அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கத்தின் (ATMA) முதல் மாநாடு
அன்று செப்டம்பர் 2, 2005. இலையுதிர் காலத்தின் முதல் வார இறுதியான உழைப்பாளர் தின விடுமுறையின் மகிழ்ச்சியான மாலைப்பொழுது. தலைநகர் வாஷிங்டனை ஒட்டிய வர்ஜினியா மாநிலத்திலுள்ள கிரிஸ்டல் சிட்டி மேரியாட் விடுதியில் அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் முதல் மாநாடு கோலாகலமாகத் துவங்கியது. 'ஆத்மா' (ATMA) என்ற பொருள் பொதிந்த பெயர்ச் சுருக்கத்துடன் அழைக்கப்படும் American Tamil Medical Association, தொடங்கி ஏழு மாதங்களே ஆகியுள்ள நிலையில் நடத்தப்பட்ட முதல் மாநாடு அது. இவ்வளவு குறுகிய காலத்தில் மாநாட்டை நடத்திக்காட்டியுள்ள ஆத்மாவில் ஏற்கனவே ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், தலைவருமான டாக்டர் ஜெய்கோபால் தத்துவ மேதை அரிஸ்டாட்டிலை மேற்கோள் காட்டி, ''நல்ல தொடக்கமே, பாதி இலக்கை அடைந்ததுபோல்" என்று கூறினார். மேலும் அவர், ''அடித்தளம் உறுதியாக அமைத் துள்ளோம். மருத்துவக் கவனிப்பு மிகத் தேவை உள்ளோருக்குப் பணி செய்யும் நமது நோக்கத்தை அடையப் பாடுபடுவோம்'' என்று கூறினார்.

செயற்குழுத்தலைவர் டாக்டர் வி.எஸ். பரிதிவேல் கோடிட்டுக் காட்டிய இன்னொரு முக்கிய நோக்கம் ''இந்த அமைப்பு தன்னுடைய வெளிப்படையான அணுகு முறையால் அனைத்துத் தமிழ்கூறும் மருத்துவ வல்லுநர்களையும் உள்ளே கொண்டு வரவேண்டும்'' என்பதாகும்.

லாப நோக்கில்லாத தொண்டு நிறுவன மாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆத்மா. தமிழர்கள் வாழும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து மருத்துவத் துறையில் பணி புரியும் அனைத்து வல்லுநர்களையும் அரவணைத்துக் கொண்டுள்ள அமைப்பு. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்ய விழைந்துள்ள இவ்வமைப்பு எக் காலத்திலும் தமிழர்களின் முற்காப்பு மருத்துவ நலனை மேம்படுத்தப் பணிபுரியும். அதுமட்டுமல்லாமல் புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற பேரிடர்க் காலங்களில் உடனடி மருத்துவ நிவாரணத்தை மேற் கொள்ளும். இவ்வமைப்பின் செயல்பாடு களை 'Pulse of ATMA' பெயரில் செய்தி இதழாக வெளியிட்டு வருகின்றனர். மேலும் JATMA என்ற பெயரில் ஒரு தரமான ஆராய்ச்சியிதழையும் வெளியிட எண்ணியுள்ளனர்.

பால்டிமோரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொடரும் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி (Continuing Medical Education Program) இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும். சுமார் நானூறு உறுப்பினர் கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் இயக்கிப் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

செப்டம்பர் 3 அன்று இரவு நிலவொளியில் Spirit of Washington என்ற உல்லாசக் கப்பலில் விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

செப்டம்பர் 4 அன்று கலி·போர்னியாவி லிருந்து வந்திருந்த சமூக சேவகியும், நன்கொடையாளருமான திருமதி பிரெண்டா ·ப்ரீபர்க் சிறப்புரையாற்றினார். தமிழ் நாட்டில் YRGC என்ற தொண்டு அமைப்பின் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் ஆதரித்து மறுவாழ்வளித்து வருகிறார். அவருடைய உத்வேகமான உரையைத் தொடர்ந்து ஆத்மாவின் சிறப்பு விருதுகள் கீழ்க் கண்டவாறு வழங்கப்பட்டன:

டாக்டர் ஹரி பிரபாகர் - இளம் ஆராய்ச்சியாளர்

டாக்டர் இரகுராஜ் சின்னராஜா - பொதுச் சேவை

டாக்டர் செந்தில் சேரனுக்கு - சிறந்த பயிற்சிநிலை மருத்துவர்

பேரா. சி.எஸ். பிச்சுமணி - ஆயுள் கால சாதனை

மாநாட்டின் இறுதிநாளில், விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது பின்வரும் ஆத்மாவின் மருத்துவச் சேவைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல். இத்திட்டங்களைப் பரிசீலனை செய்து அவற்றில் சிலவற்றைத் ஆதரிக்கவும் ஆத்மா முடிவு செய்துள்ளது.

மாநாடு ஆரம்பித்த பொழுது அமெரிக்கா வின் லூயீசியானா மாநிலக் கடற்கரைப் பகுதிகளை காட்ரீனா புயல் தாக்கி மிகுந்த சேதம் ஏற்படுத்தியதால், அங்கு நடக்கும் நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டப் பட்டது. முதல் கட்ட நன்கொடையான 5000 டாலர் டாக்டர் விஜய் கோலி தலைமை வகிக்கும் அமெரிக்க இந்திய மருத்துவர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாநாட்டில் எஞ்சும் நிதியிலிருந்து 5000 டாலர்களை அமெரிக்க அதிபரின் காட்ரீனா நிதிக்கு வழங்கப் போவதாக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாஸ்கரன் அறிவித்தார்.

இந்த மாநாட்டைச் சிறப்பாக ஒருங்கிணைத்த டாக்டர் பாஸ்கரன் மிகுந்த பாராட்டுக்குரியவர். அவருக்கு உறுதுணை யாக இருந்து பல்வேறு குழுக்களை வழி நடத்தினர் பின்வரும் ஆர்வலர்கள்: டாக்டர்கள் வசந்தகுமார், வேல் நடேசன், ஜீவன், மல்லிகா உமாமகேஸ்வரன், வசந்தி ஜீவன், அனு அருண், தேவிகா அனந்த கிருஷ்ணன், சங்கரி சிவசைலம், திருவாளர்கள் சோ. மெய்யப்பன், சொ. சங்கரபாண்டி, தெ. சிவசைலம், கண்ணன் இராமசாமி, பிரபாகரன் முருகையா, திருமதிகள் ரேவதி குமார், லதா கண்ணன், மஞ்சுளா கோபால், கல்பனா மெய்யப்பன், உமா இரவி, சேது பாஸ்கரன்.

தமிழ்கூறும் நல்லுலக மருத்துவர்களே! ஆத்மா அமைப்பின் கீழ் சேர்ந்து மற்ற ஆத்மாக்களுக்கு உதவ முன் வாருங்கள்.

டாக்டர் தேவிகா அனந்தகிருஷ்ணன்

© TamilOnline.com