Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - ஒரு விமர்சனம்
- மனுபாரதி|நவம்பர் 2002|
Share:
திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளின் பல மணி நேரங்களும் அலுவலகத்தில்... நாளைய உலகத்தின் தொழில் நுட்பத்தை இன்றே உருவாக்கிக்கொண்டு... நம்மை அறியாமல் உலக மக்களின் வாழ்வையெல்லாம் பாதிக்கவும், இயங்குமுறையில் மாற்றங்கள் கொண்டு வரவும் ஓயாமல் வேலை. அதன் பின், என்ன இசை ஓடுகிறது என்ற சுய நினைவே இல்லாமல் பிரேக்கிலும், ஆக்ஸிலேட்டரிலும் கால் மாற்றி மாற்றி வைத்து ஊரும் வாகனங்களுடன் நீந்தி வீடு நோக்கிய பயணம். ஓய்ந்து போய் வீடு வந்தால் - மனைவி(அல்லது கணவன்) தன் அலுவலகத்திலிருந்து தாமதாக சென்றதால் குழந்தைக் காப்பகத்தில் கட்டிய தாமதக் கட்டணம், மூத்தவளின் பள்ளியில் கொடுத்த கடினமான வீட்டுப்பாடம், கட்ட மறந்த கிரெடிட் கார்டு பில், சாப்பாடு, தொலைக்காட்சி என ஆக்கிரமிக்கும் பல விஷயங்கள். வார இறுதிகளில் அசதி போக தூங்கி, மெல்ல எழுந்து, குழந்தைகளுக்கு வெளியிலும் திரைப்படத்திற்கும் (ஸ்டார் வார்ஸ்) கூட்டிப்போவதாக கொடுத்த வாக்குறுதிக்காகவும், பலசரக்கு, காய்கறி, பழங்களுக்காகவும், அலைந்து விட்டுத், திரும்பிப் பார்த்தால் மீண்டும் திங்கட்கிழமை. மிகவும் வேகமாக சுழலும் இந்த நவீன வாழ்வில் புத்தகம் வாசித்தல் என்பதற்கான நேரம் மிகவும் சொற்பம். 'தமிழில் படிக்கக் கூடிய புத்தகங்கள் வருகிறதா என்ன?' என்று கேட்டுவிட்டு, அந்த நேரமும் அமெரிக்கப் புத்தகங்களுக்குச் சென்றுவிடுவது சோகம்தான். அந்தப் பரவலான எண்ணத்தை மாற்றும் முயற்சியாக தமிழில் வந்துள்ள தரமான புத்தகங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி, விமர்சிக்கப் போகிறது இந்த பகுதி. உங்கள் படிக்கும் ஆர்வத்தை இது கிளறுகிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

குடும்பம் என்கிற அமைப்பில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனித் தனியான உலகங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் தனித் தனித் தீவுகளாய் மட்டும் நிற்காமல ஒன்றோடு ஒன்று சந்திக்கும் சில பொது நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. அல்லது உறவுப் பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. சந்திக்காமல் இருக்கும் தீவுகள் கூட வாழ்க்கை கொண்டு வரும் சிறு சிறு நில நடுக்கங்களினால் நகர்ந்து உராய்ந்து கலந்துவிடுகின்றன. அல்லது சேர்ந்திருக்கும் நிலப்பகுதிகள் பிரிந்து பின்னகர்ந்துவிடுகின்றன. உருவமற்று நுட்பமாய் நிற்கும் இந்தத் தீவுகளுக்கும், இணைக்கும் பாலங்களுக்கும், பொது நிலப்பகுதிகளுக்கும், நில நடுக்கங்களுக்கும் நம்மைப் பயணிக்கவைத்திருக்கிறார் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்"-இன் ஆசிரியர் சுந்தர ராமசாமி.

