மனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்
அன்புள்ள சிநேகிதியே

சமீபத்தில் 'இந்தியாவிலிருந்து யாராவது எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா' என்று தனிப்பட்ட முறையில் உங்களைக் கேட்டு எழுதியிருந்தேன். 'பிரச்சனைகள் எல்லாருக்கும் பொதுதானே' என்று பதில் சொல்லியிருந்தீர்கள். இந்தக் கடிதம் பிரசுரம் ஆகும், என் தனிமைக்கு வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

எனக்கு 68 வயதாகிறது. வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றுப் பல வருடங்கள் ஆகின்றன. ஜாதகக் கோளாறினால் திருமணம் மிகவும் தள்ளிப்போனது. ஆனாலும் நல்லகணவர் அமைந்தார். அவர் குடும்பப் பொறுப்புகளை முடித்து, தன்னை கவனித்துக்கொள்ள வேண்டிய சமயத்தில் அவருக்கும் வயதாகிவிட்டது. இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவ உதவியால் கருத்தரித்தால் பின்னால் ஏற்படும் விளைவுகளையும் எங்கள் வயதையும் எண்ணி அந்தத் திட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் தாயாக வேண்டும் என்று மனது ஏங்கியது. என் கணவர் என்னைவிட எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தங்கைக்கு மூன்று குழந்தைகள். அவள் கணவருக்கு வேலை போய் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெரியவன் 7 வயது. படிப்பில் மிக ஆர்வமாக இருந்தான். அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்துக் கொடுக்கலாமே என்று என் கணவர் ஆசைப்பட்டார். முதலில் நான் தயங்கினேன்.

உறவுக்குள் தத்தெடுத்துவிட்டு, பிறகு மனஉளைச்சலைச் சந்திக்க நேருமோ என்று பயந்தேன். என் கணவர் அந்த பயமெல்லாம் இருக்காது. எனக்கு வேலை மாறுதல் இருக்கிறது. வெளியூருக்குச் சென்றுவிடுவோம். அதனால் அந்தப் பையனுக்கு நாளாக நாளாக நம்முடன் ஒட்டுதல் வரும் என்று சமாதானம் செய்தார். என் நாத்தனாருக்கு இருந்த பணம், மனப்பிரச்சனைகள் காரணமாகவும், 'இந்தப் பையன் நன்றாக வளருவான்' என்ற நிம்மதியிலும் இவனை எங்களுடன் விட்டுவைக்கச் சம்மதித்தார். முதலில் தன் தம்பி, தங்கைகளைப் பிரிந்த சோகத்தில் இருந்த பையன், நாளடைவில் என் கணவர் சொன்னதுபோல நன்றாகப் பழக ஆரம்பித்தான். எனக்கும் என்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததுபோலத் தோன்றியது.

என் பையன் நன்றாகப் படித்து மேல்படிப்புக்கு உங்கள் ஊருக்குத்தான் வந்தான். 5 வருடம் ஆகிறது. நாள் போகப்போக எனக்கு அவனைப் பிரிந்த கொடுமை, என் கணவரின் உடல்நிலை, என்னுடைய 'ஓய்வு', எல்லாம் சேர்ந்து எனக்கு மனச்சோர்வை அளித்தது. அது நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறது. என் கணவர் 6 மாதம் முன்பு என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டுப் போய்விட்டார். விசா பிரச்சனையால் என் பையன் வரமுடியவில்லை. நான் தனிமையாக்கப்பட்டேன். எனக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மூட்டுவலி என்று எல்லா வியாதிகளும் உண்டு. வயதாகி வருவதும் தெரிகிறது. கொடுமையாக இருக்கிறது. வாராவாரம் அவன் 'தொலைபேசியை' எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். அவன் முன்புபோல அடிக்கடி என்னிடம் தொடர்பு கொள்வதில்லை. ஒருமுறை அவனைக் கூப்பிட்டு அழுதபோது, "எப்போதும் உன் குறையையே சொல்லிக் கொண்டிருக்காதே, எனக்கும் இங்கே ஆயிரம் அழுத்தங்கள் இருக்கிறது" என்று சொன்னான். எனக்கு மனம் வாடிப் போய்விட்டது. இதற்கிடையில் நான் கேள்விப்பட்டது, என்னுடைய நாத்தனாரின் இரண்டு பையன்களும் (இவனுடைய தம்பிகள்) அங்கே வந்திருப்பதாகவும், இவன் அவர்களைப் பார்த்துக்கொண்டு உதவி செய்வதாகவும் கேள்விப்பட்டேன். என் நாத்தனாருடைய பெண்ணும் அங்கே கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டாள். ஆகவே அவளும் அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதெல்லாம் தப்பு என்று நான் சொல்லவில்லை. ஆனால் என்னிடம் ஏன் மறைத்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு நெஞ்சில் துக்கம் அடைக்கிறது.

எனக்கு என் கணவர் போனபிறகு எல்லாரும் என்னைத் துச்சமாக மதிப்பதாக ஒரு எண்ணம் வந்துவிட்டது. வீண்பிரமை என்று சொல்லாதீர்கள். அது உண்மை. வயதான காலத்தில் என் பையன் என்னை ஏன் விட்டுக்கொடுத்து விட்டான்? அவன் எதிர்காலத்திற்காக நானும்தானே எத்தனையோ தியாகம் செய்திருப்பேன்? என் தோழி ஒருத்தி வயதானவர் காப்பகத்தில் தங்கியிருந்தாள். அவள் திருமணம் செய்து கொள்ளாதவள். அவளுடன் போய் பத்து நாள் தங்கியிருந்துவிட்டு வந்தேன். ஆனால் மனது ஒட்டவில்லை. சாப்பாட்டின்போது 'என் பையன் அங்கே இருக்கிறான்; என் பெண் அப்படி இருக்கிறாள்' என்று ஒவ்வொருவரும் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறார்கள். என் தோழி என்னைவிட வயதில் சின்னவள். எந்த வியாதியும் இல்லை. அதனால் அடிக்கடி வெளியூர் செல்வது, உடற்பயிற்சி செய்வது என்று இருக்கிறாள். 'என் வயதில் இதெல்லாம் செய்ய முடியுமா? சொல்லுங்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு கைவேலை செய்வேன், பிரயாணம் செய்வேன், நானும் என் கணவரும் போகாத இடமில்லை. சுற்றாத கோயிலில்லை. இன்றைக்கு எடுத்த பொருளைத் திரும்ப எடுத்த இடத்தில் வைக்கக்கூட சக்தியில்லாததுபோல் தோன்றுகிறது. வயதாகிறது. கொடுமையாக இருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியாகத் தெரிகிறது. தமிழில் அவ்வளவு ஆர்வம். ஆனால் புத்தகம் படிக்கமுடிவதில்லை. பைத்தியம்போல் எழுதிக்கொண்டு போகிறேன்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிமையையும் மனதில் இருக்கும் வெறுமையையும் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள். நான் உங்கள் கடிதத்தின்மூலம் புரிந்துகொண்ட வரையில் உங்கள் மனதிற்கு நீங்கள் வயதை ஏற்றிக்கொண்டே போகிறீர்கள். உடலின் வயதுக்கேற்ப உபாதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தளர்வு, தள்ளாமை, இயலாமை எல்லாமே முதுமையின் சொத்துக்கள்தானே. இதைப்பற்றிக் கவலைப்பட முடியுமா? இயற்கை ஏற்படுத்தும் அத்தனைப் பருவ மாற்றங்களையும் அந்தந்த வகையில் புரிந்து கொண்டு ரசித்தாலே மனச்சோர்வு குறைந்துவிடும்.

உங்கள் நிலையில் உங்கள் எழுத்தில் தள்ளாமை தெரியவில்லை. கருத்தில்தான் தெரிகிறது. அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டால் உங்கள் எழுத்துக்குக் கூர்மையும் வலியும் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை பெருகும்.

Old age is a Blessing! இதை உங்களுக்குமட்டும் சொல்லவில்லை. வயதாகிவிட்டது என்று நினைக்கும் 45 வயதுக்காரர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். முற்றிலும் ஓய்வுபெற்ற உங்கள் நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை எவ்வளவு சுகம் என்று நினைத்துப் பாருங்கள்.

* என்ன முடிகிறதோ, என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யலாம். முடியவில்லை என்றால் யாரும் வற்புறுத்த மாட்டார்கள்.

* எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம், எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். எந்தக் குழந்தையும் பாலுக்கு அழப்போவதில்லை. டயாபரை மாற்ற உங்களை எதிர்பார்க்கப் போவதில்லை. காலையில் அரக்கப்பரக்க எழுந்து மெயில் செக் பண்ணிவிட்டு, வேலையில் 'early meeting' என்று ஓடவேண்டாம்.

* கூட்டம் நிரம்பிவழியும் இடங்களில் ஒன்றிரண்டு நாற்காலிகள்தான் இருந்தால், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் பார்த்து அவற்றை யாரோ எடுத்துப்போட்டு உங்களை உட்கார வைப்பார்கள்.

* ட்ரெயின், ஃப்ளைட் என்று எங்கே போனாலும் Senior Citizen Discounts உண்டு.

* சிறுவயதில் குழந்தைகள், குடும்பம், Profession என்று மூழ்கிப்போய் சின்னச்சின்ன விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளாமல் இருந்தால், இந்த வயதில் செய்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

* எத்தனை புத்தகங்கள், எத்தனை செடிகள் உங்கள் வருடலுக்காகக் காத்துக் கிடக்கின்றன, உங்களுக்கு ஆர்வம் இருந்தால்.

* வருடத்தில் எத்தனை Vacations வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

* 'யாரும் இந்த வேலையைச் சரியாகச் செய்யவில்லை' என்று குற்றம் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

* முதுமை என்பது இயற்கையின் வரப்பிரசாதம். இவ்வளவு நாள் நம்மை விட்டுவைத்ததால்தான் நாம் நேசிப்பவர்களுடனும் நம்மை நேசிப்பவர்களுடனும் நாம் நல்ல உறவை அனுபவிக்கமுடிந்தது.

* வாரக்கணக்கில் உறவினர் வந்து தங்கி நாம் விருந்து வைத்துச் சமைத்துப்போட்ட காலம் இல்லை. ஒருநாள் சிலமணி நேரமே வந்திருந்து, பழத்தையும் வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.

* 'கடவுள் தரிசனம் கிடைக்கப்பெற்றார்' என்று புராணங்களில் படித்தால் அவருடைய பாக்கியத்தை நினைத்து புல்லரித்துப் போகிறோம். அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் வயதாவதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

* எல்லாமே கண்ணோட்டத்தைப் பொறுத்தது. நான் இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம். வயதானவர்கள் பொதுவாக நினைவுத் தடத்தில் (Memory lane) போய்விடுகிறார்கள். முன்கால நிகழ்ச்சிகளை அசைபோட்டு, வருத்தப்பட்டுக் கொண்டு நிகழ்கால வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறோம். எதிர்காலத்தைப்பற்றி பயந்துகொண்டு நிகழ்கால நிம்மதியைக் கெடுத்துக்கொண்டு விடுகிறோம்.

நம்முடைய இயலாமை, நம்முடைய புலம்பல், நம் எதிர்பார்ப்புகள் எல்லாம் நம்முடைய இளைய வயதினருக்கு பாரத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது. அவர்கள் சிலசமயம் வெளிப்படையாகவும் சிலசமயம் நாசுக்காகவும் தெரிவிக்கிறார்கள். நம்மைவிட அவர்களுடைய குடும்பம், நண்பர்கள், அவர்கள் விரும்பும் பயணங்கள் எல்லாம் முக்கியமாகத்தான் படும். இதுதான் எதார்த்தம். இளமையில் உடலும் மனமும் விரியும். முதுமையில் உடலும் மனமும் சுருங்கும். மனம் சுருங்காமல் இருக்கவைப்பது நம்மால் முடியும்.

சிநேகிதியே, உங்கள் விஷயத்தில் நீங்கள் வளர்த்த மகன் தன்னுடைய சகோதர, சகோதரி உறவுகளை நாடிப்போவது இயற்கை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் மனம் பக்குவப்பட்டுவிடும். எதிர்காலம் எப்போது கேள்விகுறி என்று நினைக்கிறீர்களோ, அப்போதே அதற்கு விடையையும் ஆராயத் தொடங்குங்கள். அதுவே வாழ்க்கையை சுவாரஸ்யமாக ஆக்கிவிடும். நம்மையே நாம் சுமையாக நினைக்கும்போதுதான் முதுமை தெரியும். நம் மகிழ்ச்சிக்குப் பிறர் துணையைத் தேடும்போதுதான் நம் இயலாமை தெரியும். இங்கே நான் முதுமை என்று நினைப்பது உடலைத்தான். வாழ்க்கை இளமையாகத்தான் இருக்கும் எல்லாருக்கும். மாற்றம் நம் கண்ணோட்டத்தில்தான்.

நீங்கள் என்றும் இளமையாக இருக்க வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com