Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2015|
Share:
முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க் என்னும் பெண்மணியிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்த புகைப்படங்களையும் அலங்கரிப்புகளையும் வைத்தே யூகித்ததாகச் சூர்யா விளக்கினார். அதனால் வியப்புற்று சூர்யாவின்மேல் பெரும் நம்பிக்கையுடன் அகஸ்டா க்ளார்க் தன் ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிக் காட்டினாள். உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்று விளக்க ஆரம்பித்தாள். திசுப்பதிப்புக்கு முன் அதற்கு அடிப்படையான பொதுவாக உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் நுட்பங்களை விவரித்துவிட்டு திசுப்பதிப்பு (bio-tissue printing) நுட்பங்களை விவரித்தாள். மின்வில்லைகள் மேலேயே திசுக்களைப்பதித்து, மிருகங்களுக்குப் பதிலாக பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என்று கூறிய பிறகு ...

*****


திசுப் பதித்த மின்வில்லைகளைப் பரிசோதனைக்குப் பயன்படுத்தினால், மருந்து கண்டுபிடிக்கவும், ஒப்பனைப் பொருட்களை சோதிக்கவும் மிருகங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று அகஸ்டா கூறியதைக் கேட்டு ஷாலினி மனம்நெகிழ, மேலும் ஸ்டெம் உயிரணுக்களைப் பதித்து ஒவ்வொரு மனிதருக்கும் தேவையானபடி தனித்துவமான சோதனைகளைச் செய்யமுடியுமா என்று சூர்யா கேட்கவும், அவரது கூர்மையான அறிவைப் பாராட்டினாள் அகஸ்டா. அடுத்து எதைப்பற்றிக் கூறலாம் என்ற யோசனையோடு மூவரையும் ஒருகணம் மௌனமாகப் பார்த்தாள்.

முதலில் சூர்யாவே மௌனத்தைக் கலைத்தார். "திசுப்பதிப்புக்கு பல பயன்கள் இருக்குன்னு சொன்னீங்களே. உடலுறுப்புகளைக் கூட முப்பரிமாணத் திசுப் பதிப்புமூலம் தயாரிக்கலாம்னு முதல்ல சொன்னீங்க. அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்."

அகஸ்டா மிக மகிழ்ச்சியுடன், "ஆஹா, சரியாக் கேட்டீங்க சூர்யா! அதுதான் குட்டன்பயோர்கின் முக்கியக் குறிக்கோள். அதைப்பத்தி சொல்றத்துக்கு எனக்கு மிக ஆனந்தம். சொல்றேன். முதல்ல உடலுறுப்புப் பதிப்பின் அஸ்திவாரமாக இப்போது மத்தவங்க என்ன செய்யறாங்கன்னு விவரிக்கறேன். அப்புறம் குட்டன்பயோர்கின் நுட்பத்தைப் பாக்கலாம், என்ன!"

சரியென்று சூர்யா சைகையாலேயே ஊக்குவிக்கவும், அகஸ்டா தொடர்ந்தாள். "திசுப்பதிப்புக்கு முன்னாலேயே, உடலுறுப்புக்களை, ப்ளாஸ்டிக்கிலும், டைட்டேனியம் போன்ற மிக பளுவில்லாத ஆனால் மிக உறுதியான உலோகங்களைக் கொண்டும் முப்பரிமாண முறையில் பதித்து, உருவாக்கி மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்..."

ஷாலினி ஆமோதித்தாள். "ஆமாம். எங்க மருத்துவமனையில் கூட இப்ப பல உடலுறுப்புகளை பயானிக் முறையில் இயங்கும்படியும், இல்லன்னா வெறுமனே எலும்புப் பாகங்களுக்கு மாற்றாகவும் பொருத்தறோம். அது முப்பரிமாணப் பதிப்புலயும் உருவாகுதுங்கறது எனக்குத் தெரியாது!"

அகஸ்டா முறுவலுடன் தொடர்ந்தாள். "ஆமாம் ஷாலினி, இப்ப நிறைய உறுப்புப் பகுதிகளை முப்பரிமாணமாப் பதிக்கறாங்க. கை, கால் எலும்புகள், தோள்பிணைப்புகள், குதிகால் வில்லை, மற்றும் கால்முட்டி வில்லை போன்ற பல பாகங்களைப் பதிப்பிக்கிறாங்க. செயற்கைஉறுப்புகள் பார்க்க இயற்கையா இருக்கறமாதிரி தோல்போன்ற மூடலையும் பதிப்பிச்சு பயன்படுத்தறாங்க. ஆனா அதெல்லாம் செயற்கைப் பொருட்கள்தான். திசுக்கள் அல்ல."

கிரண் ஓரளவு ஏமாற்றத்துடன் கேட்டான். "இப்ப வர்ற உறுப்புகள் முப்பரிமாணத் திசுப்பதிப்பு முறையில பதிக்கப்படலையா? உயிரற்ற மூலப்பொருள் வச்சு பதிக்கறதுதானா? செயற்கை இதயத்தைப்பத்திப் பல வருஷம் முன்னாடியே கேட்டிருக்கோமே? இப்ப புதுசுன்னா முப்பரிமாணப் பதிப்புல செய்யறதுதானா?"

அகஸ்டா வீசிய புன்னகையில் கிரண் உச்சி குளிர்ந்தாள். அகஸ்டா தொடர்ந்தாள். "கிரண், நீங்க கேக்கறது ஒருவகையில் உண்மைதான். முழு நடைமுறையில் இப்போது பொருத்தப்படற முப்பரிமாணப் பதிப்புல செஞ்ச உடலுறுப்புக்கள் எல்லாமே ப்ளாஸ்டிக் மற்றும் உலோகத்துல ஆனதுதான். ஆனா, ஆராய்ச்சி முறையில் திசுக்கள் பதிக்கப்பட்ட உறுப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கு."

ஷாலினி தலையாட்டினாள். "செயற்கையாக உருவாக்கப்பட்ட திசுக்கள்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அது முப்பரிமாணப் பதிப்புனால தயாரானதுன்னும், முழு உறுப்புக்கள் அளவுக்கு வளர்ந்திருக்குன்னும் இன்னும் கேள்விப்படலை. இது என் ஆராய்ச்சித்துறைக்கு ரொம்ப சம்பந்தப்படாததுனால நான் போற கருத்தரங்குகளிலகூட முப்பரிமாணத் திசுக்களைப்பத்தி நான் கேள்விப் படவேயில்லை. ஆராய்ச்சி விவரங்களைச் சொல்லுங்க அகஸ்டா."

சூர்யாவும் ஆர்வத்துடன் தலையாட்டினார். அகஸ்டா தொடர்ந்து விளக்கினாள். "ஆராய்ச்சி பூர்வமாக்கூட இன்னும் ஆரம்ப நிலையில்தான் உறுப்புப் பதிப்பு இருக்குன்னு சொல்லலாம். MIT போன்ற இடங்களில்தான் மிக முன்னேற்றமான வேலை நடந்துகிட்டிருக்கு. நிறுவனங்கள்னு சொல்லப்போனா, எதோ ஒண்ணோ ரெண்டோதான் மிக முன்னேறிய முப்பரிமாண திசுப்பதிப்பு முறையில உறுப்புகள் தயாரிக்கற ஆராய்ச்சி செய்றாங்க."

கிரண் தாவிக் குதித்தான். "ஆஹா! MIT-யா? பிரமாதமான இடமாச்சே? என்ன செய்றாங்க அவங்க?!"

அகஸ்டா முறுவலித்தாள். "அப்பா, MIT-ன்னா என்ன உற்சாகம் உங்களுக்கு. இருக்க வேண்டியதுதான்! அவங்க செய்யறதைப்பத்தி கொஞ்ச நேரத்துக்கப்புறம் சொல்றேன். முதல்ல உறுப்புக்களைப் பதிக்கறத்துக்கு வேண்டிய அடிப்படை விஷயங்களைப் பத்திச் சொல்ல வேண்டியதிருக்கு..."

ஷாலினி குறுக்கிட்டாள். "ஆமாம் அகஸ்டா. உறுப்புக்கள்னா அது சிக்கல்மிக்க விவகாரமாச்சே. அதுக்குப் பல விஷயங்கள் பொருந்தி வரணுமே?! உயிரணுக்கள் பதிக்கப்பட்டா போதாது, அவை உயிரோட தொடர்ந்து வேலை செய்யணும்; உடல் நிராகரிக்காம இருக்கணும்; எதாவது சரியா வேலை செய்யலன்னா நிவர்த்திக்கணும் இப்படிப் பல கஷ்டமான நுட்பங்களை ஒருங்கிணைக்கணுமே?"

"ரொம்ப சரி ஷாலினி! முப்பரிமாணத் திசுப்பதிப்பு மூலமா உடலுறுப்புக்களைத் தயாரிச்சு பயன்படுத்துறதுல என்னவெல்லாம் சிக்கல் இருக்குன்னு கச்சிதமா சொல்லிட்டீங்க. அதையெல்லாம், ஒவ்வொண்ணா ஆராய்ச்சி மூலமா நிவர்த்திக்கறதைதான் அடிப்படை நுட்பங்கள்னு சொன்னேன்," என்று ஆமோதித்தாள் அகஸ்டா.

"சரி, முதல்ல அந்த நுட்பங்கள் எப்படி ஆராய்ச்சிமூலமா முன்னேறியிருக்கு, மேற்கொண்டு விவரியுங்களேன் அகஸ்டா?" என்றார் சூர்யா.

அகஸ்டா தொடர்ந்தாள். "ஒரேவித உயிரணுக்கள் அடங்கிய ஒரு மெல்லிய சவ்வின் ஆழப்பரிமாணத்தில் ஒரு திசுப்படலை எளிதாகத் தயாரித்து விடலாம். ஆனால் ஓர் உடல் அங்கம் முப்பரிமாணமுள்ளது. மேலும் அதில் பலதரப்பட்ட உயிரணுக்கள் பிணைக்கப்பட்டு, உதிர்ந்துவிடாமல் பதிக்கப்பட வேண்டும்..."
"ஆனால், உயிரணுக்கள் பதிக்கப்பட்ட பிறகு ஒன்று இரண்டாகப் பிரிந்து வளரலாம் அல்லவா? மேலும் ஸ்டெம் உயிரணுக்கள் பலதரப்பட்ட வேறு உயிரணுக்களாகக்கூட மாறி வளரலாமே?" குறுக்கிட்டார் சூர்யா.

"ரைட் யூ ஆர் சூர்யா!" பாராட்டிய அகஸ்டா தொடர்ந்தாள். சாதாரண மூலப்பொருட்களைப் பதிக்கறத்துக்கும், உயிரணுக்களை வச்சு திசுக்களையும் அங்கங்களைப் பதிக்கறத்துக்கும் மிக முக்கியமான வித்தியாசம் நீங்க சொன்னதுதான். சாதாரண, உயிர்ச்சக்தியற்ற பொருட்கள், பதிக்கப்பட்ட பிறகு வளர்வதில்லை, உருமாறுவதில்லை. ஆனால் முப்பரிமாண அங்கப்பதிப்பில், பதித்தபின் வளர்வதும், உயிரணுக்கள் மாறுவதும் மிகமிக அத்தியாவசியமான அம்சங்களாகும்..."

அகஸ்டா தொடருமுன் ஷாலினி குறுக்கிட்டாள். "ஆனால் அகஸ்டா, உயிரணுக்கள் பிரிந்து பெருகவும், வளர்ந்து உருமாறவும், அவற்றுக்குத் தேவையான மூலசக்தி எவ்வாறு அளிக்கப்படும்? அவை இயங்குகையில் தோன்றும் கரியமிலவாயு போன்ற கழிவுப்பொருட்கள் எப்படி அகற்றப்படும்? உயிருள்ள விலங்கானால், இரத்த ஓட்டத்தின் மூலம் இதைச் செய்யலாம். ஆனால் முப்பரிமாணப் பதிப்பு முறையில் உருவாகும் அங்கத்துக்கு இது எப்படிச் சாத்தியம்!"

அகஸ்டா கை தட்டினாள். "பிரமாதம் ஷாலினி. முப்பரிமாண அங்கப் பதிப்பின் தற்போதைய முன்னேற்றத்தில் உள்ள வெளியெல்லையை (boundary limitation) கச்சிதமா எடுத்துக் காட்டிட்டீங்க! சொல்றேன். இதுபோன்ற கடினமான விவரங்களில்தான் குட்டன்பயோர்கின் நுட்பம் சமகால வெளி ஆராய்ச்சியைவிட ரொம்ப முன்னேறியிருக்கு! முதல்ல மத்தவங்க எந்த அளவுக்கு வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு அப்புறம் எங்க ரகசிய தனித்துவ நுட்பத்தை விவரிக்கறேன்" என்றாள்.

கிரண் கேட்டான், "அகஸ்டா, அந்த ரொம்ப உயர்நுட்பம் கிடக்கட்டும். முதல்ல எப்படி ஒரு அங்கத்துக்கான திசுவில் இருக்கக்கூடிய பலவிதமான உயிரணுக்களையும் ஒவ்வொண்ணும் சரியான இடத்தில் இருக்கறாமாதிரி முப்பரிமாண முறையில் பதிக்கறாங்க. அந்த அடிப்படை விஷயத்தை முதல்ல சொல்லுங்க!"

ஆமோதித்த அகஸ்டா தொடர்ந்தாள் "உண்மைதான். அதுதான் அடிப்படை நுட்பம். ஆனா, அது கொஞ்சம் நன்றாக தற்போது அறிந்துணரப் பட்ட வழிமுறைன்னேகூட சொல்லிடலாம். நாம ஏற்கனவே பரிசோதனைக்காக ஒரு பரப்பின்மேல் பலப்பல இடங்களில் உயிரணுக்களைப் பதிக்கறதாப் பார்த்தோம் இல்லயா? அதையே அடிப்படையா வச்சுத்தான் ஓர் அங்கத்தின் ஒரு ஸ்லைஸான பரப்பிலுள்ள வெவ்வேறு உயிரணுக்களையும் பதிக்கறாங்க."

சூர்யா இடைபுகுந்தார். "ஓ, புரியுது! பலதரப்பட்ட உயிரணுக்கள் வளர்த்து வச்ச தனித்தனிக் குப்பிகளிலிருந்து தனித்தனிக் கூர்முனைகள் மூலமா சரியான அளவுக்கு அந்தப் பரப்பில் எங்கெங்கே பதிக்கணுமோ அங்க சில அணுகணக்குல இட்டுப் பதிக்கறாங்க போலிருக்கு... கிரண் இது பேப்பர் கலர் பதிப்பு மற்றும் பலபொருள் கலந்த முப்பரிமாண பதிப்பு மாதிரிதான் இருக்கு இல்லயா? என்னோட பழந்தொழில் மின்வில்லை உற்பத்தியிலகூட சில வழிமுறைகள் இந்தமாதிரி இருக்கும். அதுனால, அகஸ்டா சொன்ன மாதிரி, நல்லாத் தெரிஞ்ச நுட்பமாத்தான் இருக்கு. அப்படின்னா, இதுக்கும் மேல நுணுக்கமான விஷயங்கள் என்னன்னு சொல்லுங்க அகஸ்டா."

அகஸ்டா மீண்டும் பலமாகத் கை தட்டினாள். "நான் ஒண்ணும் சொல்லவே வேண்டியதில்லை போலிருக்கே! நீங்க மூணுபேருமே மாத்தி மாத்தி, நான் சொல்லவந்ததை சொல்லிடறீங்க. சரி, அதுக்கடுத்த, கொஞ்சம் கடினமான விஷயத்துக்கு வருவோம்."

அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப் பற்றி மேற்கொண்டு விவரித்தது, மூவருக்கும் சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது. குட்டன்பயோர்கின் சிறப்பு நுட்பங்கள், அதில் எழுந்த பிரச்சனைகள் ஆகியவற்றையும், முப்பரிமாண மெய்ப்பதிவு முடிச்சின் சிக்கலை சூர்யா எவ்வாறு அவிழ்த்தார் என்பதையும் வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline