விவேக் பாரதி
அந்தப் படங்களைப் பார்த்தால் நீங்கள் 10 வயதுப் பையன் வரைந்தவை என்று சொல்லமாட்டீர்கள். அத்தனை நேர்த்தி, அழகு, நுணுக்கம். விவேக் பாரதி Faria Academics Plus பள்ளியில் 5வது கிரேடு மாணவன். மிகச்சிறிய வயதிலேயே அவனுடைய ஓவிய ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட பெற்றோர் அவனைக் கூப்பர்டினோவில் உள்ள Young at Art கலைப்பள்ளியில் டெல்காடோ அர்மாண்டோ அவர்களிடம் பயிற்சிபெற அனுப்பிவைத்தனர். அவனுடைய இயல்பான திறன் மேன்மை பெற இது உதவியது.

விவேக் தீட்டிய ஓவியங்களைக் கொண்ட காலண்டர் ஒன்றை அக்செஸ் பிரெய்ல் (Access Braille) நிறுவனம் நிதி திரட்டும் பொருட்டு வெளியிட்டது. எல்லாவகைப் படங்களும் வரைந்தாலும் விவேக்குக்கு வனவிலங்குகளை வரைவதில் ஆர்வம் அதிகம். பல பரிசுகளும் வென்றுள்ளான்.



ஓவியப் போட்டிகளில் பெற்ற பரிசுகள்:
Celebrating Art Contest - தொடர்ந்து மூன்றுமுறை - அவனது வயதுப்பிரிவில் வட அமெரிக்காவின் முதல் பத்து இடங்களுக்குள்.
Cupertino Women's Club Art Contest - மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு. இந்த ஆண்டில் அது மாநிலப் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டது.
7 வயதிலேயே அவன் தீட்டிய ஓவியம் தேசிய அளவுப் போட்டி ஒன்றில் 3வது இடத்தைப் பெற்றது.

"எந்தப் போட்டியில் ஓவியம் பரிசீலனைக்குப் பிறகு திரும்பத் தரப்பட மாட்டாதோ அந்தப் போட்டியில் விவேக் பங்கேற்க விரும்புவதில்லை" என்கிறார் அவனது தாய் திருமதி. காயத்ரி சத்யா. தனது ஓவியங்கள் தன்னிடம் இருக்க வேண்டும் அல்லது நண்பர்களுக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்றுதான் விவேக் விரும்புகிறானாம்.

விவேக்கின் தந்தை திரு. சத்யா ராமஸ்வாமி (Vice President and Global Head of Digital Enterprise Unit at Tata Consultancy Service) கணினிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாய் காயத்ரி கர்நாடக இசைப் பாடகர்.



விவேக் இன்னும் விளையும் பயிர்தான். கைத்திறனும் கற்பனைத் திறனும், கூர்த்த பார்வையும் மேம்படுவதற்கான வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும், காலமும் அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இன்னும் பெரிய சாதனைகளை ஓவிய உலகிலும், கல்வியிலும் நிகழ்த்த விவேக் பாரதியை வாழ்த்தலாம் வாருங்கள்!

© TamilOnline.com