மூக்கில் ரத்தக்கசிவு
மூக்குவழியே ரத்தம் கசிவது பலருக்கும் ஏற்படலாம். குறிப்பாக, குளிர்காலத்திலும், சீதோஷ்ணம் மாறுபடும் காலத்திலும், காலை கண்விழித்த உடனேயும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஒருசிலருக்கு அடிக்கடி ஏற்படலாம். சிறுவர்முதல் பெரியவர்வரை யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அமெரிக்காவில் குளிர்காலம், வசந்தகாலங்களில் இது அதிகம் காணப்படும்.

ரத்தம் கசியக் காரணங்கள்
* வறண்ட காற்று
* சைனஸ் அழற்சி அல்லது நுண்ணுயிர்க்கிருமிகள் தாக்கம்
* ஒவ்வாமை
* ரத்தம் உறையும் தன்மையை மாற்றும் Aspirin போன்ற மருந்துகள்
* ஜலதோஷம்
* மூக்கின் நடுச்சுவர் விலகியிருத்தல்
* மூக்குள் ஏதாவது மாட்டிக்கொண்டிருத்தல்
* ஒவ்வாமை இல்லாதபோதும் மூக்கில் அழற்சி
* மூக்கில் அடிபட்டிருத்தல்

நாசித்துவார ரத்தக்கசிவு பெரும்பாலும் சிலநிமிடங்களில் நின்றுவிடும். மிகவும் குறைவாகவே கசியும். ஆனால் சிலருக்கு அது பலநிமிடங்கள் நீடிக்கலாம். மிகவும் அதிகமாகக் கசிந்தாலோ, நிற்காமல் கசிந்தாலோ, மூக்கில் அடிபட்டிருந்தாலோ உடனடியாக அவசரசிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும். தலைசுற்றினாலோ, மூச்சுவிடக் கடினமாக இருந்தாலோ உடனடியாக 911 கூப்பிடவேண்டும்.

உடனடி சிகிச்சை
* நிமிர்ந்து உட்காரவும்.
* படுத்துக்கொள்வது நல்லதல்ல. ரத்தம் மூச்சுக்குழாயை அடைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
* முன்புறம் சரிந்து அமரவும்.
* குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களுக்கு நாசித்துவாரத்தை அழுத்திப் பிடிக்கவேண்டும். அப்போது வாய்வழியே மூச்சுவிடலாம்.

அப்படியும் ரத்தக்கசிவு நிற்கவில்லையென்றால், மேலும் 10 நிமிடங்கள் அழுத்திப் பிடிக்கவேண்டும். 30 நிமிடங்களுக்குப் பிறகும் நிற்காவிட்டால் அவசரசிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவேண்டும்.

மூக்குநுனியில் இருக்கும் ரத்தக்குழாய் மூலம் இந்தக் கசிவு ஏற்படுகிறது. இவை மிகவும் மென்மையானவை. அழுத்திப் பிடித்தால் ரத்தக்கசிவு நின்று விடும். சற்றுப் பெரிய ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டிருந்தால் நாசியில் பஞ்சு அல்லது மிருதுவான துணியை அடைத்து நிறுத்த வேண்டிவரும். இதனை அவசரசிகிச்சை மருத்துவர் அல்லது, காது மூக்கு தொண்டை நிபுணர் செய்வார். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இதை எடுத்துவிடுவார். இந்தச் சிகிச்சைமுறை பெரும்பாலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, Coumadin அல்லது Warfarin மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்குத் தேவைப்படலாம்.

தடுப்புமுறைகள்
மேலே கூறிய காரணங்களில், குறிப்பாக, வறண்டகாற்று முக்கியக் காரணம். இதனைச் சரிப்படுத்த தூங்குமறையில் ஈரப்பசை போதிய அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஈரப்பசை அதிகரிக்கும் Humidifier பயன்படுத்தலாம். வீட்டினுள்ளே வளர்க்கும் செடிகளும் இதற்கு உதவலாம். வீடுமுழுவதும் இது தேவைப்பட்டாலும் குறிப்பாகப் படுக்கையறையில் அவசியம்.

இதைத்தவிர நாசித்துவாரத்தில் வாசலீன் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. இது மேல்தோல் வறளாமல் வைக்க உதவும். இதனை தினமும் இரண்டு வேளை தடவலாம்.

ஒவ்வாமை இருப்பவர்கள் தேவையான Antihistamine மருந்துகளான Claritin, Zyrtec, Allegra, Benadryl எடுத்துக்கொள்ளலாம். மகரந்தம், சில தாவரவகைகள், ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதைத் தோல் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம். சிலருக்கு தூசு ஒவ்வாமை இருக்கும். இவர்கள் சுற்றுப்புறத் தூய்மைக்குப் பிரதானம் கொடுக்கவேண்டும்.

அடிக்கடி மூக்கடைப்பை நீக்கும் Afrin spray உபயோகித்தலும் நாசியில் ரத்தக்கசிவை அதிகப்படுத்தும். இது அதிக வறட்சியை ஏற்படுத்தலாம். ஜலதோஷம் வந்தால் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவற்றை ஒரு வாரத்துக்குமேல் உபயோகிப்பது நல்லதல்ல.

சிலருக்கு ஒவ்வாமை இல்லாவிட்டாலும் நாசியில் அழற்சி (Non Allergic Rhinitis) ஏற்படலாம். இவர்களுக்கு எக்காலமும் மூக்கடைப்பும், சளியும், தொண்டை வறட்சியும் இருக்கும். அவ்வப்போது ரத்தக்கசிவும் வரலாம். இதற்கு அடிக்கடி மூக்கைக் கழுவுதல் வேண்டும். உப்புக்கரைசல் (Saline Nasal Spray) உபயோகிக்கலாம். Corticosteroid nasal spray, Antihistaminic Nasal spray ஆகியவற்றை மருத்துவர் பரிந்துரையில் பெறலாம். இவற்றாலும் நிவாரணம் கிடைக்கும். நிறையத் தண்ணீர் அருந்தவேண்டும்.

பெரிய பின்விளைவுகள் இல்லாதபோதும், இந்த உபாதை தினந்தினம் தொந்தரவு தருவது. சின்னச்சின்ன நிவாரணங்கள் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com