"தெரியும், கேட்கிறேன்."

"அவனுடைய கிராஅத் ஓரளவு நன்றாக இருக்கும்."

ஷேக் கணக்குப் புத்தகத்தில் கையெழுத்திடாமல் சிறிதுநேரம் யோசித்தார். செல்பேசியை எடுத்து யாருக்கோ எண்களைத் தட்டினார். கொஞ்சநேரத்தில் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று சொல்லிக் கணக்காளரை அனுப்பிவிட்டு பேசத்துவங்கினார். பேசிமுடித்ததும் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. கணக்காளரை அழைத்தார்.

"குர்பான் பகுதியில் ஒரு சிறிய பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம் அல்லவா?"

"ஆமாம்."

"அங்கு ரமதானில் ஆள் தேவைப்படும் போலிருக்கிறது. ஒத்தாசைக்கு இவனை அங்கு அனுப்பு, ஷவ்வால், துல்'காயிதா, துல்'ஹஜ் மாதம் வரையில் அவன் அங்கு இருக்கட்டும். மற்றதை பின்பு பார்த்துக்கொள்ளலாம்."

"ஷேக், இவனால் உடலுழைப்பு செய்ய முடியாதென்றுதான்..."

"அங்கு உடலுழைப்பு தேவைப்படாது, அதற்கு ஆள்கள் இருக்கிறார்கள். இவன் பள்ளிவாசலைப் பார்த்துக்கொண்டு திறந்து, மூடி அந்த ஷேக்குக்குத் தேவையான உதவிகள் செய்தால் போதும். சம்பளம் நம் கணக்கில் இருந்து போகட்டும், சரியா!"

சாவன்னா இந்த ஆண்டு ரமதான் மாதத்திலிருந்து துல்'ஹஜ் மாதம் வரையில், நான்கு மாதங்களுக்கு ஊருக்குத் திரும்பப்போவதில்லை, அதற்குள் அவன் உடல் பழைய நிலைக்குத் திரும்ப இறைவன் துணையிருக்கட்டும்.

*****


சென்னையில் பிறந்த அபுல்கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலுள்ள ரியாதில் மேலாளராகப் பணிபுரிகிறார். 54 வயதான ஆசாத், ‘கஜல்’ (தமிழ் கஜல்கள்), ‘கானா’ (சென்னையின் கானாப்பாடல்களின் தொகுப்பு). ‘ஹஜ்’ (புனிதப்பயணம் குறித்தது) ஆகிய நூல்களின் ஆசிரியர். தமிழ் இணையக் குழுக்களில் ஆர்வமாகப் பங்கேற்கும் இவர் ஒரு மரபுப்பா ஆர்வலரும்கூட. இயல்பு வாழ்க்கையைப் படம்பிடிக்கும் சுவையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.

அபுல்கலாம் ஆசாத்,
சவூதி அரேபியா

© TamilOnline.com