அரங்கேற்றம்: சுவாதி சுப்ரமணியன்
மே 17, 2015 அன்று குரு இந்துமதி கணேஷின் சிஷ்யையும் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளியின் மாணவியுமான சுவாதி சுப்ரமணியனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஓலோனி ஜாக்சன் அரங்கத்தில் நடந்தது. இனிய புன்சிரிப்பும், பெரிய விழிகளும் நல்ல நர்த்தகியான சுவாதிக்கு அமைந்தது அரங்கேற்றத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்த்தது.

புஷ்பாஞ்சலியில் இறைவனுக்கு மலர்களை சமர்ப்பித்து, ஜதிஸ்வரத்தில் சிறந்த தாளக்கட்டுடன் வர்ணத்தைத் தொடர்ந்தார். கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் (குரு இந்துமதியின் மாமியார்) இயற்றிய வர்ணத்தில் ஹரிஹர புத்திரனான ஐயப்பனை, மன்னன் ராஜசேகரன், கழுத்தில் மணியுடன் பம்பை நதியில் கண்டெடுத்து மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்ப்பது, புலிப்பால் கொண்டுவருவது, மகிஷியை அழிப்பது என முழுக்கதையையும் 40 நிமிடத்தில் பாவத்தோடு அபிநயித்தார் சுவாதி.

மஹாகவி.பாரதியின் சக்திக்கூத்தை அற்புதமாக ஆடினார். அடுத்து காப்பிராகத்தில் அமைந்த 'சின்னச்சின்ன' பதத்தில் சிற்றடி வைக்கும் கண்ணன், காளிங்க நர்த்தனம் ஆகிவற்றைக் காட்டி கரவொலிபெற்றார் சுவாதி. "நேற்று அந்திநேரத்திலே" பாடலுக்குக் காதலன்மீது சந்தேகம் கொண்ட காதலியாக, வருந்தி உருகித் தன்னை வந்து சமாதானப்படுத்தக் கேட்கிறார். தில்லானா, மங்களத்துடன் நிறைவுசெய்தார்.

ஆஷா ரமேஷின் வாய்ப்பாட்டு, நாராயணன் மிருதங்கம், சாந்தி நாராயணன் வயலின், இந்துமதி மற்றும் அக்ஷயா கணேஷின் நட்டுவாங்கம் ஆகியன இவ்வரங்கேற்றத்திற்குச் சிறப்புச் சேர்த்தன.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com