Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
முன்னோடி
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
- மதுசூதனன் தெ.|டிசம்பர் 2006|
Share:
Click Here Enlargeதமிழ்மொழியின் தனித்தன்மை பற்றியும் தமிழ்ப்பண்பாட்டின் தனிச்சிறப்புப் பற்றியும் பல கவிஞர்களும் அவரவர் பார்வைக்கும், கருத்தியலுக்கும் ஏற்ப கவிதைகளைப் படைத்துள்ளனர். இந்த மரபில் வந்த கவிஞர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.

'தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லுடா"


என்று கூறுகின்ற அவர்

'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு"
'அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்"


என்றும் பாடுகின்றார். இங்கே அவர் தமிழினமென்று கூறுவதைப் பிறப்பினால் வருகின்ற இனத்தைக் குறிப்பதாக நாம் எண்ணிக் கொள்ளக்கூடாது. மொழி, பண்பாடு இவற்றின் அடிப்படையிலே அவர் இனம் என்ற சொல்லைக் கையாளுகின்றார். எவ்வாறாயினும் தமது தாய்மொழியின் மீதும் அதன் வழிவரும் பண்பாட்டின் மீதும் ஒருவருக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய சிந்தனையும் பிரக்ஞையும் உணர்வும் இந்தக் கவிஞரிடம் ஆழமாகவே வெளிப்பட்டுள்ளது. அத்தகைய கவிஞர்தான் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை.

இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரவாதம், மிதவாதம் என்று இரு முகங்களைக் கொண்டது. அது
வன்முறையையும் சந்தித்தது. அகிம்சையையும் சிந்தித்தது. இவற்றை முறையே திலகரும் காந்தியடிகளும்
வழிநடத்தினார்கள். இதன் தாக்கம் தேசம் முழுவதும் அனைத்து மக்களையும் ஒருங் கிணைக்கும், சுதந்திரப் போராட்டத்தில் உள்ளிழுக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது தமிழகத்திலும் இவை
எதிரொலித்தது.

அதாவது அரசியல் துறையில் கொந்தளிப்பும் சமுதாயத்துறையில் கிளர்ச்சியும், பண்பாட்டுத் துறையில் மறுமலர்ச்சியும் காணப்பட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர் நாமக்கல். அவர் அக்காலத்து சுதந்திர
உணர்ச்சியின் அலையில் ஒன்று கலந்து வந்தவர். அக்கால புரட்சிகரக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.

காந்தியின் கருத்துக்கள் கவிஞரது சமூக அரசியல் சிந்தனையின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் ஆற்றுப்படுத்தின. சாதாரண பாமர மக்களையும் ஈர்க்கும் கருத்துவளம் கொண்டவராகவே வளர்ந்து வந்தார்.

அவர் கவிஞர் மட்டுமல்ல உரைநடை எழுத்தாளர், நாடகமேடைப் பாடலாசிரியர், இவற்றையெல்லாம் விட சிறந்த ஓவியர். இவரது வாழக்கை வரலாற்றை 'என்கதை' என்ற நூலாக இவரே வடித்துள்ளார்.

'காடும் மலையும் கடலும், நதியும் கூடத் தன் சரித்திரக் குறிப்புகளை எழுதி வைக்க முடியுமானால் அவற்றிலும் இன்ப உணர்ச்சி களுக்கு விருந்துகள் இருக்கலாம் என்றும் இவர் தமது சுயசரிதையை விரிவாக எழுதி வைத்தார்.

சேலம் மாவட்டம் (இப்போதைய நாமக்கல் மாவட்டம்) மோகனூரில் 1888 அக்டோபர் 19 இல் பிறந்தார்.

இராமலிங்கத்தின் பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள். ஆனால் விவேகமும் துணிவும் கொண்டவர்களாக விளங்கிவந்தவர்கள். தாயார் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இருந்து பல
நீதிக்கதைகளை இளவயதிலேயே ஊட்டி வந்தார். "பொய் பேசாதே போக்கிரி என்று பெயர் எடுக்காதே" என்ற அறிவுரையை எப்போதும் தமது காதில் ஓதிக்கொண்டிருப்பார் என்றும் அதுவே தமக்கு தாயார் கொடுத்த செல்வம் என்றும் அச்செல்வத்தை மிகக் கவனமாக தமது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்ததாயின் அதன் விளைவாகவே மறந்தும் பொய்யே பேசமுடியாத அளவிற்கு வாய்மை அவர்பால் குடிகொண்டு விட்டதுதென்றும் அவர் தமது சுயசரிதையில் விளக்கமாக கூறுகிறார்.

இராமலிங்கம் கவிஞராகப் பரிணமிக்கும் முன்பு ஒரு தலைசிறந்த ஓவியக் கலைஞராக விளங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு ஓவியம் வரைவதிலும், கவிகள் புனைவதிலும் இயல்பாகவே தனி ஈடுபாடு
காணப்பட்டது. கல்லூரிக் கல்வியை முடித்ததும் 1909இல் அவருக்கு திருமணம். அதே ஆண்டில் அவருக்கு காதுவலியேற்பட்டு சிகிச்சைக்கு பின் கேட்கும் திறன் போனது. காவல்துறையில் பணிபுரிந்த தந்தையார் அவரையும் அத்துறையில் சேர்த்துவிட பலமுறை முயன்றார். அவர் அதனை ஏற்க மறுத்து
விட்டார். வட்டாட்சியர் அலுவலக எழுத்தராகவும், ஆரம்ப பள்ளி ஆசிரிய ராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார்.

சுதந்திர போராட்ட காலமாகையால் அவர் தேசிய அரசியல் பேச்சுக்கள் தலைமை ஆசிரியருக்கு பிடிக்கவில்லை. வேலையில் இருந்து நீக்கிவிட்டார். எனவே இறுதியாக ஓவியத்தையே தொழிலாக கொள்வது என்ற முடிவுக்கு வந்தார். இவரது ஓவியக்கலையின் ஆற்றல் பரவலாக அறியக்கூடிய நிலைமை அப்போது உருவாகியது. செல்வம் மிக்க வணிகர்கள் நிரம்பிய செட்டிநாட்டில் அவருக்கு நல்வரவேற்பு கிடைத்தது. வருமானமும் கிடைக்கபெற்றது. வெறும் பணத்திற்காக மட்டுமன்றி ஆன்மீக
மனநிறைவுக்காவும் அவர் பல ஓவியங்களை வரைந்தார். இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, காந்தி போன்றவர்களின் வண்ணப்படங்களை தீட்டி நகராட்சி மன்றங்களிற்கு பரிசாக வழங்கினார்.

ஓவியத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் நாளடைவில் அதன் தொடர்பான ஒளிப் படத்தொழிலையும் (போட்டோ கிராஃபிக்) மேற்கொண்டு வந்தார். இராமலிங்கம் அரசியலில் முழுமையாக ஈடுபட்டபின்
அவர் தமது ஓவியத் தொழிலையும் ஒளிப்படத் தொழிலையும் அறவே விட்டு விட்டார். தொடக்கத்தில் அவரது கைவினைத் திறமையில் வெளிப்பட்ட ஓவிய புலமையானது இக்காலத்தே காவியப்புலமையாக மாறி வெளிப்படலாயிற்று.

1906இல் வைஸ்ராய் கார்சான் பிரபு வங்காளத்தை இரண்டாக பிரித்தார். இந்த பிரிவினை இந்திய மக்களை ஒன்றுபடுத்தியது. விடுதலை எழுச்சியை விரைவு படுத்தியது. அரசியலில் முழுமையாக ஈடுபட வேண்டிய உந்துதலைக் கொடுத்தது. அவர் தம் பேச்சுத் திறத்தால் திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ்
தலைவராகிவிட்டார். புதுவைக்கு சென்று வ.வே.சு.ஐயர், சுப்பிரமணியசிவா ஆகியோரை சந்தித்தார்.

அரசியல் தலைவராக பரிணமிப்பதற்கு உகந்த சூழல் உருவாகியது. திருச்சியில் அவர் கூட்டிய அரசியல் மாநாட்டில் அன்னிபெசட் அம்மையார் கலந்து கொண்டார். அந்த மாநாட்டு கண்காட்சியில்
வைக்கப்பட்டிருந்த இவரது ஓவியங்களை ஜார்ஜ் அருண்டேல் முதலியோர் பாராட்டி தங்கப்பதக்கம் பரிசளித்தனர். அன்னிபெசன்ட் சில படங்களை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவில் இருந்து காந்தியடிகள் இந்தியா வந்தார். சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்தது. காந்தியாரின் சொல்லும் செயலும் கவிஞரை ஈர்த்திருந்தது. அது முதல் காந்தியச் சிந்தனையாளராக வளர்ந்தார். காந்திய கவிஞராக அடையாளம் காணப்பட்டார். காந்தியாரின் உப்புப்
போராட்டம் தொடங்கியது. அவர் 'தண்டி' யாத்திரை சென்றார். தமிழகத்தில் ராஜாஜியும் 'சர்தார்' வேதரத்தினம் பிள்ளையும் வேதாரண்யத்தில் உப்பு எடுத்தனர். அதற்கான ஊர்வலம் திருச்சியிலிருந்து புறப்பட்டது. அப்போது நாமக்கல் கவிஞர் பாடிக் கொடுத்த பாடலே தொண்டர்களின் வழிநடைப் பாடலாக அமைந்து மாபெரும் எழுச்சியை உண்டு பண்ணியது.

>'கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்!


இந்தப் பாடல் அவரை தேசியக் கவிஞராகிக்கியது. பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஓங்கியொலித்தது.

தொண்டர்களுக்கு இதயகீதமானது. விடுதலை வீரர்களின் நரம்புகளை முறுக்கேற்றியது. மக்களிடம் கிளர்ச்சி உண்டுபண்ணி, எழுச்சியை உருவாக்கி உணர்வு, கொள்ள வைத்தது. வெகுசன எழுச்சி கொள்வதற்கான தாரக மந்திரமாயிற்று. பாரதி தொடக்கி வைத்த விடுதலை பாடல் மரபு நாமக்கல்
இராமலிங்கத்திடம் இன்னொரு மடை மாற்றமாக பரிணமித்தது.
Click Here Enlarge1921ஆம் ஆண்டில் காந்தியடிகள் சுதேசியக் கொள்கைகளை இந்தியர் யாவரும் கடைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறைந்தது ஆடையை பொறுத்த வரையாவது இந்தியர்கள் சுதேசியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதன் பொருட்டு ஒவ்வோர் இந்தியனும் தனது ஆடைக்கு வேண்டிய
நூலை தானே இராட்டையின் மூலம் நூற்றுகொள்ள வேண்டும் என்றும் அவர் ஓயாது கூறிவந்தார்.

அச்சமயத்தில் தான் இராட்டையில் கதர் நூலை நூற்கும் போது பாடுவதற்கேற்ப நாமக்கல் பல பாடல்களை இயற்றினார் அவற்றை விரும்பி பாடிக்கொண்டே ஆண்களும் பெண்களும் நூல் நூற்பில்
மும்மரமாக ஈடுபட்டனர். இதைக் கண்ட 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி "ஆடு ராட்டே ஆடு ராட்டே" என்று இந்த பாட்டின் மயக்கத்திலேயே தமிழ் நாட்டையே களிப்பால் சுழன்றாடச் செய்தார் நாமக்கல் கவிஞர் என்று தமது இதழில் எழுதினார்.

1922ஆம் ஆண்டில் தேசபக்திப்பாடல்கள் யாவும் தொகுக்கப்பெற்று 'பிரார்தனை, தேசபக்திப்பாடல்கள்' என்ற தலைப்புக்களில் நூல்களாக வெளிவந்தன. அவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வெகுசன கவர்ச்சிமிகு ஊடகமாக பாடல்மரபு தொழிற்பட்டது. இக் காலத்தில் கவிஞரின் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து 'தமிழின் இதயம்' என்ற தலைப்பில் நாமக்கலின் உற்ற நண்பர் சின்ன அண்ணாமலை வெளியிட்டார்.

1921 முதல் 1930 வரை முழுமையாக நாமக்கல் தன்னை நாட்டுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். உணர்ச்சித் ததும்பிய உரை பட்டிதொட்டியெங்கும் தட்டியெழுப்பியது. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் பற்றிய கவிதைகள் இயக்கமாகவே வெளிப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியும் விடுதலை அரசியலின் திசைப்படுத்தலும் நாமக்கல் கவிதையின் பாடுபொருளாயிற்று தான் வாழந்த காலத்தில் சமூகபிரக்ஞை உள்ள பிரஜையாக வாழ்ந்தது மட்டும் அல்லாமல் தன்னிடமுள்ள திறன்களை ஆளுமைகளை சமூகமயப்படுத்தியும் வந்தார். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நட்பும் உறவும்
பேணி சமகால தலைமைக்குரிய பண்புகளையும் புரிந்து கொண்டவராகவே விளங்கினார்.

1949 ஆகஸ்ட் 15 ராஜாஜி மண்டபத்தில் சுதந்திர திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் கவிஞர் நாமக்கல்லுக்கு பொன்னாடை போர்த்தி 'அரசவைக் கவிஞர்' என்ற பட்டம் அரசால் வழங்கப்பட்டது. 1972 ல் இந்திய அரசு 'பத்மபூஷன்' விருது வழங்கி சிறப்பித்தது. நாமக்கலின் பேரும் புகழும் பரவலாக அறியக்கூடிய சந்தர்ப்பமும் சூழலும் வளர்ந்து சென்றது. காந்தியடிகள் சுடப்பட்டு மாண்ட போது கவிஞருக்கு அது தாங்க முடியாத அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பல நாட்கள் அதன்
பாதிப்புக்குள்ளாகி இருந்தார். பின்னர் காந்தியின் மீது தமக்கிருந்த அன்பையெல்லாம் கொட்டிப் பல அரிய
கவிதைகளை புனைந்தார். 'காந்தியஞ்சலி' என்பது அக்கவிதைத் தொகுப்பாகும்.

'சத்தியத்தின் ஓயாத சங்கநாதம்
சாந்தி தரச் சரியாத வேதகீதம்
நித்திய நன்னெறி அறிவை நீட்டும் சத்தம்
நிரந்தரமாம் மெஞ்ஞானக் குழலின் ஓசை
ஒய்ந்து போச்சே என்றும்,


அரசியல் வானில் இருள் கவிழ்ந்த
போதெல்லாம் ஒலியைத் தந்த
ஜெகயோதி அனைந்துவிட்டதென்றும்,
அற்புத மின்சார சக்தி அறுத்துவிட்டதென்றும்.


காந்தியடிகளின் மறைவைப் பல்வேறு விதமாகப் பாடிப் பாடி அங்கலாய்க்கின்றார்.

மத வெறிக்காக உயிர்விட்ட காந்தியை மறக்காமல் இருக்க வேண்டுமேயானால், இந்திய மக்கள் அனைவரும் மதநெறி, இன வெறி, மொழிவெறி ஆகிய முப்பெரும் வெறிகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் ஒரு கவிதையில் வெளிப்படுத்துகின்றார். காந்தியை நினைவு கூர அவருக்கு சிலை எடுத்துவிட்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்வது ஒன்றே அவரை நினைவு கூரச் சிறந்த மார்க்கம் என்கிறார்.

நிலை கொண்ட மெஞ்ஞானக் கலை தந்த காந்திக்கு சிலைவைத்து விட்டால் மட்டும் சிறப்பாமோ அலைகொண்ட நம்மனத்தில் அவன் கொண்ட செம்மை தாங்கி அதன்படி நடப்பது அதுவன்றோ இனி வேண்டும்.

என்று ஒரு பாடசாலையில் தனது அறிவுரையை முன்வைக்கின்றார்.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அக்கால சமுதாய மறுமலர்ச்சிக்கு வேண்டிய சிந்தனைகளின் அருட்டுணர்வால் கவிதைகள் புனைந்து பாடல் மரபை வலுவான ஊடகமாக மக்களிடையே கொண்டு சென்றார். அவர் எழுதிய பாடல்கள் மனிதர்களுக்கும் சமுதாயத்துக்கும் வேண்டிய பல சிந்தனைகளை
முன்வைத்துள்ளன. இலக்கியமும் அரசியலும் இணைந்த அகவிரி பண்புகளின் தளமாக கவிதை மரபு வெளிப்பட்டது. நிகழ்த்துதன்மைமிகு வெளிப் பாட்டுத்திறனும் இவரது பாடலில் இழையோடி வருவதைக்
காணலாம். இது பாரதிவழி வரும் சிறப்பு நாமக்கலிடமும் இந்தச் சிறப்பு நுண்மையாக வெளிப்பட்டுள்ளது.

சாதாரண மக்களும் புரிந்து நன்கு பாடக் கூடிய முறையில் எளிமையாகவும் இனிமையாகவும் அவரது பாடல்கள் அமைந்துள்ளன. மக்களிடையே பெரிதும் செல்வாக்குடன் விளங்கிய நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று நாமக்கல் பல பாடல்களைப்பாடியுள்ளார்.'கும்மி', 'கோலட்டம்', 'கண்ணி', 'நொண்டிச்சிந்து' போன்ற கிராமியப் பாடல்களை அரசியல் கருத்துகளில் தோய்ந்து அவர் நமக்குத்தந்துள்ளார். இசைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவதென்பது முடியாத செயலென நம்பப்பட்டு வந்த ஒரு காலத்தில் தமிழிசையின் பெருமையையும் இன்றியமையாமையையும் தமது கவிதைகளின் மூலமாகவும் உரைநடை நூல்கள் மூலமாகவும் நன்கு நிறுவியுள்ளார்.
கவிதை சிறுகாப்பியங்கள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள், இலக்கியத்திறனாய்வுகள், சரிதைகளும் சுயசரிதையும் விரிவுரை இசை நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார்.

"சத்திய விரதம் சாதிப்போம்
சமரச வாழ்க்கை போதிப்போம்
உத்தம சேவை இதுவாகும்
உலகத் துக்கே பொதுவாகும்"


என்ற கொள்கையின் படி நாமக்கல் வாழ்ந்து தமிழ் உணர்வு மேலிட உழைத்து வந்த பெருமகன் நாமக்கல் இராமலிங்கம். இவர் 1972 ஆகஸ்ட் 24 ந் தேதி மறைந்தார். ஆனால் தனது கவிதைகள் பாடல்கள் மூலம்
இன்றும் நினைவு கூறப்படுகின்றார்.

தமிழனனென்ற பெருமையோடு
தலைநிமிர்ந்து நில்லடா!
தரணியெங்கும் இணையிலா உன்
சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்தமென்ற தமிழி னோசை
அண்ட முட்ட உலகெலாம்
அகில தேச மக்க ளுங்கண்
சாசை கொள்ளச் செய்துமேல்
தமிழ் மணத்தில் தமிழில் மற்ற
நாட்டிலுள்ள கலை யெலாம்
கட்டிவந்து தமிழர் வீட்டில்
கதவிடித்துக் கொட்டியே
நமது சொந்தம் இந்த நாடு
நானிலத்தில் மீளவும்
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
செய்து வாழ்க நீண்ட நாள்!


தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline