தென்றல் பேசுகிறது
'ஒபாமா கேர்' என்று கூறப்படும் மருத்துவக்காப்பீட்டுச் சலுகைகள் அதிபர் ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது. கீழ்நிலை மற்றும் நடுத்தர வருமானம் கொண்டோர் மருத்துவக்காப்பீடு எடுக்கும்போது (யாருமே காப்பீடில்லாதிருக்கக் கூடாது என்ற நோக்கில்) அவர்களது பிரீமியத்தில் ஒரு பகுதியை அரசு மானியமாக வழங்குவது ஒபாமா கேரின் ஓர் அம்சம். அரசு இத்தகைய மானியத்தை வழங்கக்கூடாது என இதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் "மருத்துவக் காப்பீட்டுச் சந்தை வளர்க்கப்பட வேண்டியதே அன்றி அழிக்கப்பட வேண்டியதல்ல" என்று தெளிவாகக் கூறிதோடு, மாநில அரசு கொடுத்தாலும், ஐக்கிய அரசு கொடுத்தாலும், ஒபாமா கேரின்கீழ் மானியம் மற்றும் வரிச்சலுகைகள் ஏற்புடையனவே எனவும் கூறியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கவேண்டுமென்ற நோக்கமுள்ள ஒபாமா கேருக்கு இந்தத் தீர்ப்பு வலுவூட்டியிருக்கிறதென்பதில் சந்தேகமில்லை.

*****


ஒருபால் திருமணங்களை அமெரிக்காவின் சில மாகாணங்கள் அங்கீகரித்தும், சில மாகாணங்கள் ஏற்காமலும் இருந்தன. ஆனால், உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. "ஒருபாலினத் திருமணங்களை மாகாணங்கள் தடுக்கமுடியாது, அவற்றை அங்கீகரித்தாக வேண்டும்" என்று எல்லா மாகாணங்களுக்கும் கூறிவிட்டது. வெவ்வேறு வகைப் பாலின ஈர்ப்புகள் கொண்டோரை மதிப்பதும், அவர்களை கௌரவத்தோடு வாழ அனுமதிப்பதும், வித்தியாசமாகப் பாராமலிருப்பதும் அவர்களுக்கு சமூகப் பொதுநீரோட்டத்தில் இயல்பாகக் கலந்துவாழும் சூழலை ஏற்படுத்தும். சமுதாயக் கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சியில் இதுவொரு மைல்கல். "திருமணமென்பதன் வரலாற்றில் தொடர்ச்சியும் உண்டு, மாற்றமும் உண்டு" என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியுள்ளது. நாமும் உடன்படுகிறோம். ஒருபாலினத் திருமணங்களை ஆதரித்து அயர்லாந்து அண்மையில் வாக்களித்ததையும் இங்கு நினைவுகூரலாம். திருமணம் என்ற சூத்திரம் திருத்தி எழுதப்படும் நேரம் இது.

*****


அமெரிக்க மகளிர் கால்பந்து அணி மாண்ட்ரியால் மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜெர்மனியை 2-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து, இறுதியாட்டத்துக்கு முன்னேறிய செய்தி நமக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. Go U.S.A.!

அமெரிக்காவின் விரிகுடாப்பகுதியில் நடக்கும் FeTNA தமிழ்விழாவுக்கு இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வருகைதருவது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைத் தமிழரிடையே அமைதியும் நல்வாழ்க்கைக்கான நம்பிக்கையும் இன்னும் முழுதாகத் திரும்பிவிடவில்லை. ஆனால் சாத்தியக்கூறு வலுவாகியுள்ளதைக் காணமுடியும். இதனை நடைமுறைப்படுத்துவதில் விக்னேஸ்வரன் போன்றோரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கும் வலுவான ராணுவப் படைகளுக்கிடையே இருந்துகொண்டு பணியாற்றுவது நெருப்பின்மேல் நடப்பது போன்றதுதான் என்றாலும் இப்போதிருக்கும் நிலையில் எந்தச் சிறு துரும்பையும் பற்றிக்கொண்டு கரையேற முடியுமா என்று முயற்சிப்பது மிகவும் அவசியம். எத்தனையோ பணிகளுக்கு நடுவிலும் அவர் மிகவும் அன்போடு நமது கேள்விகளுக்கு விடையளித்தார். அவருக்கு வாசகர்கள் சார்பில் நன்றி. அமெரிக்கத் தமிழரின் சங்கமமான FeTNA தமிழ்விழா வெற்றிபெற நமது வாழ்த்துக்கள்.

மனதை வசப்படுத்துவது இசையின் பண்பு. அந்த இசையோடு தரப்படும் எதுவும் மனதில் நிற்கும். தமிழின் பாரம்பரியச் சொத்தான திருக்குறளை, 'உள்ளந்தோறும் குறள்' என்ற திட்டமாக, மெல்லிசை கலந்து கொடுக்கப் புறப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அறத்துப்பாலின் குறட்பாக்களை ஒரு குறளுக்கு ஒரு குரல் எனப் பயன்படுத்தி அவர் முதல் இசைக்குறுவட்டை வெளியிட அமெரிக்கா வந்திருந்தார். தனது முயற்சி பற்றிய தகவல்களை அவர் நம்மோடு இந்த இதழில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தவிர ரமலானுக்கெனச் சிறப்புச் சிறுகதையும் உண்டு. பக்கத்தைப் புரட்டுங்கள், படியுங்கள், சுவையுங்கள்.

வாசகர்களுக்கு ரமலான் திருநாள், அமெரிக்கச் சுதந்திர நாள் மற்றும் குருபூர்ணிமா வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூலை 2015

© TamilOnline.com