Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
உயிர் தழைக்கும் மண்
நீங்களுமா!
- கோ. ராமன்|ஜூன் 2019|
Share:
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக, "முடியும் தறுவாயில் இருக்கும் ஆராய்ச்சிப் படிப்பு பற்றிச் சிந்தனையில் இருப்பாள். நீ அனாவசியமாகக் கவலைப்படாதே" என்று கூறிவிட்டார்.

ஒருவேளை இவளும் பருவத்தின் வேகத்தில் காதல், கீதல் வலையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறாளோ என்று என் உள்ளம் துடிக்க, இனி பொறுக்கமுடியாது, இன்று அவள் கல்லூரி முடிந்து வந்ததும் அவளிடமே கேட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். தொலைபேசி ஒலித்தது. "ரேவதி ஏன் நான்கு தினங்களாக கல்லூரிக்கு வரவில்லை?" என்று கல்லூரியிருந்து கேட்டார்கள். ஏதோ பதில் சொல்லிப் பேச்சை முடித்த எனக்கு யாரோ சம்மட்டியால் தலையில் அடித்தாற்போல் ஆனது. துவண்டு சோஃபாவில் விழுந்தேன்..

அடக் கடவுளே! நான் நினைத்ததுபோல் ஆகிவிட்டதோ? வீட்டிலிருந்து தினம் கல்லூரிக்குப் போகிறாளே? எங்கு போகிறாள்? வரட்டும் அவள், நான் கேட்கிறேன். நல்லவேளை என் கணவர் இல்லாத நேரத்தில் கல்லூரி ஃபோன் வந்தது.

என் இன்னொரு மனம் 'இதுபோன்ற சமயத்தில் பாவம் எந்தக் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு ஒரு வாரமாகச் சொல்லமாட்டாமல் அவள் தவிக்கிறாளோ! நம்ம பொண்ணு, நாம் பக்குவமாகக் கேட்டு விஷயத்தைத் தெரிந்துகொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர நம் கௌரவதைக் காட்டி அதட்டி அடம் பிடித்தால் அது விபரீதமாகத்தான் முடியும்' என்று கூறியது.

மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த ரேவதியுடன் டிஃபன், காபி சாப்பிட்டுக்கொண்டே "ரேவதி, ஒரு வாரமா ஒரு மாதிரியாக இருக்கிறாய்.

ஏதாவது பிரச்சனையா? என்கிட்டே சொல்லம்மா" என்று கேட்க அவளோ "ஒன்றும் இல்லை அம்மா" என்றவளிடம், "ஒரு வாரமா கல்லூரிக்குக்கூடப் போகலையா?" என்றேன். திடுக்கிட்டவள் சமாளித்துக்கொண்டு "லைப்ரரியில் நிறைய புஸ்தகங்களிலிருந்து குறிப்பு எடுக்க வேண்டியது இருந்ததால் ஒரு வாரமா லைப்ரரிதான் போறேன்' என்றாள். "அதை உன் புரொஃபசருக்குச் சொல்லவில்லையா? நீ ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று ஃபோன் செய்தார்களே! நல்லவேளை அந்த நேரம் அப்பா வீட்டில் இல்லை" என்றேன்.

"எனக்கு பிஎச்டியும் வேண்டாம், இந்த புரொஃபசர் கைடும் வேண்டாம். எனது மூன்று வருட முயற்சி எல்லாம் வீண்" என்று கண்ணில் நீர்வழிய என் மடியில் விழுந்தாள். அவளை அரவணைத்துச் சமாதானம் செய்து "என்னம்மா நடந்தது! இப்பிடி ஏன் பேசுகிறாய்?" என்று கேட்டேன்.

"என் புரொஃபசர் கைடு என்னிடம் தகாத முறையில் நடக்க முயல்கிறார், முடித்த எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர் மதிப்பிட்டு அங்கீகரித்தால்தான் எனக்கு பிஎச்டி கிடைக்கும். எனக்கு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அவர் பதவி அதிகாரத்தால் தன் இச்சைக்கு என்னை இரையாக்க நினைக்கிறார். என்னம்மா செய்வேன்?"

"அடக்கடவுளே! என்ன சொல்கிறாய், கேட்கவே அசிங்கமா இருக்கே. நீயாக ஏதாவது தவறாகப் புரிந்துகொண்டு சொல்கிறாயா? மிகப்படித்து உயர்பதவிலிருக்கும் தந்தையை ஒத்த பேராசிரியர் அவர். தன் மாணவியை இந்த நோக்குடன் அணுகுவார் என்று என்னால் கற்பனைகூடச் செய்ய முடியலையே?" என்றேன்.
'
"நீ கவலைப்படாதே. அப்பாவிடம் சொல்லி அவர்மீது புகார் கொடுக்கச் சொல்கிறேன், வேறு பல்கலைக்கழகத்தில் உன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து முடிக்கலாம்" என்று ஆறுதல் சொன்னேன். "எதுவானாலும் சரி எனக்கு இனி இந்தக் கல்லூரியும் இந்த கைடும் வேண்டாம்" என்றாள் ரேவதி முடிவாக.

இரவு மெதுவாகக் கணவரிடம் நடந்ததை விபரமாகச் சொல்லி "உடனே அந்தக் கல்லூரி அதிகாரிகளுக்குப் புகார் எழுதி, அந்த ஆள்மீது தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். திட்டவட்டமாக அந்த புரொஃபசரின் கீழ் ரிசெர்ச் பண்ணமாட்டேன் என்று ரேவதி கூறிவிட்டாள்" என்று சொன்னேன்.

ஏதோ கொதித்து எழுவார் என்று எதிர்பார்த்துப் பயந்த நான், அவர் சொன்னதைக் கேட்டு வெட்கத்தால் வெறுப்படைந்தேன். "அம்மாவும் பொண்ணும் ஏதோ அசட்டு கற்பனை செய்துகொண்டு, ஒரு பெயர்பெற்ற புரொஃபசர்மீது அபாண்டக் குற்றத்தைச் சுமத்தலாமா! காலையில் ரேவதியிடம் நான் பேசுகிறேன். நீ படுத்துறங்கு" என்றார்.

எனக்கு உறக்கம் வரவில்லை. தன் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற புரொஃபசர்மீது புகார் கொடுக்கக் கொதித்து எழாமல் தயங்குவதேன்? புரியாமல் இரவு முழுவதும் விடை கிடைக்காமல் தவித்தேன்.

அடுத்தநாள் அவர் ரேவதியிடம் "ரேவதி, சில சமயங்களில் உன் கட்டுரையைப் படித்து, உற்சாகமாகித் தன்னையறியாமல் ஒரு மாணவியாக உன்னைத் தட்டிப் பாராட்டியிருக்கலாம். நீ அதை தப்பாக எடுத்துக்கொண்டு வருந்துகிறாய். நாளைக்கு நீ வேலை பார்க்கும் அலுவலகத்தில்கூட அப்படி நேரலாம். அதுவும் எந்தக் கெட்ட நோக்கத்திலும் இருக்காது என்று புரிந்துகொள்" என்றார்.

துடித்து எழுந்தாள் ரேவதி. "அப்பா நான் படித்தது எல்லாம் கோ எஜுகேஷன் பள்ளி, கல்லூரிகள். எத்தனை மாணவர்கள் எனக்கு நண்பர்கள். அவர்களும் எத்தனையோ ஆசிரியர்களும் எனக்குக் கை கொடுத்து, தட்டிக்கொடுத்து, தொட்டுப் பேசியிருக்கிறார்கள். வேறு நோக்குடன் ஒருவர் தொட முயல்வதை அறியாத குழந்தையல்ல நான்".
"கைடின் மதிப்பீடும் சிபாரிசும் இல்லையென்றால் மூன்று வருடம் நீ உழைத்த பிஎச்டி கிடைக்காமல் போய்விடும். அவர்மீது பழி சுமத்தும் முன் அதையும், சிறிது யோசித்துப் பார் ரேவதி" என்று அப்பா கூறினார்.

ரேவதி "அந்த அதிகார மமதையில்தான், இந்த இக்கட்டான நிலையில் தனது விருப்புக்கு எல்லோரும் இணங்குவார்கள் என்று நினைக்கிறார். ஏன் அப்பா, என் தன்மானத்தவிட என் பிஎச்டி முக்கியமா உங்களுக்கு? எனக்குத் தன்னம்பிக்கையும் திறமையும் இருக்கிறது. வேறு பல்கலைக்கழகத்தில் எனது மூன்று வருட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து என்னால் பிஎச்டிபெறமுடியும். அப்படி முடியாவிட்டால் பரவாயில்லை" என்று சீறினாள்.

நான் பொறுமையிழந்தேன். "நீங்க சொல்றது சரியில்ல. ரேவதி தெளிவா சொல்லிட்டா. உங்களுக்கு ஏன் இன்னும் புரியலை? இதற்கும் மேலே அவள் எப்படிச் சொல்லணும்? உடனே அந்த புரொஃபசரைப் பதவி நீக்க புகார் கொடுத்துவிடுங்கள். மற்றப் பெண்களுக்கும் இதுபோல் கஷ்டம் வரவேண்டாம். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் ரேவதியுடன் சென்று நான் புகார் செய்வேன், நீங்கள் தடுத்தாலும் கேட்கமாட்டேன்" என்று ஆவேசமாகப் பேசினேன்.

"உலகம் தெரியாமல் பேசுகிறாய். ஆதாரம் இல்லாமல் நம் புகாரை குப்பைத்தொட்டியில் போட்டு விடுவார்கள்" என்றார் கணவர். மீண்டும் ஆவேசத்துடன் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் ரேவதியைப் பார்த்துவிட்டு அவரிடம் "நம் பெண் இப்படிச் சொல்வதைவிட நமக்கு வேறென்ன ஆதாரம் தேவை? அந்த புரொஃபசரைப் பார்த்து எல்லோர் முன்னும் நாலு வார்த்தை கேட்டுவிட்டு, புகார் கொடுத்துவிட்டு வருவேன். ஆனது ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு ரேவதியைக் கூட்டிக்கொண்டு என் ரூமுக்குள் சென்றுவிட்டேன்.

குடும்பத்தின் சூழ்நிலையே குலைந்த இந்த நிலையில் அன்று மதியம் தொலைக்காட்சில் 'மீ டூ ட்விட்டர்' பிரேக்கிங் நியூஸில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் வெவ்வேறு வருடத்தில் படித்த மூன்று பழைய மாணவிகள் தங்களுக்கு பிஎச்டி கைடாக அப்பொழுது இருந்த புரொஃபசர் தங்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிவித்தார்கள்.

புரொஃபசரின் பெயரைக் கேட்டதும் ரேவதிக்கும் எனக்கும் உலகமே இடிந்து விழுந்தாற்போல் இருந்தது. அந்த புரொஃபசர் வேறு யாருமல்ல, ரேவதியின் அப்பாதான்.

ரேவதிக்கு ரத்தம் கொதித்தது, "உங்கள் மகள் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கு" என்று பீறிட்டுவரும் அழுகை, கோபத்துடன் அலறினாள். அவரோ மிகவும் அமைதியாக "யாரோ விளம்பரத்துக்காக இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்" என்றார்

ரேவதி "அப்பா செய்தி கொடுத்தவர்கள் விளம்பரத்துக்கு ஏங்கும் பத்திரிக்கைக்காரரோ, நடிகரோ, அரசியல்வாதியோ இல்லை. அலுவலகங்களில் வேலை செய்யும் பொறுப்புள்ள குடும்பத்தார்கள். அவர்களுக்கு. எத்தனையோ ஆயிரம் புரொஃபசர்களில் உங்கள் பெயரை மட்டும் ஏன் கூறவேண்டும்? இப்போ தைரியமாக வெளிப்படுத்த அவர்களுக்கு ஒரு மேடை கிடைத்துள்ளது. அவர்கள் அந்நாளில் எப்படி சொல்லமுடியாமல் பொருமியிருப்பார்கள்! இன்றைக்குச் சொல்வதால் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் எத்தனை இழுக்கு ஏற்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர்கள் சொல்வது, உங்களைப் போன்றோர் படிப்பு, உயர்பதவி, அதிகாரம் என்ற போர்வையில் செய்யும் முறைகேடுகளைச் சமூகத்திற்கு எடுத்து உணர்த்தி, பின்னே வரும் தலைமுறை தாம் பட்ட வேதனையை அனுபவிக்கக் கூடாதென்ற மாபெரும் சமூக நோக்கில்தான். நான் அவர்களை வாழ்த்தி வணங்குவதுடன், நானும் அவர்களைப் போல் எனக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தி உங்களைப் போன்றவர்களை சமூகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டப் போகிறேன். அதனால் யாருக்காவது நல்லது ஏற்படும்."

"என் அப்பா நேற்றே என் மனதை விட்டுப் போய்விட்டார். அம்மா என்னை மன்னித்துவிடு அம்மா!" கூனிக்குறுகி, என் முகத்தை நேரில் காண வெட்கி, என்னைக் கட்டித் தழுவினாள் ரேவதி. துக்கம் தொண்டையை அடைக்க அழுதுகொண்டே நான், "அம்மா ரேவதி என் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இருப்பது உன்னைத் தனியாக விட முடியாததால்தான்" என்று சொன்னேன்.

கோ. ராமன்
More

உயிர் தழைக்கும் மண்
Share: 




© Copyright 2020 Tamilonline