குழந்தைகளின் உலகம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. தான் கண்ணால் பார்த்தக் காட்சிகளையும், காதால் கேட்ட செய்திகளையும், தன் கற்பனை சேர்த்து எப்படி புரிந்துகொள்கிறது என்பது அவர்களின் உலகத்திற்குள் சென்றால்தான் ஓரளவு அறிந்துகொள்ளலாம். அப்பழுக்கில்லாத அதன் மனங்களில் கற்பனைக் கோட்டைகள் நொடிக்கொன்று முளைத்து எழுந்து கொண்டேயிருக்கும். அந்தக் கோட்டைகளுக்குள் எல்லாம் சுதந்திரமாய்ப் போய் ஆற அமர சுற்றிப்பார்த்து, ஒன்றையும் விடாமல், இருந்ததை இருந்தபடியே வர்ணித்துச் சொல்வது என்பது மிகவும் கடினமான வேலை. இந்தப் புதினத்தில் பாலுவும், ரமணியும், லச்சமும் அவர்கள் உலகத்தின் எல்லா கதவுகளையும் திறந்து வைத்துவிட்டது போல் அவர்கள் மனத்தின் நுண்ணிய உணர்வுகள் எல்லாம் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தரிசனம் மிகவும் வியப்பூட்டுகிறது. திருவனந்தபுரத்து மகாராஜாவின் பள்ளிக்கட்டு வைபவத்தின் சமையல் பொறுப்பை எடுத்துக்கொண்டதாக இக்குழந்தைகள் விளையாடும் ஒரு கற்பனை விளையாட்டு எத்தனை இயல்பாய் அவர்களின் உலகுக்கு நம்மை இட்டுச்செல்கிறது! ஒரு நிமிடம் சண்டை, அடுத்த நிமிடம் அதை மறந்த குலாவல்.. குழந்தைகளுக்குத்தான் இது சாத்தியம். ரமணியும் பாலுவும் சிக்கி
முக்கிக் கற்களாய்ச் சீறிக்கொள்ளும் காட்சிகளும், அடுத்த நிமிடமே காட்டிக்கொள்ளும் பரிவும், அன்பும் - இயல்பான புன்முறுவல் கீற்றுக்களாய் மனதில் இடம்பிடிக்கின்றன. லச்சத்தின் ஜாலங்களை பாலுவின் மனத்துவாரம் வழியாகப் பார்த்து நாமும் ஆச்சர்யப்படுகிறோம். ஒவ்வொரு குழந்தையும் அதன் அதன் இயல்பிலிருந்து துளியும் பிசகாமல் நம்முடன் வாழ்ந்துவிட்டுப் போகின்றன.

இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உலகம், 1930-களில் வாழ்ந்த பெண்களின் உலகம் என்று ஒரு வரலாற்றுக் கண்கொண்டு பார்த்து ஒதுக்கித் தள்ளமுடியவில்லை. இன்றும் லட்சுமியும், ஆனந்தமும், வள்ளியும், சீதையும், பங்கஜாவும், சுகன்யாவும், கௌரியும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் சகஜமான, நாம் அன்றாடம் பார்க்கும் பெண்கள்தான். தங்களுக்கென ஓர் எல்லை இருப்பதாக நம்பும் பெண்கள் இவர்கள். அந்த எல்லை, கலாச்சாரமும், சமூகமும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ கிழித்துவைத்தது. அல்லது அவர்களாகவே கற்பனையாக உருவாக்கிக்கொண்டது. அந்த எல்லையை உணரவாவது செய்கிறர்களா? அதைவிட்டு வெளியே வருகிறார்களா? இல்லை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்களா? இல்லை அப்படி வாழப் பலவந்தப்படுத்தப்படுகிறார்களா? இதில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் சல்லடையாய் நிற்கும் இந்தக் கேள்விகளில், ஒவ்வொரு துவாரத்தில் சென்று விழுகிறார்கள். சிலர் தங்கிவிடுகிறார்கள். ஆனந்தம், லட்சுமிக்குள் இழையோடும் அன்யோன்யம், வள்ளிக்கும் சுகன்யாவுக்கும் இடையில் மலரும் பெரும் கனவுகள், உறுதிகள், சாவித்திரியின் மனப்பிறழ்வு, சீதையின் பொறுமல்கள், ஏக்கங்கள், பங்கஜாவின் பெருமை பேசல், குத்திக் காட்டல், எலிசபெத் டீச்சரின் கூர்ந்த அறிவு என எல்லாமே மிகையின்றி எளிமையாகச் சித்தரிகப்பட்டிருக்கிறது.

