Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
முன்னோடி
அ. மருதகாசி
- பா.சு. ரமணன்|மே 2017|
Share:
"வாராய் நீ வாராய், போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்", "ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை", "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி", "சுந்தரி சௌந்தரி நிரந்தரியே", "முல்லைமலர் மேலே", "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா", "காவியமா? நெஞ்சின் ஓவியமா?", "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே", "வசந்தமுல்லை போலே வந்து", "உலவும் தென்றல் காற்றினிலே", "தென்றல் உறங்கியபோதும்", "வீணைக்கொடி உடைய வேந்தனே" இதுபோன்ற அற்புதமான, காலத்தில் நிலைபெற்ற பாடல்களை எழுதியவர் அ. மருதகாசி. இவர் ஃபிப்ரவரி 13, 1920ல், திருச்சியில் உள்ள மேலக்குடிக்காடு என்ற கிராமத்தில், ஐயம்பெருமாள், மிளகாயி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை கிராம அதிகாரி. பரம்பரை நிறைய விவசாய நிலம் இருந்தது. நான்காம் வகுப்புவரை உள்ளூரில் பயின்ற மருதகாசி, எட்டாம் வகுப்பைக் கும்பகோணம் பாணாதுரை உயர்நிலைப்பள்ளியில் நிறைவுசெய்தார். பள்ளிக் காலத்திலேயே தமிழ், கவிதை மற்றும் நாடகங்களின் மீது ஆர்வம் இருந்தது. இவரது திறமையை அறிந்த, பாபநாசம் சிவனின் மூத்த சகோதரர் ராஜகோபாலய்யர் ஆசானாய், குருவாய் இருந்து ஊக்குவித்தார். அவரது வழிகாட்டலில் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை நிறைவுசெய்தார். கல்லூரியில் தானே பல நாடகங்களுக்குக் கதை-வசனம் எழுதி நடத்தினார். தமிழறிஞர் கோ. முத்துப்பிள்ளை இவரது தமிழ்த்திறன் அறிந்து, உயர ஊக்கமளித்தார்.

கதை-வசனம் மட்டுமல்லாமல், நாடகங்களுக்கும் சிறு சிறு பாடல்களை எழுதத் துவங்கினார். "கலைமகள் உறைந்திடும் கலாசாலை" என்பதே இவரது முதல் நாடகப் பாடல். இந்நிலையில் பெரும் விவசாயக் குடும்பம் என்பதால் விவசாயத்தை தொடர்வதற்காகப் படிப்பைக் கைவிட நேர்ந்தது. ஆர்வம், வசதி இருந்தும் சூழ்நிலையால் படிப்பை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். கூடவே தந்தை செய்துவந்த கிராம அதிகாரி பணியையும் செய்தார். இந்நிலையில் நண்பர் ஒருவர்மூலம் ஏ.கே. வேலன் எழுதிய "சூறாவளி" என்ற நாடகத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது.. அதுதான் இவரது முதல் நாடகப் பாடலாக அமைந்தது. தொடர்ந்து சககவிஞரான கா.மு. ஷெரீப்பின் நட்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்தும், தனியாகவும் சில நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கவும் செய்தார்.

அரு.ராமநாதன் எழுதிய 'வானவில்' என்ற நாடகத்திற்குப் பாடகர் திருச்சி லோகநாதன், மருதகாசியைப் பாடல் எழுதச் சொன்னார். அந்தப் பாடல்கள் பலரையும் கவர்ந்தன. அவ்வாறு ஈர்க்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் இவரைத் தனது கம்பெனிக்குப் பாடல் எழுத அழைத்தார். தயாரிப்பு நிர்வாகியாக இருந்த எம்.ஏ. வேணு இவரது திறமை அறிந்து ஊக்குவித்தார். 'மாயாவதி' படத்திற்காக ஜி. ராமநாத ஐயரின் மெட்டுக்கு மருதகாசி பாடல் எழுதினார். "பெண் எனும் மாயப் பேயாம் பொய்மாதரை என் மனம் நாடுமோ" என்ற பாடல்தான் திரைக்காக இவர் எழுதிய முதல் பாடல். 1949ல் துவங்கியது இவரது திரைப் பயணம். தொடர்ந்து வந்த 'பொன்முடி' படத்தின் பாடல்கள் இவருக்கென ஓர் அடையாளத்தைத் தந்தன. வாய்ப்புகள் வரத்துவங்கின. மருதகாசியும், கா.மு. ஷெரீப்பும் நண்பர்கள் என்பதால் ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்தே பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினர். வாய்ப்புகள் அதிகரிக்கவே இருவரும் தனித்தனியாக எழுத ஆரம்பித்தனர்.

தியாகராஜ பாகவதர் 'அமரகவி' படத்தில் இடம்பெற்ற "புதிய வாழ்வு பெறுவோம்" என்ற பாடலை மனம் விரும்பிப் பாடினார். 'ராஜா ராணி' படத்திற்காக இவர் எழுதிய "சிரிப்பு.. சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு..." என்ற பாடலின் வரிகளை மனமுவந்து பாராட்டினார் என்.எஸ். கிருஷ்ணன். ஹிந்தி மெட்டுக்களுக்கேற்ப சுவாரஸ்யமான பாடல்களைத் தமிழில் தருவதிலும் மருதகாசி வல்லவராக இருந்ததால் வாய்ப்புகள் பெருகின. மருதகாசி என்ற பெயர் திரையுலகில் நிலைபெற்றது. 'சம்பூர்ண ராமாயணம்', 'தாய்க்குப் பின் தாரம்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்' என 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் முழுவதும் பாடல்களை எழுதியிருக்கிறார். ஜி. ராமநாதன் தவிர, சலபதிராவ், டி.ஜி. லிங்கப்பா, எஸ். தக்ஷிணாமூர்த்தி, எஸ்.வி. வெங்கட்ராமன், ஞானமணி, சி.என். பாண்டுரங்கன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, டி.ஆர். பாப்பா, வேதா, சங்கர்-கணேஷ் எனப் பலரது இசைக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா, எம்.எஸ். ராஜேஸ்வரி எனப் பலருக்கு வெற்றிகரமான பாடல்களைத் தந்து அவர்கள் புகழ்பெறக் காரணமாக இவரது பாடல்கள் அமைந்தன. பக்தி, காதல், தாலாட்டு, நகைச்சுவை, சமூகம், தத்துவம், சோகம், கிராமியப்பாடல் என பல தரப்பட்டவையாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.
"தை பொறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்", "ஆசைக் கிளியே கோபமா", "ஆடாத மனமும் உண்டோ?", "நீலவண்ணக் கண்ணா வாடா", "சின்ன பாப்பா எங்க செல்லப்பாப்பா", "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே" போன்ற பாடல்கள் மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றன. அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் மனங்கவர்ந்த பாடலாசிரியரானார் மருதகாசி. இந்நிலையில் நண்பர்களின் வற்புறுத்தலால் அவர்களுடன் இணைந்து 'அல்லிபெற்ற பிள்ளை' என்ற படத்தைத் தயாரித்தார். அதனால் மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். மன உளைச்சலால் படத்திற்குப் பாடல் எழுதுவது குறைந்துபோனது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று வசித்தார். இவரது நிலையை அறிந்துகொண்ட நடிகர் எம்.ஜி.ஆர். இவருக்குத் தகுந்த உதவிகள் செய்து மீட்டெடுத்தார். சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாத் தேவர் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். மீண்டும் திரையுலகில் தனது முத்திரையைப் பதித்தார் மருதகாசி.

கவிஞர் வாலியின் திறமையை அறிந்து ஊக்குவித்தவர் இவர். வாலி இவரைப்பற்றி,

"படத்துறை இவரால்
பயன்கள் பெற்றது
பழந்தமிழ் இவரால்
புதுத்தமிழ் ஆனது

அடக்கம் இவரது
அணிகலம் என்பேன்
அகந்தை யாதென
அறியாப் பெம்மான்"


என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். "விலைக்கு எழுதும் வியாபார நோக்கு அவருக்கு இருந்ததில்லை. கலைக்கு எழுதும் கற்பனைப் போக்கு மிக்கவர்" என்று பாராட்டியிருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஏ.கே. வேலன். "கவிஞர் மருதகாசி ஒரு மகத்தான மனிதர். பண்பாடுகளின் சாரம், நாகரிகத்தின் பிழிவு. அவரது எழுத்துக்களைப் போலவே மென்மையானவர்." என்று புகழ்கிறார் கவிஞர் வைரமுத்து.

நான்காயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியிருக்கும் மருதகாசி, அதில் சில பாடல்களை நூலாகத் தொகுத்து, "என்னை வாழவைத்த தெய்வம்; தென்னையைப் போன்ற வள்ளல்" என்றெல்லாம் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்துரைத்து அவருக்கே அந்நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். 'திரைக்கவித் திலகம்', தமிழக அரசின் 'கலைமாமணி', தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, கண்ணதாசன் நினைவுப் பரிசு உள்ளிட்ட பட்டங்களையும் பரிசுகளையும் பெற்ற மருதகாசி, உடல்நலிவுற்று, நவம்பர் 29, 1989 அன்று காலமானார். இவரது திரையிசைப் பாடல்களையும் நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

தமிழ்த் திரைப்படப் பாடல்களை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தமுடியும் என்று நிரூபித்துக் காட்டிய அ. மருதகாசி, தமிழிலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் ஐயமில்லை.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline