ஏப்ரல் 2015: வாசகர் கடிதம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியும் (POP) பாரதிய ஜனதா கட்சியும் கைகோர்த்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. லட்சக்கணக்கில் துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தாய்மாநிலம் திரும்பவேண்டும் என்பதில்தான் இந்திய இறையாண்மைத் தத்துவம் உள்ளது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. காஷ்மீரில் அமைதி என்பது கற்பனையாகிவிடுமோ என்று கருதிய இந்தியர்களுக்கு அற்புத நிகழ்ச்சி இது. இந்து முஸ்லிம்களிடையே நல்லிணக்கமும் புரிதலும் ஏற்படத் தென்றலோடு நாமும் பயணிப்போம்.

அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன்

*****


வணக்கம். தென்றலின் பணி போற்றுதலுக்குரியது. 'ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்' வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முழுப்பணி, ட்ரஸ்ட் தொடங்கிய விதம் எல்லாம் கண்ணீரை வரவழைத்தன. நான் 2002ல் ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வுபெற்றேன். ஓய்வுபெற்ற நாளில் மாதா ட்ரஸ்ட் கிருஷ்ணமூர்த்தி, சேவாலயா வெங்கட்டரமணி, மயிலாப்பூர் சைவசித்தாந்தப் பெருமன்றச் செயலாளர் அரசு, ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் தெலுங்கு கங்கா நதிநீர் இணைப்புச் சேவைப்பணி சார்ந்த ஒருவர் எனப் பலரை அழைத்து, விருந்தோடு தலா ரூ.5000 நன்கொடை அளித்தேன். இனி ஆண்டுதோறும் ரூ. 10000 மாதா ட்ரஸ்டுக்கு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கிறேன். தென்றல் படிப்பதால் ஏற்படும் புண்ணியமாக இதைக் கருதுகிறேன்.

நான் மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வந்திருந்தபோது திருமதி. உமையாள் முத்து அவர்களோடு தொலைபேசி வழியே பேசினேன். அவரது பரிந்துரையின் பேரில் மதுரை திருமதி. விசாலாட்சி அவர்களுக்குச் சேக்கிழார் விருதும், பொற்கிழியும் வழங்கினோம். டாக்டர் முகுந்த் பத்மநாபன் பாராட்டப்பட வேண்டிய மாமனிதர். கசுவா கிராமத்தில் இயங்கும் சேவாலயா நிறுவனத்திற்கு உதவியிருப்பது போற்றுதற்குரியது.

டி.எஸ். தியாகராஜன்,
கௌரவ தாளாளர், சாயி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, கொடுங்கையூர், சென்னை-600118

*****


தென்றல் மார்ச் நேர்காணல் வழக்கம்போல் அருமையாக இருந்தது. கொடைகளில் எல்லாம் சிறந்தது கல்விக் கொடை. மைசூரில் பிறந்து, பொறியியல் துறையில் பட்டங்கள் பெற்று ஒரு பெருந்தொகையை தான் படித்த கலிஃபோர்னியா பல்கலைகழகத்திற்குக் கொடுத்து நிறைகுடமாக இருக்கிறார் டாக்டர். முகுந்த் பத்மநாபன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தான் செய்யும் உதவியால் யாராவது பலனடைந்தால் அதைப்போல் மகிழ்ச்சி வேறெதுவும் இல்லையென்று தன்னடக்கத்துடன் கூறும் இந்த உயர்ந்த மனிதரை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை இவர் வாழ்க்கையில் மேலும் பல வெற்றிப்படிகளைத் தாண்டி, படிக்கும் கல்விக்கு நிறைய உதவவேண்டும் என்று இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன். மற்றொரு நேர்காணல் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் கிருஷ்ணமுர்தியும் அருமை.

கே.ராகவன்,
பெங்களுரு, இந்தியா

© TamilOnline.com