பிரேமா ஸ்ரீராம்
சான் ஹோஸே சின்மயா மிஷனின் 'ஸ்வராஞ்சலி' குழந்தைகள் குழுவுக்குப் பதினோரு வருடங்களாகத் தொடர்ந்து பக்திப் பாடல்களையும் பஜன்களையும் சொல்லிக்கொடுத்து வருகிறார் திருமதி. பிரேமா ஸ்ரீராம். அவர் ஒரு நடனமணி, கர்நாடக சங்கீதக் கலைஞர், நட்டுவாங்கக் கலைஞர். எம்.பி.ஏ. (நிதி) பட்டதாரியும்கூட.

கோயம்புத்தூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்து, அங்கே போதார் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். சிறுவயது முதலே இசையில் ஆர்வம். மும்பையில் அவரது குரு ராஜி. நாராயணன். திருமணத்துக்குப் பின் அமெரிக்காவில் சங்கீதப் பயிற்சியைத் தொடர்ந்தார். கர்நாடக சங்கீதத்தை குரு ஜெயஸ்ரீ வரதராஜனிடமும், ஹிந்துஸ்தானி இசையை சுஜாதா கானேகரிடமும் கற்றுக்கொண்டார். 1980ல் அமெரிக்காவின் மெம்ஃபிஸ் பல்கலையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். நடுநடுவே நடனக் கச்சேரிகளும், நட்டுவாங்கமும் செய்துவந்தார். கல்லூரிச் செலவுக்காக மாணவர்களுக்குப் பாட்டும் நடனமும் கற்பித்திருக்கிறார்.

விரிகுடாப்பகுதிக்கு வந்தபின்னர் சமூகசேவையில் ஆர்வம் ஏற்படவே, சின்மயா மிஷனின் ஆச்சார்யா உமா ஜயராசசிங்கத்தைச் சந்தித்தார். அதன்மூலம் ஸ்வராஞ்சலி குழந்தைகளுக்குப் பாடல் கற்பிக்கும் வாய்ப்பு வந்தபோது சற்றே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். மிஷனின் நூல்கள், இணைய வசதி, குரு பிரம்மசாரி பிரபோத் சைதன்யாவின் வழிகாட்டுதல் ஆகியன காரணமாக நிறையப் பாடல்களைப் பொருளுடன் அறியவும், பல ராகங்களில் பாடவும், தான் அறிந்ததை மற்றவர்களுடன் பகிரவும் வாய்ப்பு ஏற்பட்டது. "இது எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது; அதனால் ஈடுபாடு அதிகரித்தது" என்கிறார் பிரேமா.கணவர் ஸ்ரீராம் கெய்சர் மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட். பிரேமாவின் பெற்றோர்களும் உடனிருப்பதால் பிரேமாவால் நிறைய நேரத்தைச் சின்மயா மிஷனுக்கெனச் செலவழிக்க முடிந்தது. பிரேமாவின் முதல்மகள் சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத் திறனாளி. இரண்டாவது பெண்ணிற்கு நாட்டியம், பாட்டு, வயலின், பேச்சு, விவாதப் போட்டிகளில் தயார்படுத்திய அனுபவம் சின்மயா மிஷன் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது என்கிறார். "என் இரண்டாவது மகள் ஹைஸ்கூல் படிப்பை முடிச்சு காலேஜுக்குப் போனாலும், ஸ்வராஞ்சலி குழந்தைகள் என் வீட்டைக் கலகலப்பாக வைத்துக்கொள்கிறார்கள்" என்கிறார் வாஞ்சையோடு.

பிரேமாவுக்கு இந்தி, மராத்தி, தமிழ் போன்ற மொழிகள் தெரியும். சின்மயா மிஷனின் குரு ஆச்சார்ய பிரம்மசாரியின் வழிகாட்டுதலும், அவரது திட்டமிட்ட வாழ்க்கையும், உற்சாகமான போக்கும், வேதாந்தச் சொற்பொழிவுகளும் பிரேமாவுக்குப் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தனவாம். பாட்டு சொல்லிக் கொடுப்பதோடு, பலமொழிப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, மெட்டமைத்து, அவற்றின் பொருள், உச்சரிப்பு, பாடும்விதம், ஆகியவற்றை ஒலிப்பதிவு செய்து குழந்தைகளுக்கு அனுப்புகிறார். பின்னர் அவர்களைப் பாடச்செய்து திருத்தம் சொல்கிறார். "இதுவே முழுநேர வேலை!" என்கிறார்.

ஸ்வராஞ்சலிக்காக (இந்தப் பெயர் பூஜ்ய குரு ஸ்வாமி தேஜோமயானந்தா அவர்கள் சூட்டியது) 100 பாடல்களைப் பாடி 'பக்தி ரசாம்ருதம்' என்ற ஆல்பமாக மிஷனின் புது ஆசிரமக் கட்டிட நிதிக்காக வெளியானது. 300 சி.டி. விற்பனையாகி அமோக வரவேற்பைப் பெற்றதாம். திருமதி கிருஷ்ணா ஸ்ரீ கோட்டா சாஸ்திரிக்காக அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'சுந்தர காண்டம்' புத்தகத்திற்காக ஸ்லோகங்களையும், ஹனுமான் சாலீஸாவையும், சீதா, ராமன், ஹனுமான் மீதான பஜனைகளையும் பாடி குறுந்தகடுகள் வெளியாகியுள்ளன.

"என்னுடைய 11 வருட சங்கீத வாழ்க்கையின் உச்சம், ஜூன் 2014ல் க்ளேடனில் கட்டப்பட்ட புது சின்மயா மிஷன் ஆரம்ப விழாவில் நடத்திய கச்சேரிதான்" என்கிறார். பல குழந்தைகளைப் பயிற்றுவித்துச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்தியதற்கு குருவின் ஆசியும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் முக்கியக் காரணங்கள் என்கிறார். "மனமொன்றி இறைவனைப் பாடும்போது உள்ளம் பக்தியில் திளைக்கிறது. இறைவனை அடைய இசையும் ஒரு சாதனை. வாய்ப்புத் தந்த இறைவனுக்கு நன்றி" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

பிரேமாவின் பெற்றோருக்கு வயதாகி விட்டபடியாலும், மகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதாலும் முன்போல் அவரால் சின்மயாவிற்கு முழுநேரமும் செலவிட முடியாத நிலையில் ஸ்வராஞ்சலியிலிருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளார். தேவைப்படும்போது உதவத் தயாராக இருக்கிறார்.

விரும்பிவரும் நடுத்தரவயது மகளிருக்குத் தியாகராஜ கீர்த்தனை, நவக்கிரக கிருதி, நவாவரணம், அன்னமாசார்யார் கிருதிகள், ஜயதேவர் அஷ்டபதி, திருப்பாவை போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் தானும் கற்பதாகக் கூறுகிறார். இவருடைய மாணவிகள் ‘தியாகராஜ ஆராதனை’ விழாவில் பாட இருக்கிறார்கள்.

சுறுசுறுப்பான பிரேமாவின் மற்ற ஈடுபாடுகள் சமையற்கலை, தோட்ட வேலை, யோகம், குறுக்கெழுத்துப் புதிர், அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் வாசித்தல், டி.வி. டாக் ஷோஸ் என்று நீள்கிறது. இவருடைய விருப்பம், ஸ்வராஞ்சலி குழந்தைகள் தாம் கற்றதைப் பிறருக்குக் கற்பித்து குரு சின்மயானந்தரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். "நாம சங்கீர்த்தனம் மிக உயர்வானது; அதில் சிறுவயது முதலே குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் நன்மையைத் தரும்" என்கிறார்.

தான் கற்ற வித்தையைக் கடவுள் தந்த வரமாகக் கருதி, சமுதாயத்துடன் இலவசமாகப் பகிர்ந்துகொள்ளும் அவரது உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டி விடைபெற்றோம்.

சுபத்ரா பெருமாள்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com