Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
நெருடல்
- சி.ஆர். ரவீந்திரன்|செப்டம்பர் 2018|
Share:
சாந்தாவுக்கு சூடாக ஒரு டம்ளர் காபி சாப்பிட்டாக வேண்டும் போலிருந்தது. காலையில் இலேசாக இருந்த தலைவலி இப்போது உச்சம் காட்டியது. ஆபீஸில் வேலையே ஓடவில்லை. லீவு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்ப நினைத்தவள் தயங்கியபடியே பொழுதைக் கழித்தாள். தலைவலி மாத்திரையை விழுங்கி நிலைமையை ஒருவாறு சரிக்கட்டினாள். யாரிடமும் எதுவும் பேசவில்லை எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் ஆபீஸ்கூட இன்று களை இழந்து போயிருந்தது. எப்பொழுது பஸ்ஸைவிட்டு இறங்குவோம் என்று அவள் புழுங்கிக் கொண்டிருந்தாள். வழக்கம்போல பஸ்ஸில் பயணிகள் சாய்ந்து நெளிந்து இடித்து நெரித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருந்த குண்டு அம்மாள் பஸ் குலுங்கும்போதெல்லாம் மேலே சாய்ந்தாள். அவள் எரிச்சலை அடக்கிக்கொண்டு சன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். வெளிக் காட்சிகள் எதுவும் மனதில் பதியவில்லை. நெரிசலான குறுகிய வீதிகளில் பஸ் பிதுங்கி நகர்ந்து கொண்டிருந்தது.

கடந்த பத்து நாட்களாக அவளுக்கு ஒரு வகையான மன உளைச்சல். எதிர்வீட்டுக்கு வந்திருந்தவனின் போக்கு அவளுக்கு விசித்திரமாக இருந்தது. எதையோ பறிகொடுத்து விட்டு எதற்கோ ஏங்குவது போன்ற முகம். உணர்ச்சிகளை எளிதில் பிரதிபலிக்காத ஒருவகை மெளனம். நடையில், செயலில் ஒருவித நிதானம். ஒல்லியான அவனின் தோற்றம் உயரத்தை மிகைப்படுத்தியது. இலேசான சிவப்பு நிறம். யாரைப் பற்றியும் சட்டை செய்யாத சுபாவம். மூக்குக் கண்ணாடி வழியே எதையாவது வெறித்திருக்கும் பார்வை. கம்பிச் சன்னல் வழியே திரையை ஒதுக்கிவிட்டு காலையிலும் மாலையிலும் அவனைக் கவனிப்பதில் இவளை அறியாத ஆசை. பலமுறை வெளியே வந்து நின்றும், நடந்தும் அவனின் கவனத்தை இழுக்கும் இவளது முயற்சிகள். இவள் பலமுறை வெட்கப்பட்டுக் கொண்டாள். யாராவது கவனித்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையும் இவளுக்கு இருந்தது. அவன் இவளைக் கவனித்தாலும் எந்தவிதக் கிலேசமும் அடையாதவன் போலிருந்தான். மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி படித்துக் கொண்டிருப்பான். அவன் அப்படி என்னதான் படிக்கிறானோ? அவள் அதையும் கவனிப்பதுண்டு. ஆங்கில எழுத்துக்கள் பளபளக்கும் பேப்பர்களின் பக்கங்களை அவன் புரட்டிக் கொண்டிருந்தான். அப்படியிருந்தும் அவன் சிகரெட் பிடிப்பதாகக் காணோம். அவன் யாரென்று அந்த வீட்டுச் சந்திரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினாள். அவன் ஏதாவது வம்பில் மாட்டி வைத்துவிடக் கூடுமென பயந்தாள். அவனுக்குக் கல்யாணமாகி விட்டதோ என்னவோ என்றுகூடக் குழம்பினாள். அவன் மட்டும் தனியே வந்திருந்தது போலிருந்தது. அவனுக்குக் கல்யாணமாகியிருக்காது என்றே அவள் நினைத்தாள். பஸ்ஸின் குலுங்கலால் பக்கத்தில் நின்றிருந்த அம்மாள் பலமாகச் சாய்ந்தாள். சாந்தா அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டியதை நினைத்து எரிச்சலை அடக்கிக் கொண்டாள்.

பஸ்ஸை விட்டு ஒரு வழியாக இறங்கியதும் கால் கைகளையெல்லாம் கட்டவிழ்த்து விட்டது போலிருந்தது அவளுக்கு. நடந்த வேகத்தில் இரண்டொருவர் மீது மோதியிருக்கக்கூடும். சமாளித்து நடந்தாள். பாதையில் அவரவர்கள் இஷ்டத்திற்கு நடந்துகொண்டிருந்தார்கள்.

இடதுபுறம் திரும்பி தெருவில் இறங்கி நடந்தாள். தெரு முனையில் நின்றிருந்த பையன் வேகமாக ஓடத் தொடங்கினான். கர்சீப்பால் அவள் முகத்தைத் துடைத்தாள்.

சாந்தா வழக்கமான நேரத்திற்கே திரும்பிவிட்டாள்.

சலனமில்லாத தெரு சுறுசுறுப்படைந்து விட்டது போலிருந்தது.

இவளுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள் உற்சாகமடைந்தார்கள்.

சாதாரண வீடுகளும், மாடி வீடுகளும் மாறி மாறியிருந்த தெருவில் இவள் நடக்கையில் இளம் கண்கள் வெறித்திருப்பது வழக்கம். அவர்களை இவள் தொலைவிலிருந்து மட்டும் கவனிப்பாள். சைக்கிள் கடையில் ஒருத்தன் நான்கைந்து பேரைக் கூட்டி வைத்து இவள் கடக்கும் போதெல்லாம் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பான். இவளுக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டே நடப்பாள். தனியே அதை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொள்வாள். இவளை ஒரு நாளாவது சிரிக்க வைக்கப் போவதாய் அவன் சபதம் செய்திருக்கிறான். அதனால் கடைப்பக்கம் வரும்போதெல்லாம் இவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்கிறாள்.

அவர்கள் இன்னாரென்று இவளுக்குத் தெரியாது. தெரிந்து கொள்கிற ஆசையிருந்தாலும் அது சாத்தியமில்லை என்பதைத் தெரிந்து அக்கறை இல்லாமலிருந்தாள். அவர்கள் சினிமாவில் வருகிற சுகுமார், ரஜனி, கமலஹாசன், விஜயன் மாதிரியெல்லாம் சிங்காரித்துக் கொண்டு, இவள் வரும்போதும் போகும்போதும் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இவளைப் போல வேறு யாருக்காகவேனும் காத்திருக்கக் கூடும். இவள் தனக்காகவே அவர்கள் காத்துக் கொண்டிருப்பது போலவும் நினைத்தாள். கோவிலிலும் தியேட்டர்களிலும் இவள் அவர்களைச் சந்திப்பதுண்டு. இவளுடன் யாராவது இருந்தால் தன்னை ரொம்பவும் பெரிசாகக் காட்டிக் கொள்ளத் தவறமாட்டாள். இவள் நடையைத் தளர்த்திக்கொண்டு கவனமாக நடந்தாள்.

நகைக் கடைக்காரர் வீடு, மரக்கறிக் கடை, சைக்கிள் கடை, லதா ஏஜென்ஸீஸ், பிரேமா பிரஸ் என்று தான் வழக்கமாகக் கடக்கும் இடங்களையெல்லாம் கடந்தாள். கலகலவென்று பேச்சொலியும், சீழ்க்கையும், உறுமலும், இருமலும், சிரிப்பும் அங்கங்கே கேட்டன. இவளுக்கு அதுவெல்லாம் பழகிப்போய் விட்டதால் அலட்சியமாக நடந்தாள்.

சாந்தா இயல்பாகவே நல்ல அழகிதான். முகம் எப்போதும் பளிச்சென்றிருக்கும். அலங்காரத்தில் எப்பொழுதும் கவனம் செலுத்துவாள் எதிரில் வரும் எவரும் இவளிடமிருந்து பார்வையை வாங்கத் துடிப்பது போலிருக்கும். எத்தனை பேர் நடுவிலும் இவள் எடுப்பாகவே தோற்றமளிப்பாள். இதில் இவளுக்கு ஒருவகைப் பூரிப்பு.

தான் குடியிருக்கும் பகுதியில் நுழைகையில் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. இரு பக்கத்திற்கும் இடையிலிருந்த வராந்தாவில் குழந்தைகள் கூச்சலிட்டபடி விளையாடிக் கொண்டிருந்தன. இவள் தன் வீட்டை நெருங்கியதும் அம்மாவிடம் காபி போடச் சொன்னாள். இவள் உள்ளே நுழைந்து கைப்பையை மேஜைமீது போட்டு விட்டு கம்பிச் சன்னல் திரையை விலக்கினாள். வெளிச்சம் குபுக்கென்று பாய்ந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி எதிர்வீட்டைக் கவனித்தாள். கதவு திறந்திருந்தது. அவர்கள் உள்ளே இருக்கக்கூடுமென நினைத்தாள். அவனைக் காணோம். எங்காவது வெளியே சென்றிருக்க வேண்டுமெனத் தோன்றியது.

சந்திரன் வேகமாக வீட்டிற்குள் செல்வது தெரிந்தது. சாந்தா மனதைத் தேற்றிக்கொண்டாள். எப்படியாவது சந்திரனிடம் விசாரித்துப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தாள். தான் இதற்குத் தயங்குவதில் வியப்படைந்தாள். யாரிடமும் கூச்சமில்லாமல் பழகும் இவளுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் துணிச்சல் தேவையிருந்ததை உணர்ந்தாள். உள்ளே போன சந்திரனுக்காக இவள் காத்திருந்தாள். நேரம் கழியக் கழியப் பொறுமையை இழந்தாள்.

சாந்தா எழுந்து சென்று அந்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனைக் கூப்பிட்டாள். அவன் கதவுக்கு அப்பாலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவந்தான். இவள் தன் அறைக்குள் நுழைந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.
"ஏங்ங்க்கா?" சந்திரன் கதவைப் பிடித்தபடி இவளைப் பார்த்துக் கேட்டான்.

"இல்லஸ்டரேட் வீக்லி வந்திருச்சா?"

"இல்லக்கா!"

"ஏன்?"

"அப்பா வந்தா கேக்கணும்."

"இன்னம் அப்பா வரலயா?"

"இல்லே."

"அம்மா இல்லையா?"

"அடுப்பிலே வேலையா இருக்காங்க."

"சினிமாவுக்குப் போறீங்களா?"

"இல்லையே, யாரு சொன்னா?"

"சும்மா கேட்டேன்."

"உங்க வீட்டுக்கு யாரோ வந்திருந்த மாதிரியிருந்துதே" இவள் கேட்டேவிட்டாள்.

"எங்க பெரியப்பா மகன். எங்க அண்ணன்."

"அவர் என்ன பண்றார்?"

"மதுரையிலே காலேஜ்ல இங்க்லீஸ் லெக்சரரா இருக்கார்."

"கல்யாணம் ஆயிடுச்சா?'

"இல்லே!"

"அவர் பேரு?"

"மனோகர்."

"நல்லவரா?"

"தங்கமானவரு. கோபமே வர்றதில்லே."

"சிரிப்பாவது வருதா?" இவள் கிண்டலாகக் கேட்டாள்.

"எப்பவாவது சிரிப்பார்."

"கலகலப்பா இல்லையே?"

"அவருன்னா எல்லோருக்கும் பயம். அளவாத்தான் பேசுவார்."

"எங்கே போயிட்டார்."

"ஊருக்குப் போயிட்டார்."

சாந்தாவுக்கு 'குபீர்' என்றது.

"இனி எப்ப வருவார்?"

"தெரியலே!"

"என்ன பார்க்கறே?"

"காலண்டர்."

இவளும் அதைக் கவனித்தாள். குழந்தை அதில் சிரித்துக்கொண்டிருந்தது.

"அது வேணுமாக்கும்?" இவள் கேட்டாள்.

"ம்..." அவன் தயக்கத்துடன் சொன்னான்.

"எடுத்துக்கோ!"

சந்திரன் அதை எடுத்துக் கொண்டான்.

இவள் கைகளால் நெற்றிப் பொட்டைத் தாங்கியபடி இருந்தாள்.

"வரேங்க்கா!" அவன் வெளியே தாவினான்.

அம்மா காபியுடன் வந்தாள்.

"காபியா? இப்ப வேண்டாம்."

"ஏன்?"

"வேண்டாம்னா..." இவள் அம்மாவைக் கடுமையாகப் பார்த்தாள்.

அம்மா மெளனமாகத் திரும்பினாள்.

சி.ஆர். ரவீந்திரன்
Share: 




© Copyright 2020 Tamilonline