Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சமயம்
இறைவனை வாயார வாழ்த்திப்பாட ஒரு பாடல்
திருநாராயணபுரம்
- அலர்மேல் ரிஷி|ஜூலை 2003|
Share:
வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் திருவரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. அப்படிப்பட்ட திருவரங்கத்திற்கு ஒப்பாக வைத்து பேசப்படும் தலம் திருநாராயணபுரம். மைசூரி அருகே மேலக்கோட்டையில் உள்ளது இத்திருத்தலம். வடநாட்டில் ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாராயணபுரம் என்ற கோயிலும் அதில் உள்ள உற்சவ மூர்த்தி சம்பத்குமாரன் எழுந்தருளிய பின்னணியும் சுவையான வரலாறாகும்.

வைணவத்தின் தாய் என்று நம்மாழ்வாரைக் குறிப்பிட்டால், இராமானுஜரை வளர்ப்புத்தாய் என்றே கூறலாம். 1017இல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவத்தை வாழ வைத்த இராமானுஜர் ஒரு சீர்திருத்தவாதி. புரட்சிகரமான பல செயல்களைச் செய்தவர். இவருக்கும் இந்த நாராயணபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இனி காணலாம்.

இராமானுஜர் இளம்பருவத்திலேயே திருமணமானவர். மனைவி தஞ்சமாம்பாள் இவரைப் போன்ற பரந்த விரிந்த மனம் உடையவரல்லர். சாதி குல ஆசாரங்கள் என்ற பெயரில் மிகக் குறுகிய வட்டத்துள் வாழ்ந்து வந்தவர். பாகவதோத்தமர்களிடம் குல ஆசாரபேதங்களைப் பார்த்து தஞ்சமாம்பாள் செய்த அபசாரங்கள் இராமானுஜரை இல்லறந்துறந்து துறவற வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. வைணவத்திற்குக் கிடைத்த பேறு இது என்றுதான் கொள்ள வேண்டும். ஒன்றில் நஷ்டம். இன்னொன்றில் இலாபம் அல்லவா?! இராமானுஜர் ஊர் ஊராகச் சென்று விசிஷ்டாத்வைத கொள்கையைப் பரப்பி வருகின்ற காலத்தில் தொண்டனூர் என்ற பகுதியை ஆண்டு வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இவருடைய சீடனானான். அவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற தாஸ்ய நாமம் சூட்டி சீடனாக்கிக் கொண்டார். இருவரும் காட்டுவழியே போய்க்கொண்டிருந்த போது துளசிக் காட்டில் ஒரு அடர்ந்த புதருக்கிடையில் திரு நாராயணனின் விக்கிரகம் தென்பட்டது. இராமானுஜர் விருப்பப்படியே விஷ்ணு வர்த்தனன் மைசூருக்கருகே உதயகிரி மலையின் மீது மேல் கோட்டை என்றழைக்கப்படும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிமுடித்தான்.

முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ''என் செல்லப் பிள்ளாய் வருக'' என்று குழைவா அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றே அழைக்கப்படுகிறது.

சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார்'' என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர். பங்குனி மாதத்தில் நடைபெறும் வைரமுடிசேவை விழாவில் இவ்விருவரும் சேர்ந்தே வீதி உலா வரும் வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது மட்டுமா? டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ''அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்'' என்று சொல்லி அமைதிப்படுத்தினார். அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டுவந்து சேர்த்தனர். கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்ற போது, இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரி மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த இராமானுஜரின் புரட்சி இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி.

120 ஆண்டுகாலம் வாழ்ந்து இறைத்தொண்டு ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். வாய்ப்பு கிடைத்தால் மைசூர் செல்பவர்கள் மேல்கோட்டை சென்று நாராயணமூர்த்தியை தரிசிக்கலாம்.

மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது!.

டாக்டர் அலர்மேலுரிஷி
More

இறைவனை வாயார வாழ்த்திப்பாட ஒரு பாடல்
Share: 




© Copyright 2020 Tamilonline