Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம்: பாகம் 16
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeமுன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்குவர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராக வும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிகிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன். அவரது சுத்தசக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே முரளி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தார். மார்க், வெர்டியான் பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, பெருமளவில் சூர்ய ஒளி மின்சக்தி தரும் புரட்சிகரமான நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாக விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ வீடு திரும்பப் பார்க்கிங் லாட்டுக்குப் போனபோது காருக்கு அருகிலேயே தாக்கப்பட்டதைக் கேட்டு, உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சூர்யா சந்தேகித்தார். மீண்டும் வெர்டியானுக்கு சென்று மார்க்கின் மற்ற உபதலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு முதலாவதாக பேட்டரி நுட்ப விஞ்ஞானியான பீட்டர் பார்க்கருடன் பேசலானார்...

கிரணுடன் பீட்டர் அறிமுக அரட்டை அடித்துக் கொண்டிருந்த சில நொடிகளுக்குள் அவர் அறையை அலசிவிட்ட சூர்யா, வழக்கம்போல் ஓர் அதிரடி யூகத்தை எடுத்து வீசினார். பீட்டரின் கையைக் குலுக்கிக்கொண்டு, "உங்களை ரொம்பப் பாராட்டணும் பீட்டர்! எதோ ஒரு சம்பந்தமில்லாத துறையில நிபுணத்துவம் பெற்றுவிட்டு, அதை விட்டு விலகி இந்த மாதிரி ஆழமான விஞ்ஞானக் கோட்பாடுகள் நிறைந்த புதுத் துறையில குறுகிய காலத்துலயே மீண்டும் தலைசிறந்த நிபுணராகறதுன்னா லேசான சாதனை இல்லை. அபாரந்தான்!" என்றார்.

பீட்டர், உங்கப் பேட்டரிப் பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் விளக்குங்க. அது வெடிச்சதை நாங்களும் பார்த்தோம். அதுக்கு என்ன காரணங்கள்னு ஆராய்ஞ்சிருப்பீங்களே, கொஞ்சம் எங்களுக்கும் புரியும்படி சொல்லுங்களேன்
ஒரு கணம் அசந்துவிட்ட பீட்டர் கையை விடுவித்துக் கொண்டு, சுட்டுவிரலை ஆட்டிக்கொண்டு கலகலவெனச் சிரித்தார். "அ...அ... இந்த மாதிரி ஒரு வேட்டு வீசி என்னை விசாரணைக்கு முன்னாடி கலக்கிடலாம்னு பாக்கறீங்களா? மார்க் உங்க யூகத் திறமையைப் பத்தி எனக்கு முன்னமே சொல்லியிருக்கார். அதுனால இது எனக்கு அவ்வளவு ஒண்ணும் அதிர்ச்சியாயில்லை. என்னைப் பத்தி முன்விசாரணை செஞ்சிருப்பீங்களோங்கற ஆதங்கமுமில்லை. இருந்தாலும் எப்படி இத்தனை குறுகிய நேரத்துல என் முன்காலத்தைக் கணிச்சிட்டீங்க? கேட்க சுவாரஸ்யமா இருக்கு" என்று வினவினார்.

மார்க்கும் சிரித்துக் கொண்டு தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம் சூர்யா. நான் பீட்டர்கிட்ட என்னையும் யூ-பிங்கையும் யூகத்தால அதிர வச்சதை நான் விவரமா சொன்னேன். இருந்தாலும் இந்த அறையை மேலாப் பார்த்தா எனக்கும் எதை வச்சு யூகிச்சீங்கன்னு தெரியலையே, காலையில நீங்க இங்க வரச்சே, இவர் பேர்கூட உங்களுக்கு ஞாபகம் இல்லை, நான் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது, அதுனால மின்வலையில பார்த்திருக்கக் கூட வாய்ப்பில்லையே! விளக்குங்க. கேட்க ரொம்ப ஆர்வமாயிருக்கு."

சூர்யா விளக்க ஆரம்பித்தார். "அப்படியொண்ணும் பிரமாதமில்லை..." என்பதற்குள் முரளி இடைபுகுந்தார். "சொன்னப்புறம் பிரமாதமில்லைதான். அப்படின்னா நாங்களே சொல்லியிருக்கலாமே. இவ்வளவு அடக்கம் தேவையில்லை சூர்யா, சும்மா சொல்லுங்க, உங்க தந்திரங்கள் எப்பவுமே ரொம்ப பிரமாதந்தான்!"

சூர்யா முறுவலுடன் கூடிய தன்னடக்கத்துடன் தளும்பாத நிறைகுடமாகத் தொடர்ந்தார். "இங்க பாருங்க... இவர் முனைவரான Ph.D. பட்டப் பத்திரத்தைப் ஃப்ரேம் போட்டு புத்தகங்கள் பக்கத்துல வச்சிருக்கார். ஆனா அது ரொம்ப வெளிப்படையாத் தெரியலை, அதுனாலதான் உங்களுக்குப் புலப்படலைன்னு நினைக்கறேன். அதோட அவர் ஆராய்ச்சியின் தீஸிஸ் சுருக்கமும் இருக்கு. அவர் எதோ உடல்வேதியல் (பயோகெமிஸ்ட்ரி) நிபுணர்னு தெரியுது. அதோட அவர் ஆராய்ச்சி செஞ்சு எழுதிய பேப்பர்கள் வந்திருக்கற துறை ஜர்னல்களும் இருக்கு. அவை அவ்வளவு பழசில்லை, சில வருடங்கள்தான் ஆகியிருக்கு. அவைகளோட பேட்டரித் துறை சம்பந்தமானது ஒண்ணுமே இல்லை. அதுனாலதான் தன் துறையை மாத்திக்கிட்டு பேட்டரித் துறையில சில வருடங்களுக்கு முன்புதான் புகுந்தார்னு யூகிச்சேன், அவ்வளவுதான்."

பீட்டர் கைகொட்டி ஆரவாரித்தார். "பிரமாதம். ரொம்ப சுலபம்னு நீங்க சொல்றீங்க. ஆனா இது ரொம்பக் கஷ்டம்னு எனக்குப் புரியுது. சில நொடிகளுக்குள்ள இத்தனை விஷயங்களைக் கவனிச்சு அதோட நுணுக்கங்களைக் கோர்த்து யூகங்கற ஒரு முத்துமாலையை உருவாக்கறது... நிஜமாவே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சூர்யா. நீங்க நிச்சயமா எங்க பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு நிவர்த்திச்சுடுவீங்க."

மார்க்கும் பலமாகத் தலையாட்டி ஆமோதித்தார். "நிச்சயமா, பீட்டர், அதையேதான் நானும் நம்பறேன்."

சூர்யா சற்றே தலை வணங்கி அவர்களின் பாராட்டுக்களையும், நம்பிக்கையையும் ஏற்றுக்கொண்டு, "சரி, அந்த விஷயத்துக்கே வரலாம். பீட்டர், உங்கப் பேட்டரிப் பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் விளக்குங்க. அது வெடிச்சதை நாங்களும் பார்த்தோம். அதுக்கு என்ன காரணங்கள்னு ஆராய்ஞ்சிருப்பீங்களே, கொஞ்சம் எங்களுக்கும் புரியும்படி சொல்லுங்களேன்."
பீட்டர் சொல்றது சரிதான் நான் ஒத்துக்கறேன். தொழில்நுட்ப ரீதியான காரணங்களை என்னால கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனா சில சமயம் வேற காரணங்களும் கலந்துதான் இந்த மாதிரிப் பிரச்சனைகள் உருவாகுது. அதைத்தான் நான் விசாரிக்கணும்
பீட்டர் கஷ்டங்களைச் சாவதானமாக ஏற்றுக் கொள்ளும் பாவனையில் தோள்களைக் குலுக்கி, கைகளை விரித்துக் காட்டிவிட்டு விளக்கலானார் "இந்தப் பேட்டரிப் பிரச்சனை ரொம்பக் கவலைக்குரியதுதான், அதுல ஒண்ணும் சந்தேகமேயில்லை. ஆனா... தொழில்நுட்பத்தை மிக அதிக அளவுக்கு உயர்த்த முயற்சிக்கறப்போ இந்த மாதிரிப் பிரச்சனைகள் சகஜந்தான்னு நான் நினைக்கறேன். நாங்க இப்ப பேட்டரி நுட்பத்துல செஞ்சுக்கிட்டிருக்கறது, பாஸ்டன் MIT-யில சூர்ய சக்தியால உற்பத்தியாகற மின்சக்தியை சேமிச்சு வக்கறத்துக்கான நுட்பத்தைக் கண்டுபிடிச்சதை அடிப்படையாக் கொண்டது. நான் வெர்டியான்ல சேர்வதற்கு முன்னாடியே அவங்களோட சேர்ந்து வேலை செஞ்சிருக்கேன். ஆனா வெர்டியான்ல உருவாக்கியிருக்கற நுட்பம் அதைவிட மிகமிக முன்னேறியது. ஆனா அதுனால இன்னும் அதிக பிரச்சனை உண்டாகும் வாய்ப்பும் உடையது."

கிரண் இடைபுகுந்தான். "வாவ். நான்கூட MIT-யில தண்ணியைப் பிரிச்சு ஹைட்ரஜன் சக்தியா சேமிக்கறதைப் பத்திப் படிச்சேன். ரொம்ப கூல்! உங்க நுட்பம் இன்னும் பிரமாதமா? சொல்லுங்க சொல்லுங்க!" என்றான்.

சூர்யா கிரணின் ஆர்வத்தைத் தணித்தார். "இல்லை கிரண், அந்தத் தொழில்நுட்ப விவரங்களை அப்புறம் கேட்டுக்கலாம். பீட்டர் சொல்லவந்த பிரச்சனைக்கான காரணங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லட்டும்" என்றார்.

கிரண் உதட்டைப் பிதுக்கித் தன் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு மௌனமானான்.

பீட்டரோ, மழுப்பினார். "இப்ப ஏற்பட்டிருக்கற பிரச்சனைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்... ஒவ்வொண்ணாத் தீவிரமா ஆராய்ஞ்சு நிவர்த்திக்கணும். இந்தப் பிரச்சனையில கூட ஓரிரண்டு காரணங்களை ஏற்கனவே கண்டுபிடிச்சிருக்கோம், நிவாரணங்களையும் ஆராய்ஞ்சுக்கிட்டுத் தான் இருக்கோம். இப்ப நடுவில அரை வேக்காடா சொல்ல விருப்பமில்லை. கூடிய சீக்கிரம் அந்தக் காரணங்களை நிவர்த்திச்சுடுவோம்னு நான் நம்பறேன். ஆனா,அது அவ்வளவு எளிதில்லை. ஒரு காரணத்தை நிவர்த்திக்கப் போக வேற விதமான பிரச்சனைகள் எழலாம். அதையும் ஆராய்ஞ்சுதான் நிவர்த்திக்கணும் இல்லையா. அதுனால கொஞ்சம் பொறுமையாத்தான் பாக்கணும். என்ன சொல்றீங்க மார்க்?"

மார்க் தொங்கிய தோள்களுடனும் விழுந்த முகத்துடனும் சோகமாக ஆமோதித்தார். "பீட்டர் சொல்றதும் சரிதான்... ஆனாலும் நாம் சீக்கிரம் பிரச்சனையை நிவர்த்திக்க முடியாட்டா வெர்டியானுக்கு ரொம்பவே சோதனையாயிடும். இதே பேட்டரி நுட்பம் சில நாட்களுக்கு முன்னால சரியாத்தானே இருந்தது! அதுனால இடையில என்ன ஆச்சுன்னுதான் கண்டுபிடிக்கணும். அதுனாலதான் சூர்யாவை வரவழைச்சேன்" என்றார்.

பீட்டர் அவநம்பிக்கையுடன் தலையசைத்தார். "முடியலாம், முடியலாம்... சூர்யா பிரமாதமான யூகஸ்தர்னு நானே பார்த்தேனே! ஆனா இந்தத் தொழில்நுட்பத்தைப் பத்தி அவருக்கு ரொம்பத் தெரியாதில்லையா? அதுனால தொழில்நுட்பப் பூர்வமான காரணங்களை அவரால எப்படி சீக்கிரமே கண்டுபிடிக்க முடியும். கொஞ்ச நாளாகும்னு தோணுது."

கிரண் இடைபுகுந்தான். "அது அப்படி உங்களுக்குத் தோணுது... முன்னால கேஸ்களில அப்படித் தொழில்நுட்பத்துலயே தகிடுதத்தம் பண்ணி, சூர்யா கண்டுபிடிச்சு இப்பக் கம்பி எண்ணிக்கிட்டிருக்கறவங்களை வேணும்னா கேட்டுப் பாருங்க. வேற பாட்டுப் பாடுவாங்க" கிரணின் வார்த்தைகள், எப்போதும் புன்னகையுடன் மலர்ந்திருந்த பீட்டரின் முகத்திலும் கொஞ்சம் கடுப்பேற்றின.

"அதைப்பத்தி எனக்குத் தெரியாது. எங்க விஷயத்துலயும் யூ-பிங் தாக்கப்பட்டதைப் பத்தி சூர்யா நல்லா விசாரிச்சுக் கண்டுபிடிச்சிடலாம். ஒத்துக்கறேன். ஆனா இந்த பேட்டரி விஷயம் வேற மாதிரி."

இன்னும் எதோ சொல்லப்போன கிரணை சூர்யா கைநீட்டித் தடுத்தார். "அதைப்பத்தி விவாதம் அவசியமேயில்லை. பீட்டர் சொல்றது சரிதான் நான் ஒத்துக்கறேன். தொழில்நுட்ப ரீதியான காரணங்களை என்னால கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனா சில சமயம் வேற காரணங்களும் கலந்துதான் இந்த மாதிரிப் பிரச்சனைகள் உருவாகுது. அதைத்தான் நான் விசாரிக்கணும். ரொம்ப நன்றி பீட்டர். சரி, மார்க் நாம் உங்க நிதித்துறைத் தலைவரையும் பார்த்துப் பேசணும். அப்புறம் வேணும்னா பீட்டர் கிட்டத் திரும்பித் தொழில்நுட்பக் காரணங்களைப் பத்தி இன்னும் ஆழமாப் பேசலாம்."

மார்க், "அவர் பெயர் ரிச்சர்ட் கோல்ட்டன். சரி வாங்க. அவர் அறைக்குப் போகலாம்" என்று அழைத்துச் சென்றார்.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline