Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சுடுமண்
- ரவிபிரகாஷ்|அக்டோபர் 2018|
Share:
சுமதிக்கு அன்றைய காலைத் தபாலில் நான்கு கடிதங்கள் வந்திருந்தன.

ஒன்று: 'பெருமாள் கோயிலில் பாம்பு ஒன்று நுழைந்து பிராமண வடிவம் கொண்டு உபதேசித்த கதையை ஐந்நூறு காப்பி எடுத்துத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினால் சகல சம்பத்துகளும் உண்டாகும்' என்றும், 'எள்ளி நகையாடினாலோ பதினைந்து நாட்களுக்குள் மரணம் சம்பவிக்கும்' என்றும் உதாரணங்கள் கொடுத்து மிரட்டிய கடிதம்.

உதட்டைச் சுழித்து, அதைத் தூக்கிப்போட்டாள்.

இரண்டு: ஐஸ்வர்யா ஃபைனான்ஷியல் சிட் ஃபண்ட்ஸிலிருந்து வந்திருந்த ஏல அறிவிப்புக் கடிதம்.

'இது எத்தனையாவது தவணை?' என்று மனசுக்குள் ஒரு சில விநாடி யோசனையை ஓடவிட்டாள்.

மூன்று: 'நலமாக இருக்கிறாயா? எப்படி இருக்கிறது உன் புதிய திருமண வாழ்க்கை? சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் எந்த மட்டில் இருக்கிறது? தண்ணீர் லாரி தவறாமல் வருகிறதா?' என்பன போன்ற குசல விசாரிப்புகள் அடங்கிய பெங்களூர்த் தோழி திருமதி கனகவல்லி மகாலிங்கத்தின் கடிதம்.

'ஏன் விசாரிக்க மாட்டே, காவிரியை அனுப்பச் சொல்லுடி கடங்காரி!' என்று சிநேகிதிமேல் பொய்க்கோபம் கொண்டாள்.

நான்கு: இலேகன சாமக்கிரி செலவு பத்து காசு நீங்கலான அறுபது காசு மூடு உறை.

முகவரியைப் பார்த்தால் நன்கு பரிச்சயமான கையெழுத்து போல்தான் தோன்றியது. எனினும், சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கவரின்மீது அனுப்பியவர் விலாசமும் இல்லை.

கவரைக் கிழித்துக் கடிதத்தை வெளியே எடுத்துப் பிரித்தாள்.

"அன்புள்ள சுமதிக்கு,

உன் அன்பை அடையும் தகுதியை இழந்த அபாக்கியவான் அருண் எழுதிக் கொள்வது..."

அருண்; அவளது மாஜி கணவன் அருண்! சுமதி கடிதத்தைப் பரபரப்புடன் மேலே படிக்கத் தொடங்கினாள்.

"... குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையென இகழ்ந்தேன். கிளியைத் துரத்திவிட்டுக் கருநாகத்தைக் குடி வைத்தேன். அதன் பலனை இன்று அனுபவிக்கின்றேன். சந்திரிகா என்னைப் புழுவினும் கேவலமாய் மதித்து உதறிவிட்டுப் போய்விட்டாள். நான் உனக்குப் புரிந்த துரோகச் செயல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆண்டவனும் தன் பங்குக்கு எனக்கு இதயநோயைக் கொடுத்துத் தண்டித்துவிட்டான். சுமதி, நான் பாவி. மாணிக்கத்தின் அருமை தெரியாமல் வீசியெறிந்த மதியீனக் குரங்குபோல் ஆகிவிட்ட பாவி! என்னை மன்னிப்பாயா? மன்னித்து எனக்கு ஆறுதல் சொல்ல வருவாயா? மீண்டும் என்னை ஏற்றுக் கொள்வாயா?

உன் அன்புக்காக ஏங்கும், அருண்."

மனோகரா, ரத்தக்கண்ணீர் வசனங்கள் போல் ஏதோ எழுதியிருந்தான். சுமதி கடிதத்தை மடித்தாள். மனசின் ஒரு மூலையில் 'விண்'ணென்று வலி புறப்பட்டது.

வார்டு நம்பர், பெட் நம்பர் எழுதியிருந்தான்.

'அருண், அருண்... என்னவாயிற்று அருண் உங்களுக்கு? எனிதிங் சீரியஸ்?'

அடிவயிற்றில் கவலை சுருண்டது.

"சுமதி, என்ன லெட்டர் அது? அப்படி அசந்து போய் நிக்கிறே! இங்க காமி."

சுமதி தலை நிமிர்ந்தாள். சங்கரன் நின்றிருந்தார். அவரிடம் கடிதத்தைத் தந்தாள்.

முதல் இரண்டு வரியைப் படித்ததுமே, "அபாக்கியவான் அருணாமா..? அயோக்கிய நாய், இப்பத்தான் புத்தி வந்ததாமா?" என்றார். தொடர்ந்து படித்துவிட்டு, "ஹும்! சினிமாவுக்குக் கதை வசனம் எழுதப் போகலாம். முட்டாள்! வேணும் அவனுக்கு. சீந்துவாரற்றுப் புழுவாத் துடிச்சுத் துடிச்சு சாகணும் அவன். உனக்கு பண்ணியிருக்கிற கொடுமைகளுக்கு..." என்று உறுமினார்.

"நிறுத்துங்க, என்ன பேச்சுப் பேசறீங்க? சேச்சே, இப்படியொரு இதயமில்லாத ஆளா நீங்க இருப்பீங்கன்னு சத்தியமா நான் நினைக்கலேப்பா..." என்றாள் சுமதி.

"சுமதி, நீ என்ன சொல்றே?"

"பின்னே என்ன, என்னிக்கோ ஒருகாலத்துல அருண் மோசமானவரா இருந்திருக்கலாம். இப்ப திருந்தியிருக்கார். அவரோட பழகின தோஷத்துக்கு இப்ப நான் அவருக்கு உதவவேண்டியது என்னோட கடமை இல்லியா?"

"அசடே, அவன் திருந்தியிருக்கான்னா நினைக்கறே? நிச்சயமா இல்லே. வேற வழி இல்லாம உன் உதவியைக் கேட்கிறான். சுயநலம்."

"இருக்கட்டும், பரவாயில்லை. இந்த நிராதரவான சூழ்நிலையில் அவரை அப்படியே தவிக்கவிட என் மனசு இடம் கொடுக்கலை."

"அதனால..? அவனைப் போய்ப் பார்த்துக் குசலம் விசாரிச்சுட்டு வரப்போறியா?"

"விசாரிக்கிறது மட்டும் இல்லை. ஏதாவது உதவி தேவைப்பட்டுதுன்னாலும் செய்யத் தயாராயிருக்கேன்."

சங்கரன் சுமதியை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.

"சரி, எப்போ கிளம்பலாம்?" என்றார்.

"நீ... நீங்களும் வரீங்களா?"

"ஏன், கூடாதா?"

"நோ நோ, தாராளமா வாங்க!" என்றாள் சுமதி சந்தோஷமாய்.

"எதுக்கும் பணம் கொஞ்சம் தேவைப்படலாம்னு நினைக்கிறேன்..."

"கையில் அறுநூறு ரூபாய் இருக்கு சுமதி. போதும்" என்றார்.

அடுத்த அரை மணியில் கிளம்பினார்கள்.

போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஆட்டோ பிடித்தார்கள்.

வார்டு வார்டாகத் தேடிக்கொண்டு போய், பெட் நம்பர் பார்த்து, அருகில் போனார்கள். நாலாப்புறமும் திரை போட்டிருந்தது. டிரெஸ்ஸிங் பண்ணுகிறார்கள்போல. வயதான அம்மாள் ஒருத்தி, அருகே கவலையாய் உட்கார்ந்திருந்தாள்.
சுமதி அவளை நெருங்கி, "அருண்ங்கிறவர்..." என்று தொடங்க,

"ஆமாயெம்மா, இந்த 'பெட்'தான். நீங்க யாரு?" என்றாள் அந்த அம்மாள்.

"வேண்டியவங்க..."

அந்த அம்மாள் முகத்தில் சலிப்பு தெரிந்தது.

"என்னம்மா உடம்பு அவருக்கு?" என்று விசாரித்தாள் சுமதி.

"என்னத்தைச் சொல்ல, இதயத்துல ஓட்டையாம். சீக்கிரம் ஆபரேஷன் பண்ணணும்கிறாங்க. நான் என்ன செய்யறது, அவங்க வூட்டுல ஆறு மாசமா சமையல்காரியா இருக்கேன்."

"சந்திரிகா எங்கே?"

"வேணமுட்டும் தின்னுட்டு, வேண்டியதைச் சுருட்டிக்கிட்டு, எவனோ ஒருத்தனோடு ஒழிஞ்சது அந்தத் தத்தாரி."

இதற்குள் திரைகள் விலக்கப்பட, டாக்டரும் நர்சுகளும் விலக, அருண் சுமதியைப் பார்த்தான். பலஹீனமாக 'வா, சுமதி' என்றான்.

டாக்டர் சுமதியை நெருங்கினார்.

"நீங்க.." என்றார் தயக்கத்துடன்.

"அவருக்கு ரொம்ப வேண்டியவங்கதான். என்ன விஷயம், சொல்லுங்க!"

"மிஸ்டர் அருணை இன்னிக்கே எமர்ஜென்சி வார்டுக்கு மாத்தியாகணும். 'பி' பாசிட்டிவ் ரத்தத்துக்குச் சொல்லியிருக்கேன். வந்துரும்னு நினைக்கிறேன். நாளைக்குள்ள ஆபரேஷன் பண்ணியாகணும். கையில் பணம் வெச்சிருக்கீங்க, இல்ல?"

"எவ்வளவு தேவைப்படும் டாக்டர்?"

"பெட் சார்ஜ் மட்டும் இப்பக் கட்டிடுங்க. நாளைக் காலையில கையில ஒரு எட்டாயிரம் வச்சுக்கிடுங்க..."

சொல்லிவிட்டு, டாக்டர் அடுத்த நோயாளியிடம் செல்ல, சுமதி ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு அருணின் தலைமாட்டருகில் உட்கார்ந்தாள். சங்கரன் சற்றுத் தள்ளியே நின்றார்.

"சு.... சு... சுமதி... நான் பாவி சுமதி... நான் பாவி..." என்று அரற்றினான் அருண். கண்களில் கண்ணீர்.

"ப்ளீஸ், அருண்! உணர்ச்சிவசப்படாதீங்க."

அவன், அவள் விரல்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

"நீ... நீ தெய்வம் சுமதி. அந்தச் சண்டாளி சந்திரிகா எனக்கு நல்ல பாடம் கற்பிச்சுட்டா" என்றான்.

"ஸ்ஸு... பழசெல்லாம் எதுக்கு இப்போ? நடக்க வேண்டியதைப் பார்ப்போம்" என்றவள், சங்கரன் பக்கம் திரும்பி, "இப்ப எட்டாயிரத்துக்கு என்னப்பா பண்ணலாம்?" என்றாள்.

"அதான் டாக்டர் சொல்லிட்டுப் போனதிலேர்ந்து யோசிச்சுக்கிட்டிருக்கேன்."

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"சொல்லு..."

"ஐஸ்வர்யா சிட்ஸ்லேர்ந்து லெட்டர் வந்தது. நாளைக்கு டெண்டர் எவ்வளவு போனாலும் சரி, தள்ளி எடுத்துரட்டுமா?"

"இது என்ன கேள்வி சுமதி, கையிலே வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு யாராவது அலைவாங்களா? முதல்ல அதைச் செய்.. "

அருண் நெகிழ்ந்துபோய் சுமதியை நோக்கிக் கை கூப்பினான்.

"நீங்க இவரோட மூத்த சம்சாரமாம்மா?" என்று கேட்டாள் சமையல்காரம்மாள்.

சுமதி பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன், "அவங்களேதான் ரஞ்சிதத்தம்மா, அந்தப் புண்ணியவதியேதான்..." என்றான் அருண்.

"சந்திரிகா போனப்புறம் இவரும் நொடிச்சுப் போய், படுக்கையில வுழுந்திட்டாரு. சதா என்னாண்ட சொல்லிச் சொல்லிப் புலம்புவாரு. 'என் மூத்த சம்சாரத்துக்குப் பண்ணின கொடுமைதான் எனக்கு இந்தத் தண்டனை கெடைச்சிருக்குது'ன்னு."

சமையல்காரம்மாள் கண்கள் பனிக்கச் சொல்லிக் கொண்டிருக்க, அருண் சுமதியின் கைகளை எடுத்து மீண்டும் கண்களில் ஒற்றிக்கொண்டு சொன்னான்....

"சுமதி, நீ வந்ததுமே எனக்குப் பாதி உயிர் வந்துடிச்சி சுமதி. உன் மாங்கல்ய பலம் என்னைக் காப்பாத்திடும், சுமதி. நீ வேணா பாரேன், ஆபரேஷன் சக்சஸாகி நான் எழுந்து குண்டுக்கல்லாட்டம் உட்கார்ந்துக்கறேனா இல்லியான்னு. இனிமே ஆயுசு முழுக்க எனக்கு 'சுமதி ஜெபம்'தான். உன்னைக் கடைசி வரைக்கும் கண் கலங்காம கண்ணுக்குள் வெச்சுக் காப்பாத்துவேன் சுமதி, இது சத்தியம்..."

"ப்ளீஸ் அருண், உணர்ச்சி வசப்படாதீங்க."

"இல்லே, நீ தேவதை. உனக்கு நான் எவ்வளவோ கொடுமைகள் செய்திருந்தும், அதையெல்லாம் மறந்து, மன்னிச்சு..." அருணின் கண்களிலிருந்து கோடாய் நீர் வழிந்தது.

"மிஸ்டர் அருண், டேக் ரெஸ்ட்! முதல்ல உங்க உடம்பு குணமாகட்டும். அதான் இப்போ முக்கியம். மத்ததை அப்புறம் பேசிக்கலாம். மனசைப் போட்டுக் குழப்பிக்காம, நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு ஆபரேஷனுக்குண்டான பணத்தோடு வரேன்" என்றவள், திரும்பி சங்கரனைப் பார்த்து, "சரிப்பா, நாம புறப்படுவோமா?" என்று எழுந்தாள்.

அப்போதுதான் சங்கரனைப் பார்த்த அருண், "சார் யாருன்னு..." என்று இழுத்தான்.

"ஓ, ஸாரி! இவரை உங்களுக்கு இண்ட்ரட்யூஸ் பண்ணலே, இல்லியா? ஹி ஈஸ் மிஸ்டர் சங்கரன், மை ஹஸ்பெண்ட்" என்றுவிட்டு, சங்கரனோடு கைகோத்துக்கொண்டு புறப்பட்டாள் சுமதி.

இதயத்தின் துவாரம் இன்னும் ஒரு சுற்றுப் பெரிதானதுபோல் உணர்ந்தான் அருண்.

- சாவி 15.11.1989

(நன்றி: "இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை", சிறுகதைத் தொகுப்பு, உங்கள் ரசிகன் பதிப்பகம், சென்னை 600 083)

ரவிபிரகாஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline