Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlarge2005-ஆம் வருடத்திலும் 2006-இலும் சில மிகப் பெரிய நிறுவன விற்பனை களும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering - IPO) நடை பெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது மீண்டும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது!

சமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது (2007-இல்) வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் "கதிரவனைக் கேளுங்கள் " பகுதியில் இப்போது இடம் பெறுகின்றன.

ஆரம்ப நிலை நிறுவனம் என்றால் பெரும் நிறுவன மென்பொருட்கள் (enterprise software), மற்றும் பெரும் நிறுவன மின்வலை சாதனங்கள் (enterprise networking) உருவாக்குவது என்பது பொதுவாக இருந்ததல்லவா? எனக்கு அந்தத் துறைகளில் ஒரு நல்ல யோசனை இருக்கிறது. அதை மையமாக வைத்து நிறுவனம் ஆரம்பிக்கலாமா?

ஆஹா, பேஷாக ஆரம்பிக்கலாமே?! அத்தோடு சேர்த்து எதாவது ஒரு பெரிய பாறாங் கல்லாக பார்த்து, தங்கள் தலையையும் முட்டிக் கொள்ளுங்களேன், புண்ணியமாகப் போகும்!

மன்னிக்கவும்! மனத்துக்குள் எழுந்த சிந்தனையை அப்படியே எழுதி விட்டேன்! ஒருக்கால் அது தேவைக்கும் மேலான பலமான கருத்தாக இருக்கலாம். இருந்தாலும் அத்துறைகளின் தற்போதைய நிலைமைக்கும் நான் கூறியதற்கும் பெருத்த இடைவெளி யில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பெரும் நிறுவன வலைச் சாதனத் (enterprise network equipment) துறையில் அவ்வப்போது ஒரு சில குறுகிய வாய்ப்புக்கள் இன்னும் எழுந்து கொண்டிருப்பது உண்மைதான். கம்பியற்ற மின்வலை (wireless LANs) மற்றும் பெரும்பரப்பு மற்றும் கிளை மின்வலை (WAN and Branch optimization) துறைகளில் சமீபத்தில் சில நிறுவனங்கள் வெற்றி வாய்ப்படைந்திருப்பது அதற்கு சாட்சி. சேமிப்பக மின்வலை (storage networking) எனும் உபகிளையில் இன்னும் சில மிகக் குறிப்பான தொழில்நுட்பங்கள் உருவாக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் வலைச் சாதனத் துறையில் Cisco பெரும் பலத்துடன் இயங்கி வருவதால், அம்மாதிரியான நுழைவாயில்கள் மிகச் சிலவே, மேலும் மிகக் குறுகியவையே. அவற்றைக் கண்டு பிடித்து, Cisco அம்மாதிரி சாதனங்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வராது என பெரும் நிறுவனங்களை நம்ப வைத்து வெற்றி காண்பதென்பது மிகக் கடினமாகி வருகிறது. அதற்கான தடைகள் மிக உயரமானவை; மேலும், நாளாக நாளாக இன்னும் உயர்ந்து கொண்டே வருகின்றன. மற்றும், அம்மாதிரி நிறுவனங்களை வளர்த்து வெற்றி பெற நிறைய மூலதனம் வேண்டியுள்ளது, வெற்றி பெறக் கூடிய காலமும் நீண்டுள்ளது.

ஆனாலும் அத்துறையில் நல்ல யோசனை இருப்பின், நிலைமையை உணர்ந்து கொண்டு முயன்று வெற்றி காண முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் தாராளமாக ஆரம்பியுங்கள்; வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது; அதற்கு என் நல்வாழ்த்துக்கள்! ஆனால் ஒன்று: அதற்கான முதலீடு பெற, மிக அனுபவமும் திறனும் வாய்ந்த குழு இருப்பதைக் காட்டினாலே ஆரம்ப முதலீட்டார் பணப்பையைத் திறப்பார்கள் என்பது என் அனுமானம். அதைக் கருதி, நல்ல சக்தி வாய்ந்த குழுவைச் சேர்த்துக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது.

பெரும் நிறுவன பயன்பாட்டு மென்பொருள் துறையிலோ (enterprise application software) நிலைமை அதை விட மோசமாகிவிட்டது. வாங்கும் நிறுவனங்கள் Oracle, SAP, Microsoft ஆகிய மூன்றே மூன்று மென்பொருள் விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதே பொதுப் பழக்கமாகிவிட்டது. விற்கும் மூல வழிகளான IBM, Accenture, போன்ற பெரும் System Integrator நிறுவனங்களும் TCS, Infosys, Wipro, Satyam போன்ற புதிய இந்திய System Integrator நிறுவனங்களும் கூட அத்தகைய பெரும் மென்பொருள் நிறுவனங்களுடனே பிணைப்பு வைத்து செயல் பட்டு வருவதால், பெரும் நிறுவனதாரர்களை சந்திப்பதே கூட பிரம்மப் பிரயத்தனமாகி வருகிறது. கொஞ்ச நஞ்சம் மீதி இருக்கக் கூடிய நிறுவனங்களையும் முன் கூறிய மூன்று பெரும் நிறுவனங்கள் உறிஞ்சி, இன்னும் பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள்!

அதனால், பல நூறாயிர டாலர்கள் விலையில் நிறுவனத்துக்குள்ளேயே நிலைநாட்டி (installed) அதற்கு மேலும் பல மில்லியன் டாலர்கள் விலையில் சேவையாளர்களைக் கொண்டு வழிமுறைப் படுத்த வேண்டிய பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கும் யோசனைகளை மானசீகமாகக் கங்கையில் முழுகி ஒட்டு மொத்தமாக மறந்து விடுங்கள்! அதுதான் நல்லது!

SAP போன்ற பெரும் மென்பொருளைச் சார்ந்துள்ள பயன்பாட்டு மென்பொருள் கூறுகள் (modules) உருவாக்க வாய்ப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவை பெரும்பாலும் சிறிய வாங்கலாகவும் (acquisiton) அல்லது வருமான வியாபாரமாக (cash flow business) இருக்கும் என்பதால், பெரும் முதலீட்டார் அவற்றில் முதலிட முன்வருவ தில்லை. ஆனால் சில சிறுநிலை முதலீட்டாரோ, தனிப்பட்டாரோ அவற்றுக்கு முதலிடக் கூடும். மேலும் அத்தகைய வாணிகம், அடிப்படை மென்பொருள்விற்கும் நிறுவனத்தை மிகவும் நம்பியிருப்பதால் வெற்றியடைவதும் சற்று கடினம், அதே அம்சத்தை பெரும் நிறுவனம் செய்து விடும் அபாயமும் உள்ளது. கவனித்து செயல்படுங்கள்.
சரி பயன்பாட்டு மென்பொருள் துறைதான் ஒத்து வராது என்கிறீர்கள். நடுமென்பொருள் (enterprise middleware) மற்றும் பயன்பாட்டு ஒருங்கிணைப்பு (application integration) துறைகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

பயன்பாட்டு மென்பொருள் துறை போலவே, நடுமென்பொருள் துறையும் ஒரு சில விற்பனை நிறுவனங்கள் மற்றும் திறந்த மென்பொருட்களின் (open source) ஆதிக்கத்தில் (domination) உள்ளது. பயன்பாட்டு சர்வர் துறையில் IBM, BEA, Oracle, போன்றவற்றின் விற்பொருட்களும் JBoss போன்ற தொழில்நுட்பங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பயன்பாட்டு ஒருங்கிணைப் புத் துறையில் Tibco, WebMethods போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். DataPower வாங்கிய பின், IBM-உம் இப்போது இத்துறையில் குதித்துள்ளது. Oracle நிறுவனமும் கூடிய சீக்கிரம் இத்துறையில் புகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம், என் கருத்துப் படி இத்துறையும் பெரும் நிறுவனப் பயன்பாட்டு மென்பொருள் துறைப் போலவே பழம் பெருச்சாளிகளால்தான் சமாளிக்க முடியும் என்றாகிவிட்டது.

அப்படியானால் மென்பொருள் துறையில் புது நிறுவனங்களுக்கு வாய்ப்பே இல்லை என்கிறீர்களா?

அப்படி ஒன்றும் சொல்லி விடவில்லையே?! நிச்சயமாக வாய்ப்புள்ளது. எந்த விதமான வாய்ப்புள்ளது என்பதுதான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பழைய விற்பனை முறைப் படி பல நூறாயிரக்கணக்கான டாலர்களுக்கு ஒரே தடவையாக விற்று, பல மாத அல்லது வருடக் கணக்கில் பல மில்லியன் டாலர்கள் மேலும் செலவழித்து பயன்முறைக்கு (usage) கொண்டு வரும் வாய்ப்புத்தான் மறைந்து விட்டது. பயன்பாட்டு மென்பொருள் துறையிலும், நடுமென்பொருள் துறையிலும் வேறு விதமான வாய்ப்புக்கள் எழுந்துள்ளன, வருங்காலத் திலும் வரக்கூடும்.

மென்பொருள் துறையில் எழுந்துள்ள ஒரு பிரகாசமான வாய்ப்பு சேவை மென்பொருள் SaaS (Software as a Service) எனப்படுவது. Salesforce.com, NetSuite, WebEx, Citrix Online போன்ற பல மென்பொருள் சேவை அர்ப்பணிப்புகள் (offerings) வணிக ரீதி வெற்றியடைந்துள்ளன. மேலும், PeopleSoft-ஐ நிறுவி பிரசித்தி பெற்ற டேவிட் ட்ஃபீல்ட் என்பவர், புதிதாக Workday என்னும் SaaS நிறுவனத்தை ஆரம்பித்து Oracle, SAP-உடன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மென்பொருள் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல! Microsoft, Google போன்ற நிறுவனங்கள் கூட மின்வலை மூலம் அலுவலக மென்ன்பொருள் (Office software) போன்றவற்றை சேவையாக வழங்கும் களத்தில் குதித்துள்ளன!

SaaS-இல் அப்படியென்ன அனுகூலம் உள்ளது என்கிறீர்கள்?

பலப் பல உள்ளன. முதலாவதாக, பயன்படுத்தும் நிறுவனங்கள் முன்கூட்டியே பெருமளவில் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. மெதுவாகப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மாதத்துக்கு இவ்வள வென்று சேவைக்கட்டணம் கட்டினால் போதும். மேலும், மென்பொருளை வாங்கி பொருத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் தலைவலிகளும் தாமதங்களும் இல்லை. தேவையின் போது (on-demand) எனப்படும் படி, உடனே இந்த ஊழியர்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மின்வலை யிலேயே கூறிவிடலாம், அல்லது, ஊழியர்களே கூடத் தங்களையே சேர்த்துக் கொண்டு விடலாம்! அதனால் வாங்கும் நிறுவனங் களுக்கு வேலையும் செலவும் குறைகிறது; பயன் பாட்டுக்கும் விரைவில் கொண்டு வந்து ஊழியர்களின் உற்பத்தியையும் பெருக்க முடிகிறது.

விற்கும் நிறுவனங்களுக்கும் இதில் பெரும் அனுகூலங்கள் உள்ளன. நேரடி விற்பனை (direct sales) பெரும் செலவாகிறது. மிகப் பெரும் நிறுவனங்களுக்குத்தான் அது கட்டுப்படி யாகும். ஆனால் SaaS முறையில், விற்பனை நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுஅளவு நிறுவனங்களயும், ஏன் தனிப் பட்டோ ருக்கும் கூட குறைந்த செலவில் விற்க முடிகிறது. அதனால் அதிக பட்ச வாடிக்கை யாளர்களை சேர்க்க முடிகிறது. மேலும் மென்பொருள் இயங்கும் விதத்தில் மாற்றங் களையும் முன்னேற்றங்களையும் சீக்கிரம் சேர்ப்பிக்கவும் முடிகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி நேரடியான புள்ளி விவரங் களையும் சேர்க்க முடிகிறது.

ஆனால் ஒரேயடியாக, SaaS துறையில் பிரதிகூலங்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பெரும் நிறுவனங்கள் எளிதாக SaaS படைப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை. பாதுகாப்புக் கவலைகளால், தங்கள் டேட்டாவை வெளியில் விடத் தயங்கலாம். மேலும் ஓரளவுக்கு மேல் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத செலவு செய்ய மறுக்கலாம். சில மென்பொருட்களுக்கு அலையகலம் (bandwidth) மிக அதிகமாகத் தேவைப் படலாம். அதனால், SaaS-இன் சில அனுகூலங் களுடன், ஆனால் பழைய மென்பொருட் களின் பெரும் பிரதிகூலங்களைத் தவிர்க்கு மாறு சில SaaS நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மென்பொருளை பெரும் நிறுவனத் தின் சொந்த டேட்டா நிலையத்தி லேயே (data center) நிலைநாட்டுவது, சந்தா முறையில் விற்பது (subscription pricing) போன்ற மாறுபட்ட அணுகுமுறைகளை யோசித்து வருகிறார்கள்.

மேலும், பெரும் நிறுவனங்களும் தங்கள் மென்பொருட்களை SaaS முறையில் அளித்தோ, அல்லது SaaS நிறுவனங்களை வாங்கியோ, சேவை அளிக்க ஆரம்பித்துள் ளார்கள். அதனால் போட்டியும் அதிகரித் துள்ளது. ஒவ்வொரு மென்பொருள் பிரிவிலும் ஓரிரு நிறுவனங்களுக்கே வாய்ப்புள்ளதால், நெருக்கடி அதிகமற்ற வாய்ப்பு எது என்று பார்த்து ஆரம்பியுங்கள். இன்னும் பல பிரிவுகளில் வாய்ப்புள்ளது. புது மாதிரியான மென்பொருள் சேவைகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

மென்பொருட்களில் இன்னொரு துறையிலும் பல ஆரம்ப நிலை நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.

அதில் சில நிறுவனங்கள் பெரும் வெற்றியும் பெற்றுள்ளன. அது திறந்த மென்பொருள் (open source) துறை. இத்துறையில், உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் பொறியிய லாளர்களால் இலவசமாக உருவாக்கப் பட்ட Linux, Apache, MySql போன்ற மென் பொருட்களை வணிக ரீதியாகப் பலப் படுத்தி, உதவி சேவைகளுடன் (support services) சேர்த்து விற்கிறார்கள். மின்னஞ்சல், வாடிக்கையாளர் உறவு (customer relationship) போன்ற பயன்பாட்டு மென்பொருட்களையும் (application software) அதே பாணியில் உருவாக்கவும் பல நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டு முதலீடும் பெற்றுள்ளன.

ஆனால் திறந்த மென்பொருள் துறை பற்றி ஒரு எச்சரிக்கை எழுப்பக் கடமைப் பட்டுள்ளேன். இதுவரை அதில் பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்கள் ஒரு கையில் எண்ணி விடலாம். மேலும், ஒவ்வொரு மென்பொருள் துறைப் பிரிவிலும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களுக்கே இடமுள்ளது.

அதிலும் பெரும்பான்மையான துறைப் பிரிவுகளில் ஏற்கனவே நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. அதனால் இந்த வாய்ப்புக்கு குதிக்குமுன் தீர ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதில் உங்களின் சிறப்புத் திறமை என்ன என்பதை யோசித்த பின்பே ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மென்பொருள் துறையில் இன்னும் வாய்ப் புள்ள துறைப் பிரிவுகளில் இன்னொன்று: குறிப்பிட்ட வணிகத் துறைக்கான (Verticals) மென்பொருட்கள். அதாவது, iFlex போன்று, வங்கிகளுக்கான (banking) மென்பொருள், வாடிக்கை கடைகள் துறை (retail), மருத்துவத் துறைக்கானவை போன்றவை. அத்தகைய வாய்ப்புக்களைக் கணித்து அந்தக் குறிப்பிட்ட துறையில் கணிசமான நிறைய வாடிக்கை யாளர்களை அடைந்தால் பெரும் நிறுவனங் கள் உங்கள் நிறுவனத்தை வாங்க மிக ஆர்வம் காட்டுவார்கள். மிக லாபகரமாக, வேகமாக வளர முடிந்தால் முதல் பங்கு வெளியீடும் சாத்தியமே.

***

2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள வேறு துறைகளை பற்றி இனி வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline