Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
ஹெல்மெட்
வேர்களும் விழுதுகளும்
- பானுமதி பார்த்தசாரதி|ஜனவரி 2019|
Share:
ஒரு கையில் எவர்சில்வர் தூக்கும் இடுப்பில் ஐந்து கிலோ பிடிக்கும் ஒரு அடுக்குமாக, சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள் காமாட்சி. எதிரில் வேகமாக வந்த காரையும் கவனிக்கவில்லை. பிரேக் போட்டு அவள் அருகில் உரசிக்கொண்டு வந்து நின்றது.

காரில் மகன் சங்கரும், அவன் மனைவி, குழந்தைகளும் இருந்தனர். சங்கர் மட்டும் தலையை வெளியே நீட்டி, "அம்மா வண்டியில் ஏறிக்கொள். நான் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்" என்றாள். மருமகள் ஏதும் சொல்லாமல் புன்முறுவல் செய்தாள். லேசான சிரிப்பிலேயே தன் விருப்பையும் வெறுப்பையும் காட்டிவிடுவதில் ஜெயந்தி கெட்டிக்காரி.

"வீடு கிட்டக்கத்தானே இருக்கிறது. நீ போய் வேலையைப் பார். நான் நாலெட்டாக நடந்து போய்விடுவேன்" என்று கூறிவிட்டுக் காமாட்சி மெதுவாக நடந்தாள். "கிழவிக்குக் கூன் விழுந்து நடக்க முடியலைன்னாலும் வீராப்புக்குக் குறைச்சலில்லை" என்று முகவாய்க்கட்டயைத் தோளில் இடித்துக் கொண்டாள் ஜெயந்தி.

"அப்படிச் செய்யாதே அம்மா! தமிழ் சினிமா வில்லியைப் போலவே இருக்கிறது" என்றாள் அவர்கள் மகள் ரோஷனி.

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? என்றாள் ஜெயந்தி எரிச்சலுடன்.

"எங்களுக்கெல்லாம் எவ்வளவு மேனர்ஸ் சொல்லித் தருகிறாய். ஆனால் நீ மட்டும் பாட்டியிடம் இப்படி நடக்கலாமா?" என்றாள் பதிலுக்குக் கோபமாக ரோஷினி.

"நான் என்னடி செய்தேன்? வாயே திறக்கலையே! என்னைப் போய்ப் பழிக்கிறாயே?" ஜெயந்தி.

"அதைத்தான் நானும் சொல்றேன். காரைவிட்டுக் கீழே இறங்கி பாட்டியுடன் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம். காரில் உட்கார்ந்து கொண்டு கூன், கிழவி என்றெல்லாம் மரியாதையில்லாமல் பேசுவது ரொம்பத் தப்பு அம்மா!"

."அதானே" என்றான் சங்கர்.

"அப்பா, எல்லாத்துக்கும் ஜால்ரா அடிக்காதீங்க. நீங்களும் ரொம்ப செல்ஃபிஷ்" என்று குற்றம் சாட்டினாள் மகள்.

சங்கரின் அப்பா விசுவாவும் காமாட்சியை அப்படியேதான் குற்றம் சாட்டினார். "நாம் பெற்ற பிள்ளைதானே! அவன் ஆயிரம் தவறு செய்திருந்தாலும் வீட்டிற்கு அழைத்திருக்கலாமே?" என்றார்.

அவன் செய்தது தவறில்லை, துரோகம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். எவ்வளவு நிர்க்கதியான நிலையில் நிராதரவாக, ஈவிரக்கமில்லாமல் விட்டுச் சென்றான்! ஜெயந்தியும் தான் என்ன பேச்சுப் பேசினாள். அவள் மனதில் மரியாதையும் இல்லை, மனிதாபிமானமும் இல்லை. இப்படிப்பட்டவர்களுடன் உறவு தேவையா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

சமையலறையில் அடைக்கு மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள் சுபத்திரா, காமாட்சியின் நாத்தனார்.

"மன்னி, அண்ணா என்ன சொல்றார்?"

"வழியில் சங்கரைப் பார்த்தேன். வீட்டிற்கு அழைப்பதுதானே என்கிறார்!"

"பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு! ஆனால் எல்லாம் என்னால்தான்" என்றாள் கலங்கிய குரலில்.

"அசடுமாதிரி பேசாதே. உன்னால் அவனுக்கு எல்லாம் நல்லதுதான் நடந்திருக்கிறது. உன் சேமிப்புப் பணத்தை நீ கொடுத்து உதவவில்லை என்றால் அவனால் பி.எஸ்ஸி. முடித்தபிறகு டாக்டருக்குப் படிக்க முடிந்திருக்குமா? நாங்கள் எங்கள் வசதிக்கு, யாரையாவது பிடித்து கிளார்க் வேலையில்தான் சேர்த்திருப்போம். நீதான் இவ்வளவு மார்க் வாங்கியிருப்பவன் கவர்மென்ட் கோட்டாவில் சீட் வாங்கிவிடுவான் என்று டாக்டருக்குப் படிக்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தினாய்! அப்போதெல்லாம் அத்தை நல்லவள். இப்போது அடிஷனல் லக்கேஜ் என்று அவன் பெண்டாட்டி சொன்னால் வாய்மூடி ஊமையாய் நிற்பானா? ஏறிவந்த ஏணியை உதைத்துத் தள்ளின யாரும் உருப்பட்டதில்லை!" என்றாள் காமாட்சி கோபமாக.

"போதுமே மன்னி, நீ உன் வாயால் ஏதும் சபிக்காதே. பெற்ற வயிறு கலங்கக்கூடாது. நம் விரல் நம் கண்ணைக் குத்தினால் கண்ணைத்தானே தேய்த்துவிட்டுக் கொள்ளுகிறோம். விரலை ஒன்றும் தண்டிப்பதில்லையே! அப்படித்தான்."

"நீயும் உன் வியாக்கியானமும்! உன்னை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று பெருமூச்செறிந்தாள் காமாட்சி.

காமாட்சி அடை ஊற்றிக் கொண்டிருந்தாளே தவிர அவள் மனம் பழைய நினைவுகளை அசைபோட்டது. சங்கர் பிறந்தவுடன் காமாட்சிக்கு ஜுரம் மிக அதிகமாக இருந்தது. டாக்டர்கள் ரத்தப் பரிசோதனையில் டைஃபாயிட் என்றார்கள். அதனால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. சின்னக் குழந்தைக்கு என்ன உணவு தரமுடியும்? அக்கம் பக்கம் உள்ளவர்களின் யோசனைப்படி கோனாரிடம் கேட்டு ஒரே மாட்டுப்பாலாக, சிறிது கொதித்து ஆறிய தண்ணீரையும் சேர்த்து வெள்ளிப் பாலாடையில் ஊற்றுவாள். கண்ணை இமை காப்பதுபோல் காத்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவளை நினைக்காமல் இருக்க முடியாது.

அவ்வளவு ஏன்? சங்கருடன் படித்த மருத்துவக்கல்லூரி மாணவி மெஹருன்னிசாவைத்தான் திருமணம் செய்யப் போவதாகப் பிடிவாதமாக நின்றான். அப்போது துபாயிலிருந்து பெரிய பணக்கார ஷேக் வரனுடன் அவளுக்குப் பெற்றோர் திருமணம் நிச்சயிக்க அவளும் துபாயில் செட்டில் ஆகிவிட்டாள். ஆனால் சங்கர்தான் தேவதாஸாகச் சுற்றிக்கொண்டிருந்தான்.

அப்போதுகூட சுபத்திராதான் அடிக்கடி அவனுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தி, பணத்தினால் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம், நாம்தான் எச்சரிக்கையாக வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் தைரியமாகச் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாள்.

சுபத்திராவின் கணவன் ஸ்ரீராமன் திருமணத்தால் பணக்காரனாக வேண்டுமென்று நினைத்த சோம்பேறி. பேர்தான் ஸ்ரீராமன். குணத்தால் ராவணன். அவனைப்போன்ற ஒரு கயவனுடன் எப்படித்தான் வாழ்கிறாளோ என்று கடவுளே அவனைத் தன்னிடம் வெகுவிரைவில் அழைத்துக்கொண்டார். அந்த ஸ்ரீராமின் உறவுக்காரப் பெண்தான் சங்கரின் மனைவி ஜெயந்தி.

அதுவரை மெஹருன்னிசாவின் நினைவில் தேவதாஸாக வாழ்ந்து வந்த சங்கர், ஜெயந்தியைப் பார்த்தபிறகு, அவள் அழகில் மயங்கித் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்.
திருமணம் ஆகுமுன் காமாட்சி, "ஸ்ரீராமன் மிக மோசமானவனாச்சே, அவன் குடும்பத்திலிருந்து பெண்ணா?" என்றாள் கவலையுடன். ஆனால் சங்கரின் பிடிவாதம் தெரிந்து, அரைமனதுடன் ஒத்துக் கொண்டாரகள்.

திருமணம் ஆகும்வரை அமைதியாகப் பணிவுடன் இருந்த ஜெயந்தி, பிறகுதான் சுயரூபம் காட்டத் தொடங்கினாள். அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.

"என் கணவர் உழைப்பில் எத்தனை பேர் சாப்பிடுவது? அம்மா, அப்பா என்றால் வேறு வழியில்லை. அத்தையெல்லாம் கூட இங்கேயே டேரா அடித்தால் எப்படி?" என்றாள் ஜெயந்தி கோபமாக ஒருநாள். சுபத்திரா அவள் வார்த்தைகளில் அரண்டுபோய் நின்றாள். "இப்போதுதான் உன் கணவன். இதற்கு முன்! நாங்கள் ஒன்றும் பெரிய பணக்கார் இல்லை. எங்கள் எல்லோர் கஷ்டத்திலும்தான் வளர்ந்தான். அவனை நாங்கள் ஒன்றும் கஷ்டப்படுத்திவிட மாட்டோம்" என்றாள் காமாட்சி.

"கஷ்டப் படுத்தாமல்தான் சுபத்ரா அத்தைக்கு நமக்குச் சமமாக ஆறாயிரம் ரூபாயில் தீபாவளிக்குப் புடவை வாங்கினீர்களோ?" என்றாள் ஜெயந்தி.

"என்ன நீ! இப்படியெல்லாம் பேசுகிறாய்? இந்த வீட்டில் நீ எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவளும் முக்கியம்" என்றாள் காமாட்சி. வெறும் வாயை மெல்பவளுக்கு அவல் கிடைத்தாற் போலாயிற்று. ஒரு பாரதப்போரே நடத்தினாள் ஜெயந்தி. "சுபத்திரா அத்தை ஏன் இங்கே இருக்கணும்? அவளை முதியோர் இல்லத்தில் சேர்க்கணும். அவள் இங்கே இருந்தால் நான் இருக்க மாட்டேன்" என்று திமிராகக் கத்தினாள்.

அதுவரை மௌனமாக இருந்த விசுவா அப்போது வாயைத் திறந்தார். "இந்த வீடு என் வீடு. என் தங்கை என்னுடன்தான் இருப்பாள். அவளுடன் சேர்ந்திருக்க விருப்பம் இல்லாதவர்கள் இங்கே இருக்க வேண்டாம்" என்றார் திட்டவட்டமாக. அதையே சாக்காக வைத்துக் கொண்டு, சங்கரிடம் ஒன்றைப் பத்தாகச் சொல்லி, தனிக்குடித்தனம் போய்விட்டாள்.

விசுவாவோ, காமாட்சியோ அதைப் பற்றி கவலைப் படவில்லை. சுபத்திரா மட்டும் "குடும்பம் பிரிந்தது என்னால்தான்" என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தாள். விசுவாவின் பென்ஷன் தொகையாலும், ஓய்வுநேரத்தை வீணாக்காமல் வைத்த சாப்பாட்டுக் கடையாலும் சௌகர்யமாகவே குடும்பம் நடந்தது. சேமிப்பும் சிறிது சேர்ந்தது. ம்ஹூம்... பழைய நினைவுகள்... நினைத்து என்ன பயன்!

ஒரு வருடம் ஓடியது. திடீரென்று ஒருநாள் சங்கர் அவசர, அவசரமாக ஓடி வந்தான். அவன் பெண் ரோஷினி கல்லூரியில் ஃபீல்ட் ட்ரிப்பிற்குச் சென்ற பஸ் விபத்திற்குள்ளாகி அவளுக்கு அடி பலமாக இருக்கிறது, ரத்தசேதம் மிக அதிகம் என்று சொல்லி, ஓவென்று அழத் தொடஙு்கினான். சுபத்திராவின் பி+ பிளட் குரூப் மட்டும்தான் ரோஷினிக்குப் பொருந்தியது. அவள் உடல் தேறி வீட்டுக்கு வரவே ஒரு மாதம் ஆனது.

குடும்பத்துடன் சங்கர் பெற்றோரைப் பார்க்க வந்தான். சுபத்திராவின் காலில்தான் முதலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். "நான் உங்களை நிர்க்கதியாக விட்டுச்சென்ற பாவம்தான், ரோஷினி இப்படி ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டாளோ! மாதா, பிதா செய்த பாவம் மக்களுக்கு" என்றான் சங்கர்.

"முட்டாள் மாதிரிப் பேசாதே! அம்மா, அப்பா தங்களைப் பிள்ளைகள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பெற்றோர் தங்கள் எதிர்காலத்திற்கு யார் தயவும் இல்லாமல் வாழ, தங்களைப் பார்த்து யாரும் பரிதாபப் படாமல் வாழ வழி செய்துகொள்ள வேண்டும். என்னை நம்பியிருக்கும் என் மனைவியையும் சகோதரியையும் கடைசிக் காலம்வரை என்னால் காப்பாற்ற முடியும். பிள்ளைகள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் பலர் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. "நான் இன்று செய்கிறேன், நீ நாளை செய்" என்று பேரம் பேசுவதற்கு வாழ்க்கை என்ன வியாபாரமா?" என்றார் விசுவா.

"அப்பா, நீங்கள் சொல்வது போல எல்லோராலும் முடியுமா?" என்றான் சங்கர். "முடிந்துதான் ஆகவேண்டும். இல்லையென்றால் அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றத்தில்தான் முடியும். நாங்கள்தானே உங்களைப் பெற்றோம். அதனால் உங்களைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை. வேர்கள்தானே எவ்வளவு பெரிய மரத்தையும், கிளைகளையும் தாங்குகின்றது. அதனால் எங்களைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறினார் விசுவா.

இவர்களையா நாம் துன்புறுத்தினோம் என்று வெட்கித் தலை குனிந்தனர் சங்கரும், ஜெயந்தியும்.

பானுமதி பார்த்தசாரதி
More

ஹெல்மெட்
Share: 




© Copyright 2020 Tamilonline