Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 11)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2015|
Share:
முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க்கிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்த புகைப்படங்களையும் அலங்கரிப்புகளையும் வைத்தே தாம் யூகித்ததாகச் சூர்யா விளக்கினார். வியப்புற்ற அகஸ்டா, சூர்யாவின்மேல் பெரும்நம்பிக்கையுடன் தன் ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்று விளக்கினாள். திசுப்பதிக்குமுன் அதற்கு அடிப்படையான உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் பொது நுட்பங்களை விவரித்துவிட்டு திசுப்பதிப்பு (bio-tissue printing) நுட்பங்களை விவரித்தாள். மின்வில்லைகளின்மேல் திசுக்களைப்பதித்து, அவற்றை மிருகங்களுக்குப் பதிலாக பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என்றாள். ஆனால், முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்டவேண்டிய தடங்கல்கள் பல உள்ளன என்று விவரிக்க ஆரம்பித்தாள். முதல் தடங்கல், திசுக்கள் உயிரோடு செயல்பட ஊட்டமளித்து, கழிவை அகற்ற ரத்தஓட்டம் தேவை; அதற்கு நாளங்களைப் பதிக்க வேண்டும். நாளமிடல் எனப்படும் அதற்கு, மெல்லிய ப்ளாஸ்டிக் இழைகள்மேல் நாளத்திசு அணுக்களைப் பதித்து, பிறகு இழைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று விளக்கினாள். பிறகு...

*****


நாளமிடலுக்கு மெல்லியகுழாய் போன்ற அஸ்திவாரத்தின்மேல் திசு பதிக்கலாமோ என்று சர்வசாதாரணமாக சூர்யா கேட்கவும், பல விஞ்ஞானிகள் பல வருடங்களாக முயன்று கண்டுபிடித்த நுட்பத்தை நொடிப்பொழுதில் யூகித்த சூர்யாவின் திறனால் தன் பிரச்சனைக்கும் விரைவாக நிவாரணம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் வலுத்தது. அந்தத் தெம்புடன், முப்பரிமாண மெய்ப்பதிப்பின்மூலம் உயிரங்கங்களைப் பதிப்பதிலுள்ள பெருந்தடங்கல்களை அகஸ்டா மேலும் விவரிக்கலானாள்.

ரத்தநாளமிடல் (vascularization) மிகக்கடினமானது, அதை இன்னும் மிகமேம்பட்ட ஆராய்ச்சிக்கூடங்களில்தான் செய்கிறார்கள், இன்னும் சாதாரண, நாளமற்ற திசுப்பரப்பு அளவுக்குக்கூட வெளிப்பயனுக்கு வரவில்லை என்று விளக்கிய அகஸ்டா, "நாளமிடல்கூடப் பரவாயில்லை. அதைவிடக் கடினமான ஒரு தடங்கல் உள்ளது. அதுதான், ஒரு முழுவடிவத்துடன் எல்லாம்கொண்ட (self-contained) தானியங்கும் (autonomous operation) ஓர் அங்கத்தை முழுவதுமாகப் பதித்துப் பலனளிக்கச் செய்வது. அதில் இதுவரை ஓரளவுக்கேனும் முன்னேறியிருக்கும் உயர் ஆராய்ச்சி மையங்களை ஒருகை விரல்களில் எண்ணி விடலாம்."

கிரண் குறுக்கிட்டான். "இந்த மாதிரி விஷயம்னா என் அருமை அன்னைநிலையமான (almamater) MIT மூக்கை நுழைக்க முந்திக்குமே? அங்க அப்படி எதாவது நடக்குதா...?"

அகஸ்டா, "ரொம்ப சரியா கெஸ் பண்ணிட்டே கிரண். நீ சூர்யாவுக்கு சரியான சிஷ்யன்தான்! MIT உற்பத்தியா நீ? அதுக்கேத்த அறிவு சரியாத்தான் இருக்கு! MITயில்தான் இந்த விதமான நுட்பம் மிக முன்னேறியிருக்கு!"

அழகி அகஸ்டாவின் அமோகப் பாராட்டைக் கேட்டுக் கிரணுக்குக் கிளுகிளுப்பானது. அகஸ்டாவைப் பார்த்துப் புன்னகைத்தான். ஷாலினி அகஸ்டாவுக்குத் தெரியாமல் அவள் பின்புறத்திலிருந்து கிரணைப் பழித்துக்காட்டவும், கிரண் மெதுவாக வேறுபுறம் திரும்பிக்கொண்டான்!

சூர்யா, "MITயில் அப்படி என்ன முழு அங்கப் பதிப்பில் முன்னேறியிருக்காங்க?" என்றார்.
அகஸ்டா தொடர்ந்தாள். "நீங்க MITக்கே போய்ப் பாத்தாதான் அதோட அருமை புரியும். இந்த MIT புலி கிரணை அப்புறம் அழைச்சுகிட்டுப் போய்க் காட்டச் சொல்லுங்க. இருந்தாலும் இப்ப நானே சொல்றேன். அங்க ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் கண்களின் வெளிமூடியான உருண்டையையும் பிம்பத்திரையான ரெட்டினாவையும் ஸ்டெம் உயிரணுக்களைக் கொண்டு உருவாக்கியிருக்காங்க. ஸ்டெம் உயிரணுக்கள் கொண்ட பசையை ஒரு பரப்பின்மேல் பதிச்சு, கண்ணுருண்டைத் திசு வளர்க்கும் தூண்டல் வேதியல் திரவங்களை அதன்மேல் வார்த்து, கொஞ்சநாள் வளர்த்திருக்காங்க. அந்த ஸ்டெம் உயிரணுக்கள் தாமே பின்னிப் பிணைந்துகொண்டு கொப்புளமாக உப்பி ஒரு உருண்டை வடிவமாக அமைந்துள்ளன. இதேமாதிரி அதன் உட்புறம் பிம்பத்திரை வளைவாக வளரவும் செஞ்சிருக்காங்க. அந்த அங்கப் பகுதியை எலிகளுக்குப் பொருத்தி வேலை செய்வதையும் நிரூபிச்சிருக்காங்க. அங்கப் பதிப்பில் மிக முன்னேறியுள்ளது கிரண் சொன்னபடி, அந்த MIT ஆராய்ச்சிக் குழுதான். ஆனாலும் அவங்ககூட இன்னும் முழு அங்கம் உருவாக்கலை."

கிரண் இடைபுகுந்தான். "சே, சரியான லாயக்கில்லாத மனுஷங்க இல்லை, அகஸ்டா? நானா இருந்தா ஒரு அங்கம் என்ன ஒரு மனுஷனையே உருவாக்கியிருப்பேன்!" என்று சவடால் அடித்தான்.

அவனுடைய வெத்துவேட்டை விளையாட்டாக எடுத்துக்கொண்ட அகஸ்டா கலகலவெனச் சிரித்து, "சரியான கோமாளி நீ கிரண். ஆனா புத்திசாலிக் கோமாளி" என்றாள்.

உச்சிகுளிர்ந்த கிரண், "அ... அ... அ... சர்க்கஸ்லயே மிகத் திறமையான சகலகலா வல்லவர்தான் கோமாளியா இருக்க முடியும் தெரியுமா? ஐயாவும் அப்படித்தான்னு வச்சுக்கங்களேன். இது எப்படி இருக்கு!" என்றான்.

அகஸ்டா, "அதுவும் சரிதான்" என்று கலக்கவும், கிரண் மீண்டும் கிளுகிளுத்தான். இருவருக்கும் இடையில் ஈர்ப்பு ஒன்று உருவாவதை இருவரும் உணர்ந்துகொண்டு முறுவலுடன் தலையாட்டிக் கொண்டனர். ஷாலினியும் வளரும் கவலையுடன் அதைக் கவனித்து, கிரணுடன் அதைப்பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

சூர்யா இந்த பக்கநாடகத்தால் சற்றும் கவனம் குலையாமல், "அப்படின்னா, உடம்பில் இருக்கும் எல்லா அங்கங்களையும் அந்தக் குழு காட்டியுள்ள வழியில் ஸ்டெம் உயிரணுக்களை வச்சு உருவாக்கிட முடியுமா?" என்று வினவினார்.

சூர்யாவின் கேள்வியால் நனவுலகுக்கு வந்த அகஸ்டா நாணத்துடன், "ஓ! நல்ல கேள்வி சூர்யா. மனித உடல் மட்டுமில்லை, மிருக உடலிலுள்ள எல்லா அங்கங்களையும்கூட இன்னும் பதிச்சு உருவாக்கவில்லை. மனித உடல்னு பாத்தா கல்லீரல் (liver) போன்ற ஓரளவுக்காவது ஒரு சில உயிரணு வகைகளும் பிணைப்புக்களுமே உள்ள அங்கங்களின் ஒரு பகுதியைத்தான் பதிச்சிருக்காங்க. எலிகளின் கண் பகுதிகள்பத்தி ஏற்கனவே பேசியாச்சு. இதயம், மூளை, நுரையீரல் போன்ற பற்பல நுணுக்கங்கள் கொண்ட அங்கங்களை இதுவரைக்கும் உருவாக்கமுடியவில்லை. இருந்தாலும்..."

கிரண் அகஸ்டாவிடம் அலட்டிக் கொள்வதற்காக இடையில் குதித்தான். "இருந்தாலும் என்ன, என்னுடைய MIT ஆளுங்க மூளை வேலை எதாவது செஞ்சிருப்பாங்க அதானே?"

கிரணின் அலட்டலை ரசித்த அகஸ்டா, வாய் மலர்ந்தாள். "ஓ நோ! கிரண், இந்த தடவை சிக்ஸர் அடிக்கப் போய், எட்ஜ் ஆகிப்போச்சே! இருந்தாலும் அதுலயும் ஓரளவுக்கு MIT தொடர்பு இருக்கு, அதுனால கேட்ச் மிஸ் ஆகி ஒரு சிங்கிள் அடிச்சதா வச்சுப்போம். என்ன ஆச்சர்யமா பாக்கறே? எனக்கெப்படி கிரிக்கெட் தெரியும்னா? அதான் சூர்யா பிரமாதமா யூகிச்சாரே, எங்கப்பா ஜமெய்க்கா ஆளு, நானும் அங்கதான் பொறந்து சின்னவயசுல அங்கிருந்தேன்னு, அதான். எங்கப்பா சதாசர்வ காலமும் டிவில கிரிக்கெட் பாத்துக்கிட்டே இருப்பாரு அதுலதான் பழக்கம். அதான் நீ சொன்னது கொஞ்சம் சரின்னு உவமை எடுத்துவிட்டேன்."

கிரண் மார்பை நிமிர்த்தி தட்டிக்கொண்டு வலது கையை வளைத்து புஜபலம் காட்டி, "ஹா! பாருங்க மிஸ் ஆனாலும் முழுசா ஆகலை. இதுல பாருங்க நமக்குள்ள ஒரு பொருத்தம். எங்கப்பாவும் கிரிக்கெட் பாத்துத் தள்ளுவார். எப்பவாவது அவரோட சேர்ந்து கிரிக்கெட்டை கேலி பண்ணலாம்" என்றான்.

ஷாலினி லேசான எள்ளலுடன் நகைத்தாள். "ஆஹா! எங்கம்மா சொல்லுவா என்னமோ, கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு. அந்தக் கதையா இருக்கே இது. இவன் கிடக்கிறான், நீங்க மேல சொல்லுங்க அகஸ்டா!"

கிரண் ஷாலினியை முறைக்க, ஷாலினி மேலும் நகைக்க, அகஸ்டா மீண்டும் இனிய கிண்கிணி நகைப்புடன் தொடர்ந்தாள்!

"MIT ஆராய்ச்சிக் குழுவினர் மூளை பதிப்பு தாங்களே செய்யலனாலும், அவங்க நுட்ப அறிக்கையில் (MIT tech report), ஐரோப்பாவில் ஆஸ்ட்ரியாவிலுள்ள வியன்னா நகரத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் மூளைத்திசுவிலும் ஓரளவு முன்னேற்றம் காட்டியிருப்பதைப்பத்தி ஒரு விவரம் பதிப்பிச்சிருக்காங்க. இதற்கு முன்னாலேயே, மூளை உயிரணுக்களான நியூரான்களை இருபரிமாணத்துல பீட்ரி குழித்தட்டுக்களில் பலர் வளர்த்திருக்காங்க. ஆனா, இந்த வியன்னா குழுவினர் முப்பரிமாணத்துல நியூரான்கள் வளர்ந்து வடிவமைத்துக்கொள்ளும் என்று நிரூபிச்சிருக்காங்க. அதுக்குத் தேவையானத முப்பரிமாண அடித்தளமா ஒரு அமைப்பை வச்சு, அதுமேல நியூரான்களா வளரக்கூடிய மூல உயிரணுக்களைப் (stem cells) பதிச்சு பரப்பி, வளர்க்கத் தூண்டியிருக்காங்க. அவை முப்பரிமாண நியூரான் வலையா வளர்ந்து, கருவில் ஆரம்ப காலத்துல ஒன்பது வாரத்துல மூளையின் பாகங்கள் எப்படியிருக்குமோ, அப்படி வளர்ந்திருக்கு..."

ஷாலினி மீண்டும் களுக்கென நகைத்தாள்! இம்முறை அகஸ்டா அவளைப் பார்த்து முறைத்து, "நான் சொன்னதுல என்ன சிரிப்பு வரா மாதிரி இருந்தது?"

என்றாள். ஷாலினி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு கையை உயர்த்தி சமாதானக்கொடி காட்டினாள். "ஸோ வெரி ஸாரி அகஸ்டா! நீங்க சொன்னதுல சிரிக்கறா மாதிரி எதுவும் இல்லை. இருந்தாலும் என் மனக்குரங்கு வேறு ஒரு விஷயத்தைக் கற்பனை செஞ்சு பார்த்து சிரிக்க வச்சுடுச்சு!" என்றவள் கிரணைத் திரும்பிப் பார்த்துவிட்டு அடக்க முடியாமல் மீண்டும் சிரித்தாள்.

அகஸ்டா குழப்பத்தோடு முகத்தில் வினாக்குறி எழுப்ப, கிரண் ஷாலினியை சந்தேகத்தோடு பார்க்க, ஷாலினி சிரிப்பை அடக்கமுடியாமல், பேசத் திணற, சூர்யாவே முறுவலுடன் அகஸ்டாவுக்கு விளக்கினார். "இவங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான் அகஸ்டா! ஒருத்தருக்கு ஒருத்தரை விளையாட்டா வாரி விடுவாங்க. சிம்ப்ளி டீசிங்! அவ்வளவுதான். நீங்க அந்த முப்பரிமாண நியூரான் பதிப்பு ஒன்பது வார மூளையா வளர்ந்ததுன்னு சொன்னீங்க இல்லயா? அதுக்குத்தான் கிரணுக்கும் மூளைவளர்ச்சி கம்மி, சின்ன பிள்ளையா விளையாடிக்கிட்டிருக்கான், அவன் மூளையையும் வியன்னாக் குழுவினர் பதிச்சதா இருக்குமோன்னு ஷாலினி நினைச்சா போலிருக்கு, அதான் அடக்க முடியாம சிரிக்கறா! என்ன ஷால், சரிதானே?"

ஷாலினி தொடர்ந்து சிரித்துக்கொண்டே, வியப்புடன் தலையாட்டி, சுட்டுவிரலால் மூக்கைத் தொட்டுக்காட்டி, சூர்யா கனகச்சிதமாக யூகித்துவிட்டதாக இட்டுக்காட்டினாள்! (அத்தோடு, சூர்யா தன்னை ஷால் எனச் செல்லப் பெயரிட்டு அழைத்ததில் சந்தோஷம் வேறு!)

ஷாலினியின் சைகையைக் கண்டு அவள் சிரிப்பின் காரணத்தைப் புரிந்துகொண்ட அகஸ்டாவும் சிரிக்கவே, கிரணின் முகம் தக்காளிப் பழம்போல் சிவந்தது. அதைக்கண்ட ஷாலினி, "ஸாரி கிரண். நான் சொல்ல நினைக்கவேயில்லை. சூர்யாதான் போட்டு உடைச்சுட்டார், ஸாரி, ப்ளீஸ்!" என்றதும் அகஸ்டாவும், "ஆமாம் கிரண் ஸாரி, நானும் சிரிச்சுட்டேன். கோவிச்சுக்காதே" என்று மன்றாடவும், கிரண் குளிர்ந்துபோய், எதையும் கண்டுகொள்ளாதது போல், "ஆங்! இதுல எனக்கென்ன கோவம்! ஐயாவுக்கு, இதெல்லாம் வெறும் கொசுக்கடி! ஸ்னெயில் மூளை ஷாலினி எதாவது நினைச்சா இந்த ஜீனியஸ் எதுக்கு கஷ்டப்படணும்? நோ ப்ராப்ளம், சீக்கிரமே எப்பவாவது ஐ வில் கெட் ஹர் பேக், அவளுக்கும் அது தெரியும்" என்று சுட்டுவிரலை ஷாலினி பக்கம் முறுவலுடன் ஆட்டினான்.

"சரி, சரி, திரும்ப விஷயத்துக்கு வருவோமா?" என சூர்யா மீண்டும் கூறவும், அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப் பற்றி மேற்கொண்டு விவரித்தது, நம் துப்பறியும் மூவருக்கும் சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது. குட்டன்பயோர்கின் பிரச்சனை என்ன, முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கல்களை சூர்யா எவ்வாறு அவிழ்த்தார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline