Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
முட்டாள் தினத்திற்கு முன்பே முட்டாள் ஆனவர்கள்
Tehelka.com
தொடரும் தொகுதிப் பங்கீடு
- வே.பெருமாள்|ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlargeபன்னிரண்டாவது தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொண்டன. முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது அ.தி.மு.க. தான்.

அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விபரம் : அ.தி.மு.க. 141, த.மா.கா. 32, பா.ம.க. 27, காங்கிரஸ் 15, மார்க்சிஸ்ட் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8, பார்வர்டு பிளாக் (சந்தானம்) 1, தமிழக முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்) 1, லத்தீப் தலைமையிலான இந்திய தேசிய லீக் 1.

இதில் லத்தீப் தங்களுக்கு 1 தொகுதி போதாது. அதைத் திருப்பித் தந்து விடப் போகிறேன் என்று கூறிவிட்டார். அவர் ஒரு தொகுதி பெற்றதால் லத்தீப்பின் கட்சியே 'இரண்டாக' உடைந்து போனது.

இத்தனை நாள் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 1 தொகுதி கூட ஒதுக்கப் படாததால் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ''அ.தி.மு.க. கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற' கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் 'மதச்சார்பற்ற' (ஜனதா தள) கட்சியான எங்களுக்கு 1 தொகுதி கூட ஒதுக்கவில்லையே என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு வெளிப்படையாகவே புலம்புகிறார்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகின்றன என்பது இன்னமும் (29.3.2001) முடிவாகவில்லை. இந்த விஷயத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்சினை இருக்காது என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகப் பார்த்து எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகுதிகளை 'இந்தா பிடிங்க' என்று கொடுத்துவிடுவார். கூட்டணிக் கட்சிகளும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்.

தி.மு.க. கூட்டணி தொகுதிப் பங்கீடு விபரம் : தி.மு.க. 155, பா.ஜ.க. 21, ம.தி.மு.க. 21, புதிய தமிழகம் 10, விடுதலை சிறுத்தைகள் 8, மக்கள் தமிழ் தேசம் 6, தமிழக ஜமாத் 3, தி.மு.க. ஆதரவு நண்பர்கள் என்கிற படுதாவுக்குள் ஒளிந்துள்ள சிதம்பரம் தலைமையிலான த.மா.கா. ஜனநாயகப் பேரவைக்கு 3, எம்.ஜி.ஆர். கழகம் 2, முத்தரையர் சங்கம், தொண்டர் காங்கிரஸ் (குமரி அனந்தன்), உழவர் உழைப்பாளர் கட்சி, கெங்கு நாடு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் (வல்லரசு) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று என ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு தலைமையிலான எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.வும், உடைந்தாலும், உடனே ஒட்டிக் கொள்ளும் ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சியும் தொடர்ந்து தி.மு.க. வோடு பேச்சு நடத்தி வருகின்றன. இந்தக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவாகும் பட்சத்தில் தி.மு.க. போட்டியிட தீர்மானித்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக் குறைய வாய்ப்புள்ளது.

வாழப்பாடி ராமமூர்த்தி, தீரன், வன்னிய அடிகள் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி என 3 தொகுதிகள்தான் தமிழக ராஜீவ் காங்கிரசுக்கு தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி 'கனத்த' இதயத்தோடு விலகிவிட்டார். அதோடு வாழப்பாடி காப்பாளராக உள்ள வன்னியர் சங்கத்தில், 'வன்னியர்கள் யாரும் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடக் கூடாது' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் 21 தொகுதிகளைப் பெறுவதற்குள் ம.தி.மு.க. படாதபாடு பட்டுவிட்டது. பா.ஜ.க. வுக்கு முதலில் ஒதுக்கிய 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்து ம.தி.மு.க.வுக்கு 21 தொகுதிகள் அளித்து 'இரண்டு' கட்சிகளையும் சமமாக்கினார் கருணாநிதி.

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அநேகமாக முடிவாகிவிட்டது. புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ஜ.க., மக்கள் தமிழ் தேசம் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதற்கு முன்பே பா.ஜ.க. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 21 தொகுதிகள் பட்டியலை தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்திலேயே அறிவித்துவிட்டது.

நான் அறிவிப்பதுதான் இறுதிப்பட்டியல் என்று கூட்டணித் தலைவர் கருணாநிதி கூற, முன்கூட்டியே அறிவித்ததில் தவறு ஒன்றும் இல்லை என்று பா.ஜ.க. கூற, இந்த விஷயத்தில் எழுந்த புகைச்சல் அவசர அவசரமாக அமுக்கப்பட்டு விட்டது.

அடுத்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று நாங்கள் பட்டியல் கொடுத்தோமோ அந்தப் பட்டியலில் இருந்து தி.மு.க. எங்களுக்கு 12 தொகுதிகளைத்தான் ஒதுக்கியது என்று பகிரங்கமாக அறிக்கை வாசித்தார்.

இதை வன்மையாக மறுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. கொடுத்துள்ள 43 தொகுதிகள் பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மூன்று தொகுதிகள்தான் அவர்கள் கொடுத்துள்ள பட்டியலில் இடம் பெறாதவை என்று ம.தி.மு.க. கொடுத்த 43 தொகுதிகளின் பட்டியலையும் அதிலிருந்து ம.தி.மு.க. வுக்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளின் பட்டியலையும் பகிரங்கமாக வாசித்தார். இதற்கு மறுபடியும் வைகோ மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் முதல் வாரத்துக்குள் அனைத்துக் கட்சிகளின் பட்டியலும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். அதற்குள் நொடிக்கொரு மாற்றங்களும், நிமிடத்துக்கொரு சீற்றங்களும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

இந்த மாற்றங்களும், சீற்றங்களும் கட்சித் தலைவர்களிடத்தில்தான். இந்தக் கட்சித் தொண்டர்கள் தம் கட்சி வெற்றி பெற வேண்டுமென 'கடனே' என்று கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்.

வே.பெருமாள்
More

முட்டாள் தினத்திற்கு முன்பே முட்டாள் ஆனவர்கள்
Tehelka.com
Share: 




© Copyright 2020 Tamilonline