Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 12)
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2019|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறை, அத்துடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தைச் சேர்த்துப் பயன்படுத்தி மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்கமுடியும் என்பவற்றையும், சமீபத்தில் முழுச் செயற்கை மரபணு எழுத்துக்களே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலே பார்க்கலாம்...

*****


க்ரிஸ்பர் முறையுடன் செயற்கை மரபணுக்களைச் சேர்ப்பதால் கிடைக்கக் கூடிய பலன்கள் பலவானாலும், அம்முறையில் பலவீனங்களும் உள்ளன என்று கூறிய என்ரிக்கே, உயிரணுக்களில் உள்ள மரபணுத் தொடர்களில் சரியான இடத்துக்குச் சென்று சேர்வதும் ஒவ்வொரு முறையும் சரியான மாற்றங்களை செய்வதும் கடினமாக உள்ளது என்று விளக்கிவிட்டு, சூர்யாவின் தூண்டலால் மேற்கொண்டு விவரிக்கலானார்.

தன் ஆராய்ச்சியினால் ஏற்பட்ட முன்னேற்றங்களை விளக்கும் பெருமிதத்துடன் என்ரிக்கே தொடர்ந்தார். "நீங்க சொன்னது சரி சூர்யா. ஆனா, நான் உருவாக்கினேன்னு சொல்றதை விட, என் தலைமையில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு உருவாக்கி இருக்குன்னு சொல்றதுதான் சரி. அந்த ரெண்டு பலவீனங்களையுமே நிவர்த்திக்கும் படியான வழிமுறையைத்தான் எங்க குழு செஞ்சிருக்கோம்!"

ஷாலினி ஆர்வத்துடன் "வாவ்! கேட்கவே ரொம்பப் பிரமாதமா இருக்கே என்ரிக்கே? அப்படி என்ன முன்னேற்றங்களைச் செஞ்சிருக்கீங்க?" என்றாள்.

விம்மிய பெருமிதத்துடன் என்ரிக்கே தொடர்ந்தார். "க்ரிஸ்பர்-காஸ்9 அப்படிங்கற வழிமுறைதான் பொதுவாப் பயன்படுத்தப்படுது. நாங்க அதையே அடிப்படையா வச்சாலும் பெரும் ஆராய்ச்சி மற்று படுதோல்விகள் பலவற்றுக்கு அப்புறம் பல நுண்ணிய மாற்றங்களைச் செஞ்சிருக்கோம். அதுனால, போய்ச் சேரவேண்டிய இடத்தைப்பற்றி எங்க க்ரிஸ்பருக்கு இன்னும் பல தகவல்கள் அளிக்கமுடியுது. அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் சரியான இடத்துக்குப் போய்ச் சேருகிற மாதிரி செஞ்சிருக்கோம்!"

சூர்யா ஆழ்ந்த யோசனையுடன், "சரி புரியுது, குறிதவறாம வேலை செய்யறா மாதிரி செஞ்சிருக்கீங்க! அப்போ அந்த ரெண்டாவது பலவீனம்? அது என்ன, அதை எப்படி நிவர்த்திச்சீங்க?" என்று கேட்டார்.

என்ரிக்கே உற்சாகமாகக் கையைச் சொடுக்கினார். "அப்படிக் கேளுங்க! க்ரிஸ்பர் முறையால செய்யப்படும் மாற்றங்கள் சில சமயம் தவறா ஆகுது, இல்லன்னா சிறிது நேரத்துல சிதறவும் கூடும். அந்த மாதிரி ஆகாம இருக்க நாங்க மாற்றங்களை வேற முறையில் செய்யறமாதிரி மாத்தியிருக்கோம். செய்ய வேண்டிய மாற்றங்களோட அதுக்குப் பலமேற்றும் ஆனால் வேறு மாதிரியான, பலனில்லாத மாற்றங்களையும் உட்புகுத்தறா மாதிரி செஞ்சிருக்கோம்."

சூர்யா தலையாட்டினார். "ஓ! எங்க துறையில் நாங்க தவறைச் சரிசெய்யும் குறியீடு (forward error correcting code) என்று அதிகமான தகவல் துளிகளைப் (bits) பயன்படுத்தி எதாவது ஒரு தகவல் துளி தவறினாலும் சரியான விவரத்தைக் கண்டுபிடிப்போம். அந்த மாதிரி போலிருக்கு?!"

என்ரிக்கே "பிரில்லியண்ட் சூர்யா. அதே மாதிரிதான். எங்க முன்னேற்றங்களால, சாதாரண க்ரிஸ்பரை விடப் பலமடங்கு சரியான மாற்றங்களை எங்க சிறப்புக் க்ரிஸ்பர் காட்டியிருக்கு!" என்று கூறிவிட்டு பெருமிதத்தில் மிதந்தார்.

அவரது பெருமித பலூனைத் தன் கேள்வி ஊசியால் படாலென வெடித்தார் சூர்யா. "வெரி குட் என்ரிக்கே! நல்ல முன்னேற்றங்கள்தான். ஆனா அதுல என்ன பிரச்சனை? அதைப்பத்தி விசாரிக்கத்தானே எங்களைக் கூப்பிட்டிருக்கீங்க?

சூர்யாவின் கேள்வி என்ரிக்கேயின் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருந்தது. என்ரிக்கேயின் முகம் சட்டென்று வாடிச் சுருங்கியது. அவர் பேசவே முடியாமல் தடுமாறினார். "அ...அ... யெஸ்... பிரச்சனை. கரெக்ட்; அதைப்பத்தித் தான் நாம் பேசணும் இல்லையா, ரொம்ப சரி. ஸாரி, எங்க சாதனையைப் பத்தித் தம்பட்டம் அடிச்சுக்கற முனைப்புல மறந்தே போயிட்டேன் பாருங்க..." என்றவர் சில நொடிகள் மவுனமாக இருந்துவிட்டுத் தொடர்ந்தார். "அதுபத்தி... ஹூம்! சொல்லவே முடியலை ரொம்பக் கஷ்டமா இருக்கு சூர்யா! சே! என்ன இப்படி ஆயிடுச்சு எனக்கு!"

ஷாலினி "பரவாயில்லை படபடன்னு கொட்டித் தள்ளிடுங்க என்ரிக்கே. அப்புறம் சூர்யா பாத்துப்பார்!" என்று ஊக்குவித்தாள்.

என்ரிக்கே சோகமாகத் தலையாட்டிக் கொண்டு தொடர்ந்தார். "நான் எங்க நிறுவனக் குழு க்ரிஸ்பர் முறையில ரெண்டு முன்னேற்றங்கள் செஞ்சிருக்குன்னு சொன்னேன் இல்லியா?"

கிரண் இடைமறித்தான். "அதான் குறிதவறாம ஒண்ணுன்னு சொன்னீங்களே அதானே?" என்று கூறி துப்பாக்கியால் கூர்ந்து கவனித்து சுடுவது போல் கை நீட்டி ஒரு கண்ணை மூடிக் கொண்டு பாவனை காட்டினான். ஷாலினி உச் கொட்டி அவன் மண்டையில் குட்டினாள் "கிரண், உஷ்! முக்கியமா சொல்றச்சே எதாவது குரங்கு சேஷ்டை பண்ணாதே!"

ஆனால் என்ரிக்கே முகத்தில் இளமுறுவல் படர்ந்தது! "பரவாயில்லை ஷாலினி. கிரண் சேஷ்டைகள் எனக்கு கொஞ்சம் மனப் பளுவைக் குறைக்குது!"

கிரண் ஷாலினியைப் பார்த்து "வெவ்வே! இனிமே சும்மா கிடம்மே! இவரு நம்மாளு!" என்று பழித்துக் காட்டவும் என்ரிக்கே சிரித்தே விட்டார்!
கிரணை முறைத்துப் பார்த்த ஷாலினி, "அவன் கிடக்கறான், ப்ளீஸ் மேல சொல்லுங்க என்ரிக்கே" என்றாள். என்ரிக்கே தலையாட்டிவிட்டு மேற்கொண்டு விளக்கலானார். "அந்த குறிவைக்கற முன்னேற்றம் சரியாத்தான் இருக்கு. அதுனால க்ரிஸ்பர் பயன்படுத்தும் வழிமுறைகள் எல்லாத்துக்குமே ஓரளவு பலனிருக்குதான்! ஆனா..." என்று கூறிய என்ரிக்கேயின் முகம் இருண்டது. மீண்டும் மவுனியானார்.

சூர்யா தன் பங்குக்கு அவரைத் தொடருமாறு தூண்டினார். "ஆனா அந்த ரெண்டாவது முன்னேற்றம், அதாவது தவறான மாற்றங்களைத் தவிர்க்க எதோ பலனில்லாத சில மாற்றங்களையும் சேர்த்திருக்கோம்னு சொன்னீங்க... அதுலதான் எதாவது பிரச்சனையா?"

என்ரிக்கே கை சொடுக்கினார். "யெஸ், யெஸ் அதேதான், சரியா பாயிண்ட்டைப் பிடிச்சிட்டிங்க சூர்யா. பலனில்லாத மாற்றங்களைச் சேர்த்திருக்கோம்னுதான் சொன்னேன். அதுவும் முதல்ல சரியாத்தான் இருந்துச்சு! ஆனா சமீப காலமா, சில வாரங்கள்தான், அது கொடூரமா தவறாயிடுச்சு!"

அவ்வாறு கூறி முடிக்கும்போது என்ரிக்கேயின் குரல் தழுதழுத்தது. தன் நெற்றியில் கையால் அடித்துக்கொண்டு, "என் இருபது வருட முயற்சி ஷாலினி! அது சரியாக வேலை செய்துகொண்டிருந்த போது எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா? இப்போ? எல்லாம் போச்சு! இப்படி திடீர்னு தவறாப் போக ஆரம்பிக்க என்ன காரணம்னு நானும் என் குழுவும் எப்படியெல்லாம் அலசியிருக்கோம். ஒண்ணும் புலப்படலை. அதுனாலதான் ஒரு கடைசி முயற்சியா உங்களை வரவழைச்சேன். இவ்வளவு திறனுள்ள குழுவே கண்டுபிடிக்க முடியாததை உங்களால முடியும்னு எதிர்பார்க்கறது தப்புத்தான். இருந்தாலும் என்ன செய்ய எனக்கு வேறவழி தெரியலை!"

ஷாலினி பரிதாபத்துடன் ஆறுதல் கூறினாள். "அப்படி நம்பிக்கை இழக்காதீங்க என்ரிக்கே! இந்த மாதிரி ஆழ்ந்த தொழில்நுட்பத்துல உண்டாகற பிரச்சனை பலவற்றை சூர்யா துப்பறிஞ்சு நிவர்த்திச்சிருக்கார். இப்பகூட சமீபத்துலதான் முப்பரிமாண உயிரணுப் பதிப்புல உண்டான பிரச்சனையில செஞ்சார்னுகூட நானே சொன்னேனே மறந்துட்டீங்களா? சூர்யாவை நம்பினோர் கைவிடப் படார்! என்ன சூர்யா? சொல்லுங்க இவருக்கு!"

சூர்யா மெல்லத் தலையாட்டி "என்ரிக்கே, என்னால ஆன அளவு முயற்சிக்கறேன். இந்த மாதிரி ஆழ்நுட்பம் திடீர்னு தவறாகறதை நானும் பலமுறை சந்திச்சாச்சு. பொதுவா அதுக்கான காரணம் நுட்பத்தில இருக்கறதில்லை. அதுல சம்பந்தப் பட்டிருக்கற மனுஷங்களாலதான்..."

சூர்யா சொல்லி முடிக்கும் முன்பே என்ரிக்கே கை தூக்கி நிறுத்துமாறு சைகை செய்து மறுத்தார். "சே சே, சூர்யா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? எனக்கு உங்க முந்தைய கேஸ்களில என்ன ஆச்சுன்னு தெரியாது. ஆனா இந்தக் குழு! என்னுடன் எத்தனை காலமா தோளொடு தோள் வச்சு இரவு பகலா உழைச்சிருக்காங்க? அவங்க வாழ்நாள் உழைப்பையே உடைப்புல போடுவாங்களா என்ன? நிச்சயமா இருக்க முடியாது!"

சூர்யா தலைகுனிந்து ஏற்றுக்கொண்டார். "சரி அப்படியே இருக்கட்டும் பரவாயில்லை. முதல்ல இந்த நுட்பம் எப்படி தவறா வேலை செய்யுதுன்னு சொல்லுங்க. அப்புறம் உங்கக் குழுவை அடுத்து சந்திச்சுப் பேசிதான் பாக்கலாமே? அதுல என்ன புலப்படுதுங்கறதுதான் நிவாரணம் காண அடிப்படை!"

என்ரிக்கே நம்பிக்கையின்றி, ஆனால் வேறுவழி தெரியாமல், ஒப்புக்கொண்டார். "உங்க மேலதான் நம்பிக்கை வச்சிருக்கேன், அப்படியே செய்வோம். சரி வாங்க, ஒவ்வொருத்தரா அறிமுகம் செஞ்சு வைக்கறேன். வழியிலேயே பிரச்சனயை விவரிக்கறேன்."

என்ரிக்கே தொடர்ந்து தன் ஆராய்ச்சிக் குழு உருவாக்கிய க்ரிஸ்பர் வழிமுறைகளில் ஏற்பட்ட பிரச்சனையை விவரிக்கலானார்...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline