Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால்
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2014||(1 Comment)
Share:
மகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே உணர்ச்சி வசப்பட்ட ஒன்றோ என்று யாரையும் திகைப்படையச் செய்யும். கண்ணனும் அப்படி எண்ணித்தான் கேட்பதாக இப்போது தோன்றுகிறது. அர்ஜுனன், தீர்மானமாக இருக்கும் நிலையில், மறுநாள் போரில் என்ன செய்யவேண்டும் என்று அவன் முன்னேற்பாடு செய்து கொள்ளும்போதும் இந்த எண்ணம் வலுப்பெறுகிறது. ஒரு ஸர்க்க நீளத்துக்கு அர்ஜுனன் சொன்ன மறுமொழியின் முத்தாய்ப்பு வாக்கியங்களைப் பாருங்கள்:

"சந்திரனில் திருமகள் இருப்பது எவ்வளவு நிச்சயமான ஒன்றோ, கடலில் தண்ணீரிருப்பது எவ்வளவு நிச்சயமான ஒன்றோ, ஜனார்தனா! அர்ஜுனன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றப் போவதும் அவ்வளவு நிச்சயமான ஒன்று. இது சத்தியம். இதில் ஐயம் கொள்ள ஏதுமில்லை......... 'நரஸ்ரேஷ்டரே! ஹிருஷீகேசரே! வில்லோ தெய்வத்தன்மையுள்ள காண்டீவம். யுத்தஞ் செய்கிறவனோ நான். ஸாரதியோ தேவரீர். இவ்விதமிருக்க, என்னால் எது ஜயிக்கப்படாததாகும்? நான் யுத்தத்தில் சென்று தோல்வியடையாமல் ஜயித்துக்கொண்டே வருவதற்குக் காரணமான அந்த சத்தியத்தினால் யுத்தத்தில் ஜயத்ரதனைக் கொல்லப்பட்டவனாக அறியும்......." (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 5, துரோண பர்வம், அத்தியாயம் 76, பக்கம் 255)

இப்படிச் சொன்ன அர்ஜுனன், 'போய் உன் தங்கை சுபத்திரையையும் குந்தியையும் சமாதானப்படுத்து. அபிமன்யுவை இழந்து வருந்தும் அவர்களுக்கு ஆறுதல் சொல்' என்றவாறு தூங்கப் போய்விட்டான். 'நான் அர்ஜுனன்; என் கையில் இருப்பது காண்டீவம்' என்னும்போது பெருமிதமும் தன்னம்பிக்கையும் வீரமும் போட்டி போடுகின்றன என்றால், 'எனக்குத் தேரோட்டுபவன் நீ' என்னும்போது நமக்கெல்லாம் கண்ணில் நீர் திரண்டுவிடுகிறது. என்ன நம்பிக்கை! என்ன ஆழ்ந்த விஸ்வாசம்! உறுதியென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொன்றையும் கவனியுங்கள். தன் பிள்ளைகளில் மிகச் சிறந்தவனான அபிமன்யுவை இழந்து ஒருசில மணிநேரங்கூடக் கழிந்திராத நிலையில், அர்ஜுனன் தூங்கப் போய்விட்டான். தன் மனைவி சுபத்திரைக்கும் தாய் குந்திக்கும் ஆறுதல் சொல்லும் பணியைக்கூட கண்ணனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, தான் நிம்மதியாக உறங்கப் போய்விட்டான். 'எல்லாவற்றுக்கும் நீயே பொறுப்பு. இந்தச் சுமை என்னுடையதில்லை. உன்னுடையது. இதை எப்படிச் செய்துமுடிக்கவேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருப்பவன் நீ. எனக்கு என்ன கவலை இருக்க முடியும்! வெற்றி எனக்குதான். அதில் என்ன ஐயம்!' என்ற அர்ஜுனன் பேச்சு நம்மை வசீகரிக்கிறது; கண் பனிக்கச் செய்கிறது. இந்த நம்பிக்கையிலே, பக்தியிலே, முற்றிலுமாக இறைவன்மீது பாரத்தை இறக்கி வைத்துவிடும் தன்மையிலே லட்சத்தில் ஒருபங்காவது நமக்கு வாய்க்கட்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

தங்கை சுபத்திரைக்கும் அத்தை குந்திக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, நள்ளிரவு தாண்டியபின் தன் கூடாரத்துக்கு வந்து சேர்ந்த கிருஷ்ணனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 'அர்ஜுனனுக்கு வெற்றி நிச்சயம். அதில் ஓர் ஐயமும் இல்லை' என்ற எண்ணமும், 'ஆனாலும் ஒருவேளை....' என்ற சாத்தியத்தை எதிர்கொண்டு அதற்கேற்பத் தயார்நிலைத் திட்டத்தை வகுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த நிர்வாகிகளைப் போல அன்று செயல்பட்டான் கண்ணன்.

மறுநாள் போரில் அர்ஜுனன் ஒருவேளை ஜயத்ரதனைச் சென்று அடையும் அளவுக்கு அவகாசம் கிடைக்காமல் போய்விட்டால், அது ஒன்றே அர்ஜுனன் இறப்பதற்குக் காரணமாகிவிடும். அர்ஜுனனுக்கு எதிராக ஒரேயொரு அம்பைக்கூட எய்யவேண்டியதில்லை. அவன் ஜயத்ரதனை வந்தடையும் கால எல்லையைச் சற்றே விரிவாக்கினால் போதும்; காலதாமதம் ஏற்பட்டாலே போதும். அவன் தானாகவே இறந்துபோவான்; அதற்கென்று கௌரவர்கள் பங்கிலிருந்து ஒரேஒரு விரலைக்கூட அசைக்கத் தேவையில்லை என்ற விபரீதமானதொரு நிலை. துரியோதனனும் இந்தக் காரணத்தையே முதன்மையாகச் சுட்டிக்காட்டி, அர்ஜுனனுடைய சபதத்தைக் கேள்விப்பட்ட அளவிலேயே பயந்துபோய், 'நான் ஊருக்குத் திரும்பிவிடுகிறேன். எனக்கு உத்தரவளிக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்ட ஜயத்ரதனை திரும்பிப் போகாமல் தடுத்து நிறுத்தியிருந்தான்.

வெல்லவே முடியாதவன்; போரிலிருந்து திரும்பும்போது வெற்றியுடன் மட்டும்தான் திரும்புபவன் என்ற காரணத்தாலேயே விஜயன் என்ற பெயருக்கு உரியனாகிறான் அர்ஜுனன். அப்படிப்பட்ட ஒருவனை, வெறும் ஒரு பகற்பொழுது மட்டும் இழுத்தடித்து, அவன் ஜயத்ரதனை அணுகுவதைத் தடுத்து நிறுத்தி வைத்தால் மட்டுமே போதும்; அவன் தானாகவே இறந்துவிடுவான் என்பது என்ன லேசில் கிடைக்கக்கூடிய வாய்ப்பா? துரியோதனன் விடுவானா? துரோணருக்குதான் அதற்கேற்ப திட்டமிட முடியாமல் போய்விடுமா?

அதற்காகத்தான் ஒற்றர்களை அனுப்பி, அவர்களுடைய மறுநாள் திட்டம் என்ன என்பதை அறிந்துகொண்டான் கண்ணன். அர்ஜுனனோ, 'ஒண்ணும் கவலைப்படவே வேண்டாம். எல்லாம் நீ இருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, தூங்கப்போய்விட்டான். 'போரிடுபவன் நான்; கையிலிருப்பது காண்டீபம்; தேரோட்டுவது நீ' என்று அவன், தன்னுடைய வெற்றிக்குக் காரணங்களில் மிக உச்சமாக வைத்தது 'தேரோட்டுவது நீ' என்பதைத்தான். இல்லையா? அர்ஜுனன், மறுநாள் மேற்கொள்ளப் போகிற போருடைய தீவிரத்தை உணர்ந்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது ஒருபுறம். அவன், தன்மேல் வைத்திருக்கும் மலைபோன்ற நம்பிக்கை இன்னொருபுறம்.

மறுநாள் அர்ஜுனன் வெல்வான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், யுத்தகளத்தில் 'இன்னதுதான் நடக்கும்' என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாது. 'இறைவனே இப்படி ஒரு நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து, அதற்கான முன்தயாரிப்புகளை மேற்கொண்டான்' என்று நமக்கு உணர்த்துவது போலவோ என்னவோ, கண்ணன் அன்று 'அப்படி ஒருவேளை அர்ஜுனனுக்கு ஏதேனும் நடந்துவிட்டால்....' என்ற ஊகசாத்தியத்தையும் எதிர்கொள்ளத் தயாரானான்.
அன்று அவன் தயாரித்த திட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். தன்னுடைய தேரோட்டியாகிய தாருகனை (Daruka) அழைத்து அவனுக்குக் கண்ணன் பிறப்பிக்கும் உத்தரவைப் பாருங்கள்:

'மகனை இழந்த துக்கத்தால் அர்ஜுனன் இப்படி ஒரு சபதத்தை மேற்கொண்டு விட்டான். இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருக்கும் துரோணரும் அதற்கேற்றபடி செயல்படுவார். அவர் காத்து நிற்கும் ஜயத்ரதனை இந்திரனே ஆயினும் அணுகுவது கடினமானது.' (இப்படிச் சொல்வதால் அர்ஜுனன் ஏதோ பலவீனப்பட்டவன் என்று பொருளன்று. எதிராளியின் பலத்தை அதற்குரிய பொருத்தமான வகையில் அலசிப் பார்க்கவேண்டும். வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்றார் வள்ளுவர். ஆகவே, துரோணருடைய ஆற்றலைக் கண்ணன் பேசுகிறான். அர்ஜுனனுடைய ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக இதற்குப் பொருளன்று.)

'தாருகா! ஒருவேளை அர்ஜுனன் தன் இலக்கை எட்டாவிட்டால், அவன் செய்யாமல் விட்ட காரியத்தை நான் தொடர்வேன். ஏனெனில் "எனக்குக் குந்தீபுத்திரனான அர்ஜுனனைக் காட்டிலும் மிக்க அன்புக்குப் பாத்திரமானவன் வேறொருவனுமில்லை; மனைவிகளாவது, ஸ்நேஹிதர்களாவது, ஞாதிகளாவது, பந்துக்களாவது இல்லை. தாருக! முகூர்த்த காலங்கூட இவ்வுலகத்தை அர்ஜுனனை இழந்ததாகப் பார்ப்பதற்கு நான் சக்தனல்லேன். அஃது அவ்விதம் ஆகப் போககிறதில்லை. நான் குதிரைகளோடும் யானைகளோடும் கர்ணனோடும் கூடின அந்த எல்லாக் கௌரவர்களையும் கொன்று ஜயமடையப் போகிறேன். தாருக! மஹாயுத்தத்தில் தனஞ்சயன் பொருட்டுப் பராக்கிரமத்தை வெளிப்படுத்துகின்ற என்னுடைய வீர்யத்தை நாளைத்தினம் மூவுலகங்களும் பார்க்கட்டும்." (மேற்படி, அத்தியாயம் 79, பக்கம் 265)

என்னுடைய மனைவியர், என்னுடைய சுற்றத்தார், என்னுடைய உறவினர்கள் யாருமே எனக்கு அர்ஜுனனைப் பார்க்கிலும் இனியவர்கள் இல்லை. அர்ஜுனன் எனக்கு இனியவன். அவன் இல்லாத ஓர் உலகத்தை ஒரு முகூர்த்தப் பொழுதுகூட என்னால் கண்கொண்டு காண இயலாது. ஒருவேளை அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், தாருகா, நாளைமுதல் போருக்கு நான் தலைமை தாங்கப் போகிறேன். நான் போரை நடத்தப் போகிறேன்.

துரியோதனனையும் கர்ணனையும் அர்ஜுனனுக்காக நான் கொல்லப் போகிறேன். மூன்று உலகங்களும் என் பராக்கிரமத்தைப் பார்க்குமாறு செய்யப்போகிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு, 'என் தேரை போருக்கு உரியதாகத் தயார் செய். மிகச் சிறந்தவையான வலாஹகம், மேகபுஷ்பம், சைவ்யம், சுக்ரீவம் என்ற நான்கு குதிரைகளை அதில் பூட்டு. கௌமேதகி என்ற என்னுடைய கதாயுதத்தை அதில் எடுத்துவை. என்னுடைய சக்கரப் படையையும், வில்லையும் அம்புகளையும் தேரில் எடுத்து வை. நீ போருக்கேற்ற விதத்தில் கவசத்தை அணிந்துகொண்டு தயாராக இரு. நாளைய போரில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், நான் என் சங்கத்தை ரிஷப ஸ்தாயியில் ஒலிப்பேன். அதைக் கேட்டதும் நீ எங்கிருந்தாலும் விரைவாக நான் இருக்கும் இடத்தை வந்து அடையவேண்டும். போரை அந்த வினாடிமுதல் நான் நடத்தப் போகிறேன். (கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பு — having cased them in golden mail of the splendour of the sun and fire, and thyself putting on thy armour, stay on it carefully. Upon hearing the loud and terrible blast of my conch Panchajanya emitting the shrill Rishaba note, thou wilt come quickly to me. www.sacred-texts.com/hin/m07/m07076.htm)

இப்போது, இந்த இடத்தை வாசிக்கும்போது, காலத்தைக் கடந்தவனும், காலமே வடிவமாகி நிற்பவனுமான ஒருவன் 'நாளைய பொழுதைப்பற்றி' எண்ணித் திட்டமிட முனையும்போது, கண்ணனைப்பற்றி என்ன உணர்வு ஏற்படுகிறது? என்னென்னவற்றை உய்த்துணர முடிகிறது? பேசலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline