Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வசுமதி ராமசாமி
- அரவிந்த்|டிசம்பர் 2017|
Share:
எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், சமூகசேவகர், பெண்ணியவாதி, சுதந்திரப்போராளி எனப் பன்முகங்களோடு இயங்கியவர் வசுமதி ராமசாமி. இவர், ஏப்ரல் 21, 1917ல் கும்பகோணத்தில் பிறந்தார். பாரம்பரியமிக்க குடும்பம். சகோதரர் சுவாமி ஐயங்கார் கலை மற்றும் இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வமுடையவர். அவர் வழி வசுமதிக்கும் அந்த ஆர்வம் வந்தது. இளவயதிலேயே ராமசாமி ஐயங்காருடன் திருமணம் நிகழ்ந்தது. மணவாழ்க்கை மதுரையில் தொடர்ந்தது. புகுந்தவீடு காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடுள்ள குடும்பம். கணவர், மாமனார் இருவருமே இலக்கிய ஆர்வம் உடையவர்கள். வழக்குரைஞர்கள். வீட்டுக்கு வரும் பத்திரிகைகள், நூலகங்கள் மூலம் வாசிப்பார்வத்தை வளர்த்துக்கொண்டார். கல்கி இவரது ஆதர்ச எழுத்தாளரானார். மாமனார் சேஷ ஐயங்கார் வழக்குரைஞராக மட்டுமல்லாமல் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முன்னின்று உழைத்தவர். மாமியார் சமூகசேவகர். அவர் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கச் செல்லும்போது வசுமதியை உடனழைத்துச் செல்வார். இத்தகைய நேரடி அனுபவங்களால் வசுமதியின் மனம் விசாலப்பட்டது. மக்களின் பிரச்சனைகளையும் சமூகச்சிக்கல்களையும் உணர்ந்தார். மாமியாருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

வாசிப்பார்வம் இவரை எழுதத் தூண்டியது. தனது கள அனுபவங்களையும், தனக்குக் கிடைத்த செய்திகளையும் மையமாக வைத்து சிறுகதைகள் எழுதத் தலைப்பட்டார். 'பிள்ளையார் சுழி' என்ற முதல் சிறுகதை எழுத்தாளர் வை.மு. கோதைநாயகி ஆசிரியையாக இருந்த 'ஜகன்மோகினி'யில் பிரசுரமானது. தொடர்ந்து அந்த இதழில் எழுதிவந்தார். வை.மு. கோதைநாயகி, குகப்ரியை இருவரும் இவரது மனங்கவர்ந்த எழுத்தாளர்கள். அவர்களைப் போலவே பெண்ணியச் சிக்கல்களையும், சமூகம் சார்ந்த சிக்கல்களையும் மையமாக வைத்து தனக்கென்று ஒரு தனிப்பாணியில் எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் கல்கியும் இவரை ஊக்குவிக்கவே தீவிரமாக எழுதத் துவங்கினார். ஆனந்த விகடனிலும், கல்கியிலும் சிறுகதைகள் வெளியாகி இவருக்குப் புகழைச் சேர்த்தன. தொடர்ந்து நாவல், குறுநாவல் நாடகம், கட்டுரை என்று பல படைப்புகளைத் தந்தார். கணவரும் ஊக்கமளிக்கவே தீவிரமாகச் சமூகசேவையில் ஈடுபட்டார். கிடைத்த ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகள் எழுதினார்.

Click Here Enlarge'தேவியின் கடிதங்கள்' என்ற பெயரில் கல்கியில் வெளியான இவரது கடிதரீதியான படைப்பு முக்கியமானது. மூதறிஞர் ராஜாஜி, வசுமதி இவற்றை எழுதுவதற்குக் காரணமாகவும், தூண்டுகோலாகவும் இருந்தார். கல்கி, ராஜாஜி ஆகியோரது பாராட்டுதலைப் பெற்றது அப்படைப்பு. பின்னர் நூலாகவும் வெளியானது. அதற்கு ராஜாஜியே முன்னுரை வழங்கி, பாராட்டி ஆசிர்வதித்திருந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் 'காப்டன் கல்யாணமும்' விகடனில் தொடராக வெளிவந்து புகழைச் சேர்த்தது. இந்தியா–பாகிஸ்தான் காஷ்மீர்ப் போரைப் பின்னணியாகக் கொண்டு அதனை இவர் எழுதியிருந்தார். 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது 'சிவன் சொத்து' என்ற சிறுகதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் அகிலன். 'சந்தனச் சிமிழ்', 'காவிரியுடன் கலந்த காதல்', 'பனித்திரை', 'ராஜக்கா', 'பார்வதியின் நினைவில்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய தொடர்கதைகளும் வாசகர்களால் பாராட்டப்பட்டவை.

'பத்மஸ்ரீ அம்புஜம்மாள்' என்ற தலைப்பில் சுதந்திரப் போராளியும், சமூகசேவகியும், எழுத்தாளருமான அம்புஜம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார். 'பாரததேவி', 'ராஜ்யலஷ்மி' போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியிருக்கிறார். அக்காலத்தின் புகழ்பெற்ற சுதேசமித்திரன், தினமணி கதிர், வெள்ளிமணி போன்ற இதழ்களில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகின. "மனிதன் இன்று இருக்கிறான் நாளை மறைகிறான். ஆனால் நல்ல இலக்கியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்பவை. கடந்த, நிகழ்கின்ற, வரப்போகின்ற சமுதாயங்களை இணைக்கும்போது, சீரிய, கொள்கைகளைப் புகுத்தி, உயரிய கருத்துகளைத் தொகுத்து, அதையும், வெறும் பிரசாரமாக இல்லாமல் கலையுணர்வுடன் அமைப்பது அவசியமாகிறது" என்று இலக்கியம் பற்றிய தனது கருத்தை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பாளர்களுள் ஒருவராக இவர் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளரும் சமூக சேவகருமான எஸ். அம்புஜம்மாள், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, டாக்டர் துர்காபாய் தேஷ்முக் ஆகியோருடன் இணைந்து ஏழை, எளியவர்களுக்காகவும், நோயால் நலிந்தவர்களுக்காகவும், கைவிடப்பட்ட பெண்களுக்காகவும் இவர் ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கன. பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பது இவரது முக்கியக் கொள்கை. குடும்பக்கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தி வந்தார். கட்டுரைகள், சொற்பொழிவுகள், வானொலி நாடகங்கள் மூலமாகச் சமூக மேம்பாட்டுப் பணிகளை இவர் செய்தார். காஞ்சி மகாபெரியவரின் கட்டளைக்கு இணங்கி, 'ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன்மூலம் சரோஜினி வரதப்பன் போன்ற தோழியருடன் இணைந்து நூற்றுக்கணக்கான பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானமாகத் தங்கத்தாலி அளித்து வந்தார். பௌர்ணமிதோறும் ஏழைப்பெண்களுக்குத் திருமாங்கல்யம் வழங்கிவந்தார்.

காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூகசேவைக்கான பயிற்சி பெற்றவர் இவர். அவரது தென்னிந்திய விஜயத்தின்போது அவருக்கு உறுதுணையாக இருந்த பலருள் வசுமதி ராமசாமியும் ஒருவர். அகில இந்திய மாதர் கூட்டமைப்பான Women's Indian Association(WIA) சென்னை கிளையின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இது தவிர்த்து சேவை மையங்களான சேவாமந்திர், பாலமந்திர், ஔவை இல்லம் போன்றவற்றிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். வசுமதி ராமசாமி பெயரால் அமைந்த நூலகம் ஒன்றும் அகில இந்திய மாதர் சங்கத்தில் இயங்கி வருகிறது. சென்னையில் சீனிவாச காந்தி நிலையம் உருவாக உழைத்த இவர், அதன் செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. தன்னலம் கருதாமல் கடமையே கண்ணாகக் கொண்டு உழைத்த வசுமதி ராமசாமியை கீதையில் வரும் "ஸ்தித பிரக்ஞன்" போன்றவர் என்று பாராட்டியிருக்கிறார் சரோஜினி வரதப்பன். "நவீன கால ஔவையார்" என்பது வசுமதியைப் பற்றிப் பத்மா சுப்பிரமணியத்தின் கருத்து. இவரது சமூகப் பணிகளுக்காக காஞ்சி காமகோடி பீடம் 'ஜனசேவா மணி' என்ற பட்டமளித்து கௌரவித்தது.

பெண்களுக்கு உதவுவதையும், அவர்கள் கல்வி, வாழ்க்கைத் தரத்தில் முன்னேறுவதையுமே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004 அன்று, 86ம் வயதில் சென்னையில் காலமானார். இவ்வாண்டு அவரது நூற்றாண்டு. அவரது வாரிசுகளாலும், இலக்கிய ஆர்வலர்களாலும் அது மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline