சிக்கலில்லா பெருவாழ்வு
பழையன கழிதலும், புதியன புகுதலும் நமது வாழ்வில் அன்றாடம் நடக்கும் செயல். காலை எழுந்ததும் பெருங்குடல் வேலைசெய்யாமல், மலச்சிக்கல் ஏற்படும்போதுதான் அந்த உண்மை விளங்கும். தினமும் போகாமல், வாரத்தில் மூன்றுமுறைக்குக் குறைவாக மலம் கழிப்பதே மலச்சிக்கல் என்று மருத்துவம் சொல்கிறது. மலங்கழிப்பதன் எண்ணிக்கை ஒருவருக்கொருவர் மாறுபடலாம். ஆனால், தினம் ஒருமுறை போவது பொதுவான வழக்கம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை போவதும் சிலருக்கு வழக்கமாக இருக்கலாம். வழக்கம் மாறுபட்டாலோ, மலம் இறுகி வெளியேற மறுத்தாலோ அது மலச்சிக்கல் என்றழைக்கப்படுகிறது.

காரணங்கள்
* உணவில் நார்ப்பொருள் குறைவாக இருத்தல்.
* சில மருந்துகள் குடலின் செயல்பாட்டை மெதுவாக்குதல்; குறிப்பாக வலிமருந்துகள், இரும்புச்சத்து, வைட்டமின்கள்
* ஆசனவாய் உபாதைகள்: ஆசனவாய் வெடிப்பு (Anal fissure), மலக்குடல் இறக்கம் (rectocele)
* சிறுகுடல்/பெருங்குடல் புண் (ulcerative colitis), பெருங்குடல் புற்றுநோய்
* குடல் உறுத்தல் நோயியம் (Irritable Bowel syndrome)

மலச்சிக்கல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிட்டால் புண் அல்லது புற்றுநோய் இருக்கும் வாய்ப்பு குறைவு. ஒருசிலருக்கு மீண்டும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு ஒரு நிரந்தரப் பிரச்சனை ஆகிவிடும். மனஅழுத்தம் அதிகமிருப்போருக்கு Irritable Bowel syndrome உண்டாகும் வாய்ப்புண்டு. இவர்களுக்கு மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படலாம். சிக்கல் உண்டாகும்போது, வயிறு உப்புசம் ஏற்பட்டு வீங்குவது போலவும் தோன்றலாம். வயிற்றை இழுத்துப்பிடித்து வலி உண்டாகலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் மலத்தின் போக்கு சற்று மாறுபடலாம்.

உணவுப் பொருட்கள்
நார்ப்பொருள் அதிகமுள்ள காய்கறிகள்: குறிப்பாக, தோலுடன் தண்ணீர்க் காய்கறிகள் உண்ணவேண்டும்.
பழங்கள்: இதில் பச்சை வாழைப்பழம் சிக்கலை உண்டாக்கும். ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, prunes ஆகியவை மலச்சிக்கலைச் சரிப்படுத்தும்.
தண்ணீர்: அதிகமாகத் தண்ணீர் குடிப்பது மலப்போக்கை எளிதாக்கும்
சூடான பானம் அருந்துதல் குடல் செயல்பாட்டை விரைவுபடுத்தும்.
பால், சீஸ் போன்றவை மலச்சிக்கலை அதிகப்படுத்தலாம். சாக்லேட், மாமிசம் இவையும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்

உடற்பயிற்சியும், நடமாடுதலும் மலச்சிக்கலைக் குறைக்கும். படுத்தபடுக்கையாய் ஆன முதியோருக்கும், மருத்துவமனையில் உள்ளோருக்கும், நடமாட்டம் குறைவதனால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

தீர்வுகள்
நாள்தோறும் 6 முதல் 8 கோப்பை தண்ணீர் அருந்தவேண்டும்.
காய்கறிகளை முடிந்தவரை தோலுடன் உண்ணவேண்டும்.
பழங்களை அதிகம் உண்ணவேண்டும். குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்கள்.
தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்.
குனிந்து, நிமிர்ந்து, நடந்து செல்லும்போது குடல் வேலைப்பாடு தடையில்லாமல் நடக்கிறது.
இதைத்தவிர, நார்ப்பொருள்கொண்ட மருந்துப்பொடிகளும், மாத்திரைகளும் மருந்துக்கடையில் கிடைக்கின்றன. இவற்றையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலே சொன்னதுபோல குடல் உறுத்தல் நோய்க்குறிகளின் தொந்தரவு இருப்பின் எந்தெந்த உணவினால் சிக்கல் ஏற்படுத்துகிறதோ அதைக் கண்டறிந்து தவிர்க்கவேண்டும். இதற்குமேல் மருத்துவர் சில மருந்துகள் கொடுக்கலாம். இதை ஆசனவாய் மூலமாகவும் செலுத்தலாம். ஒரு சிலருக்கு எனிமா சிகிச்சை தேவைப்படலாம். இந்தவகை மருந்துகள் அதிகமானால், குடல் இவற்றின் உபயோகத்துக்குப் பழகிவிடும் அபாயம் உள்ளது. அதனால் கூடுமானவரை உணவு, உடற்பயிற்சி, தண்ணீர், பழங்கள் இவற்றின்மூலம் குணம்பெற முயல்வது நல்லது.

பின்விளைவுகள்
மலச்சிக்கல் தொடர்ந்து இருப்பின், ஆசனவாய்ப் பகுதியில் ரத்தநாளங்கள் வீங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனை மூலம் (Hemorrhoid) என்று சொல்வர். இதனால் ரத்தம் கசிதல், வலி போன்றவை ஏற்படலாம். இது மலம் கழிக்கும்போது அதிகமாக முக்குவதால் ஏற்படுகிறது. தேவையான நேரம் கொடுத்து, நிதானமாகக் காலைக்கடனைக் கழிப்பதால் இதனைத் தவிர்க்கலாம். ஆசனவாயின் விளிம்பில் தோல்வெடித்து Anal Fissure உருவாகலாம். இது தாங்கமுடியாத வலியை உண்டாக்கும். இதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

காரணமின்றித் தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தாலோ, சரியாகக் குடல் வேலை செய்துகொண்டு இருந்தவர்களுக்குத் திடுமென்று தீவிர மலச்சிக்கல் ஏற்பட்டாலோ குடலுக்குள் குழாயைச் செலுத்தி 'Colonoscopy' செய்யவேண்டி வரலாம்.

தினப்படி நடக்கவேண்டிய உடலின் செயல்பாடு குன்றினால், அதை உடனடியாக கவனித்து, பழக்கவழக்கங்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும். சிறுவயது முதலே காய்கறி, பழங்கள் உண்ணும் பழக்கமும், போதிய நீரருந்தும் பழக்கமும் கொள்ளவேண்டும். முதியவர்கள் கூடுமானவரை நடமாடியபடி இருக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யவேண்டும். மருந்துகள் காரணமாக இருந்தால் மருத்துவரிடம் சொல்லி மாற்றுமருந்து உட்கொள்ள வேண்டும். தகுந்த முயற்சிகளை மேற்கொண்டால் சிக்கலின்றி வாழ்வை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com