அரங்கேற்றம்: கோகுல் கல்யாணசுந்தரம்
மார்ச் 21, 2014 அன்று மாலை சான் ஹோஸே சோடோ தியேட்டர் CET ஹாலில் 'ஸ்ருதி ஸ்வர லயா' கவின்கலைகள் பள்ளி மாணவரும், 'தென்றல்' பதிப்பாளர் திரு. C.K. வெங்கட்ராமன் அவர்களின் மகனுமான திரு. கோகுல் கல்யாணசுந்தரத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சிறப்புற நடந்தது. ஹம்ஸத்வனியில் "ஜலஜாக்ஷி" வர்ணம் நல்ல எடுப்பான ஆரம்பம். துரிதகால ஸ்வரங்கள் கச்சிதமாக அமைந்து கேட்க சுகம். தொடர்ந்து "கரிமுகவரதா" எனத் தொடங்கும் ஜி.என். பாலசுப்ரமணியனின் நாட்டைராகப் பாடல். "தாயே திரிபுரசுந்தரி" பெரியசாமி தூரன் பாடலில் சுத்த சாவேரியின் சுகம், பல்லவியில் சங்கதிகளைப் பிரித்துப் பாடியது, சிட்டஸ்வரம் யாவும் மனதை உருக்கின. அடுத்து "மனஸா எடுலோர்துனே" என்னும் தியாகராஜர் கிருதியில் மலயமாருத ராக ஆலாபனையைப் பதமாகக் கையாண்டது, மேல்ஸ்தாயியில் கனகச்சிதமான ராகப் பிரயோகங்கள், கீழ்ஸ்தாயியில் நின்று பாடிய ஆலாபனை யாவும் அற்புதம். அடுத்ததாக "மரிவேரகதி" என்னும் ஆனந்தபைரவிப் பாடலை (ச்யாமா சாஸ்திரிகள்) அனுபவித்து, பக்திபூர்வமாகப் பாடினார். "சீதம்ம மாயம்மா" என்னும் வஸந்தா ராக தியாகராஜர் கிருதியில் தோன்றிய சுருதி சுத்தம், தெலுங்கு உச்சரிப்பு, அனுபவித்துப் பாடிய விதம் யாவும் கேட்க ஆனந்தம்.

கல்யாணி ராகத்தில் "ஏதாவுனரா"வை ராக ஆலாபனை, நிரவலுக்கு எடுத்துக் கொண்டார். துரிதகால ஸ்வரங்களை கோகுல் அநாயசமாகப் பாடியவிதம் கனஜோர். தாள பிரமாணங்களுக்குள் பின்னிய ஸ்வரக்கோவை கேட்க எடுப்பாக இருந்தது. தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கம், கஞ்சிரா வித்வான்கள் ரசிகர்களை லயிக்கச் செய்து, கைதட்டல் பெற்றனர். "அருட்ஜோதி தெய்வம்" என்னும் வள்ளலார் பாடல், "கங்கேமாமி பாஜி" என்னும் தீக்ஷிதர் கிருதி கேட்க விறுவிறுப்பாக இருந்தன. "குறை ஒன்றும் இல்லை" என்ற ராஜாஜியின் பாடலில் கண்ணனை அனுபவித்துப் பாடியவிதம் பலே. நிகழ்ச்சியின் முடிவில் லால்குடி ஜெயராமனின் ரேவதிராகத் தில்லானாவை கோகுல் சிறப்பாகப் பாடி நிறைவுசெய்தார்.

"ஸ்ருதி ஸ்வர லயா' கவின்கலைகள் பள்ளி குரு அனுராதா சுரேஷ் அவர்களால் 1998ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளி மாணாக்கர்கள் இசை மற்றும் கவின்கலைகளில் மிகவுயர்ந்த நிலைகளை அடைந்துள்ளனர். அனுராதா சுரேஷ், மானஸா சுரேஷ் ஆகியோரின் கற்பிக்கும் திறமை, கோகுலின் ஆர்வமும் கற்பனா சக்தியும், பெற்றோர் கொடுத்த ஊக்கம் என்று எல்லாமே நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவாயின. விரிகுடாப்பகுதியின் வித்தகர்களான திரு. வி.வி.எஸ். முராரி (வயலின்), திரு. ரமேஷ் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்), திரு. கே.வி. கோபாலகிருஷ்ணன் (கஞ்சிரா) ஆகியோர் கோகுலின் திறமை பளிச்சிடும் வண்ணம் வெகு அனுசரணையாகப் பக்கம் வாசித்தனர்.

பேட்மின்டன் ஆட்டத்திலும் சாம்பியனான கோகுலின் சங்கீதப் பயணம் மேலும் தொடர்ந்து பிரகாசிக்கவும், கல்வி மற்றும் விளையாட்டில் நிறையச் சாதிக்கவும் வாழ்த்துவோம்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com