Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
முன்னோடி
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி
- மதுசூதனன் தெ.|டிசம்பர் 2003|
Share:
Click Here Enlargeதமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட்டு வந்தவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980).

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுப் போக்கை வழிநடத்தியவர்களுள் பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை, பேரா. தெ. பொ.மீ., மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். முதல் இருவரும் நிறுவனம் சார்ந்த செயல் பாட்டாளர்கள். மயிலையார் நிறுவனம் சாராத ஆய்வாளர். ஆனாலும் நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சி நெறிமுறைகளுள் அவரது ஆய்வுப்பாதை சங்கமித்து புதிய ஆய்வுச் செல்நெறிப் போக்கு வளர்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

தமிழ்ச் சமூகத்திற்கு முறையான வரலாற்றுணர்வு இருந்ததில்லை. அது இல்லாததால் அவர்கள் வரலாற்றின் அரிய சேமிப்புகள் பலவற்றை இழந்திருக்கிறார்கள். இன்னொருபுறம் வரலாற்றுப் பதிவுகள் சரிவரத் தொகுபடாமையும், வரலாறு முறைப்படி எழுதப்படாமையுமே தமிழில் பெரும்பான்மையும் காணப்படுகிறது. இக்காரணங்களால் நமது பாரம்பரிய மரபைப் பற்றி அறிய முடியாத, ஆய்வு ரீதியில் நோக்க முடியாத 'புலமை வறுமை' , 'ஆய்வு வறுமை' எம்மிடையே நிலவி வந்தது.

மயிலையார் வரலாற்றுப் பதிவுகளின் அவசியத்தை உணர்ந்து மிகுந்த அக்கறையோடும் பொறுப்போடும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுசார் ஆய்வுப்பணியிலும் எழுத்துப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். தமிழ்நாட்டின் வரலாறு, மொழி, கலை, இலக்கியம், சமயம், பண்பாடு ஆகியவற்றை எதிர்கால இளைய தலைமுறையினர் கண்டு தெளியத் தனது வாழ்நாளைச் செலவிட்டார்.

மயிலையின் தந்தை சீனிவாசன் மயிலாப்பூரில் காரணீசுவரர் கோவில் தெருவில் மருத்துவராக வாழ்ந்தவர். அத்துடன் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை மிக்கவர். இவருக்கு மூன்றாவது மகனாக வேங்கடசாமி 16.12.1900இல் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்புவரை புனித தோமையார் பள்ளியில் பயின்றார். சிலகாலம் சென்னைத் தொழிற்பள்ளியில் (தற்போதுள்ள ஓவியக் கல்லூரி) ஓவியமும் கற்றார்.

மயிலையாரின் வீட்டில் சிறந்த நூலகம் ஒன்று இருந்தது. அதில் ஏராளமான ஓலைச் சுவடிகளும் சித்த மருத்துவ மற்றும் தமிழிலக்கிய நூல்கள் இருந்தன. தந்தையாரின் அறிவு வேட்கை வேங்கடசாமிக்கு ஒரு தூண்டுதலைக் கொடுத்தது. தமையன் கோவிந்தராசன் தமிழாசிரியராக இருந்தமையால் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தணியாத பற்றும் நுணுகிக் கற்கும் திறனும் வாய்க்கப் பெற்றவராக இருந்தார்.

தந்தை தமையன் ஆகியோர் அடுத்தடுத்து இறக்கவே படிப்பு முயற்சிகளைக் கைவிட்டு ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மோட்டார் வண்டி உதிரிச் சாமான்கள் விற்கும் கடை ஒன்றில் எழுத்தராக அமர்ந்தார். சிறிது காலத்திற்குள் அப்பணியிலிருந்து விலகி, நீதிக்கட்சியின் சார்பில் வெளியான 'திராவிடன்' பத்திரிகையாசிரியர் குழுவில் சேர்ந்தார். பத்திரிகையாளராகவும் பரிமளிக்கத் தொடங்கினார். மேலும் ஆசிரியப் பயிற்சி பெற்று, தாம் படித்த பள்ளியிலேயே தொடக்கக் கல்வி ஆசிரியரானார். கற்பிக்கும் நேரத்தைத் தவிர அவர் ஆய்வு முயற்சிகளில் முழுமையாகக் கவனம் வைத்தார்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகம், கன்னிமரா நூலகம், சென்னைக் கீழ்த்திசைச் சுவடி ஏட்டு நூலகம் ஆகியவை அவரது அறிவை விரிவு செய்தன. மேலும் ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினைச் செய்தார். கல்வெட்டுகளையும் பழைய ஏட்டுச் சுவடிகளையும் தெளிவாகப் படித்தறிந்தார். தொன்மையான சாசனங்களை எல்லாம் தேடிச் சேகரித்தார். ஆக, கல்வெட்டியல், சாசனவியல் உள்ளிட்ட துறைசார் பயிற்சி அவரது புலமைக்கு மெருகூட்டியது.

கோயில்கள், கோபுரங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகள் முதலியனவற்றைக் கண்டு மகிழ்வதில் பெரும் ஆர்வங் கொண்டவராக விளங்கினார். கோயில்சார் கற்கைப்புலம் அவரை அறிவின் புதிய வாயில்களை நோக்கி வழிநடத்தியது. கோயில் கல்வெட்டுகள் கூறும் செய்தி முதல் அக்கோயில் எவ்வகையான அமைப்பு உடையது? யார் கட்டியது? எந்தக் காலத்தில் கட்டியது? கட்டிடக்கலை எத்தகையது உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கும் அவரிடம் விடை இருந்தது.

ஆக, சமயம், வரலாறு, மொழியியல், தொல்பொருளியல், மானுடவியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவரது கவனம் விரிந்தது. இவ்வாறான பல்துறை ஆய்வுப் பின்புலம் அதற்கேயுரிய நெறிமுறைகளை அவரிடம் வளர்த்தது. 1920களில் மயிலையாரின் ஆய்வுக் கட்டுரைகள் குடியரசு, ஊழியன், ஈழகேசரி, செளபாக்கியம் போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

மயிலை எழுதியிருக்கும் புத்தகங்கள் சிலவற்றின் பெயர்களைக் கவனித்தாலே அவருடைய பரந்துபட்ட அறிவும் அக்கறைகளும் வெளிப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம், சங்க காலத்து பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், நுண்கலைகள், மறைந்து போன தமிழ் நூல்கள், தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, பெளத்தமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும், சமணமும் தமிழும், சமயங்கள் வளர்த்த தமிழ் உள்ளிட்ட நூல்களின் பெயர்கள் தமிழ், தமிழர் சார்ந்த பன்னோக்கு ஆய்வை விசாலித்தவை என்று எளிதில் இனங்காணலாம். தமிழின் பன்முகப்பாங்கான வளங்களை நோக்கிய அவரது கவனம் தமிழியல் ஆய்வு வரலாற்றையே மீட்டுருவாக்கம் செய்தது
வேங்கடசாமி சமயக் காழ்ப்புணர்ச்சி இல்லாது நடுநிலைமையுடன் திகழ்ந்தவர் என்பதை அவர் எழுதிய பல நூல்களில் வாயிலாக உணரலாம். சமண சமயத்திற்கு எதிரான பல கருத்துகள் பக்தி இலக்கிய காலத்தில் உருவாக்கப்பட்டன. அனல்வாதம் - புனல்வாதம் போன்றனவும் நடந்தன. ஆனால் அச்சமயத்தார் தமிழுக்கு வழங்கிய வளங்கள் அளப்பரியன. இவற்றையெல்லாம் 'சமணமும் தமிழும்' என்னும் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெளத்தமதம் மறைந்துவிட்ட போதிலும் அதன் கொள்கைகளில் சில இன்றும் இந்து மதத்தில் நின்று நிலவுகின்றன என்பதையும் மயிலையார் எடுத்துக் காட்டுகின்றார். குறிப்பாகச் சோழநாடு, தொண்டை மண்டலம், மதுரை, சேரநாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதேழு ஊர்கள் பெளத்தமதம் செல்வாக்குப் பெற்றிருந்த இடங்கள் எனச் சுட்டுகிறார். அவைகளுள் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் முதலியன முக்கியமானவையாகும். இதுபோன்ற அரிய பல செய்திகளை 'பெளத்தமும் தமிழும்' எனும் நூலில் காண முடியும்.

ஆக சைவப் பண்பாடே தமிழர் பண்பாடு என்று நம் தமிழறிஞர்கள் தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் ஒற்றைப் பரிமாணமாக இறுக்கமாய் கட்டமைத்துக் கொண்டிருந்த காலத்தில் சமணமும் பெளத்தமும் இன்றித் தமிழ் இல்லை என்பதை ஆய்வுபூர்வமாக நிறுவியவர் மயிலை சீனி வேங்கடசாமி. இதுபோல் அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய வரலாற்றுப் பார்வைக்கு மாற்றாக தமிழ்மரபால் ஒதுக்கப்பட்டவற்றின்பால் கவனம் ஈர்த்தார். 'மறைந்து போன தமிழ் நூல்கள்', 'களப்பிரர் காலம்' முதலான நூல்களால் மாற்றுப் பார்வை மேற்கிளம்பவும் காரணமாக இருந்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் நூல் மூலம் புதுவெளிச்சம் கொடுத்தார். களப்பிரரை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் சுட்டும் வரலாற்றுணர்வை மயிலையார் ஏற்கத் தயாராக இல்லை. அவர்களைத் தமிழகத்துக்கு அண்மையில் இருந்தவர் எனவும் திராவிட இனத்தவர் எனவும் அணைத்துக் கொள்ளும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

களப்பிரர் காலத்தைத் தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சி அறுபட்ட, பண்பாடு அழிக்கப்பட்ட இருண்ட காலமாகத் தமிழ் அறிவுலகம் சித்தரித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் களப்பிரர் காலத்தின் ஊடாகத் தமிழக வரலாற்றின் தொடர்ச்சியை நிறுவியவர். களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை கண்ட வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நுண்கலைகள் பற்றிய சிறந்த ஆய்வு நூல். கலைகள் குறித்த முழுமையான செய்திக்களஞ்சியம். தமிழகமே கலைகளின் உறைவிடம் என்பதனையே ஆய்வு நோக்கில் வலியுறுத்துகிறார். சங்ககாலம் தொட்டுக் கட்டிடக்கலை, சிற்பம், இசை, ஓவியம், நாடகம் யாவும் தமிழகத்தில் செழித்து வளர்ந்து வந்துள்ள பரிணாம வளர்ச்சியை இந்நூலில் தெள்ளத்தெளிவாக முன்வைக்கின்றார். இடைக்காலத்தில் இக்கலைகள் அருகிப் போயின. இவை யாவும் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல் இது.

மயிலை சீனி வேங்கடசாமி பதினொரு வரலாற்று ஆய்வு நூல்களையும், எட்டு இலக்கிய ஆய்வு நூல்களையும், ஐந்து கலையியல் ஆய்வு நூல்களையும், நான்கு சமய ஆய்வு நூல்களையும் ஐந்து பொது நூல்களையும் எழுதியமையிலிருந்து அவரது பன்முக அறிவு புலனாகிறது. இவை எழுதவேண்டு மென்பதற்காக எழுதப்பட்ட நூல்கள் அல்ல. தமிழின் பன்மைத்துவம், புலமை மரபுகள் பற்றிய தேடலின் பயனாகவே இவை எழுதப்பட்டன. தமிழ் 'பன்மைத்தன்மை' மிக்கது என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துப் பேசினார்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுப் போக்கில் மடைமாற்றத் திருப்பத்தை நிகழ்த்திய முன்னோடி மயிலை சீனி வேங்கடசாமி 8.5.1980 இல் அவர் மரணமடைந்தார். அவரது நூல்களும் கட்டுரைகளும் சிந்தனைகளும், ஆய்வு நெறிமுறைகளும் உயிர்ப்புமிகு புலமைத்தளத்தையே இன்றுவரை நிறுவி நிற்கின்றன.

தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline