Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
சாதனைப்பாதையிலே
தீபா ராஜகோபால்
சுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்
கலிபோர்னியா பாடபுத்தக சர்ச்சை
சாந்தி ஓர் அமைதிப்பயணம்
- ராஜ் மங்கலிக்|மே 2006|
Share:
Click Here Enlargeசேர்ந்திசை, நடனம், வர்ணனை, பல்லூடகக் காட்சி இவற்றின் சொக்க வைக்கும் வண்ணக் கலவையான 'சாந்தி--ஓர் அமைதிப் பயணம்' நிகழ்ச்சி பாரதத்தின் 5000 ஆண்டுக் கலாசார வரலாறு ஆகும். சின்சினாட்டியின் (ஒஹையோ) கம்பீரமான அரோனா·ப் நிகழ்கலை மையத்தில் மார்ச் 25, 2006 அன்று அமைதிப்பயணத்தின் இறுதிக் காட்சி வந்தபோது அங்கிருந்த சுமார் 2600 பேரும் எழுந்து நின்று கரவொலி செய்ததோடு, பிரதானப் பாடலின் வரிகளை ஒன்று சேர்ந்து பாடினர்!

'நாகரிகத்தின் உதய காலத்தில் இருந்தே மனிதன் தனக்கும் பிரபஞ்ச சத்தியத்துக்கும் இடையேயான உறவைக் கணிக்க முயற்சி செய்து வந்திருக்கிறான்' என்ற தனது கருத்துக்கு மேடை வடிவமும், இசையும் அமைத்து, படைத்து, இயக்கியவர் 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன். அடிப்படை யிலே இந்திய இசை வடிவங்களுக்கு மேற்கத்தியச் சேர்ந்திசை முறையில் புனைவு செய்து மேடையேற்றினார் கன்னிக்ஸ். 'சாந்தி'யின் பேரமைதிப் பரிமாணங்களை அடிக்கோடிட்டுக் காட்டியது இந்நிகழ்ச்சி.
சின்சினாட்டியின் தொழில் முனைவோரான மஹேந்திர வோரா நிகழ்ச்சியை அறிமுகம் செய்து பேசினார். பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலரான ஜான் பெப்பர் "இது ஒரு அற்புதமான, ஒளிவீசும் தயாரிப்பு, இன்னும் அதிகமானவர்களைச் சென்றடைய வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

சின்சினாட்டி கலைக் கழகத்தின் வான் ஆக்கர்மேன் 'சாந்தி' அந்த அரங்கில் நடந்த மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று என்று குறிப்பிட்டார். 'பலதரப்பட்ட மக்களையும் இதன் இசை தொட்டது. இது ஒரு மாபெரும் தயாரிப்பு' என்றார் அவர்.

இருநூறு பேருக்கு மேல் கொண்ட இமாலய முயற்சி

சின்சினாட்டி மாநகர இந்தியக் காயர் (choir) குழு, சாந்தி சிறுவர் காயர், மார்ட்டின் லூதர் கிங் கோரல், சின்சினாட்டி மகளிர் காயர், புனித யோவான் யூனிடேரியன் யுனிவர்சலிஸ்ட் சர்ச் காயர் ஆகியவற்றை உள்ளடக்கிய 166 பேர் கொண்ட இசைக் குழு, 40 இந்திய நடனமணிகள், 18 பேர் கொண்ட சேம்பர் இசைக்குழு மற்றும் இந்திய கருவியிசைக் குழுவைக் கொண்ட தாக இருந்தது 'சாந்தி'யை நடத்திய பல்கலை அணி. பிரபல இசைநடத்துனரான டாக்டர். கேதரைன் ரோமா இவ்வணியை வழி நடத்தினார்.

"இந்நிகழ்ச்சி நெஞ்சைத் தொட்டது" என்றார் கேதரைன் ரோமா ஆர்னா·ப் மையத்தில் நடந்ததைப் பற்றிக் கூறும்போது. "இவ்வளவு பரந்துபட்ட கலாசாரப் பின்னணி கொண்டவர்களை வைத்து இசை நடத்துவது தனி அனுபவம். கன்னிக்ஸ் சில தேர்ந்தெடுத்த இந்திய மந்திர ஒலிகளை மேற்கத்திய குறிப்புகளில் எழுதிக்கொடுத்தார். இவற்றையும் இந்திய ராகப் பாரம்பரியத்தையும் அறிவதே ஓர் ஆனந்த அனுபவம்" என்று அவர் மேலும் கூறினார்.

"இதற்கான ஒத்திகைதான் எங்கள் அனுபவத்தின் உச்சம். ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு மேற்கத்திய இசைஞருக்கு நான் ஒரு பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குவேன். அவர்கள் எழுதப்பட்ட குறிப்பிலிருந்து அப்படியே வாசிப்பதைக் கேட்டு இந்தியப் பாடகர்கள் அசந்து போவார்கள்" என்கிறார் கன்னிக்ஸ்.

"பரஸ்பரப் புரிதலோடு பலதரப்பட்ட கலாசாரப் பின்னணி கொண்டவர்கள் ஒன்று சேர்வது அவசியம். மாறுபட்ட கலாசாரம், மதம் சேர்ந்தவர்களிடையே புதிய நட்புகளும் உறவுகளும் மலர்கின்றன" என்கிறார் டாக்டர் ரோமா.

'சாந்தி'யின் உலகளாவிய கருப்பொருள்

இந்தத் தொழில்நுட்ப உலகில், மனித நாகரிக வளர்ச்சிபற்றிய ஒரு கலைஞனின் பார்வையே 'சாந்தி'. "எங்கிருந்து வந்தோம்?" என்ற கேள்வியில் தொடங்கி, இயற்கையின் எழிற்கோலத்தை வியந்து, பின்னர் கீழைத் தேசத்தில் ஓர் 5000 ஆண்டுப் புராதன நாகரிகம் எப்படிக் காலம், கருத்துகள், கலாசாரங்கள் ஆகியவற்றைத் தன்னுள் இணைத்துத் தழைத்தது என்பதை இசை, நடனம், உரை, பல்லூடகம் வழியே தோற்றுவித்தது 'சாந்தி'.

'சாந்தி'யின் இசை

"கல்யாண், ஸ்ரீ, பட்யார், வாகதீஸ்வரி, கம்பீர நாட்டை, சரஸ்வதி, துர்கா, கேதார் உட்படப் பல ராகங்களோடு கலந்த காயர் இசைப் பாரம்பரியம் ஓர் வினோத உலகத்துக்குக் கேட்போரை இழுத்துச் சென்றிருக்கும்" என்கிறார் இதனைப் படைத்த கன்னிக்ஸ். 'சாந்தி'யில் தில்லானா, தரானா, ஆரட்டோரியோ, உச்சாரணம் என்ற பலவகைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. லீலா மார்கஸ், அகிலா சங்கர், சகோரி சாட்டர்ஜி, ரேவந்தா சாராபாய் ஆகியோரின் நடனம் குறிப்பிடத் தக்கவை.
Click Here Enlargeஇந்திய இசைக்குழு

கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் தனது மாணாக்கரோடு சேர்ந்து 'வசந்தக் கொண்டாட்டம்' நிகழ்ச்சியை 1994-ல் படைத்தார். 'The Blue Jewel' 1996-ல் தொடர்ந்தது. இவற்றின் மூலம் சின்சினாட்டி மாநகர இந்தியச் சமூக இசைக்குழு தோன்றியது. இரண்டாயிரமாவது ஆண்டில் நடந்த 'Millennium Peace Celebrations' நிகழ்ச்சியில் 'Chants for Peace' என்ற உருப்படியை 30 பேர் கொண்ட குழுவின் மூலம் வழங்கினார். 2002-ல் நடந்த 'சூர்யா' இக்குழுவினர் வழங்கிய பெரிய அளவிலான நிகழ்ச்சியாகும்.

முதன்முதலில் 2004-ல் சின்சினாட்டிப் பல்கலைக்கழக அரங்கத்தில் 'சாந்தி'யின் இரண்டு காட்சிகளை வழங்கியபோது, 700 பேர் கொள்ளளவு கொண்ட அவ்வரங்கில் நிற்கத்தான் இடம் இருந்தது.

"மிக நீளமானதும், கனமானதுமான செய்திகளைத் தரும் பகுதிகள் வந்தபோதும், இந்த முறை 2600 பார்வையாளர்கள் மிக்க அமைதியோடு கண்டு ரசித்தது எங்களுக்குக் கிடைத்த விருது போன்றதாகும்" என்கிறார் கன்னிக்ஸ் நெகிழ்வோடு.

மின்னியாபொலீஸில் இருந்து 'சாந்தி'யைப் பார்க்கவென்றே வந்திருந்த சசி குப்தா "இந்தச் சாதனையைப் படைக்க உங்கள் நகரம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. சந்தித்திருக்கவே முடியாத பலரை நீங்கள் ஒன்று சேர்த்திருக்கிறீர்கள்" என்றார்.

ஓவிய ஆசிரியரான மாகி மார்ஷல் "நிகழ்ச்சியின் இறுதியில், குறிப்பாக 'சர்வே பவந்து' பாடும்பொழுது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டியபோது ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்கிறார்.

மீண்டும் 'சாந்தி'

மே 20, 2006 அன்று லெஹை பல்கலைக் கழக (பெத்லஹேம், பென்சில்வேனியா) வளாகத்தில் 'சாந்தி' மீண்டும் மேடையேறும். அதிலும் அங்குள்ள இசை, நடனக் கலைஞர்கள் மற்றும் குழுக்கள் பங்கு கொள்வர். அட்லாண்டா, கிரேடர் அட்லாண்டா, வாஷிங்டன் DC ஆகிய இடங்களிலும் 'சாந்தி'யைப் படைத்தளிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். அதிகத் தகவலுக்கு: www.shantichoir.org

2004 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் 'சாந்தி'க்காகப் பாடிய ஜெனி·பர் ஸ்டக்கர், வரும் நிகழ்ச்சிகளிலும் பாட ஆர்வமாக இருக்கிறார். அவர் கூறும் காரணம், "நம்பற் கரிய இந்தப் படைப்பில் பங்குகொள்ள நான் மிகமிக ஆர்வமாக இருப்பது பாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக மட்டுமே அல்ல. எவ்வளவு பேர் இதைப் பார்த்து இது இசை என்னும் மொழி வழியே நாம் தரும் செய்தியை மனதில் வாங்கிக் கொள் கிறார்கள் என்பது மிக முக்கியம். இந்த முயற்சியில் நமது இசைத் திறன் பயன் பட்டால், அதுவே அத்திறமைக்குக் கிடைத்த மிகவுயர்ந்த பயன் ஆகும்."

பார்ப்பவரையும் பங்குகொள்வோரையும் உள்ளுருக்கும் உன்னத நிகழ்ச்சிதான் 'சாந்தி--ஓர் அமைதிப்பயணம்'.

'சாந்தி தினம்' அறிவிப்பு சின்சினாட்டி நகரத் தந்தை மேதகு மார்க் மல்லரி அவர்கள் 'சாந்தி-ஓர் அமைதிப்பயணம்' நடந்த மார்ச் 25-ஆம் நாளை சின்சினாட்டி நகரத்துக்கு 'சாந்தி தினம்' என்று பிரகடனம் செய்தார். ஆர்னா·ப் அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பைச் செய்தது ‘சாந்தி'யின் படைப்பாளர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன், இசைநடத்துனர் கேதரைன் ரோமா மற்றும் 200 கலைஞர்களின் அற்புதப் படைப்பின் தாக்கத்தை உணர்த்தியது.

ஆங்கிலத்தில்: ராஜ் மங்கலிக், எஸ். தத்தா மற்றும் ராதா கணேசன்
தமிழில்: மதுரபாரதி
More

சாதனைப்பாதையிலே
தீபா ராஜகோபால்
சுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்
கலிபோர்னியா பாடபுத்தக சர்ச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline