Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
நன்றே செய்யினும் இன்றே...
பிள்ளைக்கனியமுதே!
பறக்கும் அகதிகள்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeஅம்பாரம் துணியைச் சலவை யந்திரத்தில் கொடுத்து உலர்த்தி எடுத்து மடிக்க அமர்ந்தாள் செளந்தரம். துச்சாதனனுக்கே கை ஓய்ந்து போகுமளவுக்கு மலைபோல் குவிந்து கிடந்த துணிகளை ரகம் பிரித்து, அவரவர் உடைகளைத் தனித்தனியே மடித்து அடுக்குவதே ஒரு யாகம் போலிருக்கிறது. அன்றாடத் துணிகளைத் துவைத்தோமா, மொட்டை மாடியில் உலர்த்தி மடித்து வைத்தோமா என்பதெல்லாம் இங்கே கிடையாது. இதற்கும் ஒரு மாதிரி பழகிப்போய் பொழுதுபோக்குப் போலாகிவிட்டது.

கீழே தொலைபேசி ஒலி கேட்டது. மூச்சு வாங்க விரைந்துபோய் எடுத்தாள். 'டாலஸிலிருந்து பேசறேன். என்ன செளந்தரா, செளக்கியமா?' குரல் தெரிந்தது போலிருந்தது. யாரென்று ஊகிக்க முடியவில்லை. 'நீங்க யாரு?' என்று தயக்கத்துடன் கேட்டாள். 'நான்தான் மாதங்கி, ராஜ மாதங்கி. எப்படி என்னை மறந்தாய்?'

'மாதங்கியா? என்ன ஆச்சரியம்! எப்படி என் நம்பரைக் கண்டுபிடித்தாய்? எப்போ இங்கே வந்தாய்?' தானே ஆச்சரியக் குறியாகவும் கேள்விக் குறியாகவும் மாறிப் படபடவென்று அடுக்கினாள் செளந்தரம்.

'ரொம்ப சுலபம். இந்த மாசத் 'தென்றல்' பத்திரிகையில் வாசகர் கடிதங்கள் பகுதியில் செளந்தரநாயகின்ற பேரைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் அங்கு இருக்கிறார். அவர் மூலம் உன் நம்பர் கிடைத்தது. முயற்சித்துப் பார்ப்போமேன்னு கூப்பிட்டேன். குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்துவிட்டது' என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் அடுத்த முனையில்.

செளந்தரத்துக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. சிறுவயதுத் தோழி மாதங்கியின் மிகப் பிரசித்தமான பழமொழிதான் இது. மனம் நாற்பது நீண்ட ஆண்டுகள் பின்னோக்கிப் பயணம் செல்ல ஆரம்பித்தது.

நாற்பதாண்டு கால அனுபவங்களின் முகவரிகள் நெற்றியில் உழுதிருக்க, மந்த நடையில் வயதின் தளர்ச்சியுடன் தோழியைப் பார்க்கையில் பகீரென்றது.
செளந்தரத்தின் தகப்பனாருக்கு ஊர் சுற்றும் வேலை. அதனால் அவள் படிப்பும் வருஷம் ஓர் ஊராக மாறிக்கொண்டிருந்தது. ஒரு மாதிரியாக முதல் ஃபாரம் (ஆறாம் வகுப்பு) படிக்கும்பொழுது நிலையாக மதுரையிலேயே குடித்தனம் அமைத்து விட்டனர். புதுப் பள்ளி; அவள் முன்பு படித்த பள்ளிகளினின்றும் மாறுபட்ட சட்டதிட்டங்கள், கல்வித்தரம் யாவும் அவளுக்குப் பிரமிப்பு ஊட்டுவனவாக இருந்தன. மலங்க மலங்க விழித்துக்கொண்டு எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருந்த அவளுக்கு நேசமுடன் ஆறுதலையும் தைரியத்தையும் அளித்துக் கிட்டத்தட்டப் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டவள் ராஜமாதங்கி என்ற மாதங்கிதான். அவர்கள் வீடுகளும் அருகருகிலேயே அமைந்து விட்டதால் தூங்கும் நேரம் தவிர அவர்கள் சேர்ந்தே இருந்தார்கள். படிக்கும்பொழுது ஏதாவதொரு விடை சரியாக அமைந்து விட்டால் உடனே 'குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது' என்று சொல்வாள் மாதங்கி. தோழிகள் வட்டத்தில் அவளுக்குக் 'குருட்டுப் பூனை' என்றே செல்லப் பெயர் வந்துவிட்டது.

கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு நல்ல வரன் வந்ததென்று மாதங்கிக்கு மணமுடித்து விட்டனர் அவள் பெற்றோர். ஓரிரு ஆண்டுகள் கடிதப் போக்குவரத்து இருந்து பின் தொடர்பே விட்டுப் போய்விட்டது. செளந்தரமும் படிப்பை முடித்ததும் திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று சம்சாரக் கடலில் மூழ்கிப் போய் விட்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பின் அவளது குரல்! செளந்தரத்துக்கு உடனே அவளைச் சென்று பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று மனம் பரபரத்தது. சிறிது நேரம் நலம் விசாரித்த பின் மாதங்கியின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டாள்.

பிறகு வாரம் ஒருமுறையாவது இருவரும் பேசி இளமை நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாயிற்று.
மாதங்கிக்கு நான்கு மக்கள். அவர்கள் வெளி நாடுகளில் வாழ்வது, பத்தாண்டுகளுக்கு முன் அவள் கணவர் மறைந்தது போன்ற விவரங்கள் தெரிய வந்தது. நினைத்தவுடன் போகவும் பார்க்கவும் இங்கு முடியுமா? சந்தர்ப்பத்துக்காக இருவரும் காத்திருந்தனர்.

அந்த நாளும் வந்தது. 'சிங்கப்பூரில் இளைய மகனிடம் போக வேண்டும். வழியில் கலிஃபோர்னியாவில் உன்னுடன் தங்கி விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன்' என்று அவளிடமிருந்து செய்தி கிடைத்தது முதலே செளந்தரத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை.

விமான நிலையத்தில் மாதங்கியை ஒரு பூங்கொத்துடன் வரவேற்றாள் செளந்தரம். நாற்பதாண்டு கால அனுபவங்களின் முகவரிகள் நெற்றியில் உழுதிருக்க, மந்த நடையில் வயதின் தளர்ச்சியுடன் தோழியைப் பார்க்கையில் பகீரென்றது. தான் மட்டுமென்ன? அரைக்கண், கால் கண்ணால் பார்த்து, மனதொன்று நினைக்கக் கையொன்று செய்ய அசட்டுப் பட்டம் வாங்கிக்கொண்டு -- எல்லாம் காலதேவனின் சேஷ்டைகள்தாம். அவள் தங்கியிருந்த இரண்டு நாட்களும் தோழிகள் இருவரும் ஒரே பேச்சு, பேச்சு என்று ஓயவே இல்லை.

'நானும் இன்னும் இரண்டு வாரங்களில் சிகாகோவிலிருக்கும் பெரியவனிடம் போய் விடுவேன். அங்கு இரண்டு மாதங்களிருந்து விட்டு இந்தியா திரும்ப வேண்டும். அவருக்கு இந்தியாவை விட்டு வரப் பிடிப்பதில்லை. நான்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து ஆறுமாதம் இருந்துவிட்டுப் போகிறேன்' என்றாள் செளந்தரம்.

'என் கதையே விசித்திரமானது. நாலு பெற்று, வளர்க்கப்பட்ட சிரமம் பெரிதாகப் படவில்லை. இப்போதுதான் மிகவும் அவஸ்தைப்படுகிறேன். ஒரு பிள்ளை இங்கே, பெண் லண்டனில், இரண்டாமவன் ஆஸ்திரேலியாவில், கடைக்குட்டி மகன் சிங்கப்பூரில். சொன்னால் நம்பமாட்டாய்; நான் டாலஸ் வெயிலை முடித்து, லண்டன் குளிருக்கு நடுங்கி முடித்து சிங்கப்பூர் வெயிலை அனுபவித்துவிட்டு இந்தியாவில் போய் அப்பாடா என்று விழும்போது அங்கும் கத்திரி வெயில் வீணாகாது பார்த்து முடிக்கவும், மெல்போர்ன்காரன் அழைப்பு விடுப்பான். சரியாக ஆஸ்திரேலியாவிலும் சூரிய பகவானின் கடாட்சம்தான் கிடைக்கும். ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்ட பழக்க வழக்கங்கள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கேற்ப விதவிதமாக அனுசரித்தல் என்று குழப்பங்களின் மொத்த உருவமாகவே ஆகிவிட்டேன் நான். போதாததற்கு வருஷா வருஷம் இங்குமங்குமாகப் பறக்கவும் பயண ஏற்பாடுகள் செய்யவும் அலுப்பு ஒரு பக்கமென்றால், தெம்பும் குறைந்து வருகிறது. பிள்ளைகளோ அவரவர் இருக்குமிடங்களில் வாழத்தான் விரும்புகிறார்கள். எதை நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது' என்று நீளமாகக் கூறி முடித்தாள்.

இத்தகைய பிரச்னைகளை எண்ணும் பொழுது மாதங்கியைப் போன்ற, ஏன், தன்னையும் போன்ற, பெற்றோர்களை பறக்கும் அகதிகள் என்று ஏன் அழைக்கக் கூடாதென்று செளந்தரம் நினைத்துக் கொண்டாள்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

நன்றே செய்யினும் இன்றே...
பிள்ளைக்கனியமுதே!
Share: 




© Copyright 2020 Tamilonline