Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சமயம்
ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு
- அலர்மேல் ரிஷி|மே 2003|
Share:
நூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. இவை இரண்டும் "இரட்டைத் திருப்பதி" என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் இவை இரண்டும் வடகரையில் அமைந்துள்ளன.

துலைவில்லிமங்கலம்

ஷேத்திரத்தின் பெயர் புரியாத புதிராக இருக்கிறதா? 'துலா' என்பது துலாக்கோலைக் குறிக்கும். துலாக்கோல் என்பது தராசு. அம்பு எய்யப் பயன்படும் வில் என்பதுதான் வில்லி என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. தராசு வில் இவை குறித்த வரலாறு மிகவும் சுவையானது.

தேவலோகத்தைச் சேர்ந்த வித்யாதரன் ஒருவன் தன் மனைவியுடன் இத்தலத்தில் சல்லாபித்துக் கொண்டிருந்த போது ஆகாய மார்க்கமாக குபேரன் போய்க் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட குபேரன் இவர்களை வில்லாகவும் தராசாகவும் சபித்துவிட்டான். தவறுக்கு வருந்தி சாப விமோசனம் கேட்டபோது, இத்தலத்திற்கு யாகம் செய்வதற்கு வரப்போகும் சுப்ரப முனிவரால் இவ்விருவரும் மீண்டும் பழைய உருவம் பெறுவார்கள் என்று கூறிச்சென்றான் குபேரன்.

குபேரன் கூறியது போலவே சுப்ரபமுனிவர் வந்தார். திருமாலைக் குறித்துத் தவம் செய்வதற்கு இத்தலத்தைத் தேர்ந்தெடுத்த முனிவர், யாகசாலை அமைக்கும் பொருட்டு நிலத்தைச் சமப்படுத்த முற்பட்டபோது அங்கே தராசும் வில்லும் இருக்கக் கண்டு கையில் எடுக்க, அவை மறைந்து, வித்யாதரனும் அவன் மனைவியும் சாபம் நீங்கிப் பழைய உருவம் பெற்றனர். துலையும் வில்லும் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்ற பொருளில் இத்தலம் துலைவில்லிமங்கலம் என வழங்கப்படுகிறது.

தேவபிரான் கோயில்

சுப்ரபமுனிவர், வித்யாதரனின் சாபம் தீர்த்த பின்னர் தமது யாகத்தை முடித்து, அவிர் பாகத்தை அங்கு எழுந்தருளிய இறைவனுக்கும் தேவர்களுக்கும் அளித்தமையால் இத்தலத்துக் கோயில் தேவபிரான் கோயில் என அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கின்றார். தாயாருக்கென்று தனியாகச் சன்னிதி இல்லை.

அரவிந்தலோசனர் கோயில்

வடமொழியில் அரவிந்தலோசனர் என்ற பெயர் தமிழில் செந்தாமரைக்கண்ணர் என்று அழைக்கப்படுகின்றது. ஆதிசேடன் மீது வீற்றி ருக்கும் கோலத்தில் காட்சி தருகின்றார். இவரது பெயரைப்போலவே தாயாரும் "கருந்தடங்கண்ணித்தாயார்" என்ற அழகிய தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.

அஸ்வினி தீர்த்தம்

கங்கைக்கரையில் வாழ்ந்து வந்த சத்ய சீலர் என்பவரது மூன்று மகன்களில், விபீதகன் என்ற மகனுக்குக் குட்டநோய் ஏற்பட்டபோது நாரத முனிவர் அறிவுரைப்படி இரட்டைத் திருப்பதியில் ஒன்றான இத்தலத்தில், அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

அஸ்வினி தீர்த்தம்: பெயர் வரலாறு

யாரொருவர் யாகம் செய்தாலும் அதன் பலனாகிய அவிர்பாகம் தேவர்களுக்கே போய்ச் சேர்வது குறித்து அசுவினி புத்திரர்கள் பிரம்மனிடம் முறையிட்டு அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேண்ட, பிரம்மன் இத்தலத்து இறைவனைப் பிரார்த்திக்குமாறு கூற, அவர்களும் தாமிரபரணிக் கரைக்கு வந்து இத்தலத்துத் தீர்த்தத்தில் நீராடி தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து, கடுந்தவம் மேற்கொண்டு வழிபட இறைவனும் அவர்கள் அவிர்பாகம் பெறும் வரத்தை அருளினார். அசுவினி புத்திரர்கள் நீராடியதால் அசுவினி தீர்த்தம் என்ற பெயரும், தாமரைப் பூக்கள் கொண்டு அர்ச்சித்ததால் இறைவனுக்கு அரவிந்தலோசனர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆதிசேஷன் ஆசனமாயிருக்க அதில் வீற்றிருக்கும் கோலத்தில் தாயாருடன் காட்சி தருகின்றார் அரவிந்தலோசனர்.

இரட்டைத்திருப்பதியில் தேவபிரானின் இறைத்தன்மை அடியார்களோடு உறவு கொண்ட குணவிசேஷமாக அதாவது "பந்துத்வம்" கொண்டதாகப் போற்றப்படுகின்றது. இவ்விரண்டு தலங்களும் முறையே ராகு, கேது கோள்களுக்கு உரிய தலங்களாகப் பேசப்படுகின்றன.
துலைவில்லிமங்கலம் குறித்து நம்மாழ்வார் பாடிய பாசுரம் இதோ:

"திருந்து வேதமும்வேள்வியும்திருமா
மகளிரும்தாம் மலிந்

திருந்துவாழ்பொருநல்
வடகரைவண்தொலைவில்லிமங்கலம்

கருந்தடங்கண்ணிகைதொழுத
அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்

இருந்திருந்துஅரவிந்தலோசன!
என்றென்றேநைந்திரங்குமே"

பெருங்குளம்

நவதிருப்பதி வரிசையிலே எஞ்சிய ஒன்று பெருங்குளம். ஆதியில் இதற்கு தடாகவனம் என்றுதான் பெயர். தாமிரபரணி ஆற்றின் வடகரையில், ஸ்ரீவைகுண்டம் - திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள பெருங்குளம் "திருக் குளந்தை" என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தலத்திற்கு பாலிகாவனம் என்றொரு பெயரும் உண்டு.

பாலிகாவனம்: பெயர்க்காரணம்

இங்கு வாழ்ந்த வேதசாரன் என்பவன் மகப்பேறு வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க, அவனருளால் பெண் குழந்தை பிறந்தது. "கமலாவதி" என்று பெயரிட்டு வளர்த்து வந்தபோது ஆண்டாளைப் போலவே இப்பெண்ணும் "மணந்தால் இறைவனையே மணப்பேன்" என்று உறுதியோடு காட்டுக்குச் சென்று கடுந்தவம் புரிய, இறைவனும் அவள் தவத்தை மெச்சி, ஆலிங்கனம் செய்து கொண்டான். எனவே பெண் தவம் செய்த வனம் பாலிகாவனம் ஆயிற்று.

அரக்கன் ஒருவனால் அபகரிக்கப்பட்ட தன் மனைவியை மீட்டுத் தருமாறு வேதசாரன் இறைவனிடம் வேண்ட இறைவன் அவ்வரக்கனைக் கொன்று வேதசாரன் மனைவி குமுத வல்லியை மீட்டு தந்தான். அரக்கனைக் கொன்ற இறைவன், அவன் தலை மீது நின்று நாட்டியமாடினான் என்பதால் "மாயக் கூத்தர்" என்றழைக்கப்பட்டார். மாயக்கூத்து நிகழ்த்திய தால் "சேஷடதாச்சார்யம்" அதாவது அன்பர்களுக்கென்று நிகழ்த்திய மாயம் என்று பொருள். இதனால் மூலவருக்கு "சோரநாதன்" என்று பெயர். அலமேலுமங்கைத் தாயாரும் குளந்தைவல்லித்தாயாரும் மூலவருடன் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். மற்ற திருப்பதிகளைப்போலவே இங்கும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சனிபகவானுக்குரிய தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. நவ திருப்பதிகளும் நவகோள்களுடன் தொடர்புடையதாய் விளங்குவது வியப்பே. ஒரே நாளில் இந்த ஒன்பது தலங்களையும் தரிசித்து முடித்து விடுவதற்கேற்ற விதமாகப் பூஜை நேரங்களும், இடைப்பட்ட தூரமும், போக்குவரத்து வசதியும், அமைந்திருப்பதும் அதிர்ஷ்டவசமாகும்.

டாக்டர். அலர்மேலு ரிஷி
Share: 




© Copyright 2020 Tamilonline