Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எத்தனை கட்டித் தங்கம்?
- சுப்புத் தாத்தா|பிப்ரவரி 2015|
Share:
அருணன் என்ற இளைஞன் வேலைதேடி கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தான். காட்டுவழியில் அவன் போகும்போது ஒரு பை கீழே கிடப்பதைப் பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்துத் திறந்தான். அதற்குள் சிறியதாக நான்கு தங்கக் கட்டிகள் இருந்தன. "பாவம், யாரோ தொலைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. விசாரிப்போம்" என்று நினைத்தவன், பத்திரமாக அதை எடுத்துத் தனது கைப்பைக்குள் வைத்துக்கொண்டு நகரம் நோக்கி நடந்தான்.

நகரத்தில் அன்று சந்தை. அதனால் நல்ல கூட்டம் இருந்தது. அருணனும் ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றான். சந்தையின் நடுவே ஒருவன் உரத்த குரலில் ஏதோ சொல்வதையும் அவனைச் சூழ்ந்து பலரும் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தவன் வேகமாக அங்கே சென்றான். "மக்களே, எனது பை இந்தச் சந்தைக்கு வரும்வழியில் எங்கோ தொலைந்து போய்விட்டது. அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அதை யாரும் கண்டுபிடித்துத் தந்தால் அவர்களுக்கு நான் அதில் உள்ளதில் நான்கில் ஒரு பங்கைக் கொடுப்பேன். இது சத்தியம், நிச்சயம்" என்றான்

அதைக் கேட்ட அருணன், "ஐயா உங்கள் பை இதுதானா என்று பாருங்கள். நான் வரும்வழியில் கிடைத்தது" என்று சொல்லிப் பையைக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த அந்த மனிதன், அது தன்னுடையதுதான் என்பதை அறிந்துகொண்டான். தங்கக் கட்டிகளும் பத்திரமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் உண்மையை ஒப்புக்கொண்டால் நான்கில் ஒரு பங்கான ஒரு தங்கக்கட்டியைத் தந்தாக வேண்டுமே என்று எண்ணினான். உடனே தந்திரமாக, "ஐயய்யோ! நான் இதில் பத்து தங்கக்கட்டிகள் வைத்திருந்தேனே. நான்குதானே இதில் இருக்கிறது. மீதம் எங்கே, சொல் உண்மையை!" என்று அலறினான்.

"ஐயா. இதில் நான்கு கட்டிகள்தாம் இருந்தன. இது சத்தியம்" என்றான் அருணன். அந்த மனிதன் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கு நீதி மன்றத்துக்குச் சென்றது.

"ஐயா, இது என் பை. இதில் பத்து தங்கக்கட்டிகள் வைத்திருந்தேன். இவன் ஆறைத் திருடிவிட்டு மீதியை என்னிடம் கொடுக்கிறான். இவனை விசாரித்து மீதம் தங்கத்தை வாங்கித் தாருங்கள். இல்லாவிட்டால் இவனைச் சிறையிலடையுங்கள்" என்று நீதிபதியிடம் சொன்னான் அந்த மனிதன்.
அருணனோ, "ஐயா. இதனை நான் வழியில் கண்டெடுத்தேன். இதில் நான்கே நான்கு தங்கக்கட்டிகள்தாம் இருந்தன. எப்படியும் இதை இழந்தவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தபோது, இவர் சந்தைக்கு நடுவில் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே இவரிடம் அதை விசாரித்துவிட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். நான் தங்கக் கட்டிகளைத் திருடவில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமோ ஆசையோ இல்லவே இல்லை" என்றான்.

ஏற்கனவே அந்த மனிதனின் பேராசை பற்றி நீதிபதி நன்கு அறிந்திருந்தார். இதுபோலப் பொய்யான பல வழக்குகளை முன்னரே அவன் கொண்டு வந்ததையும் அவர் அறிவார். இந்த இளைஞன் திருடனாக இருந்திருந்தால் தங்கத்தை எடுத்துக்கொண்டு ஓடியிருப்பானே தவிர இவரிடம் தேடிவந்து தரவேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் உணர்ந்தார். எனவே பணக்காரனிடம், "நீ சொல்வது உண்மைதான். நீ பத்து தங்கக் கட்டிகளைத்தான் அந்தப் பையில் வைத்திருந்திருக்கிறாய். ஆனால் இந்த இளைஞன் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தது அந்தப் பையல்ல. இது வேறு. ஆகவே நீ சென்று அந்தப் பையைத் தேடு. இந்தத் தங்கக்கட்டிகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோராததால் இதனை இந்த இளைஞனே வைத்திருக்கும்படித் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்.

தீர்ப்பைக் கேட்ட பணக்காரன் திகைத்தான். 'அடடா, நமது பேராசையால் உள்ளதும் போச்சே' என்று வருந்தினான்.

தங்கக் கட்டிகள் அருணனிடம் தரப்பட்டது. அருணன் அதை ஏற்கமறுத்தான். நீதிபதியிடம் அவன், "ஐயா. அடுத்தவருக்கு உரிமையான பொருளை நாம் எந்தவிதத்தில் எடுத்துக்கொண்டாலும் அது திருட்டுத்தான். இது தேவையில்லை. என்னால் உழைத்துப் பிழைக்க முடியும். ஆகவே எனக்கு ஏதாவது ஒரு வேலை அளித்தாலே போதும். நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்" என்றான்.

நீதிபதி இதைக்கேட்டு மகிழ்ந்தார். பிறர்பொருள்மீது ஆசையற்ற இவனே அரண்மனையின் பொக்கிஷக் காப்பாளாராக இருக்கச் சிறந்தவன் என்று முடிவு செய்து மன்னருக்குக் கடிதம் எழுதி, அதை அவன் மூலமே அனுப்பினார். பொய்வழக்குத் தொடுத்தவனோ, "அடடா... இப்படிப்பட்ட ஒரு நல்ல இளைஞனைத் திருடன் என்று சொல்லிவிட்டோமே!, இனிமேலாவது பொய் பேசாமல், ஏமாற்றாமல் உழைத்து வாழ முயற்சிப்போம்" என்று எண்ணியவாறு புறப்பட்டான்.

சுப்புத் தாத்தா
Share: 




© Copyright 2020 Tamilonline