Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம் - (பாகம் 3)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2002|
Share:
முன் கதை:Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.

கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

தான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் அறையில் கண்டு பிடிக்க ஒன்றுமில்லை என்று மார்க் கிளம்ப யத்தனிக்கும் போது, சூர்யா தடுத்து விஞ்ஞானியின் கம்ப்யூட்டரில் எதையோ பார்க்க வேண்டும் என்றார். கம்ப்யூட்டர் திரையில் இருந்த பாதியில் நிறுத்தப் பட்ட ஒரு மெமோவில் இருந்து ஷின் தானாக மறையவில்லை, கடத்தப் பட்டிருக்கிறார் என்று சூர்யா நிரூபித்தார். அப்போது ஷின்னின் ஸெக்ரட்டரி மேரி வரவே, அவளை சூர்யா விசாரிக்க ஆரம்பித்தார். தன் மேலாளரான ஷின் திடீரென காணாமல் போய் விட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியால், சூர்யா விசாரிக்க ஆரம்பித்ததுமே மேரி சரியாகப் பேச முடியாமல் அழ ஆரம்பிக்கவே ஷாலினி அவளைத் தனியாக அழைத்துப் போய் ஆசுவாசப் படுத்தினாள்...

ஷாலினி, மேரியின் விசும்பல்கள் அடங்கியதும் அவளைத் திரும்ப ஷின் லேபுக்கு அழைத்துக் கொண்டு வந்தாள். சூர்யாவை கொஞ்சம் கோபமாகப் பார்த்தாள்.

"என்ன சூர்யா இது, இப்படி அழ விட்டுட்டீங்களே? இவ இருக்கற நிலைமைல இப்பவே விசாரிச்சாகணுமா? வேற யாரையாவது விசாரிச்சுட்டு அப்புறம் இவ கிட்ட பேச முடியாதா?"

மார்க் கையைத் தூக்கிக் காட்டி அவளை அமைதிப் படுத்த முயன்றான். "ஷாலினி, ஷின் எந்த மாதிரி அபாயத்துல இருக்கார்னு நமக்கு இன்னும் தெரியலை. சாதாரணமா நான் இந்த மாதிரி நிலைமைல இருக்கறவங்களை உடனே விசாரிக்கணும்னு அழுத்த மாட்டேன். ஆனா, இந்த விஷயத்துல, மேரிதான் ஷின்னைக் கடைசியா நேரில பாத்தா மாதிரி தோணறதுனால, உடனே விசாரிச்சா எதாவது க்ளூ கிடைச்சாலும் கிடைக்கலாம். அதுனால இப்பவே பேசறதுதான் நல்லது" என்றான்.

மேலும் எதோ சொல்லப் போன ஷாலினியைத் தடுத்து மேரி குறுக்கிட்டாள். "ஷாலினி, இட் இஸ் ஓகே. மார்க் சொல்றதுதான் சரி. நான் சுதாரிச்சுகிட்டேன். ஷின் எதாவது அபாயத்துல இருக்கறதை என்னால பொறுக்க முடியலை. அவர் எவ்வளவு நல்ல மனுஷன், பாவம்! இப்ப அவர் எங்க இருப்பார்னு கண்டு பிடிக்கறதுதான் முக்கியம். அதுக்கு நான் என்ன உதவி வேணும்னாலும் செய்யத் தயார். நாம மேல பேசலாம்" என்றாள்.

ஷாலினி அவளைத் தட்டிக் கொடுத்தாள். ஒரு அழகிய பெண் அழுவதைப் பொறுக்காத கிரணும் பாராட்டினான்! "வெரி குட் மேரி! உங்க தைரியத்தையும் உதவி மனப் பான்மையையும் நான் ரொம்ப பாராட்டறேன்!"

மேரி, "சே சே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லே, எல்லாம் செய்ய வேண்டியதுதானே! என்ன திடீர்னு தெரிஞ்சதுனால, கொஞ்சம் ஷாக் ஆயிடுச்சு அவ்வளவுதான். சரி, திரும்ப ஆரம்பிக்கலாம்!" என்றாள்.

சூர்யா தான் கடைசியாகக் கேட்டக் கேள்வியிலிருந்து மீண்டும் தொடங்கினார். "நீங்க ஷின்னைக் கடைசியா எப்பப் பாத்தீங்கன்னுக் கேட்டேன். வெள்ளிக் கிழமை நீங்க அவசரமா வேலையிலிருந்துக் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பறச்சே பார்த்ததா சொன்னீங்க" என்றார்.

மேரி தன் கண்ணில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். விசும்பலையும் அடக்கிக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தாள். "ஆமாம். எனக்கு அன்னிக்கு சாயங்காலம் ஒரு பார்ட்டிக்குப் போக வேண்டியிருந்தது. மீதி நாளெல்லாம் ஷின் லேபிலிருந்து கிளம்பற வரைக்கும் நானும் இருப்பேன். அன்னிக்கு பார்ட்டிக்கு ரெடி செஞ்சுக்கறத்துக்குக் கொஞ்சம் முன்னால கிளம்பினேன். ஷின் எக்ஸ்பரிமென்ட் ஒண்ணுமில்லை, எழுதற வேலைதான், அதை நானே கவனிச்சுக்கறேன் கிளம்புன்னாட்டார். ஒரு வேளை நான் போகாமல் இருந்திருந்தால் இப்படி ஆயிருக்காதோ? பாதி வாக்கியத்தில நிறுத்திட்டார் பாவம்" மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

சூர்யா ஆறுதல் அளித்தார். "அப்படி ஒண்ணும் சொல்ல முடியாது மேரி. இது வீக் என்டில எப்போ நடந்ததுன்னு சொல்ல முடியலை."

சூர்யாவின் முகத்தில் ஒரு விதமான ஒளி பிறந்தது. அவருடன் மிகவும் பழகிய கிரணுக்கும் ஷாலினிக்கும் மட்டுமே அவருக்கு எதோ ஒரு முக்கியமான விஷயம் தோன்றி விட்டது என்று தெரிந்தது. ஆவலாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கவனித்தனர். ஆனால் ஏமாற்றந்தான் விளைந்தது! சூர்யாவின் முகம் மீண்டும் சாதாரணமாக மாறிவிட்டது! அவருடைய அடுத்த கேள்வியும் ஒன்றும் விசேஷமாக இல்லை!

"நீங்க ஷின்னுக்கு என்ன உதவி செய்யறீங்க?"

"ஒவ்வொரு லேபுக்கும் ஒரு ஸயன்டி·பிக் அஸிஸ்டன்ட் உண்டு. ஷின் லேபுக்கு நான். அது பெரும்பாலும் ஸெக்ரட்டரி வேலை - பேப்பர்களைக் பிரதி எடுக்கறது, நோட்ஸ் டைப் பண்றது, மீட்டிங், பயணங்கள் எல்லாம் அமைச்சுக் குடுக்கறது, இப்படி. ஆனா பயோ கெமிக்கல் ஸ்யன்ஸ் பட்டம் இருக்கறதுனால, லேப்ல எக்ஸ்பரிமென்ட்டுக்கும் உதவி செய்வேன். மின்வலையிலையும், நூலகத்திலையும் பேப்பர்கள், செய்தி விவரம் மாதிரி எதாவதுத் தேடிக் கண்டு பிடிக்கணும்னாலும் செய்வேன்."

கிரண், "சரியான சகலகலாவல்லிதான்னு சுருக்கமா சொல்லிடலாம் போலிருக்கே!" என்றான்.

மேரி அவனைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை வீசினாள். அவளது அழகிய பல் வரிசை கிரணின் மனத்தைப் பறித்தது.

இந்த இடைமறிப்பு மார்க்குக்குக் கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தது! ஆனால் சூர்யாவுக்குப் பழக்கமாகிப் போனதாலும், அழுது கொண்டிருந்த மேரியைக் கொஞ்சம் தளர வைக்கப் பயன்பட்டதாலும் கிரணின் வழிசலைக் கண்டு கொள்ளவில்லை!

மார்க் கேள்விகளைத் தொடர்ந்தான். "இங்க எவ்வளவு நாளா வேலை செய்யறீங்க?"

"எட்டு வருஷம்"

"அத்தனையும் ஷின் லேப்லயா?!"

"இல்லை, ஷின் லேப்ல கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா வேலை செய்யறேன்"

"ஷின் வழக்கமா சாயங்காலம் ரொம்ப நேரம் வேலை செய்வாரா? வெள்ளிக் கிழமை கூடவா?"

"ஷின்னுக்கு வேலைதான் தெய்வம். அவரை விட்டா இங்கேயே குடியிருந்துடுவார்! அவருடைய மனைவி கூட ரொம்ப குறை பட்டுக்குவாங்க என் கிட்ட. ஈவ்னிங்ல கூப்பிட்டு ஷின்னை மூட்டை கட்டி அனுப்புன்னு கெஞ்சுவாங்க!"

"சனி, ஞாயிறு?"

"அவர் எங்கேயும் வெளியூர் போகலைனா ரெண்டு நாளும் கொஞ்ச நேரமாவது இங்கே வந்துடுவார்"

"நீங்க?"

(கிரண், ஷாலினியிடம்" இந்த மார்க் கொஞ்ச வார்த்தை மனுஷன் போலிருக்கு! ஒவ்வொரு முறையும் வார்த்தைங்க குறைஞ்சுகிட்டே வருது! அடுத்தது வார்த்தையே இல்லாத கேள்வி!" என்று முணுமுணுத்தான். ஷாலினி சிரித்து விட்டு செல்லமாகத் தட்டி "உஷ்" என்று எச்சரித்தாள்.)

மேரி, "நான் எப்பவாவதுதான் வீக் என்டுல வேலைக்கு வருவேன். அதுவும் ஷின் ரொம்ப அவசியம்னா வர முடியுமான்னு கேட்பார். அப்பவும் சில சமயம் வர முடியாது."

கிரண் கூறியது போல மார்க் வார்த்தையே இல்லாமல் மேலே தொடருமாறு "ம்?" என்றான்.

மேரி புரிந்து கொண்டு, "ஓ, இந்த தடவை சனிக் கிழமைக் காலைல வந்திருந்தேன். வெள்ளிக் கிழமை கிளம்பற அவசரத்துல இங்க என்னோட ஒரு புக்கை வச்சுட்டுப் போயிட்டேன். என் அபார்ட்மென்ட் பக்கத்துலதான் இருக்கு. வந்து புக்கை எடுத்துகிட்டு போயிட்டேன்."

"ஷின் அப்போ இங்கே இருந்தாரா?"

"இல்லை, அவரை நான் பார்க்கலை. லேப் காலியா இருந்தது. லைட் கூட அணைஞ்சிருந்தது"

சூர்யா புகுந்தார். "கம்ப்யூட்டர் ஓடிக்கிட்டிருந்ததா, அணைஞ்சிருந்ததா?"

மேரி ஒரு கணம் தடுமாறினாள். "ஹ¥ம்...! கம்ப்யூட்டர்...? நான் சரியா கவனிக்கலை, சாரி!" என்றாள்.

சூர்யா தொடர்ந்தார். "ஷின்னுக்கு உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது எதிரிங்க இருக்காங்களா?"

"சே, சே, ஷின்னுக்கு எதிரிகளே கிடையாது. எல்லார் கிட்டயும் அவ்வளவு நல்லா பழகுவார்."

"சமீபத்துல எதாவது வழக்கத்துக்கு மாறா நடந்ததா? எதாவது வித்தியாசமான லெட்டர், இல்லைன்னா ·போன் கால்?"

"எனக்குத் தெரிஞ்சு ஒண்ணுமில்லை. ஷின்னுக்கு ஈ-மெயில் வந்திருந்தா எனக்குத் தெரியாது. நான் அவரோட ஈ-மெயில் பாக்கறதில்லை"

கிரண் இடை மறித்தான். "அது மெயில் சர்வர் ஆர்க்கைவ்ஸ்ல தேடிப் பாத்துடலாமே!" என்றான்.

மார்க், "வெரி குட் ஐடியா!" என்றான். தன் நோட் புக்கில் குறித்துக் கொண்டான்.

சூர்யா, "வேற எதாவது உங்களுக்கு விசேஷமாத் தோணுதா? ஷின்னை எதுக்காக யாரு கடத்தியிருக்க முடியும்னு நினைக்கறீங்க?" என்றார்.

மேரியின் கண்களில் மீண்டும் நீர் நிரம்பியது. துடைத்துக் கொண்டு, தடுமாறிய குரலுடன், "எனக்கு ஒண்ணுமே தோணலை. ஷின் மாதிரி ஒருத்தர் கடத்தப் படுவார்னு என்னால இன்னும் நம்பவே முடியலை... ஆனா அவர் தானா தலைமறைவாயிருக்க மாட்டார், அது மட்டும் நிச்சயம்..." என்றாள். பிறகு திடீரென எதோ நினைவுக்கு வந்து "ஓ!... ஒரு வேளை..." என்று நிறுத்தினாள்.

மார்க் அவசரமாக, "என்ன, என்ன? சொல்லுங்க!" என்றான்.

மேரி, "கொஞ்ச நாளுக்கு முன்னாடி ·போன்ல யாரோ ஒருத்தர் ஷின் என்ன ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்கார்னு குடைஞ்சாங்க. நான் பிடி குடுத்துப் பேசலை. எங்க பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆ·பீஸ் மூலமா விசாரிச்சு ஒரு இன்டர்வ்யூ வச்சுக்க சொல்லிட்டேன். அப்புறமா அது விஷயமா ஒண்ணுமே நடக்கலை. ஒரு வேளை அது ஷின் காணாமப் போனதுக்கு சம்பந்தப் பட்டிருக்கலாமோ?!" என்றாள்.

மார்க் குறித்துக் கொண்டான்.

சூர்யா, "அப்படி அதுக்கு முன்னால எப்பவாவது கூப்பிட்டிருக்காங்களா?" என்றார்.

"உம்... சமீபத்தில இல்லை. எங்களோட வழக்கமா வேலை செய்யற ஸ்யன்ஸ் ஜர்னல்கள் எல்லாம் எங்களை நேரா கூப்பிடக் கூடாதுன்னு தெரிஞ்சவங்க."

சூர்யா சற்று நேரம் மெளனமாக இருந்தார். பிறகு, "மார்க், எனக்கு இப்போ இன்னும் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. மேரியிடம் அப்புறம் திரும்பிப் பேச வேண்டியிருக்கும். நீங்க?" என்றார்.

மார்க் "சரி மேரி, இப்ப போதும், நீங்க சொன்ன சிலது தொடர்ந்து பேச வேண்டியிருக்கும், அப்புறம் பேசலாம். ஆ·பீஸ்லயே இருங்க, கூப்பிடறோம்" என்றான்.

மேரி தன் மேஜைக்கு முன் போய் உட்கார்ந்தாள். முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டாள். அவள் விசும்புவது குலுங்கும் தோள்களால் தெரிந்தது. ஷாலினி ஆறுதல் அளிக்க அவளிடம் சென்றாள்.

சூர்யாவின் முகம் ஒரு விதமான உணர்ச்சியும் காட்டாமல் சிலை போல இறுகி விட்டிருந்தது.

கிரண் புரிந்து கொண்டான். மேரியிடம் பேசும் போது சூர்யாவுக்கு எதோ தோன்றியிருக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.

மேரி மிகவும் ஒத்துழைத்து எதற்கும் தயங்காமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கூறினாள். அவளின் விசும்பல்களும் தாமதத்துக்கானத் தந்திரமாக இல்லாமல், அவளுடைய உண்மையான வேதனைக்கு அத்தாட்சியாகவே தோன்றின. ஆனாலும், மேரியுடன் பேசியதில் கிடைத்த விவரங்களில் எதோ ஒன்று மட்டும் பொருந்தாமல் சூர்யாவின் மனத்தை நெருடிக் கொண்டே இருந்தது.

மார்க் எதோ பேச ஆரம்பித்தான். கிரண், சூர்யாவின் சிந்தனையைக் கலைக்க வேண்டாம் என்று உதட்டின் மேல் விரலை வைத்துச் சைகை செய்யவே அமைதியாகி விட்டான்.

சில விநாடிகள் கடந்தன. லேபில் ஒரு சத்தமும் இல்லாமல் ஒரு மயான அமைதி நிலவியது! திடீரென சூர்யாவின் முகம் மின்னலடிப்பது போல் வெளிச்சமாயிற்று! அவர் மார்க்கைத் தனியாக மூலைக்கு அழைத்துச் சென்று எதோ முணு முணுத்தார். மார்க்கின் முகத்தில் ஆச்சரியம் விளைந்தது. பெரிய கேள்விக் குறியும் தோன்றியது! ஆனால் சூர்யா மீண்டும் அழுத்திக் கூறவே, அவர் மேல் ஏற்பட்டிருந்த மிகுந்த மதிப்பால் தலையாட்டி சம்மதித்து விட்டு லேபை விட்டு விரைந்து சென்றான்.

கிரண் என்ன என்பது போல் புருவத்தை நெருக்கி சூர்யாவை வினாவுவது போல் தலையாட்டினான்.

சூர்யா பேசாமல், பிறகு பேசலாம் என்று சுட்டும் விரலை மட்டும் சுழற்றிக் காட்டினார்.
"ஷாலினி, இப்போ நாம் யாரோட பேசணும்?" என்றார்.

ஷாலினி பதில் கூறுவதற்குள் மார்க் மீண்டும் லேபுக்குள் விரைந்தான். ஆயிற்று என்று சூர்யாவுக்குக் தலையாட்டினான். சூர்யாவும் அதை ஒரு சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு

"மார்க், யாரோட அடுத்தது பேசணும்னு ஷாலினியைக் கேட்டுக்கிட்டிருந்தேன்..." என்றார்.

ஷாலினி, "எங்க தலைமை விஞ்ஞானி ஜான் கிட்டதான் பேசணும்" என்றாள்.

மார்க், "தட்ஸ் ரைட்! ஆனா மனுஷன் திடீர்னு எங்கயோ காணாமப் போயிட்டாரே?!" என்றான்.

கிரண் புகுந்து "ஐயையோ, அவரும் காணோமா?! இதென்ன தொத்து வியாதியா இருக்கும் போலிருக்கே?! ஷால், மேரி, நீங்க ரெண்டு பேரும் இங்கேந்து விலகிடறது நல்லது!" என்றான்.

மேரி சோகத்தை விட்டு கிண் கிணித்தாள், கிரண் அதைக் கேட்டு கிளு கிளுத்தான்!

ஷாலினி, "கிரண், ப்ளீஸ் கொஞ்சம் சீரியஸா இரேன்! ஜான் என் கிட்ட ஆ·பீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கறதா சொல்லிட்டுத்தான் போயிருக்கார்! நாம அங்கேயே போகலாம்" என்றாள்.

சூர்யா, கிரண், மார்க், ஷாலினி நால்வரும் ஜான் கென்ட்ரிக்ஸின் அறைக்குச் சென்றனர்.

கிரண் அந்த அறையைப் பார்த்து "அப்பாடியோவ்!" என்று வாயைப் பிளந்தான்! சாதாரணமாக எதையும் கண்டு அசந்து விடாத சூர்யாவையும் அந்த அறை ஒரு கணம் வியப்பில் ஆழ்த்தி விட்டது!

ஷின்னின் லேப் அறை எவ்வளவுக்கு எவ்வளவு சிறியதாக, மிகவும் சாதாரணமாக இருந்ததோ, அவ்வளவுக்கு ஜானின் அலுவலக அறை மிகவும் விஸ்தாரமாகவும், மிகவும் பிரமாசமாக அலங்கரிக்கப் பட்டுமிருந்தது.

அறையின் சுவர்கள் அழகான கரும் செர்ரி மரப் பலகைகளால் ஆக்கப் பட்டிருந்தன. தரையும் பள பளவென்று பாலிஷ் செய்யப்பட்ட உயர் தர மரத்தரை. அறையின் கூரையிலும் கட்டம் கட்டமாக பெரிய கரும் செர்ரிப் பாளங்களால் அலங்காரம் ¦ய்யப்பட்டிருந்தது. சுவர்களில் அழகிய ஓவியங்கள் மாட்டப் பட்டிருந்தன. மூலைகளில் வைக்கப் பட்டிருந்த செழிப்பான செடிகள் அறையின் வனப்பைக் கூட்டிக் காட்டின. அறையின் ஒரு பக்கத்தில் மிகப் பெரிய அரிய மஹாகனி மரத்தால் செய்யப் பட்ட மேஜை. அதன் முன்பு ஒரு பெர்ஷியன் கம்பளத்தின் மேல் இரண்டு மென்மையான தோல் தைக்கப் பட்ட நாற்காலிகள். மேஜையின் பின்னால் இன்னும் பிரமாதமான ஒரு சுற்றும் நாற்காலி.

மொத்தத்தில் ஒரு புராதன அரண்மனைக்குள் புகுந்து விட்டாற் போல் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. மே¨ஜையின் ஒரு பக்கத்தில் மட்டும் தற்காலத்துக்கு ஆறுதல் பரிசாக இருந்த ஒரு தட்டையான கம்ப்யூட்டர் திரை, நான் ஒன்றும் இந்தப் பழங்கால அலங்காரங்களூக்கு குறைவில்லை என்று அறிவிப்பது போல் திமிராகத் தலை நிமிர்ந்து நின்றது!

அறிவுக்கு இலக்கணமாக இருக்க வேண்டிய ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தில் இத்தகைய பளபளப்பு சற்று பொருத்தமில்லாததாகத் தோன்றியது.

அறைக்குள் வந்தவர்களின் கண்ணோட்டத்தையும், அவர்கள் முகம் போன போக்கையும் பார்த்த ஜான் வாய் விட்டு சிரித்தார். "இந்த நிறுவனத்துக்கு இந்த அறை ரொம்ப அமர்க்களமா தோணுது இல்லையா?! நானும் அப்படித்தான் முதல்ல நினைச்சேன். ஆனா இது ஒரு ஷோ மாதிரி. இங்க வர பெரிய மருத்துவ நிறுவனங்களுடைய தலைவர்கள், பழம் பெரும் பல்கலைக் கழகங்களின் நிர்வாகிகள் எல்லாருக்கும் இது பழகிப் போன சூழ்நிலை. அந்தரங்கமா பிஸினஸ் பேசறப்போ அவங்களுக்கும் சுகமா, சுமுகமா இருக்கு. இந்த கம்பனியும் ஒரு சமமான நிலையிலிருந்து பேசற தோரணையைக் காட்டுது. இந்த கம்பனியை நிறுவினவரோட சாமர்த்தியம் அது!" என்றார்.

பக்கத்து அறையிலிருந்து இரண்டு சாதாரணமான நாற்காலிகளை இழுத்துக் கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தனர்.

ஜான் தன் மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு தன் வழுக்கைத் தலையைத் தடவி விட்டுக் கொண்டு "ஹ¥ம்..." ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு மார்க்கைப் பார்த்து "சாரி, மார்க், எனக்கு அவசரமா ஒரு ·போன் மீட்டிங் இருந்தது. அதுனால மேரியோட நீங்க பேசச்சே இருக்க முடியலை. அது அப்படிப் போச்சு? எதாவது விஷயம் தெரிஞ்சுதா?" என்றார்.

மார்க் சூர்யாவை பக்கக் கண்ணால் ஏறிட்டுப் பார்த்தான். சூர்யா ஜானுக்கு எவ்வளவு சொல்வது என்று கேட்கிறான் என்று புரிந்து கொண்டு, அவனுடைய முன் ஜாக்கிரதையை மனத்துக்குள் பாராட்டிக் கொண்டார். வேண்டாம் என்று ஜானுக்குத் தெரியாத படி மிகச் சிறிய அளவுக்கு தலையசைத்தார். மார்க் தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்துப் பார்த்து விட்டு, "ரொம்பப் பிரமாதமா ஒண்ணும் தெரிஞ்சுடல டாக்டர் கென்ட்ரிக்ஸ். அவ வெள்ளிக்கிழமை மாலை கடைசியா ஷின்னைப் பாத்ததுதான். அதுக்கு மேல மேரிக்கு ஒண்ணும் தெரிஞ்சிருக்கறதா தோணலை." என்றான்.

ஜானின் முகத்தில் ஏமாற்றமும், கவலையும் விரிந்தன. "அப்ப ஷின்னைக் கண்டு பிடிக்க நமக்கு ஒண்ணுமே க்ளூ இல்லையா? எப்படி தொடரப் போறோம்?" என்று மீண்டும் பெருமூச்சு விட்டார்.

சூர்யா அவருக்க ஆறுதல் அளித்தார். "ஜான், இவ்வளவு சீக்கிரம் இடிஞ்சு போயிட்டா எப்படி? இந்த மாதிரி விஷயத்துல பல இடங்களில பல பேரையும் விசாரிச்சு கோர்த்தாத்தான் கண்டு பிடிக்க முடியும். இப்ப உங்களுக்குத் தெரிஞ்சது என்னன்னு பார்க்கலாம்" என்றார்.

ஜான், "தேங்க்ஸ், சூர்யா! எனக்கு ஷின்னுக்கு என்ன ஆகுமோன்னு கவலை. அதோட, அவர் உடனே கிடைக்காட்டா விஷயம் வெளியில வந்து, லேப் பெயருக்கு என்ன ஆயிடுமோன்னு இன்னும் கவலை" என்றார்.

கிரண் ஷாலினியிடம், "உக்கும்!" என்று கிண்டலாகக் கனைத்தான். மெல்லிய குரலில் "இவருக்கு கம்பனிக்கு வர ஸ்பான்ஸர் பணம் நின்னு போயிடுமோன்னுதான் ரொம்ப கவலை போலிருக்கு!" என்றான். ஷாலினியும் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஆமோதித்தாள்.

சூர்யா, "ஜான், நீங்க ஷின்னை எப்போ கடைசியாப் பாத்தீங்க?" என்றார்.

ஜான் ஒரு கணம் தயங்கி யோசித்தார். "நேரில பாத்தது வெள்ளிக் கிழமை ஈவ்னிங் தான். ஆனா..." இன்னும் ஒரு முறை தயங்கினார்.

மார்க் "ஆனா, என்ன ஜான்? சொல்லுங்க" என்று அவசரப் படுத்தினான்.

ஜான் விரைவாக, "நான் சனிக் கிழமை காலை கொஞ்சம் வேலை முடிக்கறத்துக்காக ஆ·பீஸ் வந்திருந்தேன். அப்ப ஷின்னோட லேப் கதவு திறந்திருந்தது. அவரோட ஆராய்ச்சி பத்தி விசாரிக்கலாம்னு போனேன். அவர் அங்க இல்லை. ஆனா நான் அங்க போறத்துக்கு முன்னாடி, ஷின் அங்கிருந்து கிளம்பி அப்பதான் ஒரு மூலையக் கடந்து போனா மாதிரி எனக்கு தோணிச்சு. பார்க்கிங் லாட்ல கூட அவரோட காரை பார்த்த ஞாபகம்." என்றார்.

சூர்யா புகுந்தார். "அவர் லேப்ல கம்ப்யூட்டர் அணைஞ்சிருந்ததா, ஆன் ஆயிருந்ததா?"

ஜான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தார். "ஹ¥ம்... ஞாபகம் இல்லையே! எதுக்குக் கேட்கறீங்க?" என்றார்.

சூர்யா விளக்கினார். "ஷின் கடத்தப்பட்டதுக்கு அத்தாட்சியா கம்ப்யூட்டர்ல அவர் பாதி எழுதிய டாக்யுமென்ட் இருக்கறதுனால, அது அணைஞ்சிருந்தா அவர் அப்புறம் அங்க வந்திருக்கணும். அவர் காணாமப் போன நேரத்தை அது குறிச்சுக் காட்டலாம்."

மார்க் ஆச்சரியத்துடன், "ரைட் யூ ஆர்! நீங்க மேரியைக் கேட்டப்ப நானும் எதுக்குக் கேட்கறீங்கன்னு குழம்பினேன். அ·ப்கோர்ஸ்! இது ரொம்ப முக்கியம்!" என்றான்.

ஜான் மீண்டும் யோசித்து விட்டுத் தலையசைத்தார். "சாரி, சூர்யா எனக்கு சரியாத் தெரியலை. அது ஆன் ஆயிருந்ததா நினைக்கிறேன். ஆனா நிச்சயமா சொல்ல முடியாது" என்றார்.

சூர்யா தொடர்ந்தார். "ஷின் ரொம்பப் புகழ் பெற்ற விஞ்ஞானி போலிருக்கே, அவர் சமீபத்துல செஞ்சுகிட்டிருந்த ஆராய்ச்சி வெளியில நிறைப் பேருக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிஞ்சு அவருக்கு யாராவது தொழில் ரீதியா, இல்லன்னா சொந்த வாழ்க்கையில எதிரிங்க இருக்காங்களா?"

ஜானின் முகம் சற்று இருண்டது. ஷின் மேல் அவருக்கு இருந்த பொறாமையும் மனத்தாங்கலும் அவருடைய தொனியில் வெளிப் பட்டன. "உம் ...எனக்குத் தெரிஞ்சு எதிரிங்கன்னு யாரும் கிடையாது..." சற்றுத் தயங்கினார்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டு விட்டுத் தொடர்ந்தார். "ஷின் புகழ் பெற்றவர்தான். புகழ் கிடைக்கணுங்கறத்துக்காகவே தன்னை முன் காட்டிக்கறதுல ஷின் திறமைசாலி. அவர் செஞ்சுகிட்டிருக்கற பாலிகீடைட்ஸ் ஜெனடிக் எஞ்சினீயரிங் ஆராய்ச்சி இன்னும் சில லேப்கள் செஞ்சுகிட்டிருக்கு. நான் பல முறை அவர் கிட்ட அவருடைய ஆராய்ச்சி முடியற வரைக்கும் வெளியில பேச வேண்டாம்னு சொன்னேன். இருந்தாலும் கான்·பரன்ஸ்களில ஷின் தன் ஆராய்ச்சி எவ்வளவு முன்போக்கு அடைஞ்சிருக்குன்னு எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிச்சுக்குவார். அதுனால வந்த வம்புதான் இதுன்னு நான் நினைக்கிறேன்" என்றார்.

ஷாலினியின் முகத்தில் கோபம் விளைந்தது. ஷின்னைப் பற்றி ஜான் அப்படிக் கூறியது அவளுக்குப் பிடிக்கவில்லை. எதோ சொல்லப் போனவள் பல்லைக்

கடித்து விழுங்கிக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

அப்போது மார்க்கின் செல்·போன் மணி அடித்தது. விரைவாக எடுத்துப் பேசியவன், பரபரப்படைந்தான்! "அப்படியா, இன்னும் எதாவது தெரிஞ்சவுடனேயே கூப்பிடுங்க!" என்றான். சூர்யாவை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று எதோ கிசுகிசுத்தான்.

அவன் கூறிய செய்தி சூர்யாவுக்கு மிகவும் திருப்தியளித்தது. விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதத்தையும் விளக்க ஆரம்பித்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline