மே 2015: வாசகர் கடிதம்
ஏப்ரல் இதழ் சாதனையாளர் பகுதி 'வருண் ராம்' நன்றாக இருந்தது. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், எல்லாத் தடங்களிலும் முத்திரை பதித்துள்ளர்கள் என்றால் மிகையல்ல. வருண் ராம் படிப்பிலும் சூரர் என்பதைப் பார்க்கும்போது, அவரது பெற்றோர்களைப் பாராட்டியாக வேண்டும்.

கவிஞர் விவேகா, பறவைக்காதலர் விஜயாலயன் தகவல்களும் அருமை. ஒவ்வொரு மாதமும் தென்றலை ஆன்லைனில் படிக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

கே. ராகவன்,
பெங்களூரு, இந்தியா.

*****


சேகர் சந்திரசேகரின் 'சாக்கடைப் பணம்' நெஞ்சை உருக்கும் உன்னதப் படைப்பு. தியாகு (ஓய்வுபெற்ற தாசில்தார்) போலத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் பலகோடி நேர்மையானவர்கள் வாழ்க்கையின் அற்புதப் பிரதிபலிப்பு. அவர்களால் நேர்வழி வாழமுடியுமா? என்று இந்த லஞ்சக் கொடுமை ஒழியும்? ஆண்டவனே இதற்கு விடைகூற முடியும்.

ராமன் (மின்னஞ்சலில்)

*****


ஏப்ரல் 'தென்றல்' இதழில் எழுத்தாளர் தேனி சீருடையான் பற்றிய விவரங்கள் அறிந்து நெகிழ்ந்தோம். பார்வை இழந்தபோதும், அது வந்தபின்னரும் அவர் பட்ட துயரங்கள் வேதனைக்குரியவை. அவரைப்பற்றி அறிய உதவிய தென்றலுக்கு நன்றி. சாதனையாளர் பறவைக்காதலர் விஜயாலயன் அவர்களின் கேமரா பார்வையின்மூலம் அரிய விஷயங்கள் காணக் கிடைத்தன. தற்கால அறிவியல் கலந்து கதிரவன் எழில்மன்னன் எழுத்தில் வெளியாகும் 'சூர்யா துப்பறிகிறார்' மிக நன்றாக, ஒரு ஹாலிவுட் திரைப்படம் போல உள்ளது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன் அவர்களின் 'உளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை' நாம் அறிய வேண்டிய விஷயங்களாகும். மனக்குமுறலின் உணர்ச்சிக் குவியல்களாக இருந்தன திருநங்கைகள் குறித்த இரு சிறுகதைகளும் தமிழர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சூரர்கள் என்று பெருமைப்பட வைத்திருக்கும் இளம்சாதனையாளர் வருண் ராமுக்கு மனம்நிறைந்த ஆசிகள்.

கவிஞர் விவேகாவின் நேர்காணல் அருமை. உலகெங்கிலும் வித்தியாசமான துறைகளில் சாதித்து வரும் தமிழர்களை இனங்கண்டு, வெளியுலகுக்கு அறிமுகப்படுத்துவதில் தென்றலுக்கு இணை தென்றல்தான்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 'தென்றல்' முதல் இதழிலிருந்து தவறாமல் படித்துக் கொண்டு வருகிறேன். இதழ் குன்றா இளமையுடன் திகழ்கிறது. மார்ச் தென்றல் இதழில் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் நேர்காணலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா பற்றிய கட்டுரையும், அவரது 'தரிசனம்' சிறுகதையும் நன்றாக இருந்தன. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் "எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது" என்ற யோசனை இந்தக் காலத்துக்கு மிகவும் பொருந்தும். டாக்டர் முகுந்த் பத்மநாபனுக்குப் பாராட்டுக்கள். "முரண்பாடு", "கருப்ஸ் பாண்டியன்", "அடாராவின் பார்வை" சிறுகதைகள் நன்றாக இருந்தன. சின்னக்கதை பகுதியில் 'பரமேஸ்வரன் வைத்த சோதனை' என்ற பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களது கதை நல்ல தொடக்கம். கவிதைப் பந்தல் பகுதியில் ஜெயா மாறன் அவர்களது 'மறந்துவேறு தொலைத்துவிட்டது' உள்ளத்தைத் தொடும்படியாக இருந்தது. 'சுடுகின்ற நிஜங்கள்' பகுதியில் முதுமை, மரணத் தறுவாயில் போன்ற செய்திகள் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.

தென்றல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 1. தென்றல் இதழுக்குச் சந்தா கட்டி இந்தியாவில் நீங்கள் படித்த கிராமத்து, சிற்றூர் பள்ளிகளுக்கும் சிறிய நூலகங்களுக்கும் அனுப்பி வையுங்கள். 2. ஒவ்வொருமுறையும் குடும்பத்துடன் வெளியில் உணவகங்களில் சாப்பிட்டபின் பணம் செலுத்தும்போது ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் போன்ற ஏழைகட்கு உதவும் நிறுவனங்களுக்கு 10 டாலருக்குக் குறையாமல் ஒரு செக் ஒன்று எழுதி அனுப்பலாம்.

லிபியா ராமானுஜம்,
கேன்டன், மிச்சிகன்

*****


தென்றல் ஏப்ரல் இதழ் படித்தேன். சேகர் சந்திரசேகரின் 'சாக்கடைப் பணம்' இன்றுள்ள லஞ்சக் கொடூரத்தில் நேர்மையான குடும்பங்கள் நடைமுறையில் அனுபவிக்கும் இன்னல்களை தத்ரூபமாகக் காட்டும் உன்னதப் படைப்பு. பானுமதி பார்த்தசாரதியின் 'விசிறி வாழை' சமூகத்தில் திருமங்கைகள் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்த்தும் சமூகச்சீர்திருத்தப் படைப்பு.

ராதா ராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com