ஆண்களின் உலகம் - வேனல் பந்தல் மாநாடும், தேசத்தின் போக்குகள் பற்றிய தார்மீகக் கவலையும், மேலெழுந்தவாரியாக ஒரு தோரணையும், அறிவுப் பசி நிறைந்த வாதங்களும், தொழில், வியாபாரம், அதில் காட்டும் திறமைகள், சாம்ர்த்தியம், சாமர்த்தியமின்மை எனத் தனித்தன்மையுடன் சுழல எத்தனையோ விஷயங்களைக் கொண்டுள்ளது. பிரதான பாத்திரமாக வரும் எஸ்.ஆர்.எஸ், டாக்டர் பிஷாரடி, பிடில் ராமைய்யர், சேது அய்யர், சம்பத், ஸ்ரீதரன், செல்லப்பா, சாமு எல்லாரும் இந்தச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஆண்கள். குடும்பம் என்பது இவர்கள் எல்லாருக்கும் வேர்களும், மண்ணும் போல. தானே வளர்ந்து தன்னைப் பராமரித்துக்கொள்ளும் வேர்கள். புருஷ மரங்கள் விசேஷமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, இலைகள் மூலம் உணவு திரட்டிக்கொடுப்பதைத் தவிர்த்து. மற்றபடி இவர்கள் கிளை பரப்பி பறவைகளைக் கூவி அழைத்து அடைக்கலம் கொடுத்து, மார்தட்டி, மேகங்கள் ஏன் இந்த வடிவத்தில் இருக்கின்றன என்று விவாதித்து வானத்தைத் தொட எம்பிக் கொண்டிருப்பார்கள். இந்தப் புதினத்தில் இது மிக யதார்த்தமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகங்கள் எல்லாம் பின்னிப் பிணைந்து நிற்கும் ஒரு கூட்டு இருப்பாகத் தான் மனித வாழ்க்கை வெளிப்படுகிறது.

எஸ்.ஆர்.எஸ் பாலுவிடம் வெளியே காட்டும் கண்டிப்பும், கறாரும், அந்தப் போர்வைக்குள் மறைத்து வைத்துக் காட்டும் பரிவையும், பாசத்தையும், அவனை மிக புத்திசாலியாகிப் பார்க்கவேண்டும் என்ற வலையும் அவன் எப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறான், அவனது கற்பனையில் எப்படி அவையெல்லாம் வேறு அர்த்தங்களைப் பெற்று விடுகின்றன என்பதை உதிரி உதிரியாக நடக்கும் சம்பவங்களை வைத்து வாசகனுக்கு நுட்பமாக உணர்த்தப்படுகின்றது. அவருக்கும் அவர் மனைவி லட்சுமிக்கும் இடையில் அவ்வப்பொழுது தோன்றும் இடைவெளியை, பேச்சில்லாமலே புரிந்துகொள்ளக் கூடிய உணர்ச்சிகளை அப்படியே எழுத்தில் கொண்டு வடித்திருக்கும் விதம் வாசகனைச் சட்டென்று சென்று அடைந்துவிடுகிறது.

பாசத்தைப் பொழியும், கூடப் பிறக்காத அக்கா லட்சுமிக்கும், தன் அரவணைப்பை நாடும் குழந்தை களுக்கும், சுயநலமற்று பொதுச்சேவையில் மனது வைத்து தேச சேவை செய்யத் துடிக்கும் செல்லப்பாவிற்கும், விதவை மறுமணம் என்பதை அபவாதமாகக் கருதும் சமூகத்துக்கும் இடையில் தத்தளிக்கும் ஆனந்தம் மாமியின் பாத்திரப்படைப்பு மிகவும் நேர்த்தி. அவர்கள் நம்முடன் வந்து நம் வீட்டில் வேலை செய்துகொண்டிருப்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

வள்ளிக்கும் ஸ்ரீதரனுக்கும் நடுவே அரும்பும் காதல், அதைக் கண்டு கொதிக்கும் லட்சுமி, அதனை ஊக்குவிக்கும் சுகன்யா, அவளை தன்னிலையில் நிறுத்திச் சமமாகப் பார்க்கும் ஆனந்தம் எல்லா வற்றிலும் யதார்த்தம். பங்கஜா, எஸ்.ஆர்.எஸ் ஸின் ஒரு தினுசான அண்ணன் தங்கை உறவு, பிஷாரடிக்கும், எஸ்.ஆர்.எஸ்ஸ¤க்கும் உள்ள நட்பு இன்னும் சொல்லப்பட்டிருக்கும் எல்லா உறவுகளுமே இயல்பாய்ச் சித்தரிக்க பட்டிருக் கின்றன.

வாழைத் தோட்டமும், பாம்புகள் நீஞ்சும் பாழ்கிணறும், பிஷாரடி வீட்டு மாந்தோப்பும், மீனச்சல் ஆறும் நம் கண்முன் வந்து காட்சிகொடுக்கின்றன. ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்படும் அந்த வீடு கூட ஓர் உயிருள்ள பாத்திரமாய் எல்லாருடனும் உறவு கொண்டு பிரகாசிக்கிறது.

மொழி நடையைப் பற்றி சொல்ல வேண்டு மென்றால்... ஒரு தெளிந்த நீரோடையை மேலிருந்து பார்க்கத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் அதனடி கூழாங்கற்களாய் இவர்கள் அனைவரும் வெளிப்படுகிறார்கள். இவரது மொழி அத்தனைத் தெளிவாய்ப் பாய்கிறது. மங்கலாக்கும் வாக்கியங் களோ, உறுத்தும் வார்த்தைகளோ இன்றி...
சம்பவங்களை வரிசையாக அணிவகுத்து, கதையாக ஜோடிப்பதனால் ஏற்பட்டுவிடும் ஒரு வித செயற்கைத் தன்மை முற்றிலும் இதில் இல்லை. மிக அருகில் நின்று பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களாய் சம்பவங்கள், உரையாடல்கள், மன ஓட்டங்கள். தூரத்திலிருந்து அந்த உதிரிப் பூக்களைக் கூட்டமாகப் பார்க்கும் பொழுதுதான் அவை முழுமைப் பெற்று சிவப்பு ரத்தினங்கள் பதித்த ஒரு வட்ட வடிவ வெள்ளைப்பாயாகத் தோன்றும். அப்பொழுது துளைகள் எல்லாம் அடைபட்டிருக்கும். அதை போல் வாசகனின் மனமே இவற்றை ஒழுங்குபடுத்தி, துளைகளை நிரப்பி ஒரு முழுச் சித்திரத்தை தரிசித்துவிடுகிறது.

முதல் சில அத்தியாயங்களைக் கடப்பது சிரமமாக சிலருக்குத் தோன்றலாம், புதிய பரிச்சயங்கள் போல. பரிச்சயமான பின் தானாக ஆர்வத்தைத் தூண்டியும், மனதின் வாஞ்சையைக் கிளறியும் புதினம் நகர்வதை எளிதில் உணர்ந்துவிடலாம்.

குழந்தைகளின் உலகம் பற்றி எல்லாராலும் சிறப்பாக எழுத முடிவதில்லை. சுந்தர ராமசாமி போன்ற ஒரு சிலருக்கே அது கைவந்திருக்கிறது. இது போன்று இன்னும் சில படைப்புகளை அவர் படைத்திருக்கலாம் என்ற ஏக்கம் இதைப் படிக்கை யில் தோன்றுகிறது.

மனித உறவுகள் பற்றிய கேள்விகள், சிக்கல்கள், குடும்ப கஷ்டங்கள் எல்லாம் எல்லாருக்கும் இருப்பதுதானே, அதைப் படிக்க வேறு வேண்டுமா என்ற கேள்வி வரலாம். அந்தக் கேள்விகளில், சிக்கல்களில், கஷ்டங்களில், அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் மனிதர்களில் எல்லாம் ஒரு கலை நயமும் நேர்த்தியும் ஒளிந்து கொண்டு இருப்பது இதைப் படித்தால் புரியலாம். விசேஷ மனிதனாக இருக்கிறோம் என்று வேஷமிடுவதை விட சகஜமான மனிதனாக, மனிதத் தன்மையுடன் இருப்பதும் முக்கியம் என்பது போன்ற நிதரிசனம் புலப்படலாம்.

இது சுயசரிதை என்றும், புனைவு என்றும், இரண்டும் கலந்த கலவை என்றும் நிறைய கருத்துக்கள் பரவிவருகின்றன. எது எப்படியோ, ஸ்ரீனிவாஸில் பாலு, ரமணியுடனும், லட்சுமி, ஆனந்தத்துடனும், எஸ்.ஆர்.எஸ்ஸ¤டனும் சில நாட்கள் வாழ்ந்துவிட்டு வரவும், அவர்களின் வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்களின் உலகங்களை பார்க்கவும் ஆசையிருந்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - புதினம்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

காலச்சுவடு பதிப்பகம்
kalachuvadu@vsnl.com

மனுபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline