Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
ஹரிமொழி
ரௌத்திரம் பழகு - பாகம் 2
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeபல சமயங்களில் நாம் பேசியிருக் கிறோம்' என்று தொடங்கினார் நண்பர், காப்பிக் கோப்பையைக் மேசையில் வைத்தபடி. 'வள்ளுவர் சொல்வதில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் சில குறட்பாக்கள் இருப்பதைப் பற்றி'.

'ஆமாம். உண்மையில் அவை முரண்கள் அல்ல, நாம் அவற்றைப் புரிந்துகொள்ளும் விதம், அணுகுமுறை போன்றவற்றில் மேற்கொள்ள வேண்டிய விதங்களையும் குறித்தும் பேசியிருக்கிறோம்' என்று நான் தொடர்ந்தேன்.

'அதாவது, ஓரிடத்தில் 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு' (குறள் 423) என்று சொல்வார். 'யார் சொல்கிறார் என்பது முக்கியமில்லை; அதன் உண்மையான பொருளை உணர்வதே அறிவின் இலக்கணம்' என்று வரையறை செய்வார். அவரே வேறோரிடத்தில் 'கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடையார்' (குறள் 404) என்று சொல்லி, 'கழிய நன்று' அதாவது மிகமிக நல்லதே என்றாலும் கல்லாதவன் சொல்லை அறிவுடையார் ஏற்க மாட்டார்கள் என்று பொருள் தொனிக்கும்படியாகவும் சொல்லு வார். 'யார்யார் வாய்க் கேட்பினும்' -- 'யாராக இருந்தாலும் சரி, எத்தகையவனாக இருந்தாலும் சரி' என்ற பிறகு, கற்றவன், கல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கே இடமில்லாமல் போகிறது. பிறகு ஏன் கல்லாதானை இந்தக் குறள் விலக்குகிறது? அது அப்படியல்ல என்பதை உணர வேண்டுமானால் இந்த இரண்டு குறட் பாக்களையும் சமன்செய்து சீர்தூக்கினா லன்றி, அறிவுக்கும் ஒட்பத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தாலன்றி, வள்ளுவ ருடைய இதயத்தைக் காண்பது நடவாத செயல்; இங்கேதான் பல உரையாசிரியர்கள் தடுக்கி விழுகிறார்கள்' என்றும் பேசியிருக் கிறோம். இந்தக் குறளைச் சற்றுப் பின்னர் விவாதிப்போம். அதற்கு முன்னால், நாம் திருக்குறளை அணுகவேண்டிய முறைகளாக நமக்கு நெறிப்படுத்திக் கொண்டோமே, அதைக் கொஞ்சம் நீயே சொல்லு' என்று நண்பர் கொக்கி போட்டார்.

புன்னகைத்தபடி தொடர்ந்தேன். 'முதல் நெறிமுறை. வள்ளுவருக்கு வள்ளுவர்தான் அகராதி. ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது ஆட்சியை வேறோர் இடத்தில் விளக்கிச் சொல்லியிருப்பார். அது எங்கே இருக்கிறது என்பதைத் தேடிப் பிடிக்க வேண்டும்.'

'உதாரணமாக?'

'இப்போ, 'விளிந்தாரில் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகுவார்' (குறள் 142) 'மற்றவனுடைய மனைவியை இச் சிப்பவனும் உயிரற்றுக் கிடக்கும் பிணமும் வேறுவேறு அல்ல. அது செத்த பிணம். இது உயிருள்ள பிணம்' என்கிறாரே, அதில் 'யார் இந்தத் தெளிந்தார்' என்று விளங்கிக் கொள்ள வேண்டுமானால், இந்தச் சொல் வேறெந்தக் குறளில் பயன்பட்டிருக்கிறது என்று தேட வேண்டும். 'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்' (குறள் 510) என்ற இடத்தில் 'தெளிந்தான்' எனப்படுபவன் யார் என்பதற் கான பொருள் வரையறை கிடைக்கிறது. அதை இங்கே கொண்டுவந்து பொருத்திக் கொண்டால், 'தெளிந்து கெண்டான்' என்பவன் எப்படி ஐயத்துக்கே இடம் கொடாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், 'தெளியப்பட்டான்' என்பவன் இன்னமும் மனித மன விகாரங்களுக்கும், பலவீனங்களுக்கும் ஆட்படக் கூடியவனே என்பதையும், அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேவர் சொல்கிறார் என்பது விளங்கும். வள்ளுவனுக்கு வள்ளுவனே அகராதி என்பது நம் அணுகுமுறையில் முதன்மை யானது.

'சரி. அடுத்தது? எல்லாத்தையும் இப்பவே சொல்லிடணும் என்று இல்லை. போகப் போகப் பேசிக்கொள்வோம். உனக்கு நானும் எனக்கு நீயும் கைவிளக்குகளாய் இருந்து கொண்டிருக்கிறோம். நம் அணுகு முறைகளில் மற்றவை பின்னால் வரட்டும். இப்போது குறிப்பாக வள்ளுவனுடைய உவமைகளைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்வோம். அதைக் கொஞ்சம் சொல்லு,' என்றார்.

'உவமை என்பது ஓர் அணி. அதை அழகுக்காகத்தான் கவிஞர்கள் கையாள் கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான உவமைகளை ஓர் எல்லைக்கு அப்பால் விரிக்க முடியாது. பொருத்திப் பார்க்க முடியாது. 'நிலவைப் பழிக்கும் முகம்' என்று சொன்னால், 'நிலவொளியும், அழகும், குளுமையும் மட்டும்தான் கொள்ளப்பட வேண்டும்; அந்த முகத்தோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். நிலவுக்குக் கறை உள்ளதே, அதன் பரப்பில் மேடு பள்ளங்கள் உள்ளனவே என்றெல்லாம் விரித்துப் பொருளுரைக்க முடியாது. உவமைகளுக்கு இப்படி முற்றிலும் பொருந்திப் போகிற தன்மை கிடையாது; அவ்வாறு பொருந்த வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.'

'ம். சொல்லு...'

'மற்ற கவிஞர்களிடத்தில் உவமை என்பது கோபுரத்தில் விளங்கும் பொம்மையைப் போன்றது. கோபுரத்தைத் தாங்குவதுபோன்ற தோற்றத்தில் ஒரு பொம்மை அதில் அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் கோபுரம்தான் பொம்மையைத் தாங்குகிறதே ஒழிய, பொம்மை கோபுரத்தைத் தாங்க வில்லை என்பதனை நாம் அறிவோம். இதுதான் பொதுவாக எல்லாக் கவிஞர்களும் உவமைகளைக் கையாண்டிருக்கும் விதம்.'

'அப்படியானால், வள்ளுவரிடத்தில் எப்படியோ?' என்று தூண்டினார் நண்பர். பலமுறை விவாதித்துக் கொண்ட விஷயங்கள் தாம். இருந்தாலும் எதையோ கருத்தில் கொண்டு என்னைச் செலுத்துகிறார் என்பது தெரியும் என்பதால் தொடர்ந்தேன். 'வள்ளுவத்தில் உவமைதான் கோபுரத்தின் அஸ்திவாரமே. ஒவ்வொரு உவமையையும் கொண்டமட்டும் விரிக்கலாம். உவமை விரிய விரியக் குறளின் பொருளும் விரியும்; ஆழமும் பிடிபடும். ஆகவே உவமை என்பது வள்ளுவத்தின் ஆணிவேர். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது புள்ளி ஒன்பது சதமும் இதனுள் அடங்கும். எங்காகிலும் ஏதேனும் ஒன்றிரண்டு விலக்குகள் இருக்கலாம். ஆனால் இதுவரையில் நம் அறிவுக்கு எட்டவில்லை.'

'அப்புறம் பல குறட்பாக்களை அவை பயிலும் இடத்தைப் பார்க்காமல் பொதுவாகப் பொருள் சொல்ல முடியுமென்றாலும், ஒவ்வொரு குறளையும் அது பயிலும் இடத்தையும், அதிகாரத்தையும், இயலையும் பார்த்தே விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதும் நாம் பொதுவாக மேற்கொள்ளும் அணுகுமுறை. இல்லையா? எல்லாக் குறளுக்கும் இல்லா விட்டாலும், எப்போது குழப்பமும் ஐயமும் உண்டாகிறதோ, எங்கெல்லாம் பொருள் திரிபு ஏற்பட்டு தவறான பொருள் உணரப் படுகிறதோ அங்கெல்லாம் இந்த அமிலச் சோதனையை நடத்தவேண்டும் என்பதும் நம்முடைய வழிமுறைகளில் ஒன்று, இல்லையா?'

'ஆமாம். அதற்கடுத்ததாக, ஒரு பொருளை மூன்று நிலைகளில் வள்ளுவர் வலியுறுத்து வார் என்பதையும் விவாதித்திருக்கிறோம். 'இதையாவது செய்' என்று மிகச் சாதாரணமான, எளிதான ஒன்றைச் சொல்லி அந்த அறத்தை மேற்கொள்ளச் சொல்லுவார்; அதற்கு இசைந்தோம் என்றால் அதைவிடவும் கடினமான ஒன்றை எடுத்து வைத்து, 'அது செய்தால் போதாது; இதைச் செய்துபார்' என்று சீண்டுவார். அதையும் மேற் கொண்டோம் என்றால் 'விற்றுக்கோள் தக்கது உடைத்து' என்பார். அதாவது, 'ஒப்புரவை மேற்கொள்வதால் கேடுவரும் என்றால், அதை விலைகொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். அத்தகைய கேட்டை வாங்கிக் கொள்ள வேண்டுமானால், உன்னை நீயே விற்று அதற்குரிய விலையைக் கொடுக்கலாம்' என்று சாதாரண நிலையில் உள்ள யாராலும் மேற்கொள்ள முடியாத, மேற்கொள்ளத் தயங்குகின்ற, அரிசந்திரன் போன்ற மிகப் பெரிய மேலோர்கள் மட்டுமே கடைப் பிடித்திருக்கிற அறநிலையை வலியுறுத்துவார்.'

'ஆக, எளிய, இடைப்பட்ட, மிகக் கடுமையான என்ற மூன்று நிலைகளில் அறம் சொல்கிறார், இல்லையா?'
'அறம் மட்டுமல்ல. மேலோரையும் அப்படிப் பட்ட மூன்று நிலைகளில் சொல்வார்; கீழோரையும் அதேபோன்ற மூன்று நிலை களில் சொல்வார். அவருடைய பொதுவான போக்கு இது' என்றேன்.

'அப்புறம் ஒன்று. ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி வள்ளுவர் என்ன நினைக்கிறார்; எப்படி உணர்கிறார் என்பதற்கான குறிப்புகள் பற்றி நாம் பார்த்திருக்கிறோம். அதுபற்றி?'

'அவரா! ஒவ்வொன்றைப் பற்றியும் தான் உணர்ந்தது என்ன, தன் கருத்து என்ன, தன் நிலைப்பாடு என்ன என்பதைக் குறிப்புகளால் உணர்த்துவார். 'ஊருணி நீர் நிரைந்தற்று', 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று', 'மருந்தாகித் தப்பா மரம்' (குறள் 215, 216, 217) என்று நல்லவனிடத்தில் செல்வம் கிடைத்தால் அதனாலாகும் பயனைக் குறித்து வேறெங்கும் இல்லாதபடி, சொன்ன கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லுவது போன்ற--கூறியது கூறல் என்பது போன்ற--மூன்று குறட்பாக்களைச் சொல்லுவார். 'பேரறிவாளன், நயனுடையான், பெருந்தகையான்' என்று மூன்று குறட் பாக்களிலும் ஒவ்வொருவனையும் தனித்தனி யாக வகைப்படுத்திக் காட்டும்போதுதான், இந்த மூன்று குறட்பாக்களும் வேறுவேறு நிலைகளிலிருந்து இயங்கும், வேறுபட்ட தன்மைகளையும், நோக்கங்களையும் உடைய ஒப்புரவாளர்களைக் குறிக்கின்றன என்பது புலனாகும். ஒவ்வொரு qualifier குறிப்பது எவற்றை, அவற்றின் வள்ளுவப் பொருள் வரையறை என்ன என்பதையெல்லாம் பார்த்தால்தான் மூன்று சூட்சுமமானதும் வேறுபட்டதுமான நிலைகளைக் குறிக்கிறார் என்பது சற்றே தட்டுப்படும்.'

'இன்னும்? குறிப்பாக, விலக்கவேண்டியது எது, மேற்கொள்ள வேண்டியது எது என்று சொல்லும்போது?'

'அதுவா! விலக்க வேண்டியது என்றால் நிச்சயம் ஒரு வார்த்தை திட்டாமல் இருக்க மாட்டார். 'பாவி' என்பார்; 'பதடி' என்பார்; 'முகடி' என்பார்; உயிருள்ள பிணமே என்பார். உயர்ந்தது என்றால் மேலே 'பெருந்தகையான்' என்று சொல்கிறாரல்லவா--அப்படிச் சொல்லும்போது அவரே எழுந்துநின்று கைகூப்புவதுபோல் இருக்கிறது--அப்படி ஒரு குறிப்பு வைப்பார்.

'அப்படி இல்லாத குறட்பாக்களும் உண்டல்லவா? இது இத்தகையது; இது இன்ன தன்மையது என்று சொல்வன? நான் இப்போது சொல்வது 'இன்சொலால் ஈரம் அளைஇ' என்று டெ·பனிஷன் தருகிறாரே அப்படிப்பட்டவை அல்ல. 'இது இப்படிப் பட்டது' என்ற statements of facts?'

'ஆகா! தாரளமாக உண்டே. இதை விலக்கவேண்டும் என்ற குறிப்போ, வசவோ இல்லாமல் சொல்லப்படும் வாக்கும் உண்டுதான்,' என்று சற்றே நிறுத்தினேன். பிறகு, 'சரி. இப்படி முடிச்சாகப் போட்டுக் கொண்டே போனால் எப்படி? நூறு திருக்குறளை அப்படி அப்படியே மேற்கோள் காட்டினால் போதுமா? பொருள் விளக்கத்துக் கான முயற்சியாவது வேண்டாமா?' என்று சிரித்தேன்.

'பொறு அப்பனே. பொறு. முடிச்சுப் போடுவதே அவிழ்ப்பதற்காகத்தான். சிக்கல் இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் தான் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று யோசிக்கலாம். சிக்கல் இருப்பதே தெரியாமல் சும்மா நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தால், பாரதியார் சொல்வாரே ஒரு கட்டுரையில் அப்படி 'உயிருள்ள கிராமபோனுகளாக'த்தான் நடமாடுவோம். நாம் விவாதத்தைத் தொடங்கியதே பொருள் காண்பதற்காகத்தான். உயிர்ப்புள்ள, பயனுள்ள எந்த விவாதமும் வரம்பு கட்டுதல், அரண்செய்தல், முரண்படுதல் என்ற அடிப்படைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் நாம் வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறோம். எதைப் பார்க்கிறோம்; என்ன பார்க்கப் போகிறோம்; என்ன விவாதிக்கப் போகிறோம்; முடிவை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்; அதற்கான அணுகுமுறை என்ன என்பனவற்றை இப்போதுதானே மேம்போக்காக வரம்பு கட்டிக்கொண்டிருக்கிறோம். இப்ப விஷயத் துக்கு வருவோம். அந்தக் குறளை மறுபடியும் சொல்லு. அதான், 'வேலைக்காவாது' என்று நான் சென்ற முறை சொன்னேனே, நீ கூட 'திருக்குறள் வேலைக்காவாது என்று ஒப்புக் கொண்டாயா' என்று கேட்டாயே அந்தக் குறள்.

'ம்ம்ம்? அதுவா?

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

'இது மட்டுமல்ல. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி தொடங்கி, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதில் உள்ள தாழ், தாழ்ப்பாள் இல்லை வேற ஏதோ ஒண்ணு என்றெல்லாம் பலவிதமான முடிச்சுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொண்ணா எடுப்போம். அலசிப் பார்ப்போம். முதல்ல இந்த 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.' வள்ளுவம் அஸ்திவாரமாகப் போட்டு எழுகின்ற உவமையணி ஒன்று இதில் பயில்கிறது. அதைப் பார்த்துக் கொள்வோம். வள்ளுவ உவமை என்பது முற்றிலும் விரித்துப் பார்க்க வேண்டியது என்பதை நினைவு படுத்திக் கொள்வோம்.'

'அப்புறம்?'

'கொஞ்சம் இரு. இந்தக் கோப்பில் கையெழுத்துப் போடவேணும். இதோ வந்துவிடுகிறேன். அதுவரையில், இந்தக் குறளில் என்ன சொல்லியிருக்கிறது, என்ன விடுபட்டிருக்கிறது, என்ன சொல்லியிருக் கிறார், எதைச் சொல்லவில்லை, எப்படிச் சொல்லவில்லை என்பதையெல்லாம் கொஞ்சம் யோசித்து வை,' என்றார்.

யோசிக்கலாம்.

(வளரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline