Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சிரிப்பின் எதிரொலி
- தேனி சீருடையான்|ஏப்ரல் 2015|
Share:
பஸ்ஸரை அழுத்தியபோது வீட்டுக்குள் அழைப்புமணி 'டிங் டாங்' என ஒலித்தது. ஒரு நிமிட இடைவெளியில் கதவு ஒருசாச்சு திறந்தது. வியர்வைத் துளிகள் முத்திட்டு நின்ற முகத்தோடு பெண் ஒருத்தி பிரசன்னம் ஆனாள். "வாங்க" என்று அவள் வாய் அனிச்சையாய் முனங்கியது. தான் தேடி வந்தவருடைய மனைவியாய் இருக்கக்கூடும் எனக் கருப்பசாமி கணித்தார். உள் கதவுக்கும், வெளிவாசலுக்கும் இடையில் இருந்த இரும்புக் கிராதி நவ்தால் பூட்டு கொண்டு பூட்டப்பட்டிருந்தது.

"நீங்க?" என்று இழுத்தாள் பெண்.

"நான் கருப்பசாமி; மலையூர்ல இருந்து வாரேன். அண்ணாச்சி இல்லீங்களா?"

"அவரு வெளியூரு போயிருக்காரு. வர நாலு நாள் ஆகும்".

குபீரென நெஞ்சு வலித்தது "யாவார விஷயமாவா?" பதட்டத்தோடு கேட்டார்.

"ஆமா; கொள்முதலுக்குப் போயிருக்காரு".

கதவு எடசந்தில் முகத்தைமட்டும் படிய வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே கூப்பிடலாமா? வேண்டாமா? என்று திண்டாடியது முகம்.

"என்ன சங்கதி?" தயக்கத்துடன் கேட்டாள்.

"எம்மகள காலேஸுல சேக்க வந்திருக்யேன். அவருட்ட ஒரு ஒதவி கேக்கணும்".

"உள்ள வந்து ஒக்காருங்க; பையன் வந்ததும் போன்ல பேசுங்க"

உட்காரச் சொன்னவள் கம்பி கேட்டைத் திறக்கவில்லை. உப்புக்குச் சப்பாணியாய்ப் பேசுகிறாளோ என்று தோன்றியது. மனிதர்கள் மீதான அவநம்பிக்கையாய் இருக்கக்கூடும். யார் வேஷத்தில் யார் வருவார் என்று காண முடியாது. அல்லது கணவரின் ஆணையாய் இருக்கவும் வாய்ப்புண்டு! கருப்பசாமி அல்லாடினார்.

"போன் நம்பரு இருந்தாக் குடுங்களேன்" என்றபோது "தெரியாதுங்க" என்றாள். "பையனுக்குத்தான் தெரியும், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்".

'உள்ள வாங்க' என்று அவள் உச்சரிப்பாளா என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார்.

"நான் போய்ட்டு வாரேன்" என்றபடி படிக்கட்டில் பைய இறங்கினார். தலை கிறுகிறுவெனச் சுற்றியது. தாடைக்குக் கீழ் கழுத்தில் வியர்வை சொட்டியது. கீழ்ப்படியில் அரை நிமிடம் உட்கார்ந்து எழுந்து அண்ணாந்து பார்த்தார். வீட்டின் முகப்பு பிரம்மாண்டமாய் இருந்தது. தன் பெயரைக்கூட அவள் கேட்கவில்லை. சலிப்புடன் கூடிய ஏமாற்றம் கண்களை இறுக்கியது.

தன் மனைவியாய் இருந்தால் இப்படி செய்திருக்கமாட்டாள். இரும்பு கேட் தடுக்காத விசால வீடு! முகம் மலர்ந்து வரவேற்று, பாய் விரித்து உட்கார வைத்து நீரோ, மோரோ தந்து உபசரித்திருப்பாள். தன் நம்பரைத் தந்து போனில் பேசச் சொல்லுவாள். பாவம் அந்தப் பெரிய வீட்டுக்காரி!

படியின் கீழ் இடப்பட்டிருந்த கோலம் அழிந்தும் அழியாமல் இருந்தது. இருமருங்கும் போகன் வில்லாச் செடிகளும், ஜன்னலை மறைத்துக்கொண்டு வேம்பும் வளர்ந்திருந்தன. வேம்பு ஒரு நல்ல மரம்! காற்று அதன் இலை தடவி நாசியில் ஏறும்போது நெஞ்சு இளக்கம் பெறும். ஆனாலும் தேனீ கூடு கட்டாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

வீதியில் இறங்கி, கட்டிடங்களின் நிழல்வழியே பைய நடந்தார். நெஞ்சில் வலிபொங்கியது. ஒரே மகளின் ஆசை, கனவாகிவிடுமோ என அச்சமாய் இருந்தது. தன் வம்சத்தின் ஒரே படிப்பாளி மகள் பூங்கொடி! பன்னண்டாப்பு முடித்துவிட்டாள். பெரும் அறிவாளி என்று சொல்ல முடியாவிட்டாலும், எந்த வகுப்பிலும் பெயில் ஆகவில்லை. கணக்கு, ஆங்கிலம் பாடங்களை மேம்படுத்த டியூசனுக்கு அனுப்பினார். விளிம்பு நிலையில் தேறினாள்.

"இனி என்னா படிக்யப் போற?" என்று கேட்டபோது "எஞ்சினியரிங்" என்றாள் பூங்கொடி.

அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷம்! தன் குடும்பத்திலும் ஒரு எஞ்சினியரா? "சரி மகளே" என அட்டியின்றி ஏற்றுக்கொண்டார்.

அவளின் வகுப்புத்தோழிகள் எல்லாம் நேர்காணலுக்குச் சென்று நல்ல நல்ல கல்லூரிகளில் இடம்தேடிக் கொண்டனர். பூங்கொடிக்கு அது லபிக்கவில்லை. எந்தக் கல்லூரியாய் இருந்தாலும் பரவாயில்லை. சேர்ந்துவிட வேண்டியதுதான். மண்ணோடு உறவாடி மக்கிப்போகாமல், கல்வியோடு கலந்து உயர்வடைய வேண்டும்; அதன்மூலம் அரசு உத்தியோகத்துக்குப் போகவேண்டும்.
கருப்பசாமியும், அவர் மனைவியும், மகளின் பேச்சை ஆமோதித்தனர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் கை அசைத்து ஆணையிட்டு பணியாளர்களை ஆட்டிப்படைப்பது மனக்கண்ணில் தோன்றியது. தங்கள் மகளும் அந்த அளவு அந்தஸ்துப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

தூரத்து நகரம் ஒன்றின் கல்லூரி நல்ல படிப்பாளிகளால் நடத்தப்படுகிறது எனக் கேள்விப்பட்டு விண்ணப்பித்தாள் பூங்கொடி. மறுவாரமே கல்லூரிக்கு வரச்சொல்லி பதில் வந்தது. கடிதத்தோடு முதல் ஆண்டு சேர்க்கைக்கான கட்டணப் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. நுழைவுக்கட்டணம், புத்தகத்துக்கான செலவு தொகை, தேர்வுக் கட்டணம், டியூஷன் பீஸ், விடுதி வாடகை என்று ஒரு இலட்சத்தைத் தொட்டு நின்றது. விறுமுத்தி அடித்துப்போனார் கருப்பசாமி. இவ்வளவு பெரிய தொகையை எங்கே போய்க் புரட்டுவது? யாரிடம் போய் கேட்பது? பெரிய அளவில் கடன் வாங்கிப் பழக்கம் இல்லை.

மனக்குழப்பத்தில் அல்லாடிக் கொண்டிருந்தபோது ஊர் நாட்டமை ஞாபகத்துக்கு வந்தார். அவர் கொஞ்சம் வசதியானவர். முல்லைக்கால் பாசன வெளியில் இருபது குழி நஞ்சையும், பக்கத்து நகரில் பஞ்சாலை ஒன்றும் சொந்தமாய் இருந்தன.

அவரை உதவிக்கு நாடியபோது "புஞ்சய வித்துப் படிக்ய வையி" என்று ஆலோசனை கூறினார். பகீரென்றது மனசு. "இல்லீங்கய்யா" என்றார் தழுதழுத்த குரலில். "வகுத்துப்பாட்டுக்கு அந்தக் கையகல நெலந்தான் இருக்கு. அத வித்துட்டா என் வம்சத்துக்கே பிடிகொம்பு இல்லாமப் போயிரும்".

"அப்படின்னா படிப்ப நிப்பாட்டு".

"வேணாமுய்யா! ஒத்த மக! ஆசப்பட்டிருச்சு; ஏதாச்சும் பெரட்டி விட்டிங்கன்னா கருத்தக் கானமும், எள்ளும் வெதச்சுக் கடனக் கட்டிப்புடுவேன். "

"உழபட பண்ணிக் கடனடக்யவா? நடக்குறதப் பேசு கருப்பசாமி!"

"அப்படிச் சொல்லாதீங்கய்யா! வாயக் கட்டி வகுத்தக் கட்டிக் கடனடச்சுடுவேன்; என்னய நம்புங்க!"

கருப்பசாமி அப்புராணிப் பயல்! வம்படிக்காரன் இல்லை என்பது தைரியம் தந்தது. அதை வெளிக்காட்டாமல் "வட்டியே மேஞ்சுருமேப்பா" என்றார்.

மனைவி வாங்கும் கூலியை வட்டிக்கு என்று ஒதுக்கி வைக்கப் போவதாகவும், தானும் கூடமாட வேலைக்குப் போய், அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி கடன் அடைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.

நாட்டாமைக்குத் திருப்தியாய் இருந்தது. புஞ்சை வெளியைக் கிரயப் பத்திரம் முடித்துக் கொண்டு ஒரு லட்சம் ரூபாய் தந்தார். மூவாயிரம் வட்டி!

பிறவிப்பயன் அடைந்துவிட்டதாகச் சந்தோஷம் உண்டானது. மகள் உயர உயர ஏறி வானத்தைச் சுற்றி வந்தாள். அவள் காலடியில் பெரிய பெரிய அதிகாரிகளும், பெரும் பெரும் முதலாளிகளும், பண்ணையார்களும் மண்டியிட்டனர். அவள் சுண்டுவிரல் அசைவில் அனைவரும் கிடுகிடுவெனச் செயல்பட்டனர்.

கருப்பசாமி தன் மனைவி, மகளோடு ஒரு நாள் முன்னதாகவே கல்லூரி நகருக்குப் புறப்பட்டார். கோயில் குளம் சென்று தீர்த்தம் ஆடி, ஆண்டவனிடம் ஆசி வாங்கிவிட்டுப் பிறகு கல்லூரிக்குப் போக வேண்டும். மனித சக்தியால் ஆகாததை கடவுள் சக்தி சாதிக்கும் என்று நம்பிக்கை.

முதலில் திருமூர்த்தி மலைக்குச் சென்றார்கள். பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இயற்கை வழிப்பாதையில் நடந்து காடுமேடு கடந்து நீர்வீழ்ச்சியை அடைந்தார்கள். குற்றாலம்போல பிரவாகம் கொட்டியது. ஜிலுஜிலுவென வீசிய காற்றில் உடம்பு சிலிர்த்தது. குரங்குகள் மளார் மளார் எனத் தவ்வி விளையாடின. மரத்தில் தாவி கிளைகளில் ஊஞ்சலாடின. யாத்ரீகர்கள் தந்த பழங்களை வாங்கித் தோலுரித்துத் தின்றன. சில குரங்குகள் கீழே வைக்கப்பட்டிருந்த பைகளைத் தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தன. குரங்குச் சேட்டைகளைக் கண்டு சின்னஞ்சிறுசுகள் குதியாளம் போட்டு ரசித்தன.

மனைவியோ, கன்னத்தில் போட்டுக் கொண்டாள். "ஆஞ்சநேயா!" என்று கையெடுத்துக் கும்பிட்டாள். "மக, நல்லாப் படிச்சு ராஜாங்க உத்தியோகம் பாக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணு ஆஞ்சநேயா!"

சடசடவென இறங்கிய நீர்வீழ்ச்சியில் தலைகொடுத்தபோது ஜிவ்வென வலித்தது. கல்லெறிபடுவது போல இருந்தது. அந்த வலியின் அஸ்திவாரத்தில் சந்தோஷ விருட்சம் முளைத்துத் தழைத்தது.

நீராடி புத்தாடை புனைந்து, கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு, விபூதித் தட்டில் கஞ்சத்தனம் இல்லாமல் ஐம்பது ரூபாய் போட்டபோது, கருப்பசாமிக்கு திருப்தி உண்டானது. பூசாரி, பூங்கொடியின் நெற்றியில் திருநீறு தீற்றி, பூவும், பழமும் பிரசாதமாய்த் தந்தார். பகவான் நிச்சயம் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உண்டானது.

ஆலியார் நீர்த்தேக்கம், மீன்பண்ணை எல்லாம் பார்த்து முடித்து மாலையில் கல்லூரி நகருக்குச் சென்று, விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள். இரவில் தூக்கம் பிடிக்கவில்லை. விடியலை எதிர்பார்த்துப் புரண்டு கொண்டிருந்தனர்.

பொற்கதிர்களை அள்ளி வீசியபடி சூரியன் கண்விழித்தான். 'ஏன் தாமதம்? சீக்கிரம் புறப்படுங்கள்' என ஆணையிடுவதாய் நினைத்துக் கொண்டார் கருப்பசாமி. பத்து மணிக்குப் போனால் போதும் என்றாலும் எட்டு மணிக்கே கல்லூரிக்குள் நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டனர்.

கல்லூரி ரம்மியமாய் இருந்தது. முக்கோணக் கற்கள் அணையிட்ட எல்லைக்குள் பசும்புல் பசுமை விரித்திருந்தது. பூத்துக் குலுங்கிய செடிகளும், பூக்காத தாவரங்களும் சீரான இடைவெளியில் வளர்ந்திருந்தன. ஆங்காங்கே கொப்பு விரித்து இலை அடர்ந்த நிழல் மரங்கள்! "நூறு குழிக்கி மேல இருக்கும்போல" என்ற மனைவியின் ஆச்சர்யத்தை ஆமோதித்தார்.

வரவேற்பறை ஜிலுஜிலுவென சில்லிட்டது. பளிங்குக் கல் பாவிய தரையும், வெண்சிவப்பு நிற விதானமும் கண்டறியாக் காட்சிகள்! ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்காலிகள் செய்நேர்த்தியுடன் வரிசையிடப்பட்டிருந்தன.

ஒரே சீருடையுடன் கூடிய பணியாளர்கள் உள்ளே நுழைந்தபோது ஆனந்தக் கூத்தாடியது மனம்; எல்லார் கழுத்திலும் அடையாள அட்டை தொங்கியது. அவர்கள்தான் பூங்கொடியைப் பொறியாளர் ஆக்கப்போகும் பிரம்மாக்கள்.

கல்லூரியில் சேரப்போகும் மாணவிகள் ஒவ்வொருவராய் வந்து அனைத்து இருக்கைகளையும் நிறைத்தனர்.

பத்து மணிக்கு சேர்க்கை நேரம் ஆரம்பமானது. வாயில் காவலர் ஒவ்வொரு நபராய் செயலாளர் அறைக்குள் அழைத்துப்போனார். ஐந்தாவதாகப் பூங்கொடி!

ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டுப் பணம் கட்டச் சொன்னார் செயலாளர். மஞ்சப் பையில் இருந்து ஐநூறு ரூபாக்கட்டு ஒன்றும் நூறு ரூபாக்கட்டு நான்கும் எடுத்து மேசைமேல் வைத்தார் கருப்பசாமி. எந்திரம் விர்ரென்ற சத்தத்தோடு ஒரு நிமிட நேரத்தில் அனைத்தையும் எண்ணி முடித்தது.

"இன்னும் முப்பதாயிரம்" என்றார் செயலாளர்,

எதற்கு எனப்புரியாமல் பரபரவென முழித்தார் கருப்பசாமி. பட்டியல்படி அனைத்துத்தொகையும் கட்டியாகிவிட்டது. இன்னும் எதற்குப் பணம்?

தேட முடியாத கேள்வியின் வழியே பயணமானது மனம்.

"எடுங்க சார், நேரமாகுதல்ல?" மென்மையாய்ப் பேசினார் செயலாளர்.

"நீங்க கொண்டுவரச் சொன்னது இதுதானே?" பூங்கொடியின் கேள்வி 'ஓ' என அவரை முகம் சுருங்க வைத்தது. "செக்யூரிட்டி எதுவும் சொல்லலியா?"

"இல்லயே!"

"சரி" இப்போ தெரிஞ்சுக்கங்க, அதிகப்படியாகக் கட்டுற முப்பதாயிரம் டொனேஷனோ, ஃபீசோ இல்ல, நிர்வாகச் செலவுகளுக்கு,

கருப்பசாமியும், பூங்கொடியும் விலுவிலுத்துப் போனார்கள். 'ஏன்' என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்தனர்.

"இது நம்பர் ஒன் காலேஜ்" அரசாங்கம் சொல்ற ஃபீஸா வாங்கிட்டு நாலெட்ஜ்ஃபுல் எஜுகேஷன் தரமுடியாது. விஞ்ஞானக்கூடம், விளையாட்டு மைதானம், சுகாதார வசதி எல்லாமே தரமானதா இருக்கு, அதனாலதான் அதிகக் கட்டணம்!"

"மொதல்லயே சொல்லி இருந்தா ரெடிபண்ணிட்டு வந்திருப்பனே!" கருப்பசாமியின் குரல் கம்மலாய் ஒலித்தது.

"ஸோ சாரி! தப்பு எங்கமேலதான், சாயிங்காலம் வரக்யும் டைம் தர்ரேன். போய்ப் பொரட்டிட்டு வாங்க".

காலிங் பெல்லை அழுத்தி அடுத்த மாணவியை அழைத்தார்.

"சார்..." என்று கருப்பசாமி தேங்கியபோது "என்னோட டைம வேஸ்ட் பண்ணாதீங்க, பளீஸ் கோ அவுட்!" என்றார்.

மூவரும் செங்கொன்றை மரநிழலுக்கு வந்தார்கள். எல்லாக் கொப்புகளும் மத்தாப்பூப் போல பூத்திருந்தன. உட்கார யத்தனித்தபோது காவலன் வந்து விரட்டினான். சிமெண்ட் பெஞ்சுகளைக் காட்டி அங்கே போய் உட்காரச் சொன்னான்.

மூவர் கண்களும் கலங்கின. "இவளுக்கு லவுதம் இல்லை. ஏழர நாடு பிடிச்சு ஆட்டுது; கடக்கால் ரெண்டு வருஷம் இருக்குன்னான் ஜோசியக்காரன்," கல்லூரியின் நிராகரிப்புக்கு ஜோதிடத்தில் ஆறுதல் தேடினாள் மனைவி.

"போனாப் போகட்டும்" என்றாள் மகள். அவள் குரல் விரக்தியாய் ஒலித்தது. முடியாத பட்சத்தில் கலைக்கல்லூரி வளாகம் நிச்சயம் புகலிடம் தரும் என்றாள்.

வேகமாய்த் தலையாட்டினார் கருப்பசாமி எப்பாடு பட்டாச்சும் இதே காலேஜுல படிக்க வக்கிரண்டா கண்ணு; "நீ கவலப்படாத!"

அரைமணி நேர யோசனைக்குப்பின் பரமசிவம் நாடார் நினைவுக்கு வந்தார். இதே ஊரின் பெரிய புள்ளிகளில் அவரும் ஒருவர். பருத்திப்பழங்கள் பெருவாரியாய்ப் பூத்துத் தொங்கிய காலத்தில் கொள்முதலுக்கு வந்திருக்கிறார். அஞ்சு பத்து பார்க்காமல் வாங்கக்கூடியவர். விவசாயிகளுக்கு ஈவு இரக்கம் காட்டி உதவி செய்வார். அவரைப் போய்ப் பார்த்து வருவதாய்ச் சொன்னபோது மனைவிக்கும் நம்பிக்கை வந்தது. வேப்ப இலை ஒன்று உதிர்ந்து விழுந்ததை நல்ல சகுனமாய் எடுத்துக்கொண்டு வழி அனுப்பிவைத்தாள்.

கெட்டவேளை! அவர் ஊரில் இல்லை என்று ஆனபோது மனவலியோடு நிழல் வெளியில் அனிச்சையாய் நடந்தார்.

ஒரே மகள்! படிக்க வைக்க முடியாமல் போய்விடுமோ? பயமாய் இருந்தது. கால்களும் கைகளும் வெலவெலத்தன. கண்கள் குத்திட்டு நின்று பயமுறுத்தும் நிறங்களை தரிசனம் செய்தன. நீலவன பரப்பில் நெருஞ்சிப் பூக்கள் விரிவோடிக்கிடந்தன.

நிழற்குடைக்குக் கீழ் அமரும் பலகையில் ஆசுவாசமாய் உட்கார்ந்தார். அந்தராத்ம வெளியில் சிறகடித்தார். காற்றுவெளி கடந்து ககன மண்டலமும் கடந்து, வாகைசூடும் ஓர் எல்லையில் போய் நின்றார். என் வெற்றிக்கான பாதை எது? என்று மவுனமாய்க் கேள்வி எழுப்பினார். "போ மகனே!" அசரீரியான முழக்கம் ஒன்று அவரை வழி நடத்தியது.

கண்களை விழித்துப் பார்த்தபோது, சூரியன் மேற்குவானில் வெகுதூரம் போய்விட்டிருந்தான். எழுந்து நடந்தபோது சோர்வாய் இருந்தது. சாலை ஓரக்கடையில் டீ அருந்தி தெம்பை வரவழைத்துக்கொண்டார். அந்தராத்ம வெளியில் மறைந்து நின்ற அவரது சூட்சும பிம்பம் அவரோடு உரையாடியது.

"உனக்கு என்ன வேண்டும்?"

"மகள் படிக்க வேண்டும்"

"கட்டணம் கட்டினாயா?"

"ஆம்!"

"எவ்வளவு?"

"அவர்கள் பட்டியல்படி முழுமையாய்!"

"பிறகு என்ன தடை?"

"சட்டப் பட்டியலைத் தாண்டி, அப்பால் பட்டியலையும் கட்ட வேண்டுமாம்!"

"மண்ணைக் குழப்பி நீரை அசுத்தப்படுத்துகிறார்கள்; தடுத்துவிடு!"

"என்ன சொல்கிறாய்?"

"வாதிடு! போரிடு! வெற்றியைப் பதியமிடு!"

தலையை உலுப்பி, பிம்பத்தின் பார்வையில் இருந்து விலகி வந்தார் கருப்பசாமி. வேகவேகமாய் நடந்து கல்லூரிக்குள் நுழைந்தபோது மனைவியும், மகளும் ஆவலாதியோடு காத்திருந்தனர்.

"என்ன ஆச்சு?" என்றாள் மனைவி. காத்திருந்ததன் வலி அவள் முகத்தில் பதிவாகி இருந்தது.

"இதோ வந்துர்றேன்" என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

புன்னகையோடு வரவேற்றார் செயலாளர். "பணம் கட்டிறலாமா?"

"பொரட்ட முடியல சார்!"

"அப்போ, வேற காலேஜப் பாத்துக்கங்க!"

"இங்கதான் படிக்யணும்"

"முடியாது!"

"நீங்க கேட்டத நான் தந்துட்டேன்; நாங்க கேக்குறத நீங்க தந்துதான் ஆகணும்"

"இல்லாட்டி?"

"இங்கேயே கெடந்து அன்னந்தண்ணி இல்லாம சாவேன். போலிஸ்ல புகார் குடுப்பேன். "

"ஹஹ்ஹ்ஹா" என்று சிரித்தார் செயலாளர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கருப்பசாமி செயலாளரைவிடக் கூடுதலான கர்ஜனையோடு ஓங்காரமிட்டுச் சிரித்தார். சிரிப்பின் அலைவீச்சு வளையமிட்டு வளையமிட்டு வானம்வரை விரவிப் பரவியது!

தேனி சீருடையான்
Share: 




© Copyright 2020 Tamilonline