Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
நாடகம் போடும் மின்வேதியியல் ஆய்வாளர்: டாக்டர் வெங்கடேசன்
'நல்லாப்பிள்ளை பாரதம்' ஆய்வு செய்யப்பட வேண்டும் - பேராசிரியர் இரா. சீனிவாசன்
- கேடிஸ்ரீ|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeசென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கணம், நவீன இலக்கியம், அழகியல், நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். சிறுவயதில் தனது ஊரில் நடைபெற்ற திரெளபதியம்மன் திருவிழா, இராமநவமி ஆகியவற்றைப் பார்த்து பாரதம், இராமாயணம் ஆகிய காவியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தற்போது 'நல்லாப்பிள்ளை பாரதம்' என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். ஐந்திலக்கணம், இலக்கண மரபுகள் ஆகிய நூல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களையும் எழுதியுள்ளார். தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் கருத்தரங்குகளில் கலந்துகொண்ட அனுபவம் இவருக்கு உண்டு.

இதோ முனைவர் சீனிவாசன் பேசுகிறார்...

கே: 'நல்லாப்பிள்ளை பாரதம்' என்ற நூலைப் பதிப்பித்திருக்கிறீர்கள். அதைப்பற்றிய விவரங்களைக் கூறுங்களேன்...

ப: 'நல்லாப்பிள்ளை பாரதம்' 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கவரைப்பேட்டை என்ற ஊரை அடுத்து வரும் கீழ்முதலம்பேடு என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர். கருணீகர் சமூகத்தைச் சேர்ந்தவர். அன்றைய கால கட்டத்தில் இவர்கள் சமூகத்தினர் படித்த சமூகமாக விளங்கினர். அவர்களிடமிருந்து சில பெரிய புலவர்களும், சில பெரிய ஆளுமைகளும் தோன்றினர். அதில் குறிப்பிடத்தக்கவர் வள்ளலார் என்று அழைக்கப்படுகிற இராமலிங்க அடிகளார். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேறை கவிராச பண்டிதர் பிள்ளைத்தமிழ், உலா போன்ற இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். இவரை அடுத்து நல்லாப்பிள்ளையை முக்கியமானவராகச் சொல்லலாம். வடமொழி மகாபாரதத்தின் 18 பருவங்களையும், 131 சருக்கங்களில், ஏறக்குறைய 14 ஆயிரம் தமிழ்ச் செய்யுட்களில் விரிவாகப் பாடியிருக்கிறார்.

இவரை ஆதரித்தவர் செங்காடு வீரராகவ ரெட்டியார். அவரது ஆதரவில் நல்லாப் பிள்ளை நூல் இயற்றி, இருவரும் சென்று காஞ்சிபுரத்தில் உள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் அதனை அரங்கேற்றம் செய்ததாக இந்த நூலில் உள்ள சில செய்யுள்களின் மூலம் நமக்கு தெரிகிறது.

கே: தமிழில் பாரதம் பற்றிய குறிப்புகள் எந்தக் காலத்திலிருந்து காணக் கிடைக்கின்றன?

ப: சங்ககாலம்தொட்டே பாரதக் கதையைப் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களில் தொகைநூல்களில் சிலவற்றுக்கு பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற கவிஞர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். ஆனால் அவரது பாரதம் நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது புறத்திரட்டு, நச்சினார்கினியார் உரை முதலிய சில உரைகளில் அவர் பாடிய பாரதத்தின் சில பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் நந்தி வர்ம பல்லவனின் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் என்பவர் பாரத வெண்பா என்ற நூலை இயற்றியிருக்கிறார். இந்த நூல் செய்யுளும், உரைநடையுமாக இருக்கும். இதனைச் ‘சம்பு காவியம்’ என்று சொல்வார்கள். இந்த நூலில் செய்யுட்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. இடையிடையே கம்பீரமான உரைநடை உண்டு. உரைநடையில் மட்டும் ஆங்காங்கே வடமொழிச் சொற்கள் கலந்திருக்கும். செய்யுள் முழுக்க முழுக்கச் செந்தமிழில் இயற்றப்பட்டுள்ளது. மிக இனிய, எளிய, கம்பீரமான நடையில் உள்ள இந்த நூலைத் தமிழில் கிடைக்கும் முதலாவது பாரத நூல் என்று சொல்லலாம். இது நல்லாப்பிள்ளை பாரதத்துக்கு ஏறத்தாழ 900 ஆண்டுகள் முற்பட்டது. அந்த நூலும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. உத்தியோக பருவம், பீஷ்ம பருவம், துரோண பருவத்தில் 13ஆம் போர்ச் சருக்கத்தில் முதல் பகுதி வரை - அபிமன்யு இறப்பது வரை - கிடைக்கிறது.

இதற்குப் பின் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரர் (வைணவர்கள் இவரை வில்லிபுத்தூர் ஆழ்வார் என்று சொல்வார்கள்) ஒரு பாரத நூலை இயற்றியிருக்கிறார். ‘வில்லிபாரதம்’ என்று அதனை சொல்வார்கள். இவருக்குப் பின் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை பாரதத்தை இயற்றினார்.

கே: வில்லிபாரதம் பற்றி உங்கள் பார்வையில்...

ப: வில்லிபுத்தூரர் பாரதத்தை மிகவும் சுருக்கமாக இயற்றியிருக்கிறார். 18 பருவங்களில் 10 பருவங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதிலும் குறிப்பிட்ட கதைப் பகுதிகளை மட்டுமே பாடியிருக்கிறார். கிளைக்கதைகள் பெரும்பாலும் அந்த நூலில் இருக்காது. பாரதத்தின் மிக முக்கியமான பகுதி கிளைக்கதைகளும், அவற்றில் வரும் புராணக்கதைகளும்தான். ஆனால் அந்தப் பகுதிகள் முழுவதையும் விட்டுவிட்டு வில்லிபுத்தூரர் பாடியிருக்கிறார். ஆனால் அவர் பாடியிருக்கின்ற வரை அது மிகச்சிறந்த நூலாக விளங்குகிறது. பொருள் நயம், சொல்நயம், அணிநயம் முதலிய நயங்களிலும் காப்பியத்தை நடத்திக் கொண்டு செல்வதிலும் வில்லிபுத்தூரர் மிகச் சிறந்த கவிஞராக விளங்குகிறார்.

சந்தக் கவிதைகளைப் பாடுவதில் அருண கிரிநாதருக்கு இணையாகச் சொல்லத் தக்கவர் வில்லிபுத்தூரர். இரண்டு வகைகளில் வில்லிபுத்தூரரைத் தமிழ்ச் சமூகம் புறக்கணித்துள்ளது. முதலாவது, அவரது நூல் இன்றுவரை அதற்குரிய அங்கீகாரத் தைப் பெறாமல் இருப்பது. இரண்டாவது, யாப்பைப் பொறுத்தவரையில் அவரது விருத்த வகைகள் இதுவரை தமிழில் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்பது. ஆனாலும், பாரதம் என்று சொல்கிறபோது பெரும்பாலானவருக்கு வில்லிபாரதம் மட்டுமே நினைவில் வரும்.

வில்லிபுத்தூரர் பத்துப் பருவங்கள் மட்டும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 4000 செய்யுட்களுக்குள் பாரதக் கதையை அடக்கிவிட்டார். சுருக்கம் என்கின்ற ஒன்றுதானே தவிர மற்றபடி வில்லிபுத்தூரரின் நூல் மிக அருமையானது. அவருக்கு முன்பு தமிழில் திருத்தக்கதேவர், கம்பர் முதலியவர்கள் பெருங்காப்பியங்கள் செய்து காப்பிய நடையை உருவாக்கி இருந்த போதிலும் வில்லிபுத்தூரர் அந்த நடையை விட்டு, சுருக்கமாக இயற்றியிருக்கிறார்.

கே: நல்லாப்பிள்ளை பாரதம் முதன் முதலாக எப்போது பதிப்பிக்கப்பட்டது?

ஏறத்தாழ 100 ஆண்டுகளாக பாரத நூல் அச்சில் இல்லாததால் தமிழில் பாரதம் பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. ஏறத்தாழ 14 ஆயிரம் பாடல்களில் உள்ள ஒரு பேரிலக்கியத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவாக இருப்பது மிக வியப்புக்குரியது.
ப: 1888 ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வந்தது. முதல் பதிப்பாசிரியர் சிதம்பரத்தைச் சேர்ந்த சாமிநாதய்யர் என்பவர். அவர் நூலாசிரியர் பற்றிச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். தமிழில் பாரத நூல் முழுமையாக இல்லாத காரணத்தால் வீரராகவ ரெட்டியார் நல்லாப்பிள்ளையை இதில் ஈடுபடுத்தியதாகவும் சாமிநாதய்யர் கூறியிருக்கிறார். தமது காலத்துக்கு ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இந்த நூலைப் பற்றிய செவிவழிச் செய்தி களை அவர் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.

நல்லாப்பிள்ளை வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. அவருடன் கற்ற மாணவர் முருகப்பிள்ளை என்பவர், நல்லாப்பிள்ளை பாரதத்தை இயற்றுவதை அறிந்து, இந்தப் பெரிய இதிகாச நூலில் தன்னுடைய பங்கும் சிறிது இருக்க வேண்டும் என்று எண்ணி, நல்லாப்பிள்ளையை சந்தித்து, தன்னுடைய எண்ணத்தை வெளிப் படுத்தினார். அவரின் கோரிக்கையை ஏற்ற நல்லாப்பிள்ளை, இதில் சில சருக்கங்களில் முருகப்பிள்ளை பாடிய செய்யுள்களைச் சேர்த்துள்ளார். அந்த விவரமும் இந்தப் பதிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நல்லாப்பிள்ளை தனது பாரதத்தை இயற்றும்போது வில்லிபாரததத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். இதனால் வில்லிபுத்தூரர் பாடாத இடங்களையும், அவர் சுருக்கமாகப் பாடிய இடங்களையும் சேர்த்து எழுதி இந்த நூலை முழுமைப்படுத்தினார். ஆதி பருவம், ஆரணிய பருவம் முதலிய பருவங்களில் வரும் கிளைக்கதைகள் அனைத்தையும் வில்லிபுத்தூரர் பாடவில்லை. அவற்றை விரிவாக வடமொழி நூல்களில் உள்ளபடி நல்லாப்பிள்ளை பாடியிருக்கிறார்.

கே: நல்லாப்பிள்ளை பாரதத்தின் சிறப்புகள் பற்றிச் சொல்ல முடியுமா?

ப: சிறப்பு என்று சொல்லப்போனால் இவர் தனது நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பாக இயற்றவில்லை. கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அல்ல. தமிழ் மரபுக்கேற்ப பல இடங்களில் கம்பர் மாற்றியிருக்கிறார். கம்பர் இராமாயணத்தில் எந்தெந்த மாற்றங்களை செய்தாரோ, அதே போன்ற மாற்றங்களைத் தமிழில் பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை இந்த மூவருமே திட்டமிட்டுச் செய்திருக்கின்றனர்.

குறிப்பாகச் சிலவற்றைச் சொல்லலாம். அரவான் பலியை இதில் சேர்க்கமுடியும். தமிழகப் போர்முறையில் களபலி கொடுத்து விட்டுப் போருக்குச் செல்வது ஒரு மரபாகச் சங்ககாலம் முதல் இருந்து வருகிறது. அரசனுடைய நலனுக்காகத் தன்னைப் பலியிட்டுக் கொண்டவர் களுக்கான நடுகற்களை இன்றும் தமிழகத்தில் நாம் பார்க்கிறோம். அதுபோல் களபலி என்ற ஓர் அம்சத்தைத் தமிழ் பாரதங்களில்தான் காணமுடிகிறது. அருச்சுனனுக்கும், நாக கன்னிக்கும் பிறந்த மகன் அரவான். இவனைக் களபலியாக கொடுத்துதான் பாண்டவர்கள் போரை ஆரம்பிக்கிறார்கள் என்றே தமிழ் பாரதக் கதை கூறுகிறது. வடமொழியில் அரவான் இயல்பாகப் போரிட்டு எட்டாம் நாள் போரில் இறந்து போவதாக வருகிறது. இதுபோல் மிக முக்கியமான இன்னொரு பகுதி சக்கர வியூகத்துக்குள் அபிமன்யு நுழைந்தவுடன், மற்ற பாண்டவர்கள் துணைக்கு வராதபடி சயத்ரதன் (துரியோதனுடைய மைத்துனன்) தனது வீரத்தால் மற்றவர்கள் உள்ளே வரவிடாமல் தடுப்பதாக வடமொழி நூல்களில் இருக்கிறது. ஆனால் தமிழ் பாரதத்தில் சயத்ரதன் போரிட்டுத் தடுத்தான் என்றில்லாமல் சிவபெருமானின் கொன்றை மாலையை வழியில் போட்டு, பாண்டவர்கள் முன்னேறி வராதபடி தடுத்தான் என்று இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் சிவபெருமானுக்குக் கொடுத்திருக்கும் உயர்ந்த இடத்தை இவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதுபோல் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கே: நல்லாப்பிள்ளை பாரதம் வேறு பதிப்புகள் கண்டதுண்டா?

ப: 1911ஆம் ஆண்டில் சுந்தரநாதபிள்ளை என்பவர் இரண்டாம் பதிப்பொன்றைக் கொணர்ந்தார். அதற்குப் பின் இந்த நூல் அச்சேறவில்லை.
Click Here Enlargeகே: இராமாயணத்துக்குக் கிடைத்த ஏற்றம் பாரதத்துக்குத் தமிழில் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: கம்பராமாயணம் மிகவும் புகழ்பெற்ற நூல். கம்பரின் கவித்திறனால் அந்த நூல் சிறப்படைந்துள்ளது. தமிழ் நூல்களிலேயே அதிகச் சுவடிகள் கிடைக்கின்ற நூல் கம்பராமாயணமாக இருக்கிறது. ஆனால் இரண்டு பெரிய இதிகாசங்களில் இராமாயணத்துக்குக் கிடைத்த ஏற்றம் பாரதத்துக்குத் தமிழில் இல்லை என்பதற்கு முக்கியக் காரணம் நல்லாப்பிள்ளை பாரதம் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக அச்சில் இல்லாததுதான் எனலாம். ஆனால், பல ஊர்களிலும் இருக்கும் திரெளபதி அம்மன் கோவில்களில் திருவிழா கொண்டாடப்படுவதால் எல்லா மக்களும் நன்கறிந்த கதையாக இருக்கிறது.

கே: பாரதவிழாவின் நடைமுறைகள் பற்றிச் சில வார்த்தைகள்...

ப: இந்தவிழா ஊர் மக்களின் வசதிக் கேற்றவாறு 11 முதல் 93 நாட்கள் வரை நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 5 அல்லது ஐந்தரை மணி வரை மகாபாரதச் செய்யுள்களை ஒருவர் இசையோடு பாட, இன்னொருவர் பிரசங்கம் செய்வார். இரவில் பாரதக் கதையைக் கூத்தாக நடிப்பார்கள். இந்த விழா அறுவடை முடிந்து கோடைக்காலத்தில் நடைபெறும். இன்றுவரை தமிழ்நாட்டில் நல்லாப்பிள்ளை பாரதம், வில்லிபாரதம் அல்லது பாரதக்கதை இருப்பதற்கு திரெளபதி அம்மன் கோயில்கள்தாம் முக்கியக் காரணம்.

கே: நீங்கள் நல்லாப்பிள்ளை பாரதத்தை அச்சேற்றக் காரணம்...

பா: ஏறத்தாழ 100 ஆண்டுகளாக பாரத நூல் அச்சில் இல்லாததால் தமிழில் பாரதம் பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. ஏறத்தாழ 14 ஆயிரம் பாடல்களில் உள்ள ஒரு பேரிலக்கியத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகக் குறைவாக இருப்பது மிக வியப்புக்குரியது. இரண்டாவதாக, இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை அதாவது 1930, 1940 வரை நல்லாப்பிள்ளை பாரதம் மிகவும் பிரபலமான நூலாக விளங்கியது. இலங்கையில் இருந்த பல புலவர்கள் இந்த பாரத நூலை மேற்கோள் காட்டியுள்ளனர். பாவலர் சரித்திர தீபகம், அபிதான சிந்தாமணி முதலிய பல நூல்களில் நல்லாப்பிள்ளை பாரதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் பின்னர் வரவர நல்லாப்பிள்ளை பாரதம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதே அரிதாக இருக்கின்றன. ஏன் இந்தச் சூழல் வந்தது என்று யோசிக்கும் போது இந்த நூல் அச்சில் இல்லாததே காரணம் என்று தெரிந்தது. இரண்டாவது, இருக்கிற அச்சுப் பிரதியை எளிதாகப் படிக்க முடியவில்லை.

எனவே தான் இந்த நூல் பதிப்பில் நான் ஈடுபட்டேன். நான் இப்போது இந்த நூலில், ஆதி பருவம் தொடங்கி சாந்தி பருவத்தில் தருமன் முடிசூடுகின்ற ‘திருமுடி புனைந்த சருக்கம்’ வரை 98 சருக்கங்களில் 10,254 பாடல்களைப் பதிப்பித்திருக்கிறேன். இதற்கு பின்னும் இந்த நூல் செல்கிறது. அதாவது 18 பருவங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த அளவில் என்னுடைய பதிப்பை நிறுத்திக் கொண்டதற்குக் காரணம், தமிழ்நாட்டில் இருக்கும் பாரதவிழாக்கள் அனைத்தும் தருமன் முடிசூடுவதுடன் நிறைவு பெறு கின்றன என்பதால்தான். அடுத்த பகுதியைப் பின்னர் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.

கே: இந்த நூலில் நீங்கள் செய்திருக்கின்ற முக்கியமான பணிகள் என்ன?

ப: முக்கியமாகப் பொருளடைவு கொடுத்திருக்கிறேன். இதன் மூலம் இந்த நூலின் கதைப்போக்கை அறிந்து கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு சருக்கத்திலும் எந்ததெந்த செய்யுளில் எந்தவிதமான பொருள் அமைந்திருக்கிறது என்பதை செய்யுள் வாரியாகக் கொடுத்திருக்கிறேன். ஓரளவு தமிழ் படித்தவர்கள்கூட இந்த நூலை எளிதாகப் படித்து விடலாம்.

பாரதத்தில் ஏறத்தாழ 800 பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. மூலபாரத நூல், கிளைக்கதைகள் மட்டுமல்லாமல் எடுத்து மொழிதலாக முழு இராமாயணமும் கிட்டத்தட்ட 480 செய்யுள்களில் இந்த நூலில் உள்ளடங்கி இருக்கிறது.
இரண்டாவதாக ஒவ்வொரு பாடலையும் சந்தி பிரித்து கொடுத்திருக்கிறேன். ஏறத்தாழ உரைநடையில் அமைந்த ஒருநூலைப் போல கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், சொற்கள் பழமையானவையாக இருக்கும். அமைப்பு முறையை ஏறத்தாழ இன்றைய உரைநடை மாதிரி மாற்றியிருக்கிறேன். ஆனால் செய்யுளை மாற்றவில்லை.

அடுத்து, பாரதத்தில் ஏறத்தாழ 800 பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. மூலபாரத நூல், கிளைக்கதைகள் மட்டுமல்லாமல் எடுத்து மொழிதலாக முழு இராமாயணமும் கிட்டத்தட்ட 480 செய்யுள்களில் இந்த நூலில் உள்ளடங்கி இருக்கிறது. இந்தப் பாத்திரங் கள் பற்றிய விளக்கம் இந்தப் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து சந்திரகுல அரசர்களுடைய தலைமுறை வரிசைமுறையை - 42 தலை முறைகள் - அரசன், மனைவி, பிள்ளைகள் இதுபோன்று தலைமுறை வாரியாகக் கொடுத்திருக்கிறேன். அதற்கு அடுத்து முக்கியமாக கெளரவர்கள் 100 பேரின் பெயர்களைக் கொடுத்திருக்கிறேன். இந்த பெயர்களை நல்லாப்பிள்ளை பாரதம், வசந்த காவியம் என்ற நூல்களில் இருந்தபடி பெயர்களைக் கொடுத்திருக்கிறேன்.

56 நாடுகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன்.

18 நாட்கள் போரில் எந்தெந்த வியூகங்கள் வகுத்தார்கள் என்கிற பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். கிளைக்கதைகள், எந்தப் பருவத்தில் வருகிறது, எந்த சருக்கத்தில் வருகிறது, எந்தப் பாடலிலிருந்து எந்தப் பாடல் வரை கதை அமைந்திருக்கிறது போன்ற விவரங்களை அகர வரிசையில் கொடுத்திருக்கிறேன். நல்லாப்பிள்ளை வில்லிபாரதம் முழுவதையும் எடுத்தாண்டார் என்பதால், எந்தச் சருக்கத்தில் வில்லி பாரதத்தின் எத்தனைப் பாடல்களை எடுத்தாண்டார் என்கிற விவரத்தைக் கொடுத்திருக்கிறேன். இறுதியாக ‘அண்ட கோள விலாசம்’ என்று ஒரு பகுதி உண்டு. பீஷ்ம பருவத்தில் ‘அண்டகோச அடுக்கு உரைத்த சருக்கம்’ என்று ஒரு சருக்கம் உண்டு. இதில் அண்டத்தின் அமைப்பு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தார்களோ, அப்படியே அந்தப் பகுதி நல்லாப்பிள்ளை பாரதத்தில் இடம் பெற்றுள்ளது. அதை விளக்குவதற்காக இரண்டு சிறிய படங்களைப் போட்டு விளக்கமும் கொடுத்திருக்கிறேன்.

கே: இந்த நூலுக்கான பணி எப்போது தொடங்கியது?

ப: 2001 ஏப்ரல் மாதத்தில். என் நண்பர் கருணாநிதி என்னிடம் நல்லாப்பிள்ளைப் பாரதத்தை பதிப்பிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உடன்பட்டேன். பணியை முடிக்க ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஆயின. நான் கல்லூரி ஆசிரியர் பணியில் இருப்பது ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்ற சூழலை எனக்குக் கொடுத்தது. எனக்கு 1994 ஆம் ஆண்டு முதல் கணினிப் பயிற்சி உண்டு. அது நூலை உருவாக்க மிகவும் உதவியது.

கே: எத்தனை பக்கங்கள் கொண்டது இந்நூல்?

ப: மொத்தம் 1608 பக்கம். இந்த நூலை அச்சிட மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செலவில் ஒரு பகுதியை மானியமாகக் கொடுத்து உதவியது. இது என்னுடைய சொந்தப் பதிப்பு. தொடர்ந்து பாரதம் பற்றிய ஆய்வுகளிலும், இந்த பாரதத்தினுடைய பிற்பகுதியை பதிப்பிப்பதிலும் ஈடுபட இருக்கிறேன்.

நல்லாப்பிள்ளை பாரதம்

பதிப்பு :
முனைவர் இரா.சீனிவாசன்
இணைப் பேராசிரியர்
மாநிலக்கல்லூரி,
சென்னை - 600 005

வெளியீடு:
கலைக் கோட்டம்
12, புதுத் தெரு,
விநாயகபுரம், அம்பத்தூர்,
சென்னை - 600 053
மின்னஞ்சல்: vasan1964@yahoo.com

சந்திப்பு : கேடிஸ்ரீ
More

நாடகம் போடும் மின்வேதியியல் ஆய்வாளர்: டாக்டர் வெங்கடேசன்
Share: 




© Copyright 2020 Tamilonline