Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நினைவலைகள்
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...

ஆரோவில் நகரம்

83ல் நான் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராகப் பதவியேற்ற போது, பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத் தினருக்கும், அவர்களுக்குச் சொந்தமான ஆரோவில் நிறுவனத்துகும் இடையே தீவிர மோதல் போக்கு நிலவிவந்தது. பதவி ஏற்றதும் நான் இந்தப் போக்கை மாற்ற நினைத்தேன். ஆரோவில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒன்று ஆஸ்ரமத்துக்கும், மற்றொன்று ஆரோவில்லுக்கும் சாதகமாக இருந்தது. ஆரோவில் குழு தாய் நிறுவனத்திடமிருந்து இணைப்பை அறுத்துக் கொண்டு, சுயேச்சையாகத் தமது அமைப்பு விதிகளுக்கிணங்க நிர்வாகம் செய்ய விரும்பியது.

இரு குழுவினருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் செய்து வந்த ஆக்கபூர்வமான நற்பணிகள் நின்றுவிட்டன. அதேசமயம் அங்கு கொள்கைபிடிப்புள்ள ஒரு குழுவும் செயல்பட்டு வந்தது. அவர்கள் 'அன்னை' வகுத்துக் கொடுத்த லட்சியங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து, வேற்றுமைகளுக்குத் தீர்வு காண விரும்பினர். எனக்கும், ஆசிரமம், ஆரோவில் இவைகளுடன் லட்சியபூர்வமான கருத்தொற்றுமை உண்டு. ஆனால் அங்கிருந்த நிலவரம் அதிர்ச்சியைத் தந்தது. நீதிமன்றங்களில் இருபதுக்கும் மேற்பட்டவழக்குகள் விசாரணையில் இருந்தன. ஆரோவில்லியர்கள் தினமும் நீதிமன்றம் சென்று வந்தனர். இதனால் ஏராளமான சக்தியும் நேரமும் வீணாயின. குற்றவியல் வழக்குகள் விசாரணையில் இருந்ததால் நாட்டிலிருந்து வெளியேறவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்புபோல் கிராம முன்னேற்றப் பணிகளிலும் அவர்களால் ஈடுபட முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் சமாதானத்தீர்வு காண என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன். ஒருவர் மீது ஒருவர் தொடுத்துள்ள வழக்குகளைக் கைவிடுமாறு செய்தேன். அவர்கள் வழக்கம்போல் தங்கள் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள உதவி செய்தேன். இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகியான ஓஜா (ஓய்வு பெற்ற இந்திய காவல்துறை அதிகாரி) எனக்கு மிகவும் உதவினார். ஆரோவில் நிலவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். இளைஞர்களிடம் பாசமும், கட்டுப்பாடும் உள்ள தலைவராக நடந்து கொண்டார். ஆரோவில் நிர்வாகத்தில் ஜனநாயக முறைகளை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல் பல முன்னேற்றப் பணிகளிலும் கவனம் செலுத்தினார். இவ்வாறு, லட்சியப் பிடிப்புள்ள பல இளையோருடன் நான் நெருக்கமானேன். இவர்களில் பலர் பின்னாளில் பல சமூக மேம்பாட்டுப் பணிகளில் பங்கு கொண்டனர்.

ஆரோவில்லின் பணிகள் அளவற்றவை. அதில் குதிரை வளர்ப்பு முதல் உடல் நலத்தைப் பராமரித்தல், பள்ளிகள் நடத்துவது வரை அடங்கும். அங்கு சிற்பக் கலைஞர்கள், கணினிப் பொறியாளர்கள், தோட்டக் கலை வல்லுநர்கள், மண்வள ஆய்வாளர்கள், விவசாயப் பொருளாதார நிபுணர்கள், நீர்ப்பாசனப் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் எனப் பலதுறையினர் இருக்கின்றனர். அவர்களில் பெண்களும் உண்டு.

ஆண்ட்ரே என்ற பிரெஞ்சுக்காரர் நடத்தி வரும் 'நவீன படைப்புகள்' என்ற தொழிற் சாலை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. கிராமப்புற இளைஞர்களுக்கு கைத் தொழில்களைக் கற்றுக் கொடுத்த அவர், அவர்களிடமிருந்து சிற்பம், மரத்தில் செதுக்கு வேலை ஆகியவை கற்பதில் ஈடுபட்டார். கைவினைஞர்கள் கள்ளக்குறிச்சியிலிருந்து, ஆரோவில்லில் வசிக்க அழைத்து வரப்பட்டனர். ஆண்ட்ரே தலைசிறந்த 'கலை கைத்தொழில் பள்ளி'யை உருவாக்கினார். முதன்முறையாக பரம்பரை ஸ்தபதிகள் அல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு (தலித்துகள் உள்பட) சிற்பத் தொழில் கற்பிக்கப்பட்டது.

இன்று ஆரோவில் அநேகமாக உலகத்தின் பல பகுதிகளின் பிரதிநிதித்துவமான உண்மையான 'சர்வதேச நகரம்' ஆகி விட்டது. அன்னையின் கனவு உண்மையாகி விட்டது என்றால் அது மிகையில்லை.
தமிழ்நாட்டில் வறட்சி

குளங்களை ஆக்கிரமித்ததாலும், நீர் ஆதாரங்களில் வீடுகள் கட்டியதாலும், நிலத்தடி நீரைப் பெருமளவு உறிஞ்சி விட்டதாலும்தான் இந்த நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக நான் பதவியேற்ற போது தமிழ்நாடு மிகக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதுவரை தமிழ்நாடு அப்படி ஒரு நிலைமையை எதிர்கொண்டதில்லை. என் கணவர் மருத்துவர் ராஜ்குமார் சென்னையிலிருந்து தாம்பரம், திண்டிவனம், பாண்டிச்சேரி வழியாக என்னைக் கடலூருக்கு காரில் அழைத்துச் சென்றார். என் இதயம் முற்றிலுமாக உடைந்து விட்டது போலிருந்தது. பாதை முழுவதிலும் ஒரு புல், பூண்டைக்கூடக் காணோம். பசுமையுடன் செழிப்பாகக் காட்சி அளிக்கும் நெல் வயல்கள் வறண்டு பாழ்பட்டுக்கிடந்தன. நான் கடலூருக்கு வறட்சிப் பணிகளை நிர்வகிக்கும் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவே சென்றேன். நான் தலைவர் நாற்காலியில் அமர்ந்த அடுத்த வினாடியே வறட்சிப் பணிகளின் சுமை என் தலையில் விழுந்தது. வறட்சிப்பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மக்களுக்குக் குடிநீரும் உணவுப் பொருள்களும் வழங்கியாக வேண்டும். மனிதசக்தி, இயந்திரங்கள், பணம் இவற்றைச் சேகரித்தாக வேண்டும் என்பன முக்கிய பணிகளாக இருந்தன.

திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் தோண்டிய குழாய்க் கிணறுகளில் நீர் வரவில்லை. தினமும் குடிநீர் வேண்டி காலிப்பானை உடைக்கும் பெண்கள் போராட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதிலுமிருந்து குடிநீர், உணவுப்பொருள்கள் இல்லாமை பற்றி தினமும் வரும் ஏராளமான கடிதங்களைப் படித்து ஆவன செய்ய வேண்டும். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குக் கிணறு தோண்டும் சாதனங்ககளை அனுப்பி, உடனடியாக வேலையை ஆரம்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை வழங்கப் புதிய கடைகளைத் திறந்து வைத்தோம். மீதி நேரம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு (அரசு மாநிலத் தலைமையகம்) நிதி, இயந்திரங்கள், உணவு பொருள்கள் இவைகளை வழங்கக் கோரி தந்தி அனுப்புவதில் கழிந்தது. அடுத்து மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கு நீர் மற்றும் உணவுப் பொருள்களை லாரிகள், மாட்டுவண்டிகள், சைக்கிள்கள் மூலம் அனுப்பி வைப்பதில் கழிந்தது. இந்தச் சமயத்தில் சென்னை நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை மிகக் கடுமையாகி, முதன் முதலாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கங்களி லிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்ப வேண்டியிருந்தது.

குளங்களை ஆக்கிரமித்ததாலும், நீர் ஆதாரங்களில் வீடுகள் கட்டியதாலும், நிலத்தடி நீரைப் பெருமளவு உறிஞ்சி விட்டதாலும்தான் இந்த நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். மரபு வழியான சிலமுறைகளைக் கையாண்டு தண்ணீரைப் பராமரிக்கும் வழியைச் சீரமைத்தோம். நூற்றுக்கணக்கில் குளங்களை ஆழப்படுத்தினோம். வாய்க்கால்களில் மணலை அகற்றினோம். இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளைத் தோண்டினோம். பலநூறு திறந்த கிணறுகளை வெட்டினோம். இவை அனைத்தையும் ஓராண்டு காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டியிருந்தது. காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பினால் வறட்சிப் பணிகள் முன்னேற்றத்தைப் பார்வையிட்டு, பின் வேலைவாய்ப்புப் பணிகளை அறியச் சென்றுவிட்டு நள்ளிரவில்தான் வீடு திரும்ப இயலும். சில நேரங்களில் என் காலணிகளைக் கழற்றாமலேயே படுக்கையில் சாய்ந்து விடுவேன். தலைமுடியெங்கும் புழுதியும் தூசியும் படிந்திருக்கும். பல மாதங்களுக்கு தலைமுடியை அலசிச் சுத்தம் செய்ய நேரமே இருந்ததில்லை. இதனால் என் தலைமுடி வெகுவாக உதிர்ந்துவிட்டது. இதை என் தாயார் மன்னிக்கவே இல்லை.

எனது வாழ்க்கையில் இந்த வறட்சிக் காலம் மிகவும் நெஞ்சை உருக்கிய காலகட்டமாகும். சில சமயங்களில் மக்களுக்கு குடிநீர், உணவுப்பொருள்கள் போன்றவை கிடைப்பதில் தாமதமாகி இருக்கும். ஆனாலும் மக்கள் எங்களை நம்பினார்கள். நாங்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்த அனைத்துச் சிறுசிறு வேலைகளையும் பாராட்டினார்கள். இப்பணியில் எனக்கு வலுவூட்டிய இரண்டு நபர்களை நான் மறக்கவே முடியாது. ஒருவர் 'வறட்சி தாசில்தார்' என்னுடைய வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பில் இருந்தவர். (அவர் தூங்கியே இருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்) மற்றொருவர் விழுப்புரம் பொதுப்பணித்துறைப் பாசன டிவிஷனல் பொறியாளர். இவர்தான் மாவட்டத்தின் மிக முக்கிய உயர்மட்ட வறட்சிப்பணிகளை நிர்வகித்தவர். பொதுப்பணித்துறையால் எதையெதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். வறட்சிப் பணிகளைப் பார்வையிட வந்திருந்த மத்திய, மாநில அரசுப் பிரமுகர்களின் பாராட்டுகளையும் இவ்வதிகாரிகள் பெற்றனர்.

1984 குடியரசு தினத்தன்று இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் தங்கப்பதக்கம் பரிசளித்த போது எனது உள்ளம் ஒருவினாடி பூரித்துப் போனது. இவர்களைப் போன்ற மனிதர்கள் இல்லாதிருந்தால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இத்தகைய பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கவே முடியாது. அவர்களுக்கு என் நன்றிகள்!

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline