Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ராக்கம்மா பேத்தி
- ராஜ் கௌதமன்|பிப்ரவரி 2019|
Share:
அநேகமாக எல்லாப் பேரன்மார்களுக்கும் அவர்களுடைய பாட்டிமார்கள் இழந்துபோன சொர்க்கம் போலத்தான். எனக்கும் அப்படித்தான்.

எங்க ஊர்ப்பக்கம் எங்க சாதியில் நாங்க பாட்டியப் பேத்தின்னுதான் கூப்பிடுவோம். நானும் எம்பாட்டி ராக்கம்மாவ 'ஏ பேத்தீ'ன்னு தாங் கூப்பிடுவேன். பேத்தி எனக்குப் பூரண சுயராஜ்யம் அடைந்த பிரதேசம் போல. அவளிடம் எப்பிடியும் நடந்து கொள்ளலாம். கொஞ்சங்கூட பயமே இல்லாமல் விளையாடலாம். காதல் மொழியெல்லாம் பேசலாம். எந்த முறையும் வைத்துக் கூப்பிடலாம். தின்பண்டம் வாங்கப் பைசா தராட்டி நடுத்தெருவில் வைத்து 'துஷ்டத்தனமாகத்' திட்டலாம். சமயத்தில் அவளுடைய நரைவிழாத கோரமுடியைப் பிடித்து இழுத்து நாலு வப்பு வைக்கலாம். அவளும் என்னைப் பிடிக்கமுடியாத ஆற்றாமையை அழுகையும், கெட்ட வார்த்தைகளுமாகக் கொட்டித் தீர்த்துவிடுவாள்.

நாங்க ரெண்டு பேருமே குழந்தைகதாம். ஸ்கூலில் படிக்கிறபோதே அவளைச் செந்துணுக்காத் தூக்கி என் பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எங்க வீட்டில் கோபித்துக்கொண்டு இவள் குடிசைத் திண்ணையில் உம்மென்று உட்கார்ந்த ராத்திரிகளில் சோறு போட்டிருக்கிறாள். நான் செய்த சேட்டைகளுக்கு என் பெற்றோர்களிடமிருந்து வரக்கூடிய தண்டனைகளிலிருத்து என்னைக் காப்பாற்றியிருக்கிறாள்.

நான் ஸ்கூலில் படிப்பது பற்றி அவளுக்கு அப்படியொரு பெருமை! பிரம்பால் மட்டுமே பேசக்கூடிய எங்க ஸ்கூல் வாத்தியார்கள் என்னை 'உருப்படாத படுவா' என்று பாராட்டுகிறபோது பேத்திக்குக் கோவமாக வரும்.

எட்டாங்கிளாஸ் முடித்து ஒன்பதாங்கிளாஸ் படிக்க நான் மதுரைக்குப் பஸ் பிடித்து ஏறியது என் பேத்திக்கு ஏதோ லண்டனுக்குப் போகிற மாதிரி இருந்தது. ஒரு கூடை மாம்பழத்தைத் தலையில் சுமந்து வயல் வரப்பெல்லாம் தாண்டி ஓடிச் சரியாக பஸ் புறப்படும்போது வந்து நின்றாளே பாவி! அப்போது எனக்கு அழத்தெரியாத வயசு. இப்பிடி எல்லோர்க்கும் முன்னால் அநாகரிகமாக வந்து நிற்கிறாளே என்று அவமானமாக இருந்தது. இதற்காக அவளைத் திட்டினேன். அவளோ பல் இல்லாத செங்குகை போன்ற வாயைத் திறந்து சிரித்தாள். முகமெல்லாம் பொங்கி வழிந்த வியர்வையை முந்தானையால் துடைத்தாள். பல் உள்ள அறிவாளிகளை விடப் பல் இல்லாத இந்த முட்டாளின் சிரிப்பு எத்தனை பாக்கியமானது என்பது இப்போதுதான் உறைக்கிறது.

எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் அவள் தனி மனுசியாகவே குடிசையில் வசித்து வந்தாள். பசுமாடு வளர்த்தாள். பால், தயிர், நெய் விற்றாள். சம்சாரிகளின் காடு கரைகளில் கூலிவேலைக்கு ஆள் அமர்த்துவாள். பிராயத்தில் பாம்படம் போட்டிருப்பாளோ என்னவோ! பெரிய துவாரங்களோடு காதுகள் ரெண்டும் தொங்கிக் கொண்டிருக்கும். சின்ன இரும்புரலில் உலக்கை வைத்து வெற்றிலை பாக்கு இடித்துப் புகையிலையோடு பொக்க வாய்க்குள் அதப்புவதில் சொர்க்கத்தைக் காண்பாள். பல்லுப் போனால் சொல்லுப் போகும் என்பார்கள். ஆனால் கூலி பிரித்துத் தருவதில் குமரிகளோடு சரிக்குச் சரியாகத் தெருவில் நின்று ஸ்பஷ்டமாக சூனா பூனா ஓனாக்களை என் பேத்தி உச்சரிப்பாள். மழைக்குக்கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத (அப்போது ஏது ஸ்கூலு?) பேத்தியால் எப்படி அணா பைசா பிசகாமல் கூலியைப் பிரித்துத் தர முடிந்ததோ? என் பேத்தியோடு மல்லுக்கட்டுகிற சிறுக்கிகளுக்குப் பிரசவ காலத்தில் டாக்டர், நர்ஸ், ஆயா எல்லாம் அவள்தான். எனக்கும்கூட என் பேத்திதான் மகப்பேறு மருத்துவர்! கையை உள்ளே விட்டுச் சிசுவைக் கொடியோடு வெளியே கொண்டுவந்து பண்ணருவாளால் நாபிக் கொடியை அறுத்து முடிச்சுப் போட்டு, நஞ்சுக்கொடியைச் சுத்தமாக வெளியே எடுத்துத் தாயும் சேயும் உயிருடன் இயங்கச் செய்வதில் பேத்தி நிபுணியாம்! கைராசிக்காரியாம்! அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் செத்த புள்ளைத்தாச்சிகள் உண்டே தவிர, என் பேத்தியிடம் வைத்தியம் பார்த்துச் செத்ததாகக் கேள்விப்பட்டதே இல்லை .

தாத்தா இல்லாமல் பேத்தி எப்படிக் காலத்தை ஓட்டுகிறாள்? பேத்தி தாத்தாவைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாளா? தாத்தா எப்பிடி இருப்பார்? அவரை எங்கே காணும்? விரட்டிவிட்டாளா? இல்லாட்டி அவள் தொல்லை தாங்காமல் ஓடிப்போனாரா? அவர் போன பெறவு யாரையாச்சும் காதலிச்சாளா? என்று விடலைத்தனமாக கேள்விகளால் அவளை நச்சரிப்பேன். அவளோ விட்டேத்தியாக ஏதாச்சும் சொல்வாள். எனக்குப் புரிவதில்லை. இல்லாவிட்டால் சம்பந்தமில்லாமல் திட்டுவாள். யாரைத் திட்டுகிறாள் என்பது புதிராக இருக்கும். எப்பிடியோ கொஞ்சம் கொஞ்சமாக எங்கம்மா மூலமாகத்தான் விஷயத்தை அறிந்து கொண்டேன்.
அந்தக் காலத்துல வெள்ளைக்காரன் ஆண்டபோது தேசத்துல பெரிய பஞ்சமாம். எங்கினபாத்தாலும் சனங்க பசியால செத்ததாம். தானிய தவசம் ஒண்ணும் கெடைக்காதாம். எறும்புக் குழிகள் தோண்டி மசங்குறவரைக்கும் புல்லரிசி சேத்து வந்து குத்தி வடிப்பாங்களாம். நண்டு, நத்தை ஒண்ணும் அகப்படாதாம். பஞ்சம் பொழைக்க சனங்க ஊர்கள் விட்டு அசலூரு போனாகளாம். அப்பதாம் சிலோனுக்குத் தோட்டக் கூலிகளா கங்காணி வந்து எங்க ஊர் ஆம்பளகளக் கூட்டிக்கிட்டுப் போனானாம். பஞ்சத்தோட காலராவும் சேர்ந்துக்கிரிச்சாம். தோட்டக் கூலியா எங்க தாத்தா கப்பல்ல ஏறுனாராம். ஏறுனவரு ஏறுனவருதாம். அதுக்கப்பறம் அவரப்பத்தி ஒரு தகவலும் இல்லியாம். யாருமே திரும்பி வல்லியாம். நடுக்கடல்ல காலராவுல செத்தவுகளத் தூக்கி எறிஞ்சிட்டாங்களாம். எங்க தாத்தா பேரு லச்சுமணனாம். அந்த லச்சுமணன் ஜெயிச்சுப் போய்ட்டு திலும்பி வந்தாராம். இவரு திலும்பவே இல்ல. எம்பேத்திக்கு எப்படியிருந்திருக்கும். அடிபாவி மவளே! ஒனக்குள்ள இத்தன சோகமா? எப்பவாச்சும் எம் பேத்தி 'ஊம' அழுக அழுவா. சுருங்கிய கன்னத் தோல்களின் ஊடாகப் பாத்திபோட்டுக் கொண்டு கண்ணீர் சரசரவென்று இறங்கும். இந்தக் கிழட்டு மூதி எதுக்கு இப்பிடிக் கெடந்து அழுகிறா என்றுதான் அந்த வயசில் தோன்றியது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகை, வசவு, சிரிப்பு. அவ்வளவுதான்.

அவளைப் போல யாராலும் கதை சொல்ல முடியாது. எத்தனை கதைகள். வாரண்டு தோப்பனிடமிருந்து மானத்தக் காப்பாத்த தாம் பெத்த பிள்ளையோட கை கால்கள் இணுங்கிப் போட்டவ கதை, மூளியலங்காரி கதை, பெத்த பிள்ளைகள் உசுரோட கெணத்துக்குள்ள எறிஞ்சவ கதை, ஏழு அண்ணம்மாரோட பொறந்த ஒரே தங்கச்சி கதை, நரி பஞ்சாயத்துப் பண்ணிக் குருதக் காரணக் காப்பாத்துன கதை! கதை சொல்ற போது கதயவிட இவ ஊடால அடிக்கிற வியாக்கியானத்தக் கேக்கணுமே. இவ சொன்ன கதைகள்ள மனுசப்பயகள நரிக முட்டாளாக்குற கதைகள் தாம் ஜாஸ்தியா இருக்கும்.

எங்க சேரி எல்லையிலிருந்து 'ஏப்பிளா ராக்கி' என்று சம்சாரிகள் சாயங்காலம் என் பேத்தியைச் சத்தம் போடுவார்கள். மறுநாள் கூலிவேலைக்கு ஆள் அமர்த்தச் சொல்லுவார்கள், பேத்தி ஒட்டமும் நடையுமாகப் போய் தூரத்தில் நின்று பதில் சொல்லுவாள். ரொம்ப நாளாய் இந்த வழமை பற்றி ஏதும் தெரியாமல் இருந்தேன். மதுரை போய் படித்து லீவுக்கு வரும்போதுதான் இந்த வழமையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. சம்சாரிகளுக்கு மிக அருகில் போய் எதேச்சையாக நிற்பேன். 'ஏலே தலயில மொளச்ச பயபுள்ள', 'நாலு எழுத்துப் புடிச்சுப்புட்டா போதுமாடா?' என்று ஊர்ப் பெரிசுகள் சண்டைக்கு வந்து விடுவார்கள். அந்தச் சம்சாரி வீடுகளில் பொங்கலுக்கு வரிசை வைத்துவிட்டு நெல்லுச் சோறும் பூசணிக்கா கொழம்பும் கொண்டு வரும் பேத்தியை எனக்கு வரவரப் பிடிக்கவில்லை . 'நீயே தின்னு கெழவி' என்று திட்டுவேன். பேத்தி இப்படியெல்லாம் கவுரவக் கொறைச்சலாக நடக்க முடியாத மாதிரி நான் ஒரு வேலைக்குப் போனதும் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன். அவளிடம் இதைச் சொன்னபோது முகத்திலுள்ள தோல் சுருக்கங்கள் அலைபாய்கிற மாதிரி மந்தகாசம் புரிவாள்.

ஒண்ணு முதல் அஞ்சு ரூபா வரை ஒரு மரக்கால் மாட்டுக்கறி வித்த காலம் அது. கடனுக்கோ அல்லது எங்கம்மா குடுத்த காசுக்கோ பேரம் பேசி நல்ல கறியா வாங்கி வருவா எம் பேத்தி. இந்தப் பேத்திக்கு மட்டும் எப்பிடித்தான் தடக்கு விழுக்கு இல்லாம் கொழுத்த கறியாப் பார்த்துக் கெடைக்கிறது என்பது தெரியவில்லை. இதுக்குக் காரணம் கறிபோடும் மாயாண்டிக்கும் என் பேத்திக்கும் அந்தக் காலத்துல தொடுப்பு இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். எனக்கு கோவம் அண்ட சண்டாளமாய் வரும். பேத்தியிடம் கூட இதைப்பத்தி ஒரு தடவை பிரஸ்தாபித்தேன். அவளுக்கு இது சிரிப்பாகவும் இருந்தது; கோவமாகவும் இருந்தது. நினைவுத் தடத்திலிருந்து அழிந்துபோன விசயம் போலவும் இருந்தது...

சம்சாரிகளின் தயவு இல்லாமல் வீட்டில் உட்கார்ந்தபடியே என் பேத்தியைச் சாப்பிட வைக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகாதபடி யாரும் எனக்கு வேலை போட்டுத் தரவில்லை. நெடிய கனவாகிக் கொண்டிருந்தது அந்தக் காலகட்டத்தில் தெருவில் யாரோடும் நான் பேசுவதில்லை. பேத்தியோடும்தான். இது குறித்து அவளுக்கு அளவு கடந்த வருத்தம். வேலை போட்டுத் தராத கட்சிக்காரர்களை ஒரு மூச்சு திட்டித் தீர்ப்பாள். நான் பழையபடி கலகலப்பான பேரனாக ஆவதற்கு அவளுக்குத் தெரிந்த ஒரே உபாயம்: நான் கலியாணம் பண்ணிக் கொண்டால் சரியாகிவிடும் என்பதுதான். இரவு வெகுநேரம் கழித்து நான் வீடு திரும்புவதற்கு ஒரு நண்பன்தான் காரணம் என்பதில் என் பேத்திக்கு ஏமாற்றம். ஒரு பெண் காரணமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவள் உலகம் வேறு.

ஆனால் எனக்கு வேலை கிடைத்ததுமே என்பேத்தி பக்கவாதத்தால் படுத்த படுக்கையாவாள் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்? அப்படி உடம்பு. இப்போ மூத்திரத்தின் மேலேதான் படுக்கை. அவளிடம் என் குழந்தையைக் காட்டினேன். என்னைக்கூட அடையாளம், தெரிந்ததோ என்னவோ? நரைத்த தலைமட்டும் எழும்பப் பிரயத்தனப்பட்ட மாதிரி தெரிந்தது. அவளுக்காக நான் செய்து தந்த மரக்கட்டிலில்தான் அவள் உயிர் பிரிந்தது. அதைத் தவிர அவளுக்கென்று நான் செய்தது ஏதுமில்லை என்னைப்போல் ஒரு பாவி உண்டா சொல்லுங்கள்.

ராஜ் கௌதமன்
Share: 




© Copyright 2020 Tamilonline