தார்மீகக் கடமையாற்றுவோம்...
அமெரிக்கக் கனவில் இந்த மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள் நாம். படிப்பதற்கும், வேலை வாய்ப்பின் காரணமாகவும் இந்நாட்டிற்கு இடம் பெயர்ந்து, நிரந்தரமாக தங்குபவர்களாக அடுத்த படிக்குச் சென்று, பின் குடிமகனாக உரிமை பெற்று, வீடு வாங்கி, சந்ததிகளை வளர்த்து ஆளாக்கி ஒரு திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக செல்பவர்கள் பலர். ஒரு சிலர், இந்த சமூகத்தில் இந்திய கலாசாரத்தை வேறூன்றச் செய்யும் தமிழ் மன்றம், இசை போன்ற நுண்கலை அமைப்புகள், நடனப் பள்ளிகள் போன்றவற்றில் தொண்டு செய்து சமூகப் பணிகளில் ஈடுபடுகிறோம். மிகச் சிலர், நான் வாழும் இம்மண்ணின் நகர, மாநில, மற்றும் நாட்டின் நிர்வாகப் பொறுப்பேற்கும் வழியில் செல்கிறோம். அவ்வாறு பணியாற்றுபவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் செயலை ஆதரிப்பது நமது தார்மீக கடமையாகும். வரவிருக்கும் Fremont நகர மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அப்பதவியை இப்பொழுது வகிப்பவரும் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவருமான அனு நடராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு நம் ஏகோபித்த ஆதரவை அளிப்போம். இச்சந்தர்பத்தில், நம் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய இந்நாட்டின் பிற தேர்தல்களில் பதவிக்காக போட்டியிடுபவர்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தைக் கூற விரும்புகிறேன். பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக தமிழ் சங்கம், இசை, நடன அமைப்புகளில் நிர்வாக உறுப்பினராக செயலாற்றுவது சிறந்தது. அந்த அமைப்புகளும் அமெரிக்க அரசாங்க தேர்தல்களில் பங்கு பெற விருப்பமுள்ளவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது சாலச் சிறந்தது. அடுத்த UN Secretary General பதவிக்கு போட்டியிடப்போகும் திரு சசி தரூர், பொது வாழ்வில் செல்லக் கூடிய உயரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

உலக மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் UN Security Council ன் கடத்தப்பட்ட இஸ்ரேலிய வீரர்களை விடுவிக்கக்கோரியும், ஆயுதங்களை கைவிடக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுத்திருக்கும் ஹிஸ்போலாவின் முடிவு கவனத்தை ஈர்க்கிறது.

கடைசியாக வெளியாகியிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட போரில் ஈடுபட்டு இறந்திருக்கும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் கேஸொலின் விலை குறைந்திருப்பது, மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் திடீர் போர் போன்ற நிஜ வாதத்திற்கான விஷயங்களை உள்ளத்தில் கொண்டு, போப்பின் வியக்கியானம் போன்றவற்றில் கவனத்தை சிதறவிடாமல், இந்த தேர்தலில் பங்கேற்போம்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இம்மாதம் இரண்டாம் தேதி என்பதையறிவோம். ஒரு வேளை மீண்டும் காந்தியின் கொள்கையை பின்பற்றுவதன் மூலம் தீவிரவாதத்திற்க்கு எதிரான போரில் வெல்ல முடியுமோ... தெரியவில்லை.

மீண்டும் சந்திக்கும் வரை,
சிவகுமார் நடராஜன்
அக்டோபர் 2006

© TamilOnline.com