Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது
- சித்ரா வைத்தீஸ்வரன்|மார்ச் 2015|
Share:
அன்புள்ள சிநேகிதியே

விவரிக்கும்போதே வருத்தமாக இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், கணவரது மாமாபெண் வரவை. சிறுவயதில் என் கணவர் தன் மாமாவீட்டில் தங்கி எஞ்சினியரிங் படிக்கும்போது அந்த மாமா நிறைய உதவிகள் செய்திருக்கிறார். பாசமாகவும் இருந்திருக்கிறார்கள். அவருடைய ஒரே பெண்தான் நான் சொல்லும் கசின். அவளையே திருமணம் செய்யும் வாய்ப்பும் இருந்திருக்கிறது. கொஞ்சம் செல்லமாகவும், ஆடம்பரமாகவும் வளர்ந்த பெண் என்பதால் இவர் யோசித்துத் தட்டிக்கழித்து விட்டார். அதனால்தான் எனக்கு லக் அடித்தது. மிகவும் விவேகமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ளும் உத்தமர் இவர். நாங்கள் இங்குவந்து வீடுவாங்கி செட்டில் ஆனபோது மாமாவையும், மாமியையும் இங்கு வரவழைத்து சுற்றிக்காட்ட ஆசைப்பட்டார். நானும் அதை சப்போர்ட் செய்தேன். ஆனால் திட்டமிட்ட நாளுக்கு ஒருவாரம் முன்பு மாமா திடீரென்று இறந்து போய்விட்டார். அதற்கு ஒரு வருடம் கழித்து மாமியும் அந்த சோகத்திலேயே போய்விட்டார். மிகவும் ஆதர்ச தம்பதிகள் என்று என் கணவர் அடிக்கடிச் சொல்வார். அந்த ஒரே பெண்ணுக்கு வாழ்க்கை சுமாராகத்தான் அமைந்தது. பணம் இருந்தாலும் கணவர் சரியில்லை என்று தகவல். அவருடைய பெண் இங்கு எல்லோரையும்போல எம்.எஸ். படிக்கவந்தாள். மிகவும் ஆசையாக அவளை கவனித்துக்கொண்டோம். என் பெண்ணும் அவளும் சமவயது. நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இப்போது அந்தப் பெண் இரண்டு வருடமாக நல்ல வேலையில் இருக்கிறாள். அவள் அம்மா, அந்த கசின், பெண்ணை விட்டுச் செல்வதற்காக சமீபத்தில் இங்கே வந்தார். அந்தப் பெண் அடிக்கடி ட்ராவல் செய்ய வேண்டிய கட்டாயத்தால் எங்களுடன் அந்த கசின் இருந்து கொண்டு, பெண் வீக் எண்டில் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வருவதாக ஏற்பாடு.

அப்பா, அம்மாவைத்தான் கவனித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பெண்ணான இந்தக் கசினையாவது நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று என் கணவர் விரும்பினார். லீவ் எடுத்துக்கொண்டு, பெரிய டூருக்கு ஏற்பாடுசெய்து, நாங்களே அதற்கான செலவை எல்லாம் ஏற்றுக்கொண்டோம். பாவம் கணவரும் சரியில்லை என்பதால் நான் பார்க்காத அந்த மாமா பெண்ணிடம் எனக்கு மிகவும் பரிதாப உணர்ச்சி. அதனால்தான் அவர் வரவை அப்படி எதிர்பார்த்தோம்.

அவர் வந்த முதல் வாரம் ஜெட் லாக். இரண்டாவது வாரம் தன் கணவர், மாமியார் குடும்பத்தைப்பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தார். நானும் பரிதாபமாகக் கேட்டேன். மூன்றாவது வாரம் அந்தப் புலம்பலுடன் சேர்ந்து இங்கு வந்து தங்கிவிட்ட உறவினர்கள், அவர்களது பெண்கள், பிள்ளைகள் ஜாதிவிட்டு, மதம்விட்டுச் செய்துகொண்ட திருமணங்கள் பற்றி அலச ஆரம்பித்தார். அப்போதுதான் எனக்குக் கொஞ்சம் கேட்கச் சங்கடமாக இருந்தது. இங்கே பெண்களை வளர்க்கும் விதம்பற்றி ஒரு தீவிர விவாதம். முதலிலெல்லாம் பதில்கொடுத்து ஓய்ந்து, பின்னர் அவர் பேசுவதைமட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகும் ஓயாத இந்த சப்தம் எனக்குக் கஷ்டமாக இருந்தது. வொர்க்கிலிருந்து தாமதமாக வர ஆரம்பித்தேன். என் கணவர் என்னைப் புரிந்துகொண்டு பரிதாப்பட்டார். பெண் என்பதால் நான்தான் அந்தக் கசினுடன் அதிகநேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. பரவாயில்லை, அவர் சுபாவம் இது. பொறுத்துக்கொள்கிறேன்; இந்த வெகேஷன் முடியட்டும் என்று நான் சொல்லச்சொல்ல, அவளது பெண், தனக்குக் கொஞ்சம் பிரேக் கிடைத்திருக்கிறது என்று அம்மாவைத் தன்னிடம் அழைத்துக்கொண்டு போனாள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, ஆனால் நீடிக்கவில்லை. சுவரில் அடித்த பந்துபோலத் திரும்பி வந்துவிட்டார் அந்தக் கசின், எங்களுடன் சண்டை போடுவதற்கு.

அவள் பெண் அவளைக் கூப்பிட்ட காரணமே தன்னுடைய காதலையும் கல்யாணத்தையும் பற்றித் தெரிவித்து அந்தப் பையனை அறிமுகப்படுத்த வேண்டித்தான். இது என் கசினுக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. வேறு மதம் என்பது மட்டும் காரணமில்லை. அவன் ஒரு டைவர்ஸி. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அம்மா சரியில்லாத காரணத்தால் அவனிடம்தான் அந்தக் குழந்தையை கஸ்டடிக்குக் கொடுத்திருக்கிறார்கள். கசினின் பெண், அந்தக் குழந்தைக்குத் தாய் உடனில்லை என்பதால் பாசத்தைப் பொழிந்து அதன்மூலம் தன் காதலை வளர்த்திருக்கிறாள். இரண்டு வாரம் தங்கப்போன கசின் நான்குநாட்களில் திரும்பி வந்துவிட்டார். அவர் பெண்ணின் முடிவைப்பற்றி ஒரு குரல் அழுது தீர்த்தார். பிறகு எங்கள் பெண்தான் அவள் புத்தியைக் கெடுத்துவிட்டாள் என்று புகார். எங்களுக்கு அந்த விஷயம் தெரிந்து வேண்டுமென்றே மறைத்து விட்டோம் என்று சண்டை. உண்மையில் எங்களுக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அநாவசியமாக இதுபோன்ற குற்றச்சாட்டு எனக்கு மிகவும் வேதனையாகப் பட்டது. நான் திருப்பி பதில் பேசியது அவருக்கு மிகவும் கோபத்தை வரவழைத்துவிட்டது. என் கணவரிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தார். அவருக்கும் கொஞ்சம் அலுப்புத் தட்ட சற்று உரக்கவே பேசிவிட்டார். அவ்வளவுதான்-விஸ்வரூபம் எடுத்து, சாப்பிடாமல், எங்களுடன் பேசாமல், சின்னக் குழந்தைபோல் அடம் பிடித்து-முடிவில் அவள் பெண் வந்து அவரை அழைத்துக்கொண்டு போனாள். எங்களுக்கு ஒரு சுனாமி வந்து ஓய்ந்ததுபோல் இருந்தது. மனதிலே சோகம், கசப்பு எல்லாம்.

நாம் எவ்வளவோ நன்றி மறக்காமல் ஒரு உறவைக் கலக்க ஆசைப்பட்டாலும் இதுபோன்ற நடத்தைகள் வெறுப்பைத்தானே உண்டு பண்ணுகிறது? இந்த மூடில் எங்கள் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டோம். பணவிரயம் பரவாயில்லை; மனநிம்மதிதான் முக்கியம் என்று இருந்துவிட்டோம். கசினின் அந்தப் பெண் சிறுவயது முதலே போர்டிங் ஸ்கூலில் படித்ததால் அம்மாவின் சுபாவத்திற்கு அப்பாதான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாள். இப்போதுதான் விஷயம் புரிந்திருக்கிறது. "Amma need Counseling. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஹெல்ப் மீ" என்று மெயில் அனுப்பியிருக்கிறாள். அவள் மிகவும் நல்ல பெண்.

இதற்குள் அந்தக் கசின், தன் பெண் தன்னைத் தாய் என்று பாராமல் தன்னை இழிவாகப் பேசுவதாகவும், எங்களைப் போல் நல்லவர்கள் இல்லை யாரும் என்றும், தான் திரும்பிவந்து எங்களுடன் வெகேஷனில் இந்தியாவிற்குப் போக விரும்புவதாகவும் ஃபோனில் கெஞ்சுகிறார். எனக்குத் தலைசுற்றுகிறது. இருந்தாலும் இன்னொரு சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாமே, மாறுகிறாரோ என்னவோ என்றும் தோன்றுகிறது. என் கணவர் சிரித்தார். "Too late to set this right" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். வெகேஷனை கேன்சல் செய்துவிட்டோம் என்பதை எப்படி அவருக்குச் சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். என் கணவருக்கென்று இருப்பது இந்த ஒரு உறவு மட்டுந்தான். அதையும் அழைத்து வைத்துக்கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே

என்னிடம் சமீபத்தில் ஒருவர் 'உறவு, உறவு' என்கிறீர்களே, இந்த ராவும் உறவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்து தொலைப்பது என்று யாரைப்பற்றியோ அலுத்துக்கொண்டார். அதுபோல சிலரது பிறவிக் குணத்தை மாற்றமுடியாது. மிகவும் கஷ்டம். உங்கள்வரையில் நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். அதற்குமேல் வருத்தப்பட ஒன்றுமில்லை. எல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உள்ள ஒரு நல்ல அன்யோன்னியம், புரிதல் பல நண்பர்களைச் சேர்த்திருக்கும். Enjoy those relationships. உங்கள் கணவரின் மாமாபெண் அதாவது உங்கள் கசின் அருமையான வாழ்க்கையை இழந்துவிட்டார். அது அவருடைய பிரச்சனை. உங்களுடையதல்ல. உங்கள் அடுத்த வெகேஷன் இனிதாக அமைய வாழ்த்துக்கள். சந்திப்போம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline