தத்துத் தாய்
ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும் சேர்த்துப் பாதிநாளை விழுங்கிவிடுகிறது. இந்தப் பயல் எப்ப வளர்ந்து பெரியவனாவானோ, இந்தப் பாட்டிலிருந்து விடுதலை கிடைக்குமோ என அலுப்புடன் அவனுடன் போராடிக் கொண்டிருந்தவள், வாயிலில் காவலுக்கு இருந்த கூர்க்கா தன்சிங் யாருடனோ கத்தித் தர்க்கம் செய்யும் குரல் கேட்கவே அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

அட, நம்ம ஜம்பகம் அத்தாச்சி! குழந்தையும், கிண்ணமுமாக வாயிலைநோக்கி விரைந்தாள். "அப்பாடா, நீயே வந்துட்டியாம்மா? இங்கிட்டு வந்து நம்ம முனீஸ்பரன் பேரைச் சொல்லிக்கேட்டா, இங்கே யாரும் அப்படியில்லைன்னு விரட்டி அடிக்கிறான். நல்லவேளை, நீ வந்தயோ நான் பொழைச்சேன்" என்று அவளை நோக்கிவந்தார் அத்தாச்சி. பாவம், இந்த ஊரில் முனீஸ்வரன் முனீஷ் என்று அழைக்கப்படுவது அவருக்கு எப்படித் தெரியும்?

கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு, "அத்தாச்சி நீங்க வரதா ஒரு கடிதாசி போட்டிருந்தா நானோ, அவரோ வந்து கூட்டி வந்திருப்போமே. இப்படித் தனியா இந்த வயசிலே வரலாமா?" எனக் கரிசனத்துடன் வினவியபடித் தங்கள் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று, "எப்ப, என்ன சாப்பிட்டதோ, இருங்க காப்பி தரேன், குளிச்சு வந்து சாப்பிடலாம்" என்று அன்புடன் உபசரித்தாள்.

காப்பியைக் குடித்துவிட்டுக் குளித்ததும் சற்றுத் தெம்பாக வந்த அத்தாச்சி குழந்தையை ஆசையாக மடியில் இருத்திக்கொண்டு சுமதி கிண்ணத்துடன் மூடி வைத்திருந்த சாதத்தை எடுத்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தார். சமையற்கட்டில் மும்முரமாக இருந்த சுமதி வெளியேவந்து பார்த்தபோது, என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை, கிண்ணம் காலியாக இருந்தது. தூக்கம் கண்களைச் சொக்க அவர் மடியிலேயே ஆடி விழுந்துகொண்டிருந்தான் குழந்தை!

"பிள்ளைக்கு நல்ல ஒறக்கம். கொண்டு படுக்கையில் போடு" என்றபடி எழுந்து புடவைத் தலைப்பை உதறிக்கொண்டு "என்ன செஞ்சுக்கிட்டிருக்கே; முனீஸ்பரன் எப்ப வருவான்?" என்று கேள்விகளை அடுக்கினார்.

"அவர் வர நேரமாகும் அத்தாச்சி. நீங்க சாப்பிட்டு படுத்துடுங்க. பாவம், பஸ்ஸிலே நெடுநேரம் வந்தது. அலுப்பா இருக்கும்" என்றபடி அவருக்கு ஒரு தட்டை எடுத்துப்போட்டு சுடச்சுடச் சோற்றை ரசத்துடன் பரிமாறினாள்.

"அப்பனே, சொக்கநாதா, தாயே மீனாச்சி என்றபடி கண்மூடிக் கும்பிட்டு சோற்றில் கைவைத்த அத்தாச்சியின் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியது. "சோறு தெய்வம். எதிரே அமர்ந்து அழக்கூடாதுதான். ஆனா இந்த சோறும் சாறும் என்னைப் படுத்தின பாட்டை நெனச்சா தாங்கமுடியலை" என்று கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.

*****


அத்தாச்சி முனீஷின் தாய் விசாலாட்சிக்கு அத்தை மகள். மதுரையை அடுத்த கள்ளந்திரி கிராமத்தில் 'வாக்கப்பட்டிருந்தார்.' கணவர் சதாசிவ அம்பலக்காரர் என்றால் ஊரில் அப்படி ஒரு மரியாதை. சொத்து சொம்பு என்று பெரியதாக ஏதுமில்லை என்றாலும் மனிதர் வாக்குசுத்தம், நேர்மை என்னும் குணங்களால் எல்லாருக்கும் நல்லவர், ஊருக்குப் பெரியவர் என்ற மதிப்பைப் பெற்றிருந்தார். இரண்டு பையன்களும் ஒரு பெண்ணுமான குடும்பம். பெண்ணை நல்லபடியாகக் கரையேற்றிவிட்டார்.

மருமகள்களும் வந்தனர். கடமைகள் எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியுடன் போய்ச் சேர்ந்தும் விட்டார்.

ஊராருக்கெல்லாம் நல்லவராக இருந்த அம்பலக்காரர், தன் மனைவிக்காக எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. எல்லாம் மகன்கள்மீது வைத்திருந்த அபார நம்பிக்கைதான் காரணம். பழமொழி உண்டு 'அண்ணன் கொடுத்தாலும் அண்ணி கை குறுக்கே விழும்' என்று. பெரியவரின் காரியங்களுக்குச் சென்றிருந்தபோதே அத்தாச்சி செல்லாக் காசாகி விட்டிருந்தது சுமதிக்குத் தெரிந்தது.

மகன்கள் இருவருமே மனைவிமார் சொல்கேட்டுத் தாயைப் படுத்துவதில் ஒற்றுமையாக இருந்தனர். மகளோ சீருக்கும் நாளுக்கும் வந்துபோகும் விருந்தாளி என்ற அளவில்தான் இருந்தாள். பழக்கமில்லாத ஏதோ வியாபாரத்தில் யாருடனோ கூட்டுச் சேர்ந்து இருந்த கொஞ்சநஞ்சம் சொத்தையும் துடைத்துவிட்டார்கள் பையன்கள். வாரம் பயிரிட்டும் கிடைத்த வேலைக்குப் போய்க்கொண்டும் பெற்றவர் அடைந்திருந்த மதிப்பையெல்லாம் காற்றில் பறக்கவிட்டனர். அரை நிறக்கக் கண்டாங்கிச் சேலையும், கிழங்கு கிழங்காக நகைகளுமாக வளையவந்த அத்தாச்சி மூலையில் ஒதுக்கப்பட்டு, எல்லாருடைய எரிச்சலுக்கும் வடிகாலாகக் காலம் கழித்து வந்தார்.

நடுவில் சில நாட்கள் அவரைத் தங்களுடன் அழைத்து வைத்துக்கொண்டனர் முனீஷும் சுமதியும். இப்போது திடீரென்று வந்து நிற்கும் காரணம் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது சுமதியால். மனம்நொந்து வந்திருக்கும் அவரிடம் ஏதும் கேட்க விரும்பவில்லை அவள்.

ஆனால் அத்தாச்சியே கூற ஆரம்பித்தார். "மருமவளே, இந்த சுடுசோறும், ரசமும் என்னை வீட்டைவிட்டே கிளம்பி வரவெச்சுடிச்சு. ஒண்ணுமில்ல; மூத்தவ தன் அண்ணன் மவளுக்கு சடங்கு சுத்தறாங்கன்னு மேலூர்வரை போயிருந்தா; வர நாலு நாளாவும்னு சொல்லியிருந்தா. வீடு எப்பவோ ரெண்டாயி, சின்னவன் தனிக்குடிசை போட்டுக்கிட்டான். எனக்கு ரெண்டு நாளா தடுமனும் காச்சலுமா இருந்திச்சு. வழக்கமா எனக்குக் கேப்பைக் கூழ்தான் காய்ச்சிக்குவேன். அன்னிக்கு என்னமோ, சூடா சோறும் சாறும் இருந்தா கசந்த நாக்குக்கு ஒணக்கையா இருக்குமேன்னு கைப்பிடி அரிசியைப் பொங்கி, நாலு மொளவைத் தட்டிப்போட்டு சாறும் காச்சிட்டேன்.

சொலவடை உண்டு, 'கலத்திலே சோத்தை வச்சதும் காசிக்குப் போனவங்களும் திரும்பிடுவாங்க'ன்னு. நான் கலத்திலே கை வெக்கவும் மருமவ சரியா வந்து நின்னா. 'நாளைக்கி பஸ்காரங்க வேலை நிறுத்தம் தொடங்கப் போறாங்க; இன்னிக்கே கிளம்பிடு'ன் னு அவ அண்ணன் சொன்னானாம். அதனால இவ கிளம்பி வந்துட்டாளாம். கொதிக்கக் கொதிக்க ரசஞ்சோத்தை என் கலத்தில் பார்த்ததும் காளி, கூளி எல்லாம் சேர்ந்தமாதிரி கத்த ஆரம்பிச்சுட்டா. நாலு தெருவுக்குக் கேக்கும் அவ கூச்சலைக் கேட்டு சின்னவளும் வந்து சேர்ந்துக்கிட்டா. "இப்பத்தானே வெளங்குது, மாசத்து மளிகை வாரத்திலே எப்படி மாயமாகுதுன்னு; குடும்பக் கஷ்டம் நஷ்டம் எல்லாம் இவங்களுக்கு எதுக்குத் தெரியணும்? வயசானா வாய்வயித்தைக் கொறைப்பாங்கன்னு கேள்வி. ஆனா இவங்களுக்கு வயிறே சாமி. நாம எக்கேடு கெட்டா என்ன?"னு அவளும் கத்த, ராவு மவனுங்க வரவும் ஜோடி போட்டுக்கிட்டு மூட்டிக் குடுக்கவும், அவனுங்களும் பெத்தவதானேன்னு செத்தயும் எண்ணிக்காம வாய்க்கு வந்தபடி ஏச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் ஓரளவுக்குமேல தாங்கலை. ராவு சேர்மன் வீட்டிலே தங்கிட்டு, கருக்கல்லே பஸ் புடிச்சு வந்துட்டேன்" என்று கண்ணீருக்கிடையே நடந்ததை விவரித்தார்.

இரவு முனீஷ் வந்ததும் இதே கதை மறு ஒலிபரப்பானது. "உங்கம்மா சாலாச்சி இருந்தா இந்தக் கொடுமை நான் படப் பாத்திருக்க மாட்டா. அவ இடத்திலே நான் இருக்கறதா எண்ணி எனக்கு ஒரு கஞ்சி ஊத்தி வச்சிக்கிறயாப்பா?" என வினவினார்.

"அத்தாச்சி, நீங்க என்னையும் மவனா நெனச்சு இங்கேயே இருக்கலாம். நிம்மதியா தூங்கப் போங்க" என ஆறுதல் அளித்தான் முனீஷ்.

அத்தாச்சி வந்ததும் சுமதிக்குக் குழந்தை இருப்பதே மறந்துவிட்டது. அத்தனை ஒட்டுதல் பாட்டிக்கும் பேராண்டிக்கும். குரல் எழும்பாமல் களுக்கென்று அவர் சிரிப்பதை ரசித்து மகிழ்வான் குழந்தை. மற்ற வீட்டு வேலைகளிலும் ஒத்தாசையாக இருந்தார். முனீஷ் அவருடைய மகனுக்குத் தொலைபேசி விவரம் கூறினான். "அவங்க அங்கதான் வந்திருப்பாங்கன்னு தெரியும். நீங்களே அவங்களை பராமரிச்சு வச்சுக்கங்க. நாங்களும் செத்த நிம்மதியா இருப்போம்" என வெட்டிவிட்டான் அவன்.

ஆறேழு மாதங்கள் ஓடிவிட்டன. காலை வாசலுக்குக் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. குளியலறையிலிருந்து அத்தாச்சியின் அலறல் பெரிதாகக் கேட்டது. முனீஷும் அவளும் ஓடிச்சென்று பார்த்தனர். "ஒண்ணுமில்ல, தலையை லேசாச் சுத்திச்சா, சுவத்தைப் பிடிக்கு முன்னே கால் வழுக்கிடுச்சி" என்று சமாளித்தாலும் அவர் முகத்தில் அவர் வேதனையின் கடுமையைக் காணமுடிந்தது.

உடனே மருத்துவ மனையில் சேர்த்தனர். வயதான சரீரம்; எந்த சிகிச்சைக்கும் இசைந்து வரவில்லை. தன் முடிவை ஒருவாறு ஊகித்துவிட்ட அத்தாச்சி, "அப்பா, முனீஸ்பரா, என்னய வீட்டுக்குக் கூட்டிப் போயிடு. அங்கிட்டு ஒரு வேலை இருக்கு" எனப் பிடிவாதமாகக் கூறினார். தனது பையைக் குடைந்து ஒரு நீளக்கவரை எடுத்த அத்தாச்சி, "மூணுமாவடிப் பக்கம் என் ஒடப்பொறந்தார் ரெண்டுபேர் இருக்காங்க. என் அம்மா வழியிலே ஒரு காணி இருந்திச்சி. அதை பாகம் வச்சு எனக்கும் கோவணம்மாதிரி ஒரு துண்டு குடுத்தாங்க. உங்க மாமா இருந்தவரைக்கும் அதை எந் தம்பிகளே பயிரிட்டு, ஆளட்டும்னு விட்டுட்டார். நானும் இந்தப் பையன்கள் அதையும் தாரை வாத்துடுவாங்கன்னு அதைப்பத்திப் பேசலே. இப்பவும் அந்தத் தறுதலைங்களுக்கு அதைக் குடுக்க நான் இஷ்டப்படலை. அதை உன் பேருக்கு மாத்தி ரீஸ்டர் செய்துடறேன்" என்று கூறினார். முனீஷ் எவ்வளவு மறுத்தும் தள்ளாமையுடனே பதிவாளர் அலுவலகம்வரை வந்து மாற்றிக் கொடுத்துவிட்டுதான் ஓய்ந்தார். நாலைந்து நாட்களில் பெரிய சாதனையை முடித்துவிட்ட திருப்தியுடன் அத்தாச்சி கண் மூடிவிட்டார். பையன்கள் ஊரிலிருந்து வந்து அடக்கம் மட்டும் செய்துவிட்டு கிராமத்திலேயே இறுதிக் கடன்களை வைத்துக்கொண்டு விட்டனர்.

"அத்தைக்குச் சுடச்சுடச் சோறும், மிளகு, பூண்டு ரசமும் வச்சிட்டா விரும்பி சாப்புடுவாங்க... ஹூம்" எனப் பெரிய மருமகள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். பின்னாலிருந்து அத்தாச்சி குரல் எழும்பாமல் களுக்கென்று சிரிப்பது போலிருந்தது சுமதிக்கு.

அத்தாச்சியின் பரிசான அந்தத் துண்டுநிலத்தை ஒரு முதியோர் இல்லத்துக்கு மறுசாசனம் செய்துவிட்டனர் முனீஷ் தம்பதி. அங்குள்ளவர்களுக்குச் சுடச்சுடச் சோறு பரிமாறப் படும்போது அத்தாச்சியின் ஆத்மா குளிர்ந்திருக்குமென எண்ணினர் இருவரும்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com