Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 4
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2006|
Share:
Click Here Enlargeமுன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் விளையாட்டு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்துள்ளார். நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகை சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர்ந்து கொண்டால்தான் முடியும் என்று கூறினர். அதற்குத் தேவையான மெய்நிகர் உடுப்பில் இருந்த முப்பரிமாண பார்வை, ஸ்டீரியோ ஒலி, வாசனை, ஹேப்டிக்ஸ் (haptics) எனும் தொடு உணர்ச்சி சாதனங்களைப் பற்றி விவரித்து விட்டு அதை விட முன்னேறிய நினைவுகளையே உணரும் சாதனத்தைப் பற்றிக் கூறினர். அதுவே வியக்கத் தக்கதாக இருந்தாலும், அவர்கள் அடுத்துக் கூறியது...

வெறும் உடல் உணர்வுகளை மட்டும் தூண்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனத்தில் ஓடும் நினைவுகளை உணர முடியும், அதனால் அதை அணிந்து கொண்டு எதாவது விளையாட்டு அல்லது பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் மனநிலையை உணர்ந்து, அவர்கள் பரபரப்படைந்தால் அதற்கேற்ற படி மெய்நிகர் தோற்றங்களை மாற்றி அவர்களை மீண்டும் நிதானமடைய வைக்க முடியும் என்று ரிச்சர்ட் கூறியதும், அது கிரணுக்கு உதவலாம் என்று கிண்டல் செய்த ஷாலினி, கிரண் ஷாலினிக்குத் தான் மனத் தூண்டல் (mental stimulation) வேண்டியிருக்கும் என்று பதிலுக்கு சீண்டவும், அதற்கு பதிலாக நாகுவும் ரிச்சர்டும் கூறியது வியப்பு மட்டுமல்லாமல் ஓரளவு அதிர்ச்சியே கூட அளித்தது எனலாம்!

கிரண் ஏதோ விளையாட்டாக மனத் தூண்டுதல் செய்யலாம் என்று கூறினாலும், ரிச்சர்டும் நாகுவும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்த அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். அதனால் சில நொடிகள் மௌனம் நிலவியதால், சூர்யா அதில் ஏதோ விஷயம் புதைந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டு அதை விசாரித்தார். "என்ன நாகு, என்ன ரிச்சர்ட், எதோ சொல்லத் தயங்கிறீங்க போலிருக்கு?! சொல்லுங்க."
நாகுவே முதலில் பதிலளித்தார். "கிரண் சொல்றது வெறும் விளையாட்டில்லை. இப்ப நிஜமாகியிருக்கு. நாம இதுவரை பேசிக் கிட்டிருந்தது மத்தவங்க செஞ்சிருக்கறதை விட பல மடங்கு முன்னேறியதுதான். ஆனா எல்லாமே ஒரு எல்லைக்குள்ளதான். மனித உறுப்புக்கள் எதெல்லாம் உணர முடியுமோ அந்த வழிகளிலே மெய்நிகர் அனுபவங் களைக் கொடுக்கும் அவ்வளவுதான். மனத் தொடர்பு கூட அந்த மாதிரி ஒரு வழிதான். மின்னலைகளை உணர்ந்து அதற்கேற்றா மாதிரி அனுபவங்களை மாத்தறது. மனத்துக்குள்ள புகுந்து நினைவுகளை மாத்தறா மாதிரி எதுவும் யாரும் செஞ்சதே கிடையாது. ஆனா எங்க தொழில்நுட்பம் அந்த எல்லையெல்லாம் கடந்தாச்சு. மனத்துல நினைவுகளையேத் தூண்டக் கூடியது! என்ன ரிச்சர்ட்? மேல விவரியுங்க."
ரிச்சர்ட் பெருமையுடன் விவரித்தார். "இதோ தொங்கிக்கிட்டிருக்கற நாலு வட்டத் தகடுகள் வெறுமே மூளையின் மின்னலைகளை உணரற ஸென்ஸர்கள் மட்டுமில்லை. மூளையில மின்னலைகளைத் தூண்டி, நினைவுகளைத் தூண்டறத்துக்கும், மாத்தறத்துக்கும் கூட முடியும்."
ஷாலினி, ரிச்சர்ட் கூறியது தன் மருத்துவத் துறைக்கருகேயே வந்து விட்டதால் பரபரப்புடன் வினாவினாள். "நினைவுகளைத் தூண்ட முடியுமா? அதெப்படி? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே?"

ரிச்சர்ட் கனத்த அழுத்தத்துடன் ஆமாமெனத் தலையாட்டிவிட்டு தொடர்ந்தார். "கையை நகர்த்த முடியாதவங்க மூளையில ப்ரோப் பொறுத்தி, அவங்க கம்ப்யூட்டர் மௌஸ் குறியை நகர்த்தி அதைப் பயன் படுத்தறாங்கன்னு நீங்கக் கேள்விப் பட்டிருக்கலாம்."
ஷாலினி, "ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டாள்.

ரிச்சர்ட் மேலும் விளக்கினார். "அந்தத் தொழில் நுட்பம் ரொம்ப இன்வேஸிவ் - மண்டையைத் திறந்து, மூளைக்குள்ளயே ப்ரோபைப் பொறுத்தணும். மேலும், அது மூளையின் ந்யூரான்கள் அனுப்பும் மின்னலைகளை உணரத்தான் முடியும். இந்தத் தொழில் நுட்பம் அதை விட ரெண்டு விதத்துல முன்னேறியது. முதலாவது, மின்தூண்டுதல் மூலமா, நியூரான்களை நமக்கு வேண்டிய விதமா மின்னலைகளை அனுப்பச் செய்யறது. இதுவே ஒரு பெரிய முன்னேற்றம். எனக்குத் தெரிஞ்சு, இது வரைக்கும் ஹிப்னோஸிஸ் போன்ற மனோதத்துவ (psychological) ரீதியான வழிமுறைகளிலதான் நினைவுக் கட்டுப்பாட்டை (mind control) நிகழ்த்தியிருக்காங்க. உடலார்த்தமா (physiological) யாரும் செய்யலை."
சூர்யா ஆட்சேபித்தார். "ஹ¥ம்... நான் எதோ பத்திரிகைக் கட்டுரையில மூளையில எலக்ட்ரோட் பதிச்சு எதோ வேலை செய்ய வைக்கறா மாதிரி படிச்சேனே?!"

ஷாலினியும் ஆமோதித்தாள். "ரொம்ப கரெக்ட், சூர்யா! நான் கூட மருத்துவ ஆராய்ச்சி ஜர்னல்களில படிச்சிருக்கேன். மூளையில எலக்ட்ரோட் பதிச்சு அதுக்கு மின்சாரம் அனுப்பினா, அதனால நரம்புகள் தூண்டப்பட்டு, வாதத்தால பாதிக்கப்பட்டு பல வருஷமா நகராத கை கால்களைக் கூட அசங்க வைக்கலாம்னு. ஏன், அந்த மாதிரி மின்தூண்டுதல் மூலமா எதோ பழைய ஞாபகங்கள் மீண்டு வருதுன்னும் ஆராய்ச்சி செஞ்சிருக்காங்களே?"
ரிச்சர்ட் முறுவலித்தார். "சூர்யா, ஷாலினி, நீங்க ரெண்டு பேர் சொன்னதும் சரிதான். ஆனா, அந்த மாதிரி பத்திரிகைக் கட்டுரைகளில வரது, ஏன் ஆராய்ச்சித் தாள்களில வரது கூட நான் சொல்ற படி இல்லை. இந்தக் கை கால் அசைப்புங்கறதே இன்னும் ரொம்ப ஆரம்ப நிலையில தான் இருக்கு. எதோ சும்மா அசைக்கற அளவுக்கு இருக்கே ஒழிய, கையை இப்படித்தான் அசைக்கணும் விரலைத் திறந்து ஒரு கோப்பையைப் பிடிக்கணும்ங்கறா மாதிரி நினைச்ச மாதிரி சரியான இடத்துக்கு நகர்த்தி, சரியான வேலையைச் செய்யறா மாதிரி இல்லை. சரி அது போகட்டும், அது எங்க துறை இல்லை. நாங்க உடலை அசைக்கற வேலையில இல்லை. மனத்துல என்ன நினைவுகளைத் தூண்ட முடியுதுங்கறது தான் நாங்க செய்யறது. அந்த விதத்துல பாத்தா, நீங்க சொன்ன ஆராய்ச்சிகள், எந்த நியூரான்களைத் தூண்டினா எந்த நினைவுகள் வருது, அல்லது எந்த உணர்வுகள், காட்சிகள் தெரியுதுன்னு தான் பாத்திருக்கங்க. எங்க தொழில் நுட்பத்துலயோ அதை அடிப்படையா வச்சு, ஒரு குறிப்பிட்ட உணர்வையோ நினை வையோ தூண்டவே முடியுது."
சூர்யா ஆழ்ந்த சிந்தனையுடன் வினாவினார். "ரெண்டு முன்னேற்றங்கள்னு சொன்னீங்க. இது ஒண்ணு. இன்னொண்ணு என்ன?"

ரிச்சர்ட் தொடர்ந்தார். "இரண்டாவது முன்னேற்றம், எப்படி மின் தூண்டுதல் ஏற்படுத்தப் படுதுங்கறது. நாம முதல்ல பேசினது, மண்டை ஓட்டைத் துளைச்சு மூளைக்குள்ளேயே எலக்ட்ரோட்களைப் புதைச்சு நியூரான்களுக்கு நேரடியாத் மின் தொடர்பு வச்சு, அது வழியா தூண்டறது. ஆனா எங்கத் தொழில் நுட்பம் அப்படி இல்லை. தலைக்கு வெளியிலிருந்தே மின் தூண்டல் ஏற்படுத்துவது."
கிரண், "தலைக்கு வெளியிலிருந்தா?! அது எப்படி முடியும்? நம்பவே முடியலையே?!" என்றான்!

நாகு, "இதைப் போட்டுக் கிட்டா நேரடியா அனுபவிப்பீங்க இல்லையா?! அப்ப நம்புவீங்க!" என்றார்.

ரிச்சர்ட் விளக்க ஆரம்பித்தார். "கிரண், நீ ஷேவ் பண்ற இல்லியா..." என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் ஷாலினி கிண்டலாக "ஆமாம், கொஞ்ச நாள் தாடி வளர்க்கப் பாத்தான். ஆனா அது புசு புசுன்ன்னு நாலு முடி fuzzy moss-ஆ மட்டும் வந்தது. அதுனால, ரிலிஜியஸா ஷேவ் பண்ணிடறான்!" என்றாள். கிரண் சூடாக, "அங்க மட்டும் என்ன வாழுதாம்?! காத்தால மேக்கப் போட்டு ரெடி பண்ணிக்க நாலு மணியாறதே? அப்புறம்..." என்று மேலும் பதிலுக்கடிக்க ஆரம்பிக்கவும் சூர்யா முறுவலுடன் இடை புகுந்து, "போதும், போதும் அமைதி, அமைதி! நீங்க மேல சொல்லுங்க ரிச்சர்ட்" என்றார்.

ரிச்சர்ட் தன் விளக்கத்தைத் தொடர்ந்தார். "நான் என்ன சொல்லப் போனேன்னா, முதல்லெல்லாம் எலக்ட்ரிக் ஷேவர்கள், எலக்ட்ரிக் டூத் ப்ரஷ் எல்லாம் ரீசார்ஜ் பண்ண நேரடியா மின்சார ஸாக்கெட்ல மின்கம்பியால பொருத்தணும். ஆனா, இப்பல்லாம் அப்படியில்லை. இன்டக்டிவ் சார்ஜர்னு வந்திருக்கு. சார்ஜரை மட்டும் மின்ஸாக்கெட்ல பொருத்தினா போதும். ஷேவர், ப்ரஷ் எல்லாம் கம்பியில்லாம, சார்ஜர் மேல உக்கார வச்சாப் போதும் அப்படியே வெளியிலிருந்தே சார்ஜ் பண்ணிடுது."

சூர்யா, "ஓ! ஆமாமாம். அது எலக்ட்ரோ மேக்னடிக் இன்டக்ஷன்-ங்கற ஒரு விளைவுனால செய்யறாங்க. சார்ஜர்ல ஓடற மின்சாரத்தால உண்டாகிற மின்காந்த சக்தி, ஷேவர்குள்ள இருக்கற ஒரு மின்கம்பி வளையத்துல எதிர் மின்சாரத்தை உருவாக்கி ஓட வச்சு பேட்டரில மின்சக்தியை தேக்கி வைக்குது. நான் நடத்தின தொழிற்சாலையில கூட சில கருவிகளுக்கு இதைப் பயன் படுத்தியிருக்கோம்." என்றார்.

ரிச்சர்ட் தலையாட்டினார். "அதைத் தான் சொல்றேன். எங்க மின்தூண்டல் தொழில் நுட்பமும் அந்த மாதிரி இண்டக்டிவ் விளைவை அடிப்படையா வச்சுத்தான் வேலை செய்யுது. மூளைக்கு வெளியில தலை மேல பொருத்தப் படற இந்த வட்டங் களுக்குள்ள ஓடற மின்சாரம் மூளைக்கு உள்ளேயும் நியூரான்களில சார்ஜ் உருவாக்கி, அவைகளை ஸிக்னல் அனுப்ப வைக்குது."

சூர்யா சற்று யோசித்து விட்டு, "அது அவ்வளவு எளிதா இருக்கும்னு தோண லையே. ஷேவர்களில வெறும் மின்சாரம் தூண்டினாப் போதும். ஆனா உங்க விஷயத்துக்குப் பயன் படணும்னா இன்னும் கூர்மையா ஒரு குறிப்பிட்ட இடத்துல தூண்டணும் இல்லையா?!"

ஷாலினியும் சேர்ந்து கொண்டாள். "ஆமாம், அது கரெக்ட். ஒரு குறிப்பிட்ட நியூரான், குறிப்பிட்ட வரிசையிலேயும், அளவுகளிலேயும் ஸிக்னல் உண்டாக்கணுமே? வெறும் வெளி இண்டக்ஷன் எ·பெக்ட்ல அந்த மாதிரி எப்படி செய்ய முடியும்?"

நாகுவும் ரிச்சர்டும் பலமாகக் கை தட்டி ஆரவாரித்தனர். நாகு பாராட்டினார். "சரியா பாயின்ட்டை புடிச்சிட்டீங்க ரெண்டு பேரும். அதுல தான் எங்க தொழில் நுட்பத்தின் மாய மந்திர தந்திரமே இருக்கு!"

ரிச்சர்ட் தொடர்ந்து விளக்கினார். "இந்த வட்டங்களுக்குள்ள கொஞ்சம் கூர்ந்து பாருங்க. இது வெறும் வட்டமில்லை. வெகு கூர்மையா ஸிக்னலை முன் பக்கம் மட்டும் அனுப்பி, சில மைக்ரான்களுக்குள் ·போகஸ் செய்யக் கூடிய ஆன்ட்டென்னா அது நடுவுல இருக்கு! அப்படிக் கொஞ்ச நஞ்சம் ஸிக்னல் வேற பக்கம் லீக் ஆனா, வட்டமே அதைப் பிரதிபலிச்சு திரும்பி அந்த ஆன்டெனா வழியா அனுப்பிடும். எந்த பக்கத்துக்கு ஸிக்னல் அனுப்பணுமோ அதுக்கேத்தா மாதிரி ஆன்டெனாவை மிகக் குறுகிய அளவுகளுக்குத் திருப்பவும் முடியும். நாலு ஆன்டெனா வச்சு வேணுங்கற அளவுக்கு வேணுங்கற நியூரான்களை வேண்டிய வகையில் தூண்ட முடியுது."

ஷாலினி தளராமல் மேலும் ஒரு ஆட்சேபணை எழுப்பினாள்! "ஓகே, அது புரியுது, ஆனா நியூரான்கள் மிக மிக சிறியதாச்சே? நம்ம மூளைக்குள்ளயே பல பில்லியன் ஸெல்கள் இருக்கே? வேண்டப் பட்ட குறிப்பிட்ட நியூரான்களைத்தான் தூண்டறோம்னு எப்படி உங்களுக்கு தீர்மானமாத் தெரியும்?"

ரிச்சர்ட் கை தட்டிப் பாராட்டினார். "அற்புதம், ஷாலினி! இப்ப எங்கத் தொழில் நுட்பத்தின் மிகச் சிறந்த சாராம்சத்தையே புடிச்சிட்டீங்க! நீங்க சொல்றது சரிதான். வெறுமனே ·போகஸ் செஞ்சிட்டா மட்டும் போதாது. பார்க்கப் போனா, எங்க தொழில் நுட்பத்தின் படி, ·போகஸ்ங்கறது, ஸிக்னல் அளவை ஒரு குறுகிய இடத்துக்குள்ள அதிகரிக்கத்தானே ஒழிய ஒரு குறிப்பிட்ட நியூரானை மட்டும் தூண்டறத்துக்கில்லை.

அதுக்கு நாங்க இணைஅதிர்வு அலை வரிசைங்கற (resonance frequency) கோட்பாட்டைப் பயன் படுத்தறோம்."

சூர்யா "அந்த மாதிரி நான் ஒலிபரப்பில தான் கேள்விப் பட்டிருக்கேன். மூளையில எப்படி?!" என்று வினாவினார்.

ரிச்சர்ட் மேலும் விளக்கினார். "கரெக்ட். ஒலி பரப்புகள் அலைவரிசைகளை வச்சு இருக்கு.

இணை அதிர்வுங்கறதை இசைக் கருவிகள் சம்பந்தமாவும் நிறைய கேட்டிருக்கலாம். ஆனா அது இயற்கையில பலவற்றுக்கும் உண்டு. உதாரணமா, கண்ணாடிக் கோப்பைகள் வெகு உயர்வான அலை வரிசையில வர ஒலி பலமான அளவுக்கு இருந்தா, அதோட சேர்ந்து அதிர்ந்து உடைஞ்சே கூட போயிடும்."
கிரண் இடை மறித்தான். "ஓ! ஆமாம். டி.வி.ல பாத்திருக்கேனே, ஒரு குண்டம்மா கத்தி ஒரு ஒயின் க்ளாஸை உடைச்சாளே!"

ரிச்சர்ட் பலமாக சிரித்து விட்டு தொடர்ந்தார். "ஆமாம் கிரண். 'It ain't over until the fat lady sings'-ன்னு கூட சொல்லுவாங்க. அது ஒரு ஓபரா பாடகியா இருக்கணும். அவங்களால அந்த அளவுக்கு உயர்ந்த அலை வரிசையைக் கூடத் தொட முடியும்னு காட்டினாங்க போலிருக்கு."

சூர்யா குழப்பத்துடன் வினாவினார். "சரி, அது ஒலி சம்பந்தப் பட்டது. ஆனா நீங்க பயன் படுத்தறது மின்காந்த அலைகள் இல்லையா? அதுக்கு இணையதிர்வு எப்படிப் பொருந்தும்?!"

ரிச்சர்ட் விளக்கினார். "ரொம்ப சரியான கேள்வி, சூர்யா! இயற்கையா, பல பொருட்களுக்கு ஒலி சம்பந்தப் பட்ட இணையதிர்வு அலை வரிசை இருக்குன்னு சொன்னேன் இல்லையா? அதே மாதிரி, பல பொருட்களுக்கு மின்காந்த அலைகளுக்கான இணையதிர்வு அலைவரிசையும் உண்டு. சொல்லப் போனா, நீங்க இதை ஏற்கனவே உங்க அலுவலகங்களில நிச்சயமா பயன்படுத்தியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்."

கிரண் வாய் பிளந்தான். "நான் கூடவா!"

ரிச்சர்ட் முறுவலுடன் விவரித்தார். "ஆமாம் கிரண், நீ கூடத்தான்! ப்ரெஸென்டேஷன் எதாவது குடுக்கறச்சே லேஸர் கருவியினால எதையாவது சுட்டிக் காட்டியிருப் பேயில்லையா?!"

கிரண், "ஓ, நிறையக் காட்டியிருக்கேனே, இதோ என் சாவிக் கொத்துல கூட ஒண்ணு சின்னதா இருக்கே!" என எடுத்துக் காட்டினான்.

ரிச்சர்ட் தொடர்ந்தார். "ரைட். அந்த லேஸர் கூட இந்த மாதிரியான இயற்கை மின்காந்த அலைவரிசைக் கோட்பாட்டை அடிப்படையா வச்சுத்தான் வேலை செய்யுது. ஒளிங்கறது கூட ஒரு மின்காந்த அலை வரிசைதான். லேஸர்ங்கறதே ஒரு வார்த்தை கிடையாது. Light Amplification by Stimulated Emission of Radiation-ங்கற வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்து LASER-ன்னு சுருக்கமா மாத்தியிருக்காங்க, அவ்வளவுதான். அதுல முக்கியமான பகுதி 'stimulated emission'-ங்கற வார்த்தைகள் எங்க தொழில்நுட்பமும் அந்த மாதிரிதான்."

சூர்யா மேலும் வினாவினார். "சரி அது இன்னும் கிட்ட வந்திருக்கு. ஆனா, அதுவும் மின்சாரத்தை அனுப்பி ஒளியைத் தூண்டி அனுப்பறது. இதுல நேரடியா மின்சாரம் அனுப்பலியே? மேலும் வெளியில வருவது ஒளியில்லையே, நியூரான்கள் வரிசையா அனுப்பர மின்ஸிக்னல்கள் இல்லையா?!"

ரிச்சர்ட் கை தட்டிப் பாராட்டினார். "உங்க கூர்மையான அறிவு பிரமாதம். சரியான கேள்விதான். ஆனா, இப்ப அந்த ஒலி இணையதிர்வையும், லேஸர் மின்காந்த ஒளித் தூண்டலையும் சேர்த்துப் பாருங்க?" என்றார்.

சூர்யா பதிலளித்தார். "ஓ! இப்பப் புரியுது. ஒலிக்கு தூரத்துலேந்து இணையதிர்வு தூண்டற மாதிரி, உங்கத் தொழில் நுட்பம் மின்காந்த அலைகளுக்கும் தூரத்திலிருந்து பரப்பித் தூண்டறா மாதிரி கண்டு பிடிச்சிருக்கீங்க. ஆனா, 'லேஸர்'ங்கரது தூண்டப் பட்டவுடன் ஒரே அலை வரிசையில ஒளி வரதே? ஆனா நியூரான்களை எப்படி பல அளவுகளில பல விதமான வரிசையில ஸிக்னல் அனுப்ப வைக்கறீங்க?"

ரிச்சர்ட் விளக்கினார். இன்னொரு, ரொம்ப நல்ல கேள்வி! நியூரான்கள் ஸிக்னல் அனுப்ப ஒரு அலைவரிசையில ஓரளவுக்குத் தூண்டுதல் வேண்டும். அதுதான் இந்த வட்டங்கள் அனுப்பற மின்காந்த அலைகள் செய்யுது. ஆனா, அனுப்பறப்போ ஒரு விதமான வரிசையில அதை நிறுத்தி நிறுத்தி அனுப்பறோம். அதை எந்த வரிசையில அனுப்பறமோ, அந்த வரிசையில நியூரான்களும் தூண்டப்பட்டு ஸிக்னல் அனுப்புது."

சூர்யா தலையாட்டினார். "ஓகே, இப்பப் புரியுது."

ஷாலினி மீண்டும் புகுந்தாள். "எனக்கும் அது புரிஞ்சுது. ஆனா இன்னொரு கேள்வி. எந்த மனநிலையைத் தூண்ட எந்த நியூரான்களை எப்படித் தூண்டணும்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?!"

அப்போது நாகு அவளைப் பாராட்டினார். "இந்தக் கேள்வி எப்ப வரும்னு பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப முக்கியமான கேள்வி. அந்த மனநிலை-நியூரான் இரண்டுக்கும் உள்ள பிணைப்பைத் தெரிஞ்சுக்கறத்துக்காக நாங்க பல வருஷக் கணக்குல ரொம்பவே பாடு பட்டிருக்கோம். பல்லாயிரக் கணக்கான பேரை அவங்களுக்கு வெவ்வேறு மனநிலை வர வழைச்சு, EEG மூலமா அப்போ அவங்க மூளையில எந்த நியூரான்கள் எந்த மாதிரி அளவுக்கு எந்த வரிசையில ஸிக்னல் அனுப்புதுன்னு மூளையோட வரை படம் மாதிரி விவரமா எடுத்து வச்சிருக்கோம்."

ஷாலினி இன்னும் குடைந்தாள். "வாவ், ரொம்ப ஆச்சரியமா இருக்கு! ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குமா என்ன? மனுஷங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியாச்சே?!"

ரிச்சர்ட் பலமா தலையாட்டி ஆமோதித்தார். "ரொம்ப நல்ல பாயின்ட். எங்க டேட்டாபேஸ்ல ஒரே ஒரு மாதிரி கிடையாதுதான். ஒரே மன நிலைக்கு வேற வேற விதமான பிணைப்புக்கள் உண்டு. ஆனா, பல்லாயிரக் கணக்கான பேரை EEG எடுத்ததுல, சுமாரா ஒரு சில விதமான பிணைப்புக் குழுக்களில அவங்க எல்லாரும் பொருந்திடறாங்கன்னு தெரிஞ்சுது. அப்புறம், ஒரு மன நிலை சோதனை உருவாக்கினோம். புதுசா வந்தவங்களுக்கு ஒரு சில மன நிலைகளை வரிசையா ஏற்படுத்தி, அதோட EEG எடுத்துட்டா அவங்க எந்த பிணைப்புக் குழுவில அவங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுடுது. அதை வச்சு அவங்களோட அடுத்த மனநிலை பிணைப்புக்கள் எப்படி இருக்கும்னு நாங்க முன்கூட்டியே சொல்ல முடிஞ்சுது. அதுனால, இப்போ உங்களுக் கெல்லாம் முதல்ல அந்த மனநிலை பிணைப்பு சோதனையை செஞ்சுட்டா உங்களுக்கும் எந்த பிணைப்புக் குழுன்னு தெரிஞ்சுடும். நினைவுகளைத் தூண்டவும் முடியும்."

அப்போது சூர்யா வினாவினார். "எனக்கு ஓரளவுக்குத்தான் புரியுது. ஆனா அது இப்போ அவ்வளவு முக்கியமில்லை. இன்னோரு விஷயம் குழப்பமா இருக்கு. நான் EEG எடுக்கறதை பாக்கறப்போ சரியா ஸிக்னல் கிடைக்கணும்னா அந்த இடத்துல கொஞ்சம் தலை மயிரை எடுத்தாத்தான் நல்லா வரும்னு பாத்திருக்கேன். இதுக்கும் அப்படியா?"

கிரண் அலறியே விட்டான்! "அய்யய்யோ! நான் என் தலைமுடியை ஷேவ் பண்ணணுமா?! சான்ஸே இல்லை, என்னை விட்டுடுங்கப்பா!"

ஷாலினி இன்னும் அவனைக் சீண்டினாள்! "ஆமாண்டாப்பா! வட்ட வட்டமா உன் தலையில பல இடங்களில ஷேவ் பண்ணா ரொம்ப புது ஸ்டைலா இருக்கும் உன் கேர்ள் ·ப்ரெண்டுகள்ளாம் புளகாங்கிதமா மயங்கி உன்னை மொச்சிடுவாங்க, மத்த பசங்களும் பொறாமையோட எங்க பண்ணிக்கிட்டேன்னு கேட்டு துளைச்சு எடுத்துடுவாங்க!"

ரிச்சர்டும் நாகுவும் சிரிப்புத் தாங்க முடியாமல் பலமாக சிரித்து விட்டனர். ஷாலினி, கிரண் இருவரின் செல்லச் சண்டைகளைப் பல முறைப் பார்த்து ரசித்துப் பழகியிருந்த சூர்யாவின் முகத்திலும், இந்தக் கிண்டலைக் கேட்டு ஒரு பெரிய புன்னகை தவழ்ந்தது!

வழக்கமாக ஷாலினி என்ன சீண்டினாலும் உடனே பதிலுக்கு ஒரு அதிரடி கொடுக்கக் கூடிய கிரணும் கூட வாயடைத்தே போகும்படி இருந்தது ஷாலினி வீசிய வேட்டு. சில நொடிகள் வாயைத் திறந்து மூடிய கிரண் இறுதியாக திடப் படுத்திக் கொண்டு ஒரு பலகீனமான பதிலடி அடித்தான்! "ஆமாம் உனக்குக் கூட, உன் ஆஸ்பிடல் கவுன் பட்டன்களுக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்கும் மேட்சிங்கா வட்ட வட்டமா நல்லா இருக்கும்,

வெட்டிக்கோ!"

ரிச்சர்ட் "பிளீஸ்! அமைதி!" என்று கை தூக்கி இருவரையும் மேலும் பேசாமல் நிறுத்தி விட்டு மேலும் விளக்கலானார். அவர் அடுத்துக் கூறியது, இதுவரை கூறியதை விட வியக்கத் தக்கதாகவே இருந்தது!

ஆனால், அதற்கடுத்து நடந்ததோ அதிரடியாகவே அமைந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline