விசிறிவாழை
"முத்துலட்சுமி, நன்றாக யோசித்து முடிவெடு. இனிமே பாலா இங்கே இருக்கக்கூடாது" என்றார் தங்கராஜ், பாபுவின் தந்தை.

"என்ன அநியாயமாக இருக்கிறது. நாம் பெற்ற பிள்ளை. ஒரு பதினைந்து வயதுப் பிள்ளை. நம்மைவிட்டு எங்கே போவான்?" பாக்கியம், பாபுவின் அம்மா.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. அவன் ஆணா? இல்லை, பெண்ணா? அவன் கோணல் சிரிப்பும், வெட்கப்படுவதும் தலைநிமிர முடியவில்லை என்னால். நன்றாகத்தானே இருந்தான்! எப்படி இப்படி திடீரென்று மாறினான்" என்றார், துக்கம் தொண்டையை அடைக்க.

"அதெற்கென்ன செய்வது? அவன் செய்த தவறில்லையே! நாம் செய்த தவறும் இல்லை. ஏதோ, இரண்டு வருடமாக இப்படி இருக்கிறான்."

"எனக்குத் தெரியாது. அவன் இங்கே இருந்தால் நான் இருக்கமாட்டேன். நமக்குக் கல்யாணத்திற்கு ஒரு பெண் இருக்கிறாள். வேலைக்குப் போகும் பையன் இருக்கிறான். அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டாமா?"

"பாலா என்ன செடியோடு வளர்ந்த களையா? செடி வளர்வதற்கு இடைஞ்சல் என்று களைந்தெறிய? அவனும் இளங்குருத்துதானே?" முத்துலட்சுமி.

"இங்கே பார் லட்சுமி! உனக்கு அவனைவிட்டுப் பிரியமுடியாதென்றால் நீ அவனை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போ. உன் வேலையையும் சென்னைக்கு மாற்றிக்கொள். நான் அவ்வப்போது வந்து கவனித்துக் கொள்கிறேன். பாலாவிற்கு மருத்துவரீதியாக என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கலாம். அவன் ஒருத்தனால் இவர்கள் இருவரின் வாழ்வும் பாழாகவேண்டாம்" என்று முடித்தார்.

முத்துலட்சுமி ரெவின்யூ இலாகாவில் டைப்பிஸ்ட்.

முத்துலட்சுமி பாலா என்னும் தன் பதினைந்து வயது மகனருகில் அமர்ந்துகொண்டார். "என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே. என் கண்ணெதிரே என் மகன் படும் வேதனையைத் தாளமுடியவில்லையே. யாரோ கேலி செய்தார்கள் என்று தற்கொலைக்குத் துணிந்தானே" என்று உள்ளுக்குள் கதறினாள்.

"இனி என் குழந்தையை நான் அந்த நிலைமைக்குத் தள்ளமாட்டேன். நான் அவனோடு கூட இருப்பேன். மற்றவர்கள் அவனைப் பார்த்து வியக்கும்படி ஆளாக்குவேன்" என்று உள்ளத்துக்குள் உறுதிகொண்டாள்.

அடுத்தநாள் நீளமாக ஒரு கடிதத்தை டைப் செய்துகொண்டு பாலாவையும் அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள தன் தலைமை அலுவலகத்துக்குச் சென்றாள். பிரயாணக் களைப்பு நீங்க முகம் கழுவிக்கொண்டு, பாதையோரக் கடையில் ஆளுக்கு நாலு இட்டலி சாப்பிட்டுவிட்டு பார்வையாளர் நேரத்திற்குக் காத்திருந்து கலெக்டரைச் சந்தித்தாள்.

மகனின் நிலையைக் கூறினாள். அவன் அறிவுக் கூர்மையால் பெற்ற மதிப்பெண் பட்டியலையும், பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, கணிதத்திற்காக ஆல் இண்டியா லெவலில் நடைபெற்ற போட்டியில் அவனுக்குக் கிடைத்த சான்றிதழ்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.

"இந்த உதவியை நான் என் அதிகாரியாக உங்களிடம் கேட்கவில்லை. தாங்கள் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளீர்கள். எங்களுக்குத் தெரியும். எனக்கு உங்களை விட்டால் யோசனை கூற யாருமில்லை" என்றாள்.

எல்லாத் திறமையும் இருந்தும் மற்றவர்களின் கேலிக்கு அவன் உள்ளானதால் தற்கொலைக்குத் துணிந்ததையும் அதனால் ஏற்பட்ட தன் மன உளைச்சலையும் கூறினாள். தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினாள்.

"பாலாவிற்கு உடம்பிற்கும் உள்ளத்திற்கும் வைத்தியம் தேவை. நான் இதில் எவ்வளவு தூரம் உதவி செய்யமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு சமூக ஆர்வலர், துறவறம் பூணாத ஒரு துறவி இருக்கிறார். அவர் பல அனாதை ஆஸ்ரமங்களும் இலவச மருத்துவமனைகளும் நடத்தி வருகிறார். நான் தரும் விலாசத்திற்கு பாலாவை அழைத்துச் செல்லுங்கள். நான் ஃபோனில் அவரிடம் பேசிவிடுகிறேன். பாலா மிகவும் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பணத்திற்காக இவனை வேட்டையாடி விடுவார்கள். நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். உங்களையும் ஆசைக்கு அடிபணிய வைப்பார்கள். ஜாக்கிரதை" என்று முடித்தார்.

"சரிங்க சார். யார் பேச்சையும் கேட்டு தவறான வழியில் போகக் கூடாதென்றுதான் நான் உங்களைத் தேடிவந்தேன். மிக்க நன்றி" என்று கூறி பாலாவை அழைத்துச் சென்றாள். கலெக்டர் கொடுத்த இடத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினர்.

பேருந்திலும் பாலாவிற்கு அவமானமே நேர்ந்தது. அவ்வளவு கூட்டத்திலும் அவன் அமர்ந்த இருக்கைக்குப் பக்கத்தில் அமர எல்லோரும் மறுத்து விட்டனர். முத்துலட்சுமி தன் மனச்சங்கடத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பாலாவுடன் சிரித்துப் பேசுவதுபோல் நடித்தாள்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இருவரும் இறங்கினர். அது ஒரு அனாதைக் குழந்தைகள் ஆஸ்ரமம்போல் இருந்தது. மிகப்பெரிய இடம். இரண்டு மூன்று கட்டிடங்கள் இருந்தன. அந்தக் காம்பவுண்டுக்குள் மிகப்பெரிய தோட்டம். நிழல்தரும் மரங்களும் பூந்தோட்டங்களும் என்று மிக அழகாக இருந்தது. கொஞ்சம் தள்ளி பாம்புபோல் புடலங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த ஆஸ்ரமத்திற்கு வேண்டிய காய்களையெல்லாம் அங்கேயே பயிர் செய்து கொள்வார்கள் போல் இருந்தது. சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் பூக்களையும் காய்களையும் பறித்துக் கொண்டிருந்தனர்.

சில பெண்கள் மரத்தினடியில் வகுப்பும் எடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமான ஒரு ஸ்தாபனம் என்று புரிந்து கொண்டாள். மத்தியில் ஒரு சிறிய குளம். அதில் சின்னச் சின்ன மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு நடுத்தரவயதுப் பெண் அங்கு நின்று மீன்களுக்கு ரொட்டித் துண்டுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

இருவரையும் "பாலா?" என்று விசாரித்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே பெரிய நடராஜர் சிலை, ஐம்பொன்னாலானது, பளீரென்று அழகாக நின்றது. ஒரு பக்கம் பிள்ளையார் சிலையும் பழனி முருகன் சிலையும் கிருஷ்ணன் சிலையும் இருந்தன. இன்னொரு பக்கம் மேரி மாதாவின் சிலையும் ஏசுபிரானின் திருவுருமும், ஆள் உயரத்திற்கான புத்தர் சிலையும் இருந்தது. சர்வ மத பிரார்த்தனைக் கூடம் போலும். எங்கே பார்த்தாலும் ஒரே அளவிலான சிவலிங்கங்கள். ஊதுவத்தி வாசனையும் சந்தன வாசனையும் விபூதி வாசனையுமாக அந்தப் பிரார்த்தனைக் கூடமே தெய்வீகமாக மணத்தது.

ஒரு வயதான பெரியவர் தரையிலமர்ந்து கொண்டிருந்தார். கழுத்தில் உருத்திராட்ச மாலை. கையிலும் உருத்திராட்சம். மெதுவாக விரல்களால் நகர்த்திக் கொண்டிருந்தார். முத்துலட்சுமியையும் பாலாவையும் பார்த்து 'வாருங்கள்' என்று தலையசைத்து அமரும்படி சைகை செய்தார்.

கொஞ்சநேரத்தில் ஒரு பெண் அங்கே வந்தார். அவரிடம் பாலாவைப் பற்றி ஏற்கெனவே தெரிவித்திருந்தார் போலும். அப்பெண் முத்துலட்சுமியையும் பாலாவையும் அழைத்துக்கொண்டு அந்தக் காம்பவுண்டுக்குள்ளேயே கொஞ்சதூரத்தில் வேறொரு கட்டிடத்திற்குள் சென்றார். அங்கு எல்லாம் பெண்களே.

"சகோதரி, கலெக்டர் எங்களுக்கு எல்லா விவரங்களும் கூறியுள்ளார். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இங்குள்ள பல குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், இந்த ஆஸ்ரமத்திற்கும் அவர் மிக உதவி செய்துள்ளார். உங்கள் பாலாவிற்கும் என்.ஆர்.ஐ. ஸ்தாபனங்கள் மூலம் எல்லா உதவிகளும் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். எல்லாமே சட்டப்படி முறையாக நடக்கும். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் எங்கள் ஆஸ்ரமத்தின் ஆதரவிலேயே நடக்கும் 'ஒர்க்கிங் விமன்ஸ்' ஹாஸ்டலிலேயே தங்கிக் கொள்ளலாம். அதற்கு தனியாகப் பணம் செலுத்த வேண்டும். வாரம் ஒருநாள் நீங்கள் உங்கள் மகனைச் சந்திக்கலாம். பாலாவுக்கு ஆகும் செலவையும் படிப்பையும் கலெக்டர் உதவியோடு எங்கள் ஆஸ்ரமம் கவனித்துக் கொள்ளும். இதற்கெல்லாம் உங்களுக்குச் சம்மதமானால் இந்தப் படிவங்களில் கையெழுத்துப் போடலாம்" என்றார்.

"கரும்பு தின்னக் கூலியா? என் பாலா நல்ல மாதிரி வாழ்ந்தால் அதுவே போதும்" என்று எல்லாப் படிவங்களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தாள். முத்துலட்சுமி.

பாலாவை ஏதோ ஆபரேஷன் எல்லாம் செய்து மதுபாலாவாக மாற்றிவிட்டார்கள். உடம்பிற்கும் மனதிற்கும் மதுபாலாவிற்குப் பல பயிற்சிகள் கொடுத்தார்கள். கல்லூரிப் படிப்பும் தபால் மூலமாகவே கொடுத்து மாஸ்டர் டிகிரி வாங்க வைத்தார்கள். கர்நாடக இசையிலும் பயிற்சி கொடுத்து 'வாய்ஸ் மாடுலேஷன்' அது இது என்று நிறையப் பயிற்சி கொடுத்து சிறந்த பாடகியாக்கினர்.

அந்த ஆஸ்ரமத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் மதுபாலாவின் பாடல்தான். அப்போது தலைமைதாங்க வந்த புகழ்பெற்ற திரையுலக இசையமைப்பாளர் அவளுக்குப் பல படங்களில் பாடும் வாய்ப்புகள் தந்தார். அதனால் நல்ல வருமானமும் புகழும் கிடைத்தது. அந்த வருமானத்தில் ஒரு பங்கை தன்னை ஆளாக்கிய ஆசிரமத்திற்கும் ஒரு பங்கை அரவாணிகள் சங்கத்திற்கும் அளித்தாள்.

ஒருநாள் அதேபோல் பாடுவதற்கு ஆசிரமத்தைச் சேர்ந்த அப்பெண்மணியுடன் மதுபாலா ஸ்டூடியோவிற்குச் சென்றாள். அங்கே தோட்டத்தில் அழகுக்காக விசிறிவாழை மரம் வைக்கப்பட்டிருந்தது.

"சகோதரி! இந்த மரம் பார்க்க வாழைமரம் போலவே இருக்கிறது. ஆனால் வாழைமரம் இல்லை. அதைவிட அழகாக இருக்கிறது" என்றாள் மதுபாலா.

"ஆம். இது விசிறிவாழை; அழகாய் இருக்கும். ஆனால் பூக்காது; காய்க்காது" என்றார் அப்பெண்மணி.

"என்னைப்போல்" என்ற மது வெறுமையாகச் சிரித்தாள்.

"மது, ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு காரண காரியம். இந்த விசிறிவாழையைப் பூக்கவில்லை; காய்க்கவில்லை என்று யாராவது வெறுத்து ஒதுக்கி வைக்கிறார்களா? இதன் அழகுக்காக இதனைத் தோட்டத்தின் நடுவே வைக்கவில்லையா? மது, நாமெல்லாம் நமது திறமையினாலும் கடும் உழைப்பினாலும் நாம் இல்லாவிட்டால் எந்த வேலையும் நடக்காது என்ற எண்ணம் ஏற்படுத்த வேண்டும். உன் குரலினிமையில் உன் பாடும் திறமையினால் நீ உலகப்புகழ் பெறுவாய் பார்" என்றார்.

"எல்லாம் உங்களால்தான் சகோதரி. கலெக்டர் சாரும், நம் ஆஸ்ரமும் இல்லையென்றால் இன்று நானில்லை. என் அம்மா, அப்பா, என் அண்ணா, அக்கா எல்லாருமே எனக்கு உறுதுணையாயிருப்பதால் நல்ல வாழ்க்கை வாழ முடிகிறது. இல்லையென்றால் நான் எந்தக் கடையில் மிரட்டிக் காசு வாங்கிக் கொண்டிருப்பேனோ அல்லது பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேனோ?" என்றாள் மது.

"அசடுமாதிரிப் பேசாதே மது. அது தனிமனிதனின் தவறல்ல. சமுதாயத்தின் தவறு. இங்குமட்டுமல்ல; உலகத்தின் எல்லா வளர்ந்த நாடுகளிலும் இந்தத் தவறு இருக்கிறது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களைத் தவறான வழியில் செலுத்தும் சமுதாயமும் அதற்குத் துணைபோகும் அரசாங்கமும்தான் வெட்கப்பட வேண்டும். நம் வருமானத்தில் ஒரு பகுதியை இவர்களுக்கு ஒதுக்கவேண்டும். பணத்தினால் மட்டும் இந்தப் பிரச்சனை தீராது. இவர்களாலும் நல்ல சமுதாயத்தின் அங்கமாக இருக்கமுடியும் என்ற கருத்தைப் பரப்பவேண்டும். குற்றமற்ற சமுதாயத்தினராக இவர்களை உயர்த்தி அழகாக்கிப் பார்க்க வேண்டும்" என்று முடித்தார்.

உலகத்துக்கு எப்போது புரியுமோ தெரியாது, மதுவுக்குப் புரிந்துவிட்டது.

பானுமதி பார்த்தசாரதி

© TamilOnline.com