ஓவியர் நடனம்
ஓவியரும், தமிழகத்தின் முன்னணி புடைப்புச்சுவரோவியக் கலைஞருமான நடனம் (76) சென்னையில் காலமானார். இயற்பெயர் நடராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர். விகடனில் வெளியான கோபுலுவின் ஓவியங்களால் உந்துதல் பெற்று அவரது பாணியிலேயே கோட்டோவியங்களை வரையத் துவங்கினார். 'நடராஜன்' என்ற பெயரில் புகழ்பெற்ற ஓவியர் ஒருவர் முன்னரே இருந்ததால் 'நடனம்' என்ற புனைபெயரைச் சூடினார். அரசு கலைக்கல்லூரியில் பயின்று சிறந்த கலைஞராகப் பரிணமித்தார். இவரது ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு இவரைச் சென்னைக்குச் சென்று முயலக் கூறினார். பிரபல எழுத்தாளரும் நண்பருமான தி. ஜானகிராமனுக்கு நடனத்தை அறிமுகப்படுத்தினார்.

1959ல் சென்னைக்கு வந்த நடனம் தி. ஜானகிராமனின் உதவியால் சில பத்திரிகைகளுக்குக் கோட்டோவியம் வரைந்தார். ஓவியர் சாகருடன் இணைந்து சிலகாலம் பணியாற்றியவர், பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்ஸ் ஓவியராகப் பணிபுரியத் தொடங்கினார். விகடன், சாவி எனப் பல இதழ்களுக்கும், நூல்களுக்கும் கார்ட்டூன், நகைச்சுவைத் துணுக்கு, ஓவியம் என வரைந்தார். சாவியில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' தொடருக்கு ஓவியம் வரைந்தது இவர்தான். ஒரு விளம்பர நிறுவனத்தில் சில வருடங்கள் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்த நடனம், பின் புடைப்புச் சுவரோவியத்தில் தனித்திறமையை Click Here Enlargeவளர்த்துக்கொண்டார். மரம், பித்தளை, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைக் கொண்டும் கிரானைட், பிளாஸ்டிக், சிமெண்ட், டெரகோட்டா மற்றும் ஃபைபர்கிளாஸ் கொண்டும் புடைப்புச் சிற்பங்களைப் படைத்தார். அதற்காக நடனம் ஆர்ட் இண்டர்நேஷனல் என்ற அமைப்பை உருவாக்கினார். கோவையின் பி.எஸ்.ஜி. கல்லூரிக்காக இவர் உருவாக்கிய புடைப்புச் சுவரோவியங்கள் பலரையும் கவர்ந்தன. பல பிரபல கட்டடங்களில் புடைப்புச் சுவரோவியம் அமைக்கும் வாய்ப்புக்கள் குவிந்தது. இதில் முன்னணிக் கலைஞரானார். சென்னையில் சவேரா, கிங்க்ஸ் பார்க், நியூ உட்லண்ட்ஸ், டைடல் பார்க், சென்னை விமானநிலையம், பிரிட்டிஷ் ஹைகமிஷன் அலுவலகம் ஆகியவை இவரது கைவண்ணத்தில் எழில் பெற்றுள்ளன. மலேசியா, சிங்கப்பூரிலும் நட்சத்திர ஹோட்டல்களில் இவரது சுவரோவியங்களைப் பார்க்கலாம்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில், கோவிந்தபுரம் ஆலயம், திருப்பதி இஸ்கான் சென்டர் போன்றவற்றிலும் கண்ணைக்கவரும் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார் நடனம். குறிப்பாக தென்னாங்கூரில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், அதன் மேற்கூரை ஆகியவற்றில் நடனம் படைத்துள்ள 'கிருஷ்ண லீலா' சுவரோவியங்கள் கண்ணைக் கவர்வன. 'முதல்வன்' படத்தில் கதாநாயகனின் தந்தையாக இவர் நடித்திருக்கிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், பார்கவி என்ற மகளும் உள்ளனர்.

நடனத்திற்கு தென்றலின் அஞ்சலிகள்!

Click Here Enlarge&Click Here Enlarge

© TamilOnline